இதழ்-4
பட்ட காயங்களின் வலிகளை அதிவேகமாக கடக்க முயல்கிறேன்!
விடாமல் என் கரம் பிடித்து துணையாக வருகிறது அந்த வலிகள் மட்டுமே…
என்னை மேலும் மேலும் வலிமையாக்கிக்கொண்டு!
வலிகளை வலிமையாக மாற்றும் கலை எனக்கு வசப்பட்டதால்...
பூவும் நானும் வேறுதான்!
***
வசுந்தராவை அவளுடைய வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, பின்பு அந்த பகுதியில் இருக்கும் அவனுடைய ஒரு நீட் பயிற்சி மையக் கிளைக்குச் சென்றவன், அதன் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடித்து வீடு திரும்ப, நள்ளிரவாகியிருந்தது தீபனுக்கு.
முந்தைய தினம் அவனது வாகனத்தை பின் தொடர்ந்த அந்த 'மூன்லைட் மெட்டாலிக் ப்ளூ ஆடி' அவன் சிந்தனையின் உள்ளே புகுந்து குறுகுறுப்பை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. கூடவே அந்த புரியாத புதிராக இருப்பவளின் நினைவு வேறு!
படுக்கையிலிருந்து எழ மனமின்றி சோம்பலாக, ஒரு தலையணையை அணைத்தவாறு, ஒரு தலையணையில் காலை போட்டு, ஒருக்களித்துப் படுத்திருந்தவனை, "தீபா! காரை கொஞ்சம் எடுத்து ஷெட்ல விடுப்பா; போர்டிகோவை க்ளீன் பண்ணணுமாம்; அம்மா சொல்ல சொன்னாங்க!" என்ற அவனது தந்தை அரங்கநாதனின் குரல் கலைத்தது.
அவனுடைய அன்னை அருணாவிற்கு வீட்டு வேலைகள் எல்லாமே நேரத்திற்கு நடந்தாக வேண்டும்.
என்னதான் செல்வ நிலையில் உயர்ந்து இருந்தாலும், முன்பு வாழ்ந்த நடுத்தட்டு வாழ்க்கையின் பழக்கவழக்கங்கள் அவரை விட்டு சிறிதும் நீங்கவில்லை. வீட்டு வேலை செய்பவரிடம் கூட வெகு இயல்பாகப் பழகுவார்.
அவர்களிடம் வேலை வாங்குவதைவிடக் கூட சேர்ந்து அந்த வேலைகளைப் பகிர்ந்துகொள்வர் அவர். எனவே அவன் அந்த காரை அங்கிருந்து எடுத்துத்தான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை.
பெற்றவர்களுக்கு என்று அவன் வாங்கியிருக்கும் காருக்கு ஓட்டுநர் ஒருவரை அமர்த்தி இருந்தான். ஆனால் அவனுடைய வாகனம் மட்டும் அவனுடைய சிந்தனையைப் போல எப்பொழுதுமே அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். எக்காரணம் கொண்டும் அதை மற்றவர்கள் கையாளுவதை விரும்ப மாட்டான் தீபன்.
இரவு, நேரம் கழித்து வந்ததால் வாகனத்தை அப்படியே நிறுத்தியிருந்தான். தந்தையின் விளிப்பில் எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, காரை எடுத்து அதற்கான இடத்தில் நிறுத்தினான்.
அப்பொழுதுதான் முன் பக்க இருக்கைகளுக்கு நடுவில் சிக்கியிருந்த அந்த காகித உறை அவனது கவனத்தை கவர்ந்தது.
திலீப்புடைய குழுமத்தின் பெயர் பொறித்த அந்த உறையை அவன் கையிலெடுக்கவும், வசுந்தராதான் அதைத் தவறவிட்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
வளுடைய அலட்சியத்தை எண்ணி மனதிற்குள் அவளைக் கடி