இதழ்-3
குற்றமிழைத்தது என் விதியென்று கொண்டால்...
என் அறியாமையும் பெறுங்குற்றமே!
அக்குற்றமிழைத்தவள் நானேயென்றால்...
என் நீதியரசன் நீயேயாவாய்!
தண்டனைகள் முடிந்தபின்னும் கூட...
உன் தீர்புக்காக தலை நிமிர்ந்து நிற்பதால்...
நீ புயலென்றறிந்தே உன் பாதையில் நான் நடப்பதால்...
பூவும் நானும் வேறுதான்!
***
கட்சித் தொண்டர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் சிலர்; அவர்களுக்குள் கலந்து இருந்த பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வாயிலில் குழுமி இருக்க, காலை நேரத்திலேயே வெகு பரபரப்பாக இருந்தது சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த ஆடம்பர பங்களா.
அந்த பரபரப்பில் தன்னை புகுத்திக்கொள்ளும் முன், கொஞ்சம் நிதானமாகக் காலை உணவை உண்டுகொண்டிருந்தார் அமைச்சர் புஷ்பநாதன்.
வேலை ஆட்கள் பயபக்தியுடன் உணவைப் பரிமாறிக்கொண்டிருக்க, அவருக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு, உரத்த குரலில் எதோ சொல்லிக்கொண்டிருந்தார் அவரது சகதர்மிணி லலிதா.
உறக்கம் அகலாமலோ அல்லது அவன் முந்தைய தினம் அருந்திய மதுவின் போதை தெளியாமலோ, மந்த கதியில் அங்கே வந்து உட்கார்ந்தான் அவர்களுடைய செல்வப் புதல்வன் ஜவஹர்.
அவனைப் பார்த்த அடுத்த கணம், "ஏண்டா ஒரு வாரமா எங்கடா போயிருந்த! கண்ணுலயே படல! நைட் பார்ட்டினு கும்பல் கும்பலா பசங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணற செய்தியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அல்லு விட்டு போகுது!
அதுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே?
எதையாவது செஞ்சு வெச்சு கட்சியிலே என்ன அசிங்கப் படுத்திடாத.
கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ.
வாரத்துக்கு ஒரு தடவ அமைச்சரவைய மாத்திக்கிட்டே இருக்காங்க. எங்க பதவி போயிடுமோன்னு அப்படியே பக்குனு இருக்கு எனக்கு!" என அவர் பொரிந்து தள்ள,
"அதுதான் மூத்தவன் வியாபாரத்தை எல்லாம் பொறுப்பா கவனிச்சுக்கறான் இல்ல; இவனையும் ஏன் இப்படி நொய்யி நொய்யின்னு புடுங்கறீங்க?
அவன் வயசு; அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான்!