ரித்விக்கும் ஆதர்ஷும் வேறு வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். நித்யாவை முதல் முறை கண்ட அன்றிரவே இருவருக்கும் அழைத்து தெரியப் படுத்தியிருந்தான். ஒரு பெண் தன்னைக் கவர்ந்துவிட்டதாக மட்டும் தெரிவித்திருந்தான். அவர்களிருவருக்கும் மிகுந்த ஆச்சரியம். ரித்விக்கோ, "மச்சான் நாந்தான் டா நம்ம கேங்க்ல முதல்ல ஆளோட வரனும்னு ஒரு குறிக்கோளோட வாழ்ந்துட்டு இருந்தேன் டா. இப்படி என் கனவுல மண்ணள்ளி போட்டுட்டியே டா? உண்மைய சொல்லு நீ பொய் தான சொல்ற?" என்றான். சுதாகரோ "பொய்யா இருக்கனும்னு தான் டா நானும் நெனைக்குறேன் எனக்கு பொண்ணு பின்னாடி போறதுலலாம் விருப்பம் இல்ல. ஆனா இவ என்ன அலையவிட்டுடுவானு தோனுது டா. பாத்த உடனே எப்படி பிடிக்குதுனு தெரியல டா. ஆனா என்ன நெனைச்சா எனக்கே கடுப்பா வருது. அவ அழகா இருக்கதால ஒரு ஈர்ப்புனு என்ன நானே சமாதனபடுத்திக்க ட்ரை பன்னிட்டு இருக்கேன். இன்னும் என்ன டிப்பார்ட்மென்ட்னு கூட தெரியல. அவள பாக்காம அப்டியே நாட்கள் ஓடிரனும் அப்டியே காலேஜ் முடிச்சிட்டு வெளிய வந்திரனும். என்ன செய்யப்போறேனோ கடவுளேனு இருக்கு" என்றதும், ஆதர்ஷ் "மச்சான் வீடியோ கால்ல வா டா" என்று அழைப்பைத் துண்டித்தான். இப்பொழுது மூவரும் வீடியோ காலில். ஆதர்ஷுக்கு சுதாகர் கூறுவதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நேரில் பார்த்தால் தன் நண்பர்களின் உள்ளத்தை அறிந்துகொள்ளுவதில் வல்லவன் ஆதர்ஷ். ஆனாலும் வாடிப்போயிருந்த சுதாகரின் முகத்தைப் பார்த்த ஆதர்ஷ்க்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. நண்பன் கூறும் அணைத்தும் மெய் என்பது நொடியில் விளங்கியது.
ரித்விக்கோ "மச்சான் தங்கச்சிய ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பு டா?" என்றான். ஆதர்ஷ் அவனை வெட்டவா குத்தவா ரீதியில் முறைக்க, ரித்விக்கோ "இல்ல மச்சான், எப்பட்டியும் சுதா அந்த பொண்ண லவ் பண்ணிட்டான். இவன் தான் விடாகண்டனாச்சே. அப்ப அந்த பொண்ணு நம்ம தங்கச்சி தான டா?" என்று தன் ஆக பெரும் சந்தேகத்தை முன் வைத்தான். ஆதர்ஷோ, "டேய் அவனே இன்ஃபாக்சுவேசன்னு கடந்து போனாலும் நீ இழுத்துவிட்டு வேடிக்கைப் பாக்க ரெடியா இருக்கனு தெரியுது. கொஞ்சம் மூடிக்கிட்டு உக்காரு" என்றான்.
சுதாகர் இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், அமைதியாக யோசித்தவண்ணம் இருந்தான். ஆதர்ஷோ "மச்சி ரொம்ப கொழப்பிக்காத டா. இப்போவே நீ இவளோ டீப்பா யோசிக்க தேவையில்ல டா. திரும்ப அந்த பொண்ண காலேஜ்ல பாத்தா அப்பவும் இதேபோல உனக்கு தோனினா பாத்துக்கலாம். மூஞ்சிய இப்படி வச்சிருக்காத. போ போய் சாப்பிடு. எவனாவது அடிமை சிக்குறானா பாரு" என்றான். சுதாகருக்கும் அவன் சொல்வது சரியெனத் தோன்ற எழுந்து இரவுணவு சாப்பிட்ட சென்றான். நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தான் சுதாகர், அந்த நிம்மதிக்கு காலவரையறை மறுநாள் காலை வரையென்பதை அறியாமலே. முதல் நாள் இரவு இவன் உறங்கசெல்லும் வறையிலும் கூட இவன் அறையைப்பகிர்ந்துகொள்ள யாரும் வரவில்லை. காலை எழுந்து பார்க்கும்பொழுது இவனுக்கு பக்கத்து படுக்கையில் ஒரு நெடிய உருவம் காலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்தது.
புதிதாக வந்திருக்கும் ரூம்மேட் என்று நினைத்துக்கொண்டே குளிக்கச்சென்றான். அவன் குளித்து முடித்து திரும்பி வரும்பொழுது அந்த நெடியவனிடம் ஒரு அசைவை உணர்ந்தான். ஆனாலும் எழுந்திரிக்கவில்லை. சுதாகருக்குப் புரிந்தது தன்னிடம் பேச அந்நெடியவன் தயக்கம் கொள்கிறான் என்பது. மெதுவாக அருகே சென்று பார்த்தான். அவனிடம் அசைவில்லை, ஆனால் அவனுடைய கண்மணிகள் உருளுவது சுதாகருக்கு தெரிந்தது. சிரித்துக்கொண்டே சுதாகர் ஓங்கி ஒரு உதை விட்டான். அந்நெடியவன் அடித்து பிடித்து எழுந்து கொண்டான். சுதாகரோ சிர்க்காமல், "சாரி ப்ரோ. நான் நீ செதுட்டனு நெனைச்சு லைட்டா டெஸ்ட் பன்னி பார்த்தேன் ப்ரோ. நீ இன்னும் சாகலையா ப்ரோ?" என்றான். அந்நெடியவனோ சுதாகரை முறைத்துக்கொண்டே "அத இப்படி உதைச்சுதான் உங்க ஊர்ல டெஸ்ட் பன்னுவீங்களா?" என்று கேட்டுக்கொண்டே எழுந்து நின்றான். சுதாகரே ஆறடி உயரம், இவன் அவனைக்காட்டிலும் உயரமாக இருந்தான். உயரத்திற்கேற்ற உடல் வாகுடன் பார்க்கவே பீம் பாய் தோற்றத்தில் இருந்தான். சுதாகர் அவனிடம் "பீம் நீ எந்த டிபார்ட்மென்ட்?" என்று கேட்டான். அதற்கு அவன் சுதாகரை முறைத்துக்கொண்டே, "என் பேரு நந்தன், நான் கணினி அறிவியல்" என்றான். அதற்கு சுதாகரோ, "நானும் சேம் டிபார்ட்மென்ட் தான். உன் பேரு என்னவா வேனா இருக்கட்டும் எனக்கு நீ பீம் தான், நீயும் உனக்கு பிடிச்ச போல என்ன கூப்பிடலாம் நோ அப்ஜெக்சன். என் பேரு சுதாகர்" என்றான். பீமுக்கு சுதாகரைப் பிடித்தது. "நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப என்ன பாத்து பயந்து யாருமே என் கூட சேர மாட்டாங்க. நீ தான் எங்கிட்ட இவ்வளவு சாதாரணமா பேசுர முதல் ஆள் தெரியுமா? உனக்கு என்னைப்பாத்தா பயமா இல்லயா?" என்றான். அதற்கு சிரித்துக்கொண்ட சுதாகரோ, "உன்ன பாத்தாலே தெரியுது டம்மி பீஸ்னு, இதுல பயம் வேற வரும். போ மச்சி போய் கிளம்பு. ராகிங்க்லாம் இருக்காம் வா போய் எஞ்ஜாய் பன்னலாம்" என்றான். அஜயும் கிளம்ப சென்றான். இருவரும் காலை உணவை விடுதியிலே முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தனர். "டெய்லி இவ்ளோ தூரம் நடக்கனுமா டா? பேசாம பைக் வாங்கிரலாமா?" என்றான் சுதாகர். பீமோ "அதுக்கு பதினெட்டு வயசு ஆகனும் மச்சி, இல்லைனா நம்ம காலேஜ்ல அனுமதி இல்லயாம். லைசென்ஸ் இருந்தாதான் பைக் ஓட்ட முடியுமாம்" என்றான். "பேசாம ஸ்கூட்டி வாங்கிரலமா? எலக்ட்ரிக் ஸ்கூட்டி?" என்று கேட்டுக்கொண்டே, பீமை ஒருதரம் திரும்பி பார்த்து விட்டு "உன்ன வச்சிக்கிட்டு ஸ்கூட்டிலாம் வாய்ப்பில்ல. நீ அதுல உக்கார ரொம்ப கஷ்டம், வேற வழியே இல்ல. ஒரு வருசம் நடராஜா வண்டி தான்" என்று அலுத்துக்கொண்டான். அதற்கு சிரித்துக்கொண்ட நந்தனோ, "அது நீ ஓட்டுனா தான, நான்லாம் இன்னும் ரெண்டே மாசத்துல லைசென்ஸ் எடுத்துருவேன் டா" என்றான் சிரித்துக்கொண்டே. "நிஜமாவா டா? அப்ப நமக்கு ஜாலி தான். நல்ல ஊர் சுத்துவோம்" என்று பேசிய சுதாகர் தற்செயலாக திரும்பும் பொழுது சீனியர் மாணவர்கள் மொத்தமாக நின்று ஜூனியர் மாணவர்களை ராகிங்க் செய்து கொண்டிருந்தனர்.
சுதாகரும் நந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த வழியாக நடக்க ஆரம்பித்தனர். சீனியர் மாணவர்கள் ஒரு மாணவியை பாட்டு பாட சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சுதாகரையும் அவன் நண்பனையும் கண்ட பின்பு இருவரையும் சொடக்கிட்டு அழைத்து நிறுத்திக்கொண்டனர். அவர்களில் ஆளுமையாக தெரிந்த மாணவி ரக்ஷாவோ, "இவளுக்கு அடுத்து நீங்க. என்ன பண்ணனும்னு பிறகு சொல்றேன் இப்போ அப்படி போய் ஓரமா நில்லுங்க என்று அருகிலிருந்த மரப்பலகையைக் கைகாட்டினாள்.
இவர்களும் சுவாரஸ்யம் தேடித்தானே அந்த வழியாக வந்தார்கள், நன்றாக மர நிழலில் நின்றுகொண்டு வேடிக்கைப்பார்க்க தொடங்கினர். அங்கு அந்த மாணவியிடம் பாடல் பாட சொல்லி கேட்கப்பட்டது. அவளும் சீனியர்களின் புறம் திரும்பி நின்றவாறே பாட தொடங்கினாள்.
ஒளியிலே தெரிவது நீயில்லையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலயா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா
என்று பாடினாள். அணைவரும் கரவோசைகளை எழுப்பினர். வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த சுதாகரும் நந்தனும் கூட கைதட்டினர். "ஓகே வா பாடுறா. என்னடா?" என்றான் சுதாகர். நந்தனுக்கும் அதுதான் தோன்றியது. அவனும் தலையசைத்துக்கொண்டான். இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதைக்கண்ட ரக்சாவோ, "இங்க வாங்கடா. அங்க என்ன பேச்சு உங்களுக்கு? உங்க பேர சொல்லுங்க டா?" என்றாள். இருவரும் அவர்கள் பெயரைக்கூறிய பின்னர், ரக்ஷாவோ சற்று நேரம் யோசித்துவிட்டு, "சுதாகர், நீ இப்போ என்ன பன்ற இவளைப்பார்த்து அழகா ஒரு கவிதை சொல்லி ப்ரபோஸ் பன்ற" என்றாள். அந்த பெண்ணோ "சீனியர் நாந்தான் நீங்க கொடுத்த டாஸ்க் பன்னிட்டேன் ல, திரும்பவும் ஏன் என்னை பிடிச்சி வசிருக்கிங்க. ப்ளீஸ் நான் போறேன்" என்று சொல்லிக்கொண்டே நகர முட்பட்டாள். அப்பொழுது தான் சுதாகர் அந்த பெண்ணைக் கவனித்தான்.
வேறு யாராக இருக்க முடியும்? நித்யாவே தான். சீனியர் பெண் நித்யாவை நிக்க வைத்து விட்டாள். சுதாகர் ஒரு கணம் கண்ணை மூடி திறந்துவிட்டு,
அலைகளில்லா ஆழ்கடலும்
ஆர்ப்பரித்து விண்ணில் எழும்
முழுமதியை முத்தமிட...
பேரழகே,
உன் முகம் கண்ட மறுநொடி,
நீ நிலவாக நான் கடலானேன்
என்றான். நித்யாவிற்கு இருந்த பதட்டத்தில் கவிதையின் உட்பொருளை எல்லாம் ஆராய முடியவில்லை. சீனியர்களுடன் சேர்ந்து அவளும் கைத்தட்டி விட்டு அங்கிருந்து ஓடியேவிட்டாள். தன் மனதையும் சேர்த்து எடுத்துக்கொண்டு ஓடும் பெண்ணைப்பார்த்து சிரித்துக்கொண்டே நின்ற சுதாகரின் முன்பு காலி பாட்டிலை நீட்டினான் நந்தன். அதைக்கண்டு குழம்பிய பாவத்துடன் சுதாகர், "என்னடா?" என்றான். "இல்ல மச்சி இந்த வாயில இருந்து வர வாட்டர் ஃபால்ஸ பிடிச்சி உன் தலைல ஊத்தி உன்ன தெளிய வைக்கதான்" என்றான். சிரித்துக்கொண்ட சுதாகரோ "அவ்வளவு அப்பட்டமாகவா தெரிகிறது?" என்று வடிவேல் பாணியில் கேக்க, "ஆம் மன்னா" என்றான் நந்தன்.
இவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்ட்ருப்பதைக்கண்ட சீனியர் கூட்டம், "டேய் அங்க என்னடா சிரிப்பு? வளர்ந்து கெட்டவனே இங்க வா டா? என்ன டிப்பார்ட்மென்ட் நீ?" என்றனர். அவனும் தனது துறையை சொல்ல, அவனைக் கூப்பிட்டு நடனம் ஆட சொன்னார்கள். நந்தன் பரதநாட்டியம் முறையாக பயின்றவன், அவனும் அழகாக ஆட அவர்கள் இருவரையும் விடுவித்தனர். இருவரும் பேசிக்கொண்டே வகுப்பறைக்குள் சென்றனர். சுதாகரும் "இனி நித்யாவைப் பார்க்கவே கூடாது என்ற முடிவுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான். அந்தோ பரிதாபம், அவனுக்கு முன்னால் அவனுடைய வகுப்பறையிலேயே அமர்ந்திருந்தது அவனது வெள்ளை மயில். நந்தனுக்கும் நித்யாவை அடையாளம் தெரிந்தது. "மச்சி உன் நிலா டா" என்றான். "தெரியுது நீ மூடிக்கிட்டு உக்காரு. வா போய் லாஸ்ட் பென்ச்ல உக்காருவோம் என்று இழுத்துச்சென்றான். நித்யாவும் கடைசி பென்ச்சில் தான் அமர்ந்திருந்தாள். அவளுக்கு நேராக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர் இருவரும். சுதாகர் தன்னுடைய மொபைலை எடுத்து அவசரமாக ஆதர்ஷுக்கும் ரித்விக்கும் "மச்சான் அவ என் வகுப்பு தான் டா" என்று ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டான். ஒரு வழியாக மற்ற மாணவர்களும் வந்து அமர வகுப்பு ஆரம்பமாகியது. சுதாகர் அவனுடைய நிலாவின் பெயரைத் தெரிந்துகொள்வதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான். அவள் பெயரைக்கேட்டதும் குறித்துக்கொண்டு அதையும் அவன் நண்பர்களுக்கு தெரியப்படுத்தினான்.
அதற்கு மேல் சுதாகர் தான் நித்யாவைப் பார்ப்பது யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் பார்த்துக்கொண்டான். அன்றைய வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்ததும் ஆதர்ஷிடம் இருந்து கான்ஃபெரன்ஸ் கால் அழைப்பு வந்தது. நித்யாவைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தனர். சுதாகரும் தனக்குத் தெரிந்த வரையில் கூறினான். "வாய்ஸ் நல்லா இருக்கு மச்சி ஆனா கேவலமா பாடுறா. கிட்ட பாக்கும்போது இன்னும் கொஞ்சம் அழகா இருந்தா. நாகர்கோயில் பக்கம் போல. எல்லாரும் சைட் அடிக்கிறானுங்க, எத்தன பேர் போட்டிக்கு வருவானுங்கனு தெரியல. வீடியோ கால்ல வாங்க உங்களுக்கு ஒருத்தர அறிமுகபடுத்துறேன் என்று கூறி நந்தனை பீம் என்று அறிமுகப்படுத்தி இருந்தான். நித்யாவோ தனக்கு புதிதாக கிடைத்த தனது அறைத்தோழி மிதிலாவுடன் வகுப்பில் உள்ள அனைவரையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவர் மட்டுமல்லாது இன்று அவர்களுக்கு கிடைத்த புதிய நட்பான ரேகா மற்றும் ராகவியும் அவர்களுடன் இருந்தனர். "எந்த பீஸாவது தேறுமாடி?" என்று துவங்கி வைத்தாள் மிதிலா. "சுதாகர் என் ஆளு மச்சி" என்றாள் ரேகா. "அப்ப நாந்தான் உனக்கு போட்டி" என்றாள் ராகவி, மிதிலாவோ "நந்தன் எனக்கு" என்றாள். நித்யாவோ "வேற டாப்பிக்கே இல்லல்ல பேச? என்னத்தையோ பன்னித் தொலைங்க ஆனா அவனுங்களுக்கு தெரியாம பாத்துக்கோங்க இல்லனா ஒவரா சீன் போடுவானுங்க" என்று முடித்து வைத்தாள். மிதிலாவோ உனக்கு யாரும் வேண்டாமா? என்றாள். நித்யாவோ இப்போ வர யாரும் தோணலடி. தோணினா சொல்றேன் என்று முடித்துக்கொண்டாள். உன்மையில் அவளுக்கு இந்த சைட் அதிலெல்லாம் விருப்பம் இருந்தது இல்லை. ஆனால் அதைக் கூறினால் பூமர் என்று சொல்லக்கூடும் என்று சமாளித்துவிட்டிருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பித்து ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தது. இடையில் சுதாகர் நித்யாவிடம் பேசுவதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. தினமும் அவளைப்பார்த்துக் கொள்வான், நந்தன், ஆதர்ஷ், ரித்வி தவிர யாரிடமும் தெரியப்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் நந்தனும் நித்யாவும் ஒரே குரூப்பில் தான் செய்முறை செய்தனர். சுதாகரைப்பொறுத்த வரையில் எந்த ஒரு புறத்தூண்டுதலும் இல்லாமல் தனக்கு நித்யாவைப் பிடித்தது போல் நித்யாவுக்கும் தன்னைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். ஆரம்பத்தில் வேறு யாரையும் விரும்ப ஆரம்பித்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம் இருந்தது. நாளடைவில் அவளுடைய குணாதிசயங்கள் பழக ஆரம்பித்தவுடன் அதுவும் காணாமல் போய்விட்டது. சுதாகர் நித்யா இருவருமே இரண்டாவது செமஸ்டரில் அடி எடுத்து வைத்திருந்தனர். கல்லூரியின் நடைமுறைகளுக்கும் அங்கு உள்ள வாழ்க்கைக்கும் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். நித்யாவிற்கும் சுதாகருக்கும் இது இரண்டாவது செமஸ்டர். இடையில் ஊருக்கும் சென்று வந்திருந்தனர்.