இதழ்-5
கருநீல வலை விரித்து கண் விழித்துக் காத்திருக்கிறேன்.
மலர்கள் என் இலக்கல்ல!
மலர்களின் குருதி குடித்து ஆணவப்பட்டுப்போன...
முதலைகள்தான் வேண்டும் எனக்கு!
அம்முதலைக்கு வேலியாய் மலர்கள் கூட மாறுமோ?
நான் தேடும் முதலையின் முகவரி நீயாகுமோ?
என் வலைக்கு வசப்படாத நச்சு நிரல் நீ என்றால்
பூவும் நீயும் வேறுதான்!
மகளுடைய கண்ணீரைக் கண்டு இளகிய மனதை வெளிக்காண்பிக்காமல், வசுந்தராவின் அம்மாவுடைய பார்வை அந்த அறையின் வாயிலில் நிலைக்க, "அப்பா ஆட்டோக்கு பணம் கொடுத்துட்டு வருவாங்கம்மா!" என வசுந்தரா சொல்லிக்கொண்டிருக்க, அப்போதே அங்கே வந்தார் ராகவன்.
கணவரைப் பார்த்ததும், அவருடைய கண்கள் அவரை உச்சி முதல் பாதம் வரை கனிவுடன் எடைபோட, "நான் நல்லா இருக்கேன் கலை! வசும்மா என்ன நல்லா கவனிச்சுக்கறா! நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிச்சு எங்களை வேதனை படுத்தற?" என அவர் கேட்க,
"இவளுக்கு நீங்க ஏன் இன்னும் மாப்பிளை பாக்கல? சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுத்துட்டா நாம நிம்மதியா இருக்கலாம் இல்ல?" என அவர் தழுதழுத்த குரலில் சொல்லவும், எழுந்து நின்றவள், ராகவன் பதில் சொல்வதற்கு முன்பாக, "மா! ஏன் மா இப்படி பண்றீங்க? எனக்கு உங்க ரெண்டு பேரையும் நல்லபடியா வெச்சிருந்ததாலே போதும்.
தனிப்பட்ட வாழ்க்கைனு ஒண்ணை நான் கற்பனைல கூட நினைச்சு பாக்கல. அதனால இதை பத்தின பேச்சே வேண்டாம்" சொல்லும்போதே மனதிற்குள் முணுமுணுவென எழும் வலியை தடுக்கமுடியாத இயலாமையுடன் சொல்லி முடித்தாள் வசுந்தரா, பிடிவாதத்துடன்.
விட்டுக்கொடுக்காமல், "என் கடமையை முடிச்சாதான் மரணம் கூட என்னை நெருங்கும் போல இருக்கு; நீ சம்மதிக்கலைனா எனக்கு ட்ரீட்மெண்ட், சாப்பாடு ஒரு மண்ணும் வேணாம்; இப்படியே என் உயிர் போகட்டும்" என அவர் திண்ணமாகச் சொல்ல, "எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல; நான் என் வேலையை விட்டுட்டு உங்களையும் வீட்டுக்கே கூட்டிட்டு போயி பார்த்துக்கறேன்; என்ன வேணா நடக்கட்டும்" என வசு மேலும் பிடிவாதமாக பேச, "கலை! திடீர் திடீர்னு நீ என் இப்படி பிஹேவ் பண்ற! நல்ல காலம் வந்தால் நாம தடுத்தாலும் எதுவும் நிக்காது.
வசுவை அவ போக்குல விடு; இல்லனா உள்ளதும் கெட்டு போயிடும்" எனச் சொன்னவர், "அவ ஏன் இப்படி பேசறான்னு உனக்குப் புரியலையா; இல்ல நான் அவளுக்கு நல்லது செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?" எனக் கேள்வியுடன் முடித்தார் ராகவன்.
"எதையும் நேருக்கு நேர் சந்திச்சுதானே ஆகணும். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே தள்ளிப்போட்டுட்டு போக முடியும்" என கலை ஆற்றாமையுடன் பதில் கேள்வி எழுப்பவும், "எல்லாத்துக்கும் ஒரு நேரங்காலம் வரணும் இல்ல கலை? கொஞ்சம் புரிஞ்சிக்கோம்மா!" என்ற ராகவன், "அந்த பையன் நம்ம வீட்டுக்கே வந்தான் கலை" என்றார் ஆச்சரியம் கலந்த குரலில்.