நித்யா கதை சொல்லி முடித்த பின்னும் ஜெனி அக்கதையிலிருந்து வெளிவரவில்லை. நித்யாவைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.
நித்யாவின் பெற்றோர் காதலித்து மணம் முடித்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வசதிக்குறைவாக இருந்தபடியால் நித்யாவின் தந்தையான வாசுதேவனை, நித்யாவின் தாயார் வசந்தியின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை. வசந்தியின் வீட்டில் வேறு வரன் தேட ஆரம்பிக்க வசந்தி, வாசுதேவனைக் கைப்பிடித்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். வசந்தியின் பெற்றோரும் வசந்தியின் மீதிருந்த கோபத்தில் அவளைத்தேட அனுமதிக்கவில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது வசந்தியின் அண்ணனான அறிவழகன் குடும்பம் தான். வசந்திக்கும் அறிவழகனுக்கும் பதினோரு வயது வித்தியாசம். அறிவு பிறக்கும்பொழுது ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக அறிவின் தந்தை மற்றொரு குழந்தைப்பேறுக்கு சம்மதிக்கவில்லை. அறிவின் தாயார் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு கோவில் கோவிலாக ஏறி இறங்கி கடுமையான விரதங்களை மேற்கொள்ள, அறிவின் தந்தை மனமிறங்கி அவர் பிறந்த பத்து வருடம் கழித்து அவர் மீண்டும் கருத்தரித்தார். அவர் ஆசைப்பட்டபடியே பெண் குழந்தையும் பிறந்தது, ஆனால் மீண்டும் உடல்நலம் குன்றினார். விளைவு அறிவு அங்கு தாயுமானவனானான்.
தாயின் அழகுடன் இருந்த அறிவின் தங்கை அறிவின் முதல் மகளானாள். நாட்கள் கடந்தது, அறிவிற்கு இருபத்தியேழு வயதானதும் அவனுக்குத் திருமணத்திற்கு வரன் தேடினர். அழகும், ஆண்மையும், வசதியும் கொண்ட அறிவழகனுக்கு பெண் கிடைப்பது அத்துனை கடினமாக இல்லை. வசந்தி பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவரது அண்ணி ஜெயந்தி வீட்டிற்குள் வந்தார். ஜெயந்திக்கு இருபத்தி மூன்று வயது, அழகு பதுமைபோல் இருந்த வசந்தியைப் பார்த்தவுடன் ஜெயந்திக்குப் பிடித்துவிட்டது. அவளது வெகுளி தனமான குணம் அவர்களது பிணைப்பை இன்னும் வலுப்படுத்தியது. நாட்கள் மகிழ்ச்சியுடன் சென்றது. ஒரு வருடம் கழித்து ஜெயந்திக் கருத்தரித்தார். வசந்தியின் பதினேழாவது வயதில் ஜெயந்தி ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தார். அறிவு வசந்திக்கு செய்த எல்லவற்றையும் வசந்தி அறிவின் குழந்தைக்குச் செய்தாள். மனோகர் என குழந்தைக்கு பெயர் வைத்து மற்றொரு தாயாய் வளர்த்தாள். இந்த நிலையில் வசந்தி கல்லூரி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்த போது அவர்களது டிராவல்ஸில் டிரைவராக பணிபுரிந்த வாசுதேவனைக் காதலித்தார். இதை முதலில் கண்டுபிடித்தது அறிவு தான். வசந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தபடியால், வீட்டில் வசந்தியின் சார்பாக பேசினார். பழமைவாதியான அறிவின் தந்தைக்கு ஆண் மகன் அவருடைய சொல்லைக்கேட்டு மணம் முடித்திருக்க, பெண் சுயமாக வரன் தேடிக்கொண்டது வாசு தேவனை நிராகரிப்பதர்க்கான முதல் காரணமானது. அடுத்தது வாசுதேவனின் நிதி நிலைமை. வாசுதேவன் அவரது வீட்டிற்கு ஒரே குழந்தை. அவருடைய தந்தை சாலை விபத்தில் மரணமடைந்த போது, வாசுதேவனுக்கு வயது வெறும் இரண்டே மாதங்கள். வாசுதேவனின் தாயார், வசந்தியின் வீட்டு வயல்களில் வேலை செய்து தான் வாசுதேவனை வளர்த்தார். தாங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்கரரின் வீட்டில் மகளை மருமகளாக அனுப்புவதில் அறிவின் தந்தைக்கு உடன்பாடில்லை. விளைவு வசந்தி வீட்டை விட்டு வெளியேறினார்.
வசந்தி வாசுதேவனுடன் சென்றபின் மிகவும் ஒடிந்தது வசந்தியின் அண்ணன் குடும்பம் தான். ஜெயந்தியும் அறிவும் மட்டுமல்லாது அவரது மகன் மூண்றறை வயது மனோகரும் மிகவும் துன்புற்றான். தாய்க்குத்தாயாக இருந்த அத்தையை தேடி தேடி சோர்ந்து போனான். இருப்பினும் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலையில் அறிவால் வருந்த மட்டுமே முடிந்தது.
நாட்கள் நகர்ந்தது, ஜெயந்தி இரண்டு வருடம் கழித்து மீண்டும் கருத்தரித்தார். இரண்டாவதும் ஒரு ஆண் மகவு. ஜெயந்தியின் இரண்டாவது குழந்தைப்பிறந்த அதே நாளில் வசந்திக்கும் முதல் குழந்தைப்பிறந்தது. அறிவு தனது குழந்தைக்கு சுதாகர் என்று பெயர் வைக்க, வசந்தி தனது பெண் குழந்தைக்கு நித்யா என்று பெயர் சூட்டினார்.
நித்யாவின் தாயார் பிறந்த இடம் மதுரை, அதாவது சுதாகரின் ஊர். நித்யாவின் தாய் தந்தையர், திருமணம் முடித்துக் குடியேறிய இடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன் புதூர். இயற்கை எழில் கொஞ்சும் ஊர். சிற்றாறுகளும், பச்சைப்பசேல் என்ற புல்வெளியும், கற்றாடிகளும், மலைகளும் முதல் முறைக் காண்பவர்கள் கண்ணிமைக்க மறந்துதான் போய் விடுவர். நித்யாவிற்கும் அவர்கள் ஊர் மிகப்பிடித்தம். அந்த ஊர் மக்களின் தொழில் செங்கல் சூளையில் செங்கல் செய்வது தான். ஆரம்பத்தில் நித்யாவின் தந்தை வேலைக்குச் சென்றார். மதுரையில் அத்தனை பெரிய வீட்டில் ராணி போல வாழ்ந்தவளை வாடகை வீட்டில் குடியமர்த்தியதில் நித்யாவின் தந்தைக்கு மிகுந்த வருத்தம். மாடு போல உழைத்து நித்யாவின் முதல் வயது பிறந்தநாளன்று அவரது சொந்த வீட்டைக் கட்டி முடித்துப் பால் காய்ச்சினார். அதில் நித்யாவின் தாயார்க்கு மிகுந்த பெருமை.
நித்யா அவளது தந்தையின் இளவரசி. சிறுவயதிலிருந்தே நல்ல அழகும் துறுதுறுப்பும் மிகுந்த பெண். அக்கம் பக்கம் உள்ள அணைவருக்குமே நித்யாவை அத்தனைப் பிடிக்கும். தன்னுடைய பதின் வயது வரை அக்கம் பக்கத்தாரைத் தன்னுடைய இரத்த சொந்தம் என்றே கருதி வந்தாள். விவரம் புரியாத வயதிலிருந்து அத்தை மாமா சித்தி சித்தப்பா என்று உறவு முறை சொல்லி அழைத்து வந்தது மட்டுமல்லாமல் அவர்களும் நெருங்கிப் பழகியமையால் நித்யாவிற்கு அதில் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் பக்கத்து வீட்டு அத்தை மகளின் திருமணத்திற்காக திருநெல்வேலி சென்று வந்த வசந்தி, வாசு தேவனிடம் என் அண்ணாவ பாத்தப்ப அடையாளமே தெரியல, என்ன மறந்தே போயிட்டாங்க அண்ணனும் அண்ணியும். மனோகூட அவ்ளோ பெரிய பையனா இருக்கான். அப்படியே எங்க அப்பா ஜாடை, என்று அழுதுகொண்டே பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது தான் சந்தேகம் வந்தது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நித்யா, தாயிடம் சென்று கேட்க அவர்கள் காதலும் அதைத்த்டர்ந்து நடந்த சம்பவங்களும் தெரிய வந்தது, அவளது பெற்றோர் வழி மட்டுமே கதையைக் கேட்டதால், காசில்லாத ஒரே காரணத்திற்காக தங்களை ஒதுக்கி வைத்த தாய்வழி சொந்தத்தின் மீது பிடித்தம் இல்லாமல் போனது.
தொடர்ந்து அதைப்பற்றி சிந்திக்கவும் நித்யாவிற்கு நேரம் இருக்கவில்லை. அவளுக்கு தோழியருடன் சேர்ந்து பகல் பொழுது முழுவதும் ஆற்றில் நீந்துவதும் இரவில் படிப்பதும் பள்ளி வேலைகளைப்பார்ப்பதுமாய் நேரம் பறந்து விடும். சிறு வயதில் இருந்தே நித்யா நன்றாகப் படிக்கும் குழந்தை தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள புகழ்ப்பெற்ற பொறியியல் கல்லூரியில் சேர வேண்டுமென்பது அவளது கனவு. இடைப்பட்ட காலத்தில் நித்யாவின் தந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு செங்கல் சூளையை வாங்கி தொழில் செய்யவும் ஆரம்பித்திருந்தார். நித்யா நினைக்கும் கல்லூரியில் சீட் வாங்கவும் நித்யா வீட்டினருக்கு வழி இருந்தது, இருப்பினும் நித்யா கவுன்கிலிங்க் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும் என்று உறுதியுடன் படித்து தனது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதி விட்டிருந்தாள்.
விடுமுறை நாட்களில் மகள் ஆற்றில் விளாயாடச் செல்லாமல் இருக்க வாசுதேவன் மகளை தன்னுடன் சூளைக்கு அழைத்துச்சென்று தொழில் கற்றுக்கொடுத்தார். "நித்யா என்னா அழகா இருக்கு, அந்த புள்ளய போய் எதுக்குல இந்த வெயில்ல போட்டு கரிக்க. வீட்டுல இருக்கச்சொன்னா என்னவே?" என்ற ஊராரிடம், "எனக்கு பின்னாடி என் பொண்ணு எப்படி இந்த தொழில நடத்துவா? இப்பவே பழகிக்கிட்டா ஈசியா இருக்குமில்லத்தான்" என்று சிரிப்பார் வாசு. நித்யாவும் ஆர்வமுடன் தொழிலைக் கற்றுக்கொண்டாள். களிமண்ணை நன்றாக குழைத்து அதை சரியான அளவுகளில் செய்யப்பட்ட ஃபிரேம்களில் வைத்து தேய்த்து, அதனை வெய்யிலில் காய வைத்து பின்னர் சூளையில் வைத்து சுடுவது வரை ஒரே நாளில் கற்றுக்கொண்டாள்.
அதன் பிறகு விற்பனையும் கற்றுக்கொண்டாள். இடப்பட்ட காலத்தில் அவளது தேர்வு முடிவுகளும் அவள் எதிர்ப்பார்த்த அளவில் வெளியாகி அவள் விரும்பிய கல்லூரியிலேயே கந்தாய்வு மூலம் இடமும் கிடைத்தது. வீட்டில் இருந்த நான்கு மாதங்களும் தொழிலையும் நன்றாக கற்றுத்தேறியிருந்தாள். தகப்பன் இல்லாமல் தனியாக வந்து சூளையை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துமிருந்தாள். மகளுடைய இந்த கெட்டிகாரத்தனம் தனது தாய்வழி வந்ததாக வசந்தி தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்.
அங்கே சுற்றி இங்கே சுற்றி நித்யா கல்லூரி செல்லும் நாளும் வந்தது. வசந்தியும் வாசுதேவனும் பேருந்தில் கோவை வந்திறங்கி அங்கிருந்து கல்லூரியையும் வந்தடைந்தனர். முதல் நாள் தங்கள் பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்க்க வந்திருந்தக் கூட்டத்தைக்கண்டு வசந்தி தான் மிரண்டது மட்டுமல்லாமல் நித்யாவையும் பயமுறுத்திக் கொண்டிருந்தார். "பாரு பாப்பா, எல்லாரும் கார்லதான் வந்து இறங்குறாங்க. நம்ம மட்டும்தான் பஸ்ல வந்திருக்கோம். அப்ப அவங்களுக்கெல்லாம் படிப்பு அவ்வளோ முக்கியமானதா இருக்காது. ஆனா நமக்கு அப்படியில்ல, படிப்புதான் மக்கா சோறு போடும். பிள்ளைங்க கூட பேசு ஆனா படிப்ப கெடுத்துகிட்டு பேசாதம்மா. ஸ்கூல்ல மாதிரி இங்கயும் நல்லா படிச்சி நல்ல பேரா எடுக்கனும். எங்க போனாலும் அம்மா அப்பாகிட்ட சொல்லுமா" என்று அவளை பயமுறுத்தியதோடல்லாமல், தூரத்தில் சென்று கொண்டிருந்த அக்கல்லூரியின் விரிவுரையாளரை அழைத்து "உங்கள நம்பி தான் என் பொண்ண விட்டு போறேன் மேடம், நல்லா பாத்துக்கோங்க" என்று கண்ணீர் வடித்தார். இதைக்கண்ட நித்யா தனது தந்தையிடம் "அப்பா நிஜம்மாவே அம்மா டிகிரி படிசிருக்காங்களா? இவங்க பன்றத பாத்தா காலேஜ் கருப்பா சிவப்பானு தெரியாத போல இருக்கு" என்றாள். வசுதேவனோ "இப்போ அவ காலேஜ்ல போய் படிச்ச வசந்தியா பேசல, நித்யாவோட அம்மா வசந்தியா பேசுறா. உனக்கு ஒரு குழந்தை வரும்போது தான் அது உனக்கு புரியும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
சுதாகருக்கும் அன்று தான் கல்லூரியில் முதல் நாள் என்பதால், அவனும் அந்தக்கூட்டத்தில் தான் இருந்தான். அவனுடன் அவன் பள்ளித் தோழனும் சேர்ந்து வந்திருந்தபடியால் இருவரது பெற்றோர்க்ளும் வரவில்லை. சுதாகர் முதலில் கண்டது தனது அப்பத்தா ஜாடையில் இருந்த நித்யாவின் அம்மாவைத்தான். அவர்களது உருவ ஒற்றுமையை அவன் உணராது போனாலும் அவர்களைப் பிடித்தது. உடன் நின்றிருந்த நித்யாவையும். முதல் பார்வையிலேயே காதல் தான். ஆனால் அதை ஒத்துக்கொண்டால் அவன் சுதாகர் அல்லவே.