அத்தியாயம்-14
அடுத்த நாளே அவளுடைய அத்தையும் சித்தப்பாவும் வீட்டிற்குள் வந்து குதித்தனர் அவரவர் வாழ்விணையருடன். தாத்தா பாட்டி வேறு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க, எல்லோரும் ஒன்று கூடி ஒரு சிறு பஞ்சாயத்தை கூட்டியிருப்பது போல் தோற்றமளித்தது.
இறுகிப்போய் கல்லென உட்கார்ந்திருந்தார் கருணாகரன். நடப்பதை ஒரு பார்வையாளாக பார்த்துக்கொண்டிருந்தார் தாமரை வழக்கம் போல.
இதையெல்லாம் எதிர்பார்த்தோ என்னவோ சந்தோஷை உடன் அழைத்துக்கொண்டு அவர்களுடைய ஊருக்கு சென்றுவிட்டான் சத்யா அவனுடைய அம்மாவை அழைத்துவர. அவன் இங்கே இருந்தால் அவனையும் இதில் இழுத்துவிட்டு அவர்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கிவிட வாய்ப்பிருக்கிறது.
"குடியில பிறந்த பொண்ணு, என்னை கலக்காம அழைக்காம இப்படி ஒரு பெரிய விஷேஷம் நடந்து முடிஞ்சிருக்கு. அப்பா அம்மா உயிரோட இருக்கும்போதே பிறந்த வீட்டுல எனக்கு இந்த கதி. என் உரிமையே பறிபோயிடுச்சு. புகுந்த வீட்டுலையும் என் மானம் போச்சு" என அவளுடைய அத்தை நிர்மலா ஒரு பாட்டம் அழுது புலம்ப, இடைவெளி விடாமல், "அது என்ன? காதல் கரமந்திரம்னு அவதான் வந்து நின்னான்னா, கையை காலை உடைச்சு நம்ம பார்க்கற பையனுக்கு கட்டி வைக்காம, நம்ம வழக்கத்துலயே இல்லாததையெல்லாம் செஞ்சிட்டு இருக்க அண்ணா? அண்ணியும் உனக்கு உடந்தையா?" என வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான் ஜனார்த்தனன், அவளுடைய சித்தப்பா.
தாமரையை சொல்லவும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை கருணாகரனுக்கு. "நீ ஏதாவது கேள்வி கேக்கனும்னா என்னை மட்டும் கேளு. அது என்ன அண்ணியை இதுல இழுக்கறது. இந்த பழக்கத்தை நீங்க விடவே மாட்டிங்களா?" என உறுமியவர், "என்னவோ நடக்காத ஒண்ண நான் செஞ்சிட்ட மாதிரி இப்படி சீன போடற. உன் மச்சான் பையனோடதும் காதல் கல்யாணம்தான? அவனே முன்ன நின்னுதானே அந்த கல்யாணத்தை செஞ்சுவெச்சான். அப்ப எங்க போச்சு இந்த வாய். அவனோட காலை உடைக்க சொல்லி உன் மச்சான்கிட்ட சொல்லல? இங்க வந்து அம்மா அப்பா கிட்ட பொலம்பிட்டு போயி, முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வெச்சிட்டு மொற செஞ்சிட்டுதான வந்தீங்க? ஏன் உன் மச்சானை விட துட்டுல கொழுத்தவன் பொண்ணுங்கறதால அந்த காதல் கல்யாணம் தப்பில்லன்னு தோணிபோச்சா?" என அவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்கவும், பதில் சொல்ல இயலவில்லை, செந்தணலாக சிவந்துபோன அவனுடைய மனைவியின் முகத்தை பார்த்து கலவரமாகத்தான் முடிந்தது அவனால்.
ஜனாவின் மைத்துனன் வேறு யாரும் இல்லை, மோகனாவின் தம்பி மகன்தான். கௌசிக் வீட்டினர் சென்றதிலிருந்து இதுவரை ஆற்றாமையுடன் புலம்பிக்கொண்டிருத்தவருக்கு இனி வாய் திறக்க வழியே இல்லாமல் போனது.
"உன் பிள்ளைன்னு வந்தா நீ கையையாவது உடைச்சிக்கோ இல்லை காலையாவது உடைச்சிக்கோ. என்னால அதை செய்ய முடியாது. எம்பொண்ணு தேர்ந்தடுத்திருக்கற பையனும் எதுலயும் குறைஞ்சவன் இல்ல. நல்லா படிச்சிருக்கான். பார்க்க வாட்டசாட்டமா நல்லா இருக்கான். இப்ப பணம் காசு இல்லன்னாலும், என் பிசினெஸ்ஸை நம்பி ஒப்படைக்கற அளவுக்கு நல்ல திறமையானவன். இனி இதை பத்தி யாரவது பேசினீங்கன்னா தயவு செஞ்சி என்னை விட்டு தள்ளி நின்னுக்கோங்க. எனக்கு என் பெண்டாட்டி பிள்ளைங்கதான் பிரிஃபரென்ஸ். மத்தவங்க எல்லாம் அப்பறம்தான்"
உண்மையாக மனதில் பட்டதைத்தான் சொல்கிறாரா, அல்லது மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரா? என்பது புரியாமல் வியப்பாகிப்போனது ஹாசினி தாமரை இருவருக்குமே.