Hi Friends,
Here is the first episode of Poovum Naanum Veru. Kindly share your valuable comments...
பூவும் நானும் வேறு!
இதழ்-1
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.
அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த காரக்குழம்பின் மணத்துடன் இணைந்து, சமையற்கட்டிலிருந்து கசிந்து இனிமையைப் பரப்பிக்கொண்டிருந்த மகள் வசுந்தராவின், வசந்தகால குயிலினை ஒத்த குரலில் லயித்தவராக, செய்தித்தாளைக் கையில் வைத்துக்கொண்டே மெய்மறந்துபோய் உட்கார்ந்திருந்தார் செல்வராகவன்.
மிகச்சிறிய வரவேற்பறையுடன் கூடிய ஒற்றை படுக்கை அறை கொண்ட சிறிய வீடு அது. சமையற்கட்டிலிருந்து பார்த்தால் அந்த வரவேற்பறை முழுவதுமாக தெரியும் என்பதினால், கம்பரின் கலைமகள் துதியை பாடிக்கொண்டே சமையலில் ஈடுபட்டிருந்த வசுந்தரா, தந்தையைக் கவனித்தவளாக, வெளியில் வந்தாள்.
"என்னப்பா! நியூஸ் பேப்பரை கையில் வெச்சிட்டே, அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க!" என அவள் கேட்கவும், அதில் சிந்தனை கலைந்தவராக, "கம்பர் சொன்னது போல் அந்த கலைமகளை துதித்தால், கல்லும் கூட கவி சொல்லுமோ என்னவோ தெரியாது. ஆனா... நீ பாடின இந்த பாட்டை கேட்டால், அந்த கல்லும் கரைஞ்சு போகும் வசும்மா! நானெல்லாம் எம்மாத்திரம்!" என்றார் அவர் நெகிழ்ச்சியுடன்.
"அப்பா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு” சொல்லுவாங்க இல்ல? இதுவும் அது போலத்தான். மகள்கள் என்ன செய்தாலும் அப்பாக்கள் கரைஞ்சுதான் போவாங்க! நீங்க மட்டும் விதி விலக்கா என்ன?" என அவள் கேட்க,
"உண்மையிலேயே நீ பொன் குஞ்சுதான் வசும்மா! அதில் சந்தேகமே இல்ல!" என்றார் அவர் வாஞ்சையுடன்.
அதற்குள் அடுப்பில் வைத்திருந்த குக்கர் ஒலியை எழுப்பி, 'என்னைக் கொஞ்சம் கவனி' என்று சொல்ல, "ஐயோ விட்டா நீங்க இந்த பாட்டை இன்னைக்கு முழுக்க பாடிட்டே இருப்பீங்க!" எனச் சொல்லிக்கொண்டே போய் அடுப்பை அணைத்தாள் வசுந்தரா.
பின்பு அங்கே இருந்த குளிர்சாதனப் பெட்டியிருந்து காய்கறிகளை எடுத்தவள், அங்கே போடப்பட்டிருந்த ஒற்றை கட்டிலில்அமர்ந்திருந்த அவளுடைய தந்தைக்கு அருகில், தரையில் உட்கார்ந்து அவற்றை நறுக்கியவாறே, "இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல என்ன முக்கிய செய்தி!" எனக் கேட்க,
"ஒரு கட்சி மேலே இன்னொரு கட்சி, சேற்றை வாரி இறைப்பதைத் தவிர, வேற என்ன முக்கிய செய்தி வாழுது!" என அலுத்துக்கொண்டவர், ஒரு பெட்டிச் செய்தியைப் படித்துவிட்டு, "பாறேம்மா! டீ.பின்னு ஒருத்தன், 'டார்க் வெப்' ஆமே... அதை யூஸ் பண்ணி, பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கானாம். ஆனா அவன் யாரு என்னனு இதுவரைக்கும் யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம்!" என்று வியந்தார் மகளிடம்.