அத்தியாயம் 105-5(Final)
அவனிடமிருந்த காகிதக்கட்டை வாங்கியவள்.. அதைப் பிரித்துப் பார்க்காமாலேயே… வாங்கிய அடுத்த நிமிடம்… மொத்தக் காகிதங்களும் சுக்கு நூறாகக் கிழிக்கப்பட்டு மீண்டும் அவனது கைகளிலேயே வைக்கப்பட்டிருக்க…
ரிஷி அவற்றையேப் பார்த்துக் கொண்டிருந்தபடியே இருக்க… கண்மணியைத் திரும்பிப் பார்க்கவே இல்லை… அன்று கையெழுத்து போட்ட நிமிடங்களில் அவன் நினைவுகளில் இருக்க… அது தந்த தாக்கத்தோடு பேசினான் ரிஷி…
“இவ்ளோ ஈஸியா நீ பண்ணிதை என்னால பண்ண முடியலேயே கண்மணி…”
கண்மணியோ பேசாமல் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்… சில நிமிடங்கள் கழித்து பேசவும் ஆரம்பித்தாள்…
“இவ்வளவுதானா ரிஷி நீங்க…” என்ற போதே அவளின் கண்ணீர் அவள் கன்னம் தாண்டி இருக்க…
“இது சும்மான்னு எனக்குத் தெரியும்… என்னைக் கடுப்பேத்துறதுக்குனும் தெரியும்… என்னைக் குத்திக் காட்றதுக்குனும் தெரியும்… இதுல நீங்க சைன் போட்டப்போ நீங்க பட்ட வேதனையை எனக்கும் காட்றதுக்குனும் தெரியும்
“ஆனால் என்னைப் பழிவாங்கனும்னு நினைக்கிறீங்க தானே… என்னை அழ வைக்கனும்னு நினைக்கிறீங்கதானே… பரவாயில்லை… யார் எனக்குப் பண்றது… என் ரிஷிக்கண்ணாதானே…” என்றவளைப் பார்த்தவன்… ஏதுமே பேசாமல் எழுந்தவன்… அவளை விட்டு விலகி நின்றிருந்தான்… ஏன் அவள் அழுகையைக் கூடத் துடைக்க நினைக்கவில்லை… தள்ளி நின்று… வெளியே சன்னலின் வழியே தெரிந்த மரத்தின்… எதோ ஒரு கிளையின்… ஒரு இலையில் தன் கவனத்தைக் குவித்திருக்க…
கண்மணி அவனிடம்…
“பரவாயில்ல ரிஷி… அட்லீஸ்ட் உங்க பொண்டாட்டியா நான் பேசுறதையாவது கேட்கறீங்களே… ரொம்ப தேங்க்ஸ்… எனக்கு தெரியும் ரிஷி… ஹாஸ்பிட்டல்ல இருந்தவரை… இங்க வீட்டுக்கு வந்த பின்னால….. பேர் சூஸ் பண்ணும் போது… என்கிட்ட பேசும் போது… பழகும் போது…. எல்லாமே நம்ம குழந்தைகளோட அம்மா நீ… அப்பா நீ… அந்த உறவுல மட்டும் தான் பேசுறீங்க… எனக்கும் தெரியும்… “
ரிஷி இப்போது திரும்ப… அவன் கண்களில் அப்படி சிவப்பு… கோபத்திலா… இயலாமையினாலா… கண்மணியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை…
“குழந்தையோட அப்பாகிட்ட சைன் வாங்கிக்கங்க… நினைச்சுப்பாரு… இதை யார் சொன்னது… நீ எந்த நிலைமைல இருந்த நீ… அடுத்த நொடி என்கிட்ட பேசவே முடியாமல் கூட போயிருக்கலாம்… அப்போ கூட உன் பிடிவாதத்தை விடல… அந்த வார்த்தை உனக்கும் எனக்குமான உறவைக் கிட்டத்தட்ட கொச்சைப் படுத்தின வார்த்தை… நீ சாகப்போறேன்னு…. ஒவ்வொரு நிமிசமும் என்னை மட்டுமல்ல… நம்ம உறவையும் அசிங்கப்படுத்திட்டு இருந்த…”
“என் கண்மணி… எல்லாம் தெரிஞ்சவ…. அவ ஒண்ணு பேசினால் அதுல அர்த்தம் இருக்கும்… அவ எடுத்தெறிஞ்சு பேசினால் கூட அதுக்கு ஒரு காரணம் இருக்கும்… அவ மௌனம் கூட ஆயிரம் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்னு நம்பினேண்டி… எனக்கு நல்லது பண்றேன்னு என்னை எவ்ளோ வேதனைல தவிக்க விட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… ”
“எனக்காக நீயும் அதே வேதனையை அனுபவிச்சுட்டு இருந்தது மட்டும் எனக்குத் தெரியும்டி… ஆனால் என்னோட வேதனையை எப்படி மறக்கிறது… அது எனக்குத் தெரியலை…. நீதானே வேதனைப்படுத்தின… கஷ்டப்படுத்தின… அவமானப்படுத்தின… தீர்வே நீயே கண்டுபிடி…” என்ற முடித்தபோதோ அவன் குரலில் கோபம் எல்லாம் மாறி இருக்க…. கண்மணியைப் பார்த்து புன்னகைத்தவன்…
“ரிதன்யா மேரேஜ் முடிந்த பின்னால நல்ல நாள் பார்த்து அழைச்சிட்டு போறேன்… நீ இங்க இருக்கிறதுதான் உனக்கும் நல்லது… நம்ம குழந்தைகளுக்கும் நல்லது…” அவன் குரலில் இப்போது மென்மை மட்டுமே…
“அதை நான் சொல்லனும்” கண்மணி பட்டென்று சொன்ன போதே
“என் நல்லது எதுன்னு நீ யோசிக்கும் போது… நான் யோசிக்கக் கூடாதா… நான் சொல்லக் கூடாதா… நான் சொல்றதை கேட்கனும்… நான் சொல்றதைத்தான் நீ கேட்கனும்” கண்மணியிடம் ரிஷி பிடிக்கும் வழக்கமான பிடிவாதம் வந்திருக்க
“இங்க பாரு… டிசம்பர் எண்ட்ல நல்ல நாள் பார்க்கச் சொல்லிருக்கேன்… நியூ இயர்ல நீங்க மூணு பேரும் நம்ம வீட்ல இருப்பீங்க… இது என்னோட முடிவு… உனக்குப் பிடிக்கும்… உனக்குப் பிடிக்காது… அது எனக்குத் தேவையில்லை… அதே மாதிரி இந்தப் பழிவாங்குறேன்… அது இதுன்னு தேவையில்லாத கற்பனையை நீயா வளர்த்து வச்சுகிட்டால் அதுக்குப் பொறுப்பு நான் இல்லை…”
சட்டென்று கதவை நோக்கி நகர்ந்தவன்…
“முடிந்தால் அந்த டைரியப் படி… நானும் கதை எழுதி இருக்கேன்… நீ இல்லைனா நான் என்னை எப்படி பார்த்துகிறதுன்னு… என் வருங்கால வாழ்க்கையை எப்படி வாழ்றதுன்னு… உன்னை மாதிரி அட்வைஸ் ஆணிலாம் சொல்லி படிக்கிறவனை ரத்தம் கக்க வச்சுருக்க மாட்டேன்… தமிழ் கொஞ்சம் மிஸ்டேக்ஸ் இருக்கலாம்… ஆனாலும் நானும் ஒரு கதை சொல்லியிருக்கேன்… படிச்சுட்டு சொல்லு…”
என்றவன்…
“படிச்சால் உனக்கு என் மேல கோபம் வரும் தான்… பரவாயில்லை… ஆனால் படிச்சுதான் ஆகனும்… அடி வாங்குறதுக்கு ரெடி ஆகிட்டுதான் கொண்டு வந்து கொடுத்திருக்கேன்… ஆனால் உன்னை மாதிரி ஆர்ட்டிக்கிள் எழுதலடி… ரொமான்ஸ் ஸ்டோரி…” ரிஷியின் குரலில் மெல்ல உற்சாகம் வந்திருக்க…
கண்மணி அவனையும்… அந்த டைரியையும் மாறி மாறி பார்த்தவளாக… டைரியை கையில் எடுத்தவள்…
“ஒழுங்கு மரியாதையா எடுத்துட்டுப் போயிருங்க…” என்றபடியே
“படிச்சுட்டு அடிக்கனும்னு என்ன அவசியம்… இதோ இப்போதே காட்றேன்” என்றபடியே… அவனை நோக்கி வீசி எறிந்திருக்க… ரிஷியோ அவளை விட வேகமாகச் செயல்பட்டு… அந்தப் புத்த அடியில் இருந்து இலாவகமாக தப்பித்ததோடு மட்டுமல்லாமல்… அதைக் கையிலும்பிடித்திருந்தவனாக…
”அம்மு… செம்ம ஸ்டோரி மிஸ் பண்ணிட்டடி…” என்றபோதே
“கொன்னுருவேன்… போடா… ஆனால் என்னைக்காவது படிச்சுட்டு படிச்ச அதே சூட்டோடு சூடா உனக்கு தர்ம அடி கிடைக்கும்… காத்துட்டே இருங்க…” என்றவளிடம்
“ரவுடிகிட்ட இதைக் கூட எதிர்ப்பார்க்கலைனா எப்படி…” ரிஷி சொல்லி முடிக்கும் முன்னேயே… கண்மணி அங்கிருந்த ஏதோ ஒரு பொருள் ஒன்றைக் கையில் எடுத்திருக்க… ரிஷியோ… அடுத்த நொடியில் மறைந்திருந்தான்…
கண்மணி இப்போது கட்டிலில் தொய்ந்து அமர்ந்திருந்தாள்… கண்களில் கண்ணீர் இல்லைதான்… ஆனால் மனம் ஊமையாக அழுதது
என்னதான் ரிஷி அவளிடம் போலியாக காகிதங்களைக் காட்டி அவளை வெறுப்பேற்றுவது நடித்தாலும்… அந்த முகத்தில் இருந்த வேதனை அது அவள் அறியாததா…
அவனின் நல்லதுக்காகத்தான் அவள் அவனைப் பிரிந்தாள் என்றாலும்… அதனால் அவன் பட்ட வேதனையும்… அவமானமும்…. மன உளைச்சலும்… மறுக்க முடியாதுதானே… மாற்ற முடியாதது தானே
அவனை எப்படி சரிப்படுத்துவது யோசித்தபடியே…. கண்மணி வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்….. எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளொ… குழந்தைகளின் அழுகுரல் தான் அவளை எழுப்பியிருக்க.. அப்போதுதான் சுயத்துக்கே வந்திருந்தாள்… என்னதான் நினைவு மீண்டாலும்…. குழந்தைகளைத் தட்டிக் கொடுத்தபடியே… கணவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது மனம்… அவன் காயத்தை எப்படி ஆற்றுவது…. காத்திருந்தாள் அந்த நாளுக்காக….
இதற்கிடையே…. அர்ஜூன் – நிவேதா , மற்றும் விக்கி – ரிதன்யா திருமண நாளும் நெருங்கியிருந்தது….
----
திருமண வைபங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்…, அர்ஜூன் நிவேதாவை அழைத்து அவளோடு தனிமையில் பேச வேண்டுமென்று சொல்லியிருக்க… நிவேதாவோ சந்தோஷத்தில் இறக்கை கட்டி பறந்து வந்திருந்தாள்… அர்ஜூனையும் சந்தித்திருந்தாள்….
அந்த உயர்தர ஹோட்டலில்…. அர்ஜூன் தன் எதிரே அமர்ந்திருந்த நிவேதாவையே பார்த்தபடி தன் இருக்கையில் அமர்ந்திருக்க
நிவேதாதான் மௌனத்தைக் கலைத்தாள்….
“என்ன அர்ஜூன்…. பேசனும்னு வரச் சொல்லிட்டு அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்” நிவேதாவின் முகத்தில் புது மணப்பெண்ணுக்கான களை அப்பட்டமாகத் தெரிந்திருந்தது…
அர்ஜூன் இப்போது வாய் திறந்தான்…
“உனக்கு இந்த மேரேஜ்ல மனப்பூர்வ சம்மதமா நிவேதா” தயக்கத்துடன் கேட்க
நிவேதா புருவம் சுருக்கி அவனைப் பார்த்தாள்… “இவன் இன்னும் கண்மணி நினைவில் தான் இருக்கிறானா…” மனதின் வலியை கண்கள் காட்டியிருக்க…
“இல்ல இல்ல… நீ நினைக்கிற மாதிரி இல்லை… நான் மனப்பூர்வமா சம்மதம் சொல்லியிருக்கேன்… நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியனும்…”
“ஏன் எனக்கென்ன…. என்னோட சம்மதத்துல என்ன குழப்பம்” நிவேதா குழப்பப் பார்வை பார்க்க…
அர்ஜூன் சில நிமிடங்கள் அமைதியாக தன் குளிர்பானத்தை யோசனையுடன் குடித்தவன்…
”நான் உன்கிட்ட மனசுவிட்டு பேசலாமா… என் மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லலாமா…”
நிவேதா கண்களிலேயே சம்மதம் தெரிவித்திருக்க… அர்ஜூனும் மனம் திறந்தான்…
“இவ்ளோ நாள்… நம்மளச் சுத்தவிட்டுட்டு… இப்போ ஒண்ணுமே சொல்லாமல் மேரேஜுக்கு சம்மதம் சொல்லிட்டான்னு எல்லோருக்குமே கேள்வி இருக்கும்… “ என்றவன் அவளையேப் பார்த்தபடி
“கண்மணி என் வாழ்க்கைல இல்லைனு ஆன பின்னால ஏதோ போனால் போகுதுன்னு நான் இந்த மேரேஜுக்கு ஒத்துக்கலை… ரொம்ப ரொம்ப யோசிச்ச பின்னால தான் நான் சம்மதம் சொன்னேன்… அந்த யோசனையும் உன்னைப் பற்றி அதிகமா யோசிச்சதாலதான்..”
நிவேதா அவனிடம் இடையில் பேசவெல்லாம் இல்லை… அவனை மட்டுமே பேச விட்டாள்…
“சின்ன வயசில நான் எப்படின்னு தெரியலை… நல்லா விபரம் தெரியுற வயசுல… எனக்கு கண்மணியைப் பற்றி தெரிய வந்தது… அதுவும் டீன் ஏஜ் முடியுற பருவத்துல… என்னையுமறியாமல் நான்தான் அவளுக்குனு இருக்கேன்னு ஒரு எண்ணம் எனக்குள்ள வந்துருச்சு… அவ உயிரை நாம தான் காப்பாத்துனோம்… செத்துப்போயிட்டான்னு நினைத்த அத்தையோட பாப்பா… இதோ இப்போ மறுபடியும் நம்ம கண் முன்னால வந்து நிக்கிறா… அந்த நிலைமையும் கொடுமையான நிலைமை… அப்போதான் எனக்குத் தோணுச்சு… அவ இருக்க வேண்டிய இடம் அது இல்லை… அவ சாதாரண பொண்ணு இல்லை… அவ இளவரசி…. அவ இழந்ததை எல்லாம் நாம அவளுக்கு கொடுக்கனும்… இது மட்டும் தான் என்னோட எண்ணமா இருந்தது… எப்போ அவளை மறுபடியும் பத்து வயசுல பார்த்தேனோ… அந்த நிமிசத்துல இருந்து அவ என்னோட பொறுப்பு… நான் அவளோட பாதுகாப்பு… அவளோட சந்தோசம் அது மட்டுமே என்னோட எண்ணத்துல இருந்தது… நான் மட்டும் தான் அவளுக்கு அதை மீட்டெடுத்து கொடுக்க முடியும்னு நினைத்தேன்…. காலையில் எழும் போது அவ நினைவோடத்தான் எழுவேன்… நைட் அவ நினைவோடத்தான் தூங்குவேன்… கண்மணியோட நினைவுகள் என்னோட வாழ்க்கைல ஒரு அங்கம்”
நிவேதா கண்களில் கூர்மை வந்திருக்க…
”எல்லாமே ஒரு நாள்… ஒரே நாள் இரவு… தலை கீழாக மாறிருச்சு… கண்மணின்றவ ஒரு கடினமான சிக்கலான ஒரு மேத்ஸ் பிராப்ளம் மாதிரி… நான் என் வாழ்க்கை மொத்தமுமே அவதான் எல்லாம்னு… என் ஊண்… உயிர்… மூளைனு அனைத்தையும் கசக்கி அவளுக்கானத் தீர்வைக் கண்டுபிடிக்க போராடிட்டு இருக்க… ஒருத்தன் எங்கேயோ இருந்து வந்து… ஜஸ்ட் நிமிசத்துல அந்த பிராப்ளத்தை ஈஸியா…. சால்வ் பண்ணினா எப்படி இருக்கும்… அந்த மாதிரி ரிஷி கண்மணி வாழ்க்கைல வந்தான்…”
“என்னைப் பொறுத்தவரைக்கும்… ரிஷியும் கண்மணியும் அவளோ ஈஸியா அவங்க வாழ்க்கையை வாழ முடியாது… ரிஷியால கண்மணியைக் கண்டிப்பா ஹேண்டில் பண்ண முடியாது… இவ அளவுக்கு அவன் மெச்சூரிட்டி கிடையாது… விளையாட்டுப் பையன்… அவளோட மெஜஸ்டிக்கு இவன் கால்தூசி வரமாட்டான்… அந்த மேரேஜ் கண்டிப்பா தோல்வில தான் முடியும்னு நினைத்தேன்…”
நிவேதாவின் குறுகுறு பார்வையில்
“அவளை மறுபடியும் நான் மேரேஜ் பண்ணிக்கனும்றதை விட… கண்மணியோட லைஃப்ல மறுபடியும் ஒரு ஏமாற்றம் வரப் போகுது… அவளை அதுனால சஃபர் பண்ண விடக்கூடாது…. அதுக்கு நான் என்னைத் தயார்படுத்தினேன்…”
“ஏன் நான் அவங்க ரிலேஷன்ஷிப் நீண்ட நாள் நீடிக்காதுன்னு நினைச்சேன்னா…. கண்மணி-ரிஷி… இவங்க ரெண்டு பேரும்… டாம் அண்ட் ஜெர்ரி கப்புளோ… இல்லை எதிர் எதிர் துருவத்துல இருக்கிர மாதிரி ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்…. இந்த மாதிரி எந்தக் குணாதிசியமும் அவங்களுக்கு இடையில இல்லை… அவங்க உறவை எப்படி அவங்க தொடரப் போறாங்க… கண்மணியை வேலைக்காரின்னு சொன்னவனோட… அவ எவ்ளோ நாள் வாழ முடியும்… சுயமரியாதை உள்ள பொண்ணு அவ… கண்டிப்பா அந்த உறவுல இருந்து வெளிய வந்துருவான்னு நினச்சேன்… “ சொன்னவன்… முகத்தில் சட்டென்று குழப்பம்…
“ஆனால் எப்படி இந்த அளவு அவங்களோட உறவு ஸ்ட்ராங்க் ஆனது…. “ அர்ஜூன் பேசிக்கொண்டிருக் போதே…
நிவேதா இப்போது
“ஸிக்ஸாக்(zigzag) ரிலேஷன்ஷிப் கேள்விப்பட்ருக்கீங்களா… ”
”இன்னும் சொல்லப் போனால்… பஷுல்(puzzle ) கனெக்ஷன்… உலகத்தில எங்க இருந்தாலும் அவங்க மட்டுமே கனெக்ட் பண்ணிக்க முடியும்… வேற யாராலும் அந்த ரிலேஷன்ஷிப்பை முழுமையாக்க முடியாது” என்ற படியே இப்போது இருக்கையில் இருந்து எழுந்தாள்… அவள் முகத்தில் வரும் போது இருந்த ஒரு சந்தோசம் கூட இப்போது துளியும் இல்லை…
“நான் கிளம்புறேன் அர்ஜூன்… ரெண்டு நாள்ல மேரேஜ்… வரச்சொன்னீங்கன்னு… அவ்ளோ ஆசையா ஓடி வந்தேன்… நம்மள பத்தி பேசுவீங்கன்னு ஆசையோட வந்தேன்…. என் ஆசை வழக்கம் போல உங்க விசயத்துல நிராசையா மட்டும் தான் ஆனது” நிவேதாவின் குரல் இறங்கியிருக்க… அதே நேரம் அந்த இடத்தை விட்டு முன்னேறிச் செல்ல ஆரம்பித்திருக்க…
வேகமாக எழுந்த அர்ஜூன் அவளை விட வேகமாக அவள் முன்னே போனவனாக… அவளை தடுத்து நிறுத்தியவன்…
“ஏண்டி… அவசரப்பட்ற… எல்லாம் சொல்லிட்டு… ஏன் நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்னு…” அவன் பேச்சைத் தொடர விடவில்லை நிவேதா…கையெடுத்துக் கும்பிட்டவளாக
“ஐயா சாமி… போதும் சாமி… நான் கேட்டனா… நீங்க ஏன் சம்மதம் சொன்னீங்கன்னு….”
“ஏய் நிவே…” அர்ஜூன் குரல் வெளியே வராமல் பாதியோடே நின்றபோதே… நிவேதா… லிஃப்ட்டினுள் ஏறி இருக்க… வேகமாக அர்ஜூன்… படிகளின் இறங்க ஆரம்பித்தவன்… அதே வேகத்தில் அவள் இறங்குவதற்கு முன்னதாக கீழே வந்திருக்க…
“நான் சொல்றதைக் கேளுடி…. 2 ஹவர்ஸ்ல… இன்னும் எவ்ளோ நேரம் மிச்சம் இருக்கு… ஜஸ்ட் பத்து நிமிசம்… கண்… ப்ச்ச்… ” வேகமாக கண்மணி என்ற பேரைத் தவிர்த்தவனாக
”இவ்ளோ கோபப்பட்டா எப்டிடி…”
நிவேதா கொஞ்சம் கூட மனம் இறங்காமல் கண் முன்னாலேயே காரில் ஏறிப் போய்க் கொண்டிருக்க… அர்ஜூன் மற்றதெல்லாம் மறந்து நிவேதா மட்டுமே நினைவில் கொண்டவனாக அவளையேப் பார்த்தபடி நின்று கொண்டிருக்க… இப்போது அவனது அலைபேசிக்கு அழைப்பு வர…. நிவேதாவின் எண் தான்…
“உங்க மேல கோபப்பட்டு விலகுறதா இருந்தா… எப்போதோ பண்ணியிருக்கனும்… ஆனால் இந்த மனசு… நீங்க என்ன பண்ணினாலும் உங்க பின்னாடியே வருதே… ஏன் அர்ஜூன்… “
அதுவரை அவளின் கோபத்தில்… இறுகியிருந்த அர்ஜுனின் முகம்… இப்போது அவள் வார்த்தைகளில் இளக்கம் கொண்டு வர ஆரம்பித்திருக்க…பதில் பேசாமல் அமைதியாகவே இருக்க… உண்மையிலேயே சொல்லப் போனால் அவனுக்கு பேச வரவில்லை…. அதனால் மௌனமாகவே இருக்க
“அதுனால… இந்த நிவேதா மனசை என்ன பண்றதுன்னு… மேரேஜ் வரை யோசிச்சு வைங்க… ஆஃப்டர் மேரேஜ்… இந்த மாதிரி நீங்க என்ன பண்ணினாலும் இந்த மனசு உங்க பின்னாடி வரக் கூடாது… இந்த அர்ஜூனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கனும்…. ”
அர்ஜூன் இப்போது…
“தலைவி பேச்சுக்கு மறுபேச்சே இருக்காதும்மா” புன்னகையோடே சொல்ல…
“பார்க்கலாம்…. பார்க்கலாம்…” நிவேதாவின் குரலிலும் மென்மை கலந்திருக்க… இப்போது அவள் வாகனமும் நின்றிருந்தது… காரின் சன்னல் வழியே அவனைப் பார்த்திருக்க
அர்ஜூன் தூரத்தில் நின்றவாறே…. நிவேதாவைப் பார்த்தபடி கையைசத்திருந்தான்…. அவளும் புன்னகையுடன் கடந்திருந்தாள்…
அன்று ஆதவனால் குண்டடிபட்டு மருத்துவமனைக்கு வந்த போது அவள் இவனைப் பார்த்து துடித்த துடிப்பு… அதன் பின் கண்மணி அறைக்குள் வந்த பின்… அவனை விட்டுச் செல்ல முடியாமல் ஏக்கமாக அவள் விடைபெற்ற நொடி… ஏனோ… அந்தப் பார்வை… அர்ஜூனை அன்றிலிருந்து அவனை வேதனையுடன் துரத்திக் கொண்டிருந்தது… இன்று அந்த வலிக்கான மருந்தை வாங்கிச் செல்லலாம் என்று வந்திருந்தான்…
மருந்தோடு விருந்துக் கிடைத்திருக்கும்…. ஆனால் இவன் பேசிய கண்மணி புராணத்தில் விருந்து கிடைக்காமல் போயிருக்க…. அது கிடைக்கப் போகும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதால்… இப்போதைக்கு அர்ஜூன் வைத்தியம் மட்டும் செய்துகொண்டான்….
---
அர்ஜூன்-நிவேதா… விக்கி- ரிதன்யா…. திருமண வாரமும் வந்திருக்க… திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்… நாராயணண்… ரிஷி… வேங்கட ராகவன் என் மூவர் இல்லமும் திருமணக் களை கட்ட ஆரம்பித்திருந்தது…
ரிதன்யாவின் திருமணத்தை தனசேகர் இருந்தால் எப்படி நடத்தியிருப்பார் என்று அனைவருக்கும் தெரியும்… ஆனால் ரிஷி யாருமே எதிர்பார்க்காத வகையில் அதைவிட பலமடங்கு அதிகமான ஆடம்பரத்தில் ஏற்பாடுகளை செய்திருக்க… அவன் உறவுகளே மூக்கில் விரல் வைத்திருந்தது….
ரிதன்யா கூட இந்த அளவுக்கு வீண் செலவு… ஆடம்பரம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியிருக்க….
“என் போராட்டம்லாம் எல்லோருக்கும் தெரியனும்னு பண்ணலை ரிது… நான் இது உனக்காக பண்றேனோ இல்லையோ எனக்காக… என் மன நிம்மதிக்காக பண்றேன் ரிது… என் அப்பாக்காக… இனிமேலாவது அவர் ஆத்மா மனசாந்தி அடையும்னு நினைக்கிறேன்… ஆனால்… எனக்கு… என் மனசுல… இங்க இன்னும் எரிஞ்சிட்டு இருக்கு ரிது… நிமிசத்துல நாம அனாதையான நாள்… அப்பா இறுதிச் சடங்குக்கு வந்தவங்க… என்னைப் பார்த்து நேருக்கு நேரா கேட்டாங்க…
”தனசேகர் இப்படி இந்த மூணு பேரையும் அனாதை ஆக்கிட்டு போயிட்டாரேன்னு… இவர் மாதிரி உன்னால பார்த்துக்க முடியுமான்னு… ”
“இவன்கிட்ட விளையாட்டுத்தனம் மட்டும் தான் பொறுப்பில்லாத பையன்… அப்பன் சொத்து மட்டும் இவனுக்கு போதும்… இவனை நம்பி விட்டுட்டு போயிட்டொம்னுதான் அந்த ஆத்மா அல்லாடும்… பாவம் தனசேகர்…”
“இன்னும் என்னென்னவோ சொன்னாங்க…”
“ஆனால் யாருமே எனக்காக வருத்தப்படலை… நானும் அப்பாவை இழந்து நிக்கிறேன்னு நினைக்கல ரிது… ஏன் நம்ம அம்மா கூட… ஒரு கட்டத்தில் அப்பாவும் என்னை…” தந்தையைப் பற்றி பேச ஆரம்பித்த போதே இப்போது ரிஷி தன்னுடைய உணர்ச்சிகளை இப்போது கட்டுப்படுத்தியவனானாக….
“பணம்… பாசம்… உறவு எல்லாமே எனக்கு கசந்த நாள்… ஏமாற்றம் மட்டுமே… ஆனாலும்… என் அப்பாவோட கனவு மட்டும் என்னை ஓட வச்சது… அவர் கனவை எல்லாம் நான் நனவாக்க முடியுமான்னு தெரியாத நிலைல… தினம் தினம் ஒவ்வொரு நாளும் போராடினேன்… ”
“எனக்கு பிடிச்சவங்களையும் வெறுத்தேன்… பிடிக்காதவங்களையும் வெறுத்தேன்… பைத்தியகாரனா மாறிட்டு இருந்தேன்… சத்யாவும்… என் மாமாவும் மட்டும் இல்லைனா… நான் இன்னைக்கு இல்லைம்மா…”
இலட்சுமி உடனே…
“டேய் என்னடா… உன் வேதனைலாம் எனக்கும் புரியுதுடா… அம்மாவா நானும் என் கடமைல இருந்து தவறுனவதான்… ஆனால் இப்போ எதுக்காக சொல்றோம்னா… உனக்கு கஷ்டம் எதுக்குனு நாங்க சொன்னோமே தவிர… வேற எதுக்காகவும் சொல்லலை… கண்மணி… உன் குழந்தைங்கனு உன் வாழ்க்கையைப் பார்க்கனும்… அவங்களுக்காகவும் சேர்த்து வைக்கனும்… பாரு… ஏற்கனவே பணம் பிஸ்னஸ் பழிவெறினு சுத்திட்டு இருந்த நீ இப்போ மேரேஜையும் இழுத்துப் போட்டுக்கிட்டு சுத்துற… கண்மணியை வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னா அதுவும் வேண்டாம்கிற… என் மருமக ரொம்ப கஷ்டப்பட்றாடா… அவளுக்கு இங்க எப்போ வரணும்னுதான் நினைப்பு எல்லாமே… அவ உனக்காகத்தானே அப்படி எல்லாம் நடந்துகிட்டா… ஏண்டா புரிஞ்சுக்க மாட்டேங்கிற…”
“ம்மா… அவளை… என் பசங்களை கூட்டிட்டு வர்றதை நான் பார்த்துகிறேன்… ” ரிஷி இப்போது சலிப்பாகச் சொல்ல…
“ஏண்டா… நீ வேற ஏதாவது ப்ளான்ல இருக்கியா என்ன…” எனும் போதே
முறைத்த ரிஷி…
“என்ன ப்ளான்… உன் மருமக போட்டாளே அதை விடவா நான் ப்ளான் போடப் போறேன்… கூட்டிட்டு வர்றேன்மா… இப்போ என்ன நான் டெய்லி அவங்க தாத்தா வீட்டுக்கு போய் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டுத்தானே வர்றேன்… எனக்குத் தெரியும் அவளை எப்போ கூட்டிட்டு வர்றதுன்னு… எல்லோரும் அவங்கவங்க வேலையை மட்டும் பாருங்க… அவகிட்ட பேசி நீங்க யாராவது ஜெயிக்க முடிந்ததா… அப்போ இருந்த மாதிரி வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருங்க… உங்க மருமகளை நான் பார்த்துக்கிறேன்…”
“டேய் ஏண்டா… அவ அப்போ பயந்துட்டாடா… புள்ளத்தாச்சி பொண்ணு… அவ அம்மாவோட வாழ்க்கையும் தெரிஞ்சவ… என்ன பண்ணுவா.. குழப்பத்துல ஏதோ பண்ணிட்டா… ஆனாலும் அவ உன் நல்லதுக்காகத்தான்” எனும் போதே இலட்சுமியை நிறுத்தியவன்
“எல்லாம் எங்களுக்கும் தெரியும்… ஒரு விளக்கமும் வேண்டாம்… யாருக்கும் இங்க முட்டுக் கொடுக்க வேண்டாம்” என்றபடியே மாடி ஏறியவனிடம்…
”டேய் மெஹந்தி ஃபங்ஷனுக்கு… நீ வர்றதானே….” இலட்சுமி கத்திக் கேட்க
“மெஹந்தி…. சங்கீத்… ரிஷப்ஷன்… மேரேஜ்…. அடுத்து நெக்ஸ்ட் வீக் பண்ற சடங்குகெல்லாம் எதையுமே மிஸ் பண்ண மாட்டேன்… நான் மிஸ் பண்ண வரைக்கும் போதும்” ரிஷி மாடி ஏறியபடியே சொல்ல
மெஹந்தி…. சங்கீத் என திருமணத்திற்கு முன் நடந்த இந்த விழாக்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான மட்டுமே பிரத்தியோகமாக இருக்க… விக்கி அர்ஜூன் ரிஷி குடும்பம் மட்டுமே… அந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்…
மற்ற யாருக்கும் விழாவில் பங்கேற்பதில் பிரச்சனை இல்லை…
ஆனால் கண்மணிக்கு மட்டுமே இங்கு பிரச்சனை… குழந்தைகளால்… அதுவும் குறைமாத குழந்தைகள்… அவர்களை விட்டு வருவது பெரிய பிரச்சனையாக இருக்க… ரிதன்யா … நிவேதா… இருவருக்குமே கண்மணிதான் முன் நின்று சடங்குகள் செய்ய வேண்டும் என்ற கடமை … கட்டாயம்…
எனவே கண்மணியின் நிலையை யோசித்து… திருமணம் மட்டுமே மண்டபத்தில் நடக்க அதைத்தவிர திருமணத்தைச் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் பவித்ரா விகாஸிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது… அதற்கு அனைவருமே அதற்கு ஒப்புக் கொள்ள… ஹல்தி… மெஹந்தி என களை கட்டத் தொடங்கியது… இரு மணமக்களுமே… அவர்களுக்கான விழாவை ஆரவாரத்துடன் கொண்டாட ஆரம்பித்திருந்தனர்….
தன் தங்கைக்கான சின்ன சின்ன சடங்குகளைக் கூட விடாமல் ரிஷி பார்த்து பார்த்து செய்தான்… கூடவே தன் மனைவியுடன் சேர்ந்து……
கண்மணி…. சில மாதங்களுக்கு முன் தான் பிரசவித்தவள் இரண்டு குழந்தைகளின் தாய்… அதனால் எல்லாம் அவளை விடவில்லை… எல்லாவற்றிலும் அவள் அவனுடன் நிற்க வேண்டும் என்பது அவன் கட்டளை….
பெரியவர்கள் கூடச் சொல்லிப் பார்த்தனர்…
”கண்மணிக்கு டெலிவரி இப்போதான் முடிஞ்சது… குழந்தைங்க வேற… அவ அதிகமா கலந்துக்க வேண்டாமே… முக்கியமான சடங்குல மட்டுமே கலந்துக்கட்டுமே…”
ஆனால் ரிஷி கேட்கவில்லை… தங்கள் வீட்டுக்கு வந்த மருமகளாக தன்னுடன் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவனாக… அவளைத் தன்னுடனே வைத்துக் கொண்டான்…
குழந்தைகள் மட்டும் சாதாரணமாக இருந்திருந்தால் அவர்களையும் விடாமல் தங்களுடனே வைத்திருப்பான் தான்… நல்ல வேளை அவர்களின் நிலை உணர்ந்தவனாக குழந்தைகளை அலைகழிக்கவில்லை…. மனைவியை மட்டுமே விடாமல் தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டான்…
பவித்ராவிகாஸில் விழா நடந்தாலும்… அதிகப்படியான சத்தமும்… ஆரவாரமும்… கூட்டமும் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் இவை எதுவுமே அணுகாத வகையில் தனி அறையில் பெரும்பாலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்…மொத்த குடும்பத்தினரும்… நாராயணன் சிறப்பு ஏற்பாடும் செய்திருந்தார்…. குழந்தைகளுக்கு பசி என்று வரும் போது மட்டுமே ரிஷி கண்மணியை குழந்தைகளிடம் செல்ல அனுமதித்தான்… மற்ற நேரமெல்லாம் அவள் இவனுடனே இருக்க… ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்… கண்மணியின் கணவனாக அனைவரின் முன்னிலையில் ரிஷி கண்மணியுடன் நடமாடிக் கொண்டிருந்தாலும்… கண்மணியின் ரிஷியாக இன்னுமே மாறவில்லை..
கண்மணியும் இத்தனை நாட்களில் பெரிதாக அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை… அதை விட அவளுக்கு குழந்தைகளிடமே பெரும்பாலான நேரம் கழிய… கணவனை விட்டுப் பிடித்தாள்….
மெஹந்தி விழாவில் கண்மணியைத் தவிர… மற்ற அனைவரும் மெஹந்தி இட்டுக் கொண்டனர்… குழந்தைகளை வைத்துக் கொண்டு கண்மணி எங்கு மெஹந்தி போடுவது… சில மணி நேரங்கள் வைத்திருந்தாலே போதும் என்று சொல்லியும் கண்மணி வேண்டாம் என்று சொல்லி விட்டாள்…
மெஹந்தி கொண்டாட்டம் முடிந்து அடுத்து சங்கீத் ஆரம்பித்திருக்க… அனைவரும் விழா உற்சவத்தில் ஐக்கியமாகி இருந்தனர்… அலங்கரிக்கப்பட்ட இடம்… வண்ண வண்ண விளக்குகளின் ஒளிமயம்… இசைக் கச்சேரிக்கான ஏற்பாடு… மணமக்களுக்கு மட்டுமல்லாமல் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரத்யோகமான ஆடைகள்… என விழா களைகட்ட ஆரம்பித்திருக்க
இரு ஜோடி மணமக்களும் சங்கீத் விழாவிற்கு ஏற்ற வகையில் விலை உயர்ந்த ஆடைகளில் அணிகலன்களில் மேடை ஏறி காட்சி அளிக்க… அவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல்… மகிளா… யமுனா… ரித்விகா… எனப் பெண்களும் அலங்காரத்திலும்…. உடையிலும்… நகையிலும் போட்டு போட்டு ஜொலிக்க… பவித்ரா விகாஸ் உற்சாகம் அந்த ஏரியாவுக்கே பரவியிருந்தது….. அந்த மாளிகையின் விளக்குகள் தந்த வெளிச்சம் இலட்ச்சோப இலட்ட நட்சத்திரங்களுக்கும்… நிலவுக்கு சவால் விட … தடபுடல் விருந்து வெகு விமரிசையாக வெளியே நடந்து கொண்டிருந்தது…
ஆண்கள் குழு… ஷெர்வானி… குர்தா.. பைஜாமா என கலக்கிக் கொண்டிருக்க…. ரிஷி…. கோட் சூட் என சிம்பிளாக அதே நேரம் கம்பீரமாக இருக்க… அதே போல கண்மணியும் பெரிதாக அலங்காரம் இல்லாமல்… டிஸைனர் புடவையில்… வழக்கம் போல மெல்லிய நகைகளையே அணிந்திருக்க…. மெலிதாக இருந்தாலும் விலை மதிப்போ உச்சம்…
தலை அலங்காரமும் அவள் புடவைக்கு ஏற்றவாறு… தளர்வாக பின்னப்படாமல்… விரித்து விடப்பட்டிருக்க… கண்மணி அங்கும் தனியாகத்தான் தெரிந்தாள்… வழக்கமான கம்பீர அழகோடு மிளிர்ந்தாள் கண்மணி…
அதே நேரம் அம்மை போட்ட தழும்புகள் இன்னுமே அவள் முகத்தி இருக்க… அவற்றை மறைப்பதற்காக மட்டுமே போடப்பட்ட ஒப்பனை… ஆக அந்தக் கூட்டத்தில் ஒப்பனையால் மறைக்கப்படாத நிஜ முகத்துடன் முழுமையான அழகுடன் இருந்ததும் அவள் மட்டுமே…
மாலையில் விருந்து ஆரம்பமாகி இருந்தது…
“ஹேய் எல்லோரும் கம்மியா சாப்பிடுங்க… நைட் மியூஸிக் ஈவண்ட்… டான்ஸ்லாம் இருக்கு… சாப்பிட்டு மட்டை ஆகிறாதீங்க” ப்ரேம் மற்றவர்களிடம் சொன்னபடியே
”ரிஷி பீடா போடலையா…” ரிஷியிடம் கேட்க… ரிஷி மறுத்து தலை ஆட்ட… பார்த்தி வேகமாக இப்போது
“மேலிடம் தடை உத்தரவு போட்ருக்கும் போல…” என்றவாறே பீடாவை வாய்க்குள் வைக்க…. அதே நேரம்… எதார்த்தமாக அங்கு வந்த கண்மணியும் ஆண்களின் உரையாடலைக் கேட்டபடியே கடந்தும் போயிருக்க… ரிஷியும் அவளை ஓரக்கண்ணால் பார்த்தும் முடித்திருந்தான்….
அதே நேரம் பார்த்திபனுக்கும் பதில் சொல்ல மறக்கவில்லை…
“அப்படிலாம் இல்லை… போட்றதுனா போடலாம்… ஆனால் வேண்டாம்…” ரிஷி நண்பர்களிடன் பேசிக் கொண்டிருந்த போதே…. கந்தம்மாள் அங்கு வந்தார்…
“ரிஷித்தம்பி… இந்த பீடா இதெல்லாம் நமக்கு செட் ஆகாது… உன்கிட்ட நான் என்ன சொன்னேன்… எனக்கு வெத்தல பாக்கு வேனும்னு தானே… என்கிட்ட கேட்டு எனக்கு பிடிச்ச ஐட்டமெல்லாம் கேட்டதானே… அதெல்லாம் சாப்பாட்டுல வைக்கிறேன்னு சொல்லிட்டு… வெத்தலை பாக்கை விட்டுட்டியே…” ரிஷியிடம் தன் குறையைச் சொல்லி முறையிட
ரிஷி உடனே
“பாட்டி… உங்களை மறப்பேனா… சொல்லி இருந்தேனே…” என்றபடியே…
“தனியா எடுத்து வைக்க சொல்லி இருந்தேனே…. வாங்க பார்க்கலாம்… கேட்டு வாங்கித் தாரேன்…”
அந்த விழா நடந்த விஸ்தாராமனா நீண்ட பகுதியின் கடைசியில் இருந்த அறைக்கு கந்தம்மாளை அழைத்துக் கொண்டு சென்றவன்…
“செஃப் ரமணிகிட்ட சொல்லியிருக்கேன்… தருவாங்க வாங்கிக்கங்க” ரிஷி கந்தம்மாளை அங்கு விட்டு விட்டு மீண்டும் விருந்து நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க… கந்தம்மாளை விட்டு விலகிய நிமிடங்கள் மின்னல் வெட்டிய நேரம் தான்… அடுத்த நொடி ரிஷி அங்கு இருந்த அறைக்குள் இழுக்கப்பட்டிருக்க… அதே நேரம் கந்தம்மாள் ரிஷியிடம் ஏதோ கேட்பதற்காக அவனை நோக்கித் திரும்ப… அங்கு ரிஷியைக் காணவில்லை… அது நீளமான நடைபாதை கொண்ட பகுதி… அதற்குள் கண்ணை விட்டு மறைந்திருக்க முடியாது
“அதுக்குள்ள ரிஷித்தம்பி எங்க போனுச்சு… அதுக்குள்ளயுமா அங்க போயிருச்சு… இவ்ளோ வேகமாக போக முடியும்…” யோசித்தபடியே
“அந்த ரூம்கிட்டதானே போனுச்சு… சரி அந்த ரூமுக்குள்ள போயிருக்கும் போல….”
“நாம நம்ம வெத்தலையை வாங்கிட்டு போவோம்” என்று வெத்தலைக்காக காத்திருக்க ஆரம்பித்திருக்க
கந்தம்மாள் அங்கு குழம்பியபடி ஒரு முடிவுக்கு வந்திருக்க இங்கு ரிஷியோ… கண்மணியால் அந்த அறைக்குள் உள்ளிழுக்கப்பட்டு… அறைக்கதவையும் சாத்தியிருக்க…
ரிஷி பதறவெல்லாம் இல்லை… நிதானமாக சுவரில் சாய்ந்து நின்றபடி… அவள் மேனியில் மேலிருந்து கீழ் வரை பார்வைப் பயணத்தை மிக மிக மெதுவாக… அலட்சியமாக ஓட விட்டவன்
”அழகாத்தான் இருக்க… ஆனால் சாரி… ரொமான்ஸ் பண்ற மூட்ல எல்லாம் நான் இல்லை…. நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணு…” என்று நக்கலாகப் பேசி தலையைக் கோதியவாறு வேறு திசை பார்த்தவனின் முகத்தை திருப்பி தன் முகத்தை மீண்டும் பார்க்க வைத்தவளாக
“அப்படீங்களா ரிஷிக்கண்ணா… அது எப்படிப்பா… இந்தக் கண்ணு ரெண்டும் ஈவ்னிங்ல இருந்து நான் எங்க இருந்தாலும் சுத்தி சுத்தி வந்து என்கிட்ட தான் இருந்துச்சு… இப்போ மட்டும் வேற பக்கம் பார்க்குது…” கண்மணி இதழ் ஓரச் சிரிப்போடு நக்கலடித்தபடி கேட்க
“ஏய்.. தள்ளிக்கடி… பெருசா அக்கறை வந்துட்டா… நான் கோபமா இருக்கேன்… ஓடிப் போயிரு” ரிஷி கடுப்போடு??? அவளைத் திட்ட ஆரம்பித்த போதே
“ஹலோ… ஹல்லோ… கோபமா பேசுறீங்களா பாஸ்… ஆனால் உள்ள இருக்க லவ்ஸ்லாம் கண்ல டன் டன்னா வழியுதே ரிஷிக்கண்ணா… ஆனாலும் மீசைல மண் ஒட்டாத மாதிரியே நடிக்கிறது…. பரவாயில்ல… இது கூட அழக்காத்தான் இருக்கு ரிஷிம்மா” என்று அவன் மீசையை இழுத்தவளிடம்… இவனும் போலியாக வலியில் துடிக்க
”ரிஷிப்பையா சேட்டை பண்ணினா இப்படித்தான் நடக்கும்…” என்றபடி அவனை விட்டவள்…
“நாங்களும் சாரை ரொமான்ஸ் பண்ண கூப்பிடல… “ என்றவாறே… அவள் உள்ளங்கையை அவன் கண் முன் விரித்துக் காட்ட… விரித்திருந்த கையில் பீடா இருக்க
ரிஷி பார்வையாலேயே அவளை எரித்தவனாக
“ஒண்ணும் வேண்டாம் போடி… நீ என்ன கொஞ்சினாலும்… “ என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் வாயில் பீடாவை வைத்திருக்க… இப்போது ரிஷி…
”கைல ஊட்டி விட்றதுக்குத்தான் இப்படி என்னை ரூம்குள்ள கடத்துனியா ரவுடி…” வைத்திருந்த பீடாவை வாய்க்குள் கொண்டு செல்லாமல் பற்களில் கடித்தபடியே பேச ஆரம்பித்த போதே… அவன் உதடுகளில் கண்மணியின் இதழ் பட ஆரம்பித்திருக்க… கண்மணியின் எதிர்பாராதா அதிரடியில் தள்ளாடியிருந்தான் ரிஷி… இருந்தும் சுதாரித்த ரிஷி தன் கைகளால் கண்மணியின் இடையைப் பற்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்க
ஒருவழியாக என்ன நடக்கின்றது என ரிஷி உணர்ந்தவனாக அவனை மீட்டெடுத்திருந்த போதோ… கண்மணி அவள் கொடுத்த பீடாவை அவனிடமிருந்து அவள் பற்களில் கவ்வி தன்னிடமே மீட்டெடுத்திருக்க… அதே வேகத்தில் அதை வாய்க்குள் போட்டு மெல்லவும் ஆரம்பித்தவள்…
இப்போது ரிஷியிடமிருந்து விலகி…
“நீங்களும் போட்டுக்கலாம்… பெரிமிஷன் கிராண்டட்” என்றபடி… அறைக்கதவைத் திறந்து வெளியே சென்றிருக்க… கந்தம்மாளும் இப்போது கண்மணியைப் பார்த்திருக்க… அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே… வெளியே வந்த கண்மணி மீண்டும் அறைக்குள் இழுக்கப்பட்டிருக்க…
அவரால் ரிஷியை சம்பந்தப்படுத்தி நினைக்கவே முடியவில்லை… மாறாக
”என்ன அந்த ரூம்… மாயாஜால ரூமா என்ன… ரிஷித்தம்பியும் காணாமல் போனார் இமைக்கிற நேரத்துல… இப்போ இவளும்.. “ யோசனையோடே வாங்கி கையில் வைத்திருந்த வெத்தலையையும் போட மறந்தவராக கந்தம்மாள் அந்த அறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தார்…
அதே நேரம் அறையிலோ… கண்மணி ரிஷி இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி அவனிடமே சரிந்து நின்று தன்னைச் சரிப்படுத்தி நின்றவள்… கதவைக் கவனிக்கவில்லை… அந்த அறைக் கதவு சிறிதளவு திறந்த நிலையிலேயே இருக்க… ரிஷியும் அதைக் கண்டு கொள்ளவில்லை… ரிஷியின் கவனம் முழுக்க கண்மணியிடம் இல்லையில்லை பீடாவில் இருக்க… கதவைக் கண்டு கொள்வானா என்னா…
”ஏய் என் பீடாவைக் கொடுடி…” கண்மணியை தனக்குள் கொண்டு வந்து வலுக்கட்டாயமாக அவள் உதடுகளை விரல்களால் பிடித்து இழுத்தபடி தன் உரிமையான பீடாவுக்காகப் போராடிக் கொண்டிருக்க… கண்மணியோ… தன் ஒருகையால் தன் வாயை மூடியபடியே
”அது நான் கொண்டு வந்தது… என்னோடது… வம்பு பண்ணாதீங்க” கண்மணியால் அவன் பிடியில் இருந்து விலக முடியாமல் இப்போது கெஞ்ச ஆரம்பித்திருக்க…
“என்கிட்ட இருந்து எப்படி எடுத்தியோ… அப்படியே எடுத்துக்கிறேன்…” ரிஷி விடாமல் அவளிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்திருக்க
கண்மணியும் விடவில்லை… அவனை நெருங்க விடாமல் போட்டி போட ஆரம்பித்திருக்க
“நான் என்னடி முத்தமா கேட்கிறேன்… என்னோட பீடாவைத்தானே கேட்கிறேன்… ரொம்பப் பண்ணாத… அப்புறம் உதட்ல எங்கயாவது இரத்தம் வந்து காயமாகிருச்சுனா நான் பொறுப்பில்லை” என்று ரிஷி பேசிக் கொண்டிருந்த போதே…
கண்மணி அவனிடம் தன் பீடாவை அவனிடமிருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த போதே கண்மணியின் பார்வை அறை வாசலில் நின்று பின் நிலைத்திருக்க…
தன் பாட்டி கந்தம்மாளைப் பார்த்த பதட்டத்தில் வேகமாக வாயிலிருந்த கையை எடுத்த கண்மணி…
“ஐயோ பாட்டி…” என்று ரிஷிக்கு எச்சரித்த போதே ரிஷி இதுதான் தனக்கு வாய்த்த சமயம் என்பது போல இப்போது அவன் இதழ்களை கண்மணியின் இதழோடு பொருத்தி இருக்க…
கந்தம்மாளுக்குத்தான் என்ன செய்வதென்றே புரியாத நிலை… அவரும் பதட்டத்தில் பிடித்திருந்த வேகமாக கதவை விட… அது தானியங்கிக் கதவு என்பதால்…. அவர் விட்ட வேகத்தில் இப்போது கதவு தானாகவே மூடிக் கொள்ள… கந்தம்மாள் இப்போது திரும்பி… கதவைத் திறக்கப் போக… கதவையோ திறக்க முடியவில்லை… திறக்கவும் தெரியவில்லை அவருக்கு…
அதே நேரம் ரிஷியும் கண்மணியை விடவில்லை…
“கருமம் கருமம்” கந்தம்மாள் சத்தம் போட்டு சொல்ல
ரிஷி இப்போதுதான் பார்வையை கதவின் புறம் திருப்ப… பார்வை மட்டும் தான் கதவை நோக்கி… அவன் உதடுகளோ இன்னும் அவன் மனைவியிடம் மட்டுமே…
கண்மணி இப்போது வேகமாக அவனைத் தள்ளி விட… ரிஷியோ நிதானமாக முகத்தை அவளிடமிருந்து விலக்கியவன்.. இதழையும் விலக்கியவாறே… ஆனால் கண்மணியை தன்புறம் இன்னும் வேகமாக இழுத்தவன்
“பாட்டி… நீங்கதான் நீதி நேர்மையோட இருக்கிறவங்க… எனக்கு ஒரு நீதி சொல்லிட்டு போங்க”
கந்தம்மாள் ஆவென்று பார்த்த பார்வையை மாற்றாமல்… அப்படியே நின்றிருக்க…
நடந்ததைச் சொன்னவன்…
“இப்போ சொல்லுங்க… உங்க பேத்தி என் பீடாவை ஏன் எடுத்தா... அதைக் கேட்டுச் சொல்லுங்க… எனக்கு நீங்கதான் நியாயம் சொல்லனும்” ரிஷி கேட்க… கந்தம்மாள் ஞே என்று விழிக்க…
”பாட்டி… நான் புதுசா எடுத்துத் தர்றேன்னு சொன்னேனே… அதையும் கேளுங்க”
“நோ என்னோடதுதான் எனக்கு வேண்டும்” ரிஷி அவளிடம் மீண்டும் குனிந்திருக்க… கண்மணி வேகமாக அவனிடமிருந்து விலகி…
“நான் கொண்டு வந்ததுதானே…. நானே மறுபடியும் கொண்டு வர்றேன்னு சொல்றேன்… கேட்க மாட்டெங்கிறான் பாடி”
கந்தம்மாள் இன்னுமே வாய் திறக்கவில்லை… அவளது ஆடுகாலி பேத்தியும்… அவளது கணவனும் கந்தம்மாளையே வாயடைக்க வைத்திருக்க…
“இப்போ உடனேயே வேண்டும்… சோ நா எடுத்துக்கிறேன்” ரிஷி சொன்னபடியே… கண்மணியை வலுக்கட்டாயமாக தன்னோடு சேர்த்திருக்க… இப்போது கந்தம்மாள் வேக வேகமாக
“ஏம்ப்பா… அவதான் எடுத்துட்டு வந்து தர்றேன்னு சொல்றாளே… விடுவேம்பா…” வேகமாக பேத்தியின் அருகில் வந்தவராக… கண்மணியைத் தன்புறம் இழுத்தபடியே
“ஏண்டி… உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை… அங்க ஆயிரம் இருக்கு… மாப்பிள்ளைகிட்ட இருந்து ஏன் எடுத்த…”
“ஹான் இது கந்தம்மாள் பாட்டி நேர்மைக்கு அழகு” ரிஷி சொல்ல அப்போதும் கண்மணியை விடாமலே பிடித்திருக்க
“சரி விடுப்பா… அது விளையாட்டுக் கழுதை… இந்தா… இதைப் போடு… பீடாவை விட இது நல்லது… அவளை விட்றேன்… புள்ள பெத்த உடம்பு… இப்படிலாம் பிடிக்கக் கூடாது…” தன் கையில் இருந்த வெத்தலையை அவனிடம் நீட்டியவராக கண்மணியை அவனிடமிருந்து முற்றிலுமாக விலக்க முயல…
ரிஷியும் இப்போது… கண்மணியை விட்டவனாக… கந்தம்மாளின் அருகில் வந்தவன்…
“ஏதோ நீங்க சொல்றீங்கன்னு உங்க பேத்தியை விட்டுட்டு போறேன் பாட்டி… சொல்லி வைங்க… ரிஷி எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டான்னு…”
கண்மணி.. இப்போது ரிஷியிடம்
“என்ன என்ன ஒரே மாதிரி இருக்க மாட்டாராம்… காட்டச் சொல்லுங்க பாட்டி… கந்தம்மாள் பேத்திகிட்டேயே சவால் விட்றாரு… நீயும் பார்த்துக்கிட்டு இருக்க கெழவி”
கந்தம்மாள் குழம்பியவராக… ரிஷியைப் பார்த்தவர்… பின் என்ன நினைத்தாரோ
“என்னப்பா இப்படி மிரட்ற… என் பேத்தி மேலஅவ்ளோ ஈஸீயாலாம் கை வைக்க விட்ற மாட்டேன்…” என்று கண்மணிக்கு ஆதரவாகப் பேச… கண்மணியும் இப்போது பாட்டியின் அருகில் போய் நின்றவளாக… ரிஷியை கெத்தாகப் பார்க்க…
“பாட்டி பேத்தி ஒண்ணு கூடிட்டிங்க…. நானும் பார்த்துக்கிறேன்” என்றபடியே… கண்மணியைப் பார்க்க. கண்மணியோ… கூலாக பீடாவை மென்று கொண்டிருந்தவளாக இப்போது ரிஷியைப் பார்த்துக் கண்சிமிட்டிவள்… அதோடு விட்டாளா என்ன???…
”இந்தா ரிஷிக் கண்ணு… இன்னா லுக்கு… அதான் பீடாக்கு பதிலா வெத்தலைப் பாக்கு.. சுண்ணாம்பு தடவி கொடுத்துட்டோம்ல… போய்க்கினே இருக்கனும்… அதை விட்டுட்டு இன்னா லுக்கு… கந்தம்மாள் பேத்திகிட்டயே லுக்கா…. கெளம்பு கெளம்பு…. கெளம்பிக்கினே இரு… போவியா… மைனர் லுக்கு வேற… தங்கச்சி மேரேஜ்தானே… தலைக்கு மேல வேலை இருக்குதானே… போ போ போய் வேலையைப் பாருப்பா… பொண்டட்டி பின்னால என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு…. போ போ” தன் பாட்டியின் தோள் மீது கை போட்டபடியே… என் பாட்டி என்னுடன் இருக்கிறார் என்ற தோரணையில் ரிஷியை விடாமல் வம்பிழுக்க…
ரிஷியும் கண்மணியிடம் பேச முடியாமல் முறைத்தபடியே வெளியேறி இருக்க…. இப்போது கந்தம்மாள்…. பேத்தியைத் திட்டுவதற்காகத் திரும்பி போதே….
ரிஷி மீண்டும் உள்ளே வந்தவன்… அதே வேகத்தில்…
கந்தம்மாளைக் கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டவன்…
“தேங்க்ஸ்… பாட்டி… வெத்தலை பாக்குக்கு மட்டுமில்லை…. “ என்றபடியே… கண்மணியையும் பார்த்தபடியே…
“எல்லாத்துக்கும்…” என்றவன்… மீண்டும் கந்தம்மாளின் இன்னொரு கன்னத்திலும் முத்தம் வைத்து விட்டு வெளியேறி இருக்க…
“ஆத்தாடி…” கந்தம்மாள் அப்படியே கன்னத்தில் கை வைத்தபடி சிலை போல் நின்றிருக்க… கண்மணி சிரிப்பை அடக்கியபடி தன் பாட்டியின் நிலையைப் பார்த்துக் கொண்டிருக்க
கந்தம்மாள் எப்படியோ தன் நிலை மீண்டவராக… தன் பேத்தியைப் பார்த்து மிரள விழித்தவராக
“எப்படிடி இவனை சமாளிக்கிற…” எனும்போதே கண்மணி பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்க
“இவ்ளோ நாள் உன்னைத் திட்டிட்டு இருந்தேன்… ஆட்டம் ஆட்றனு…. நீ கூட பரவாயில்ல போலடி…” கந்தம்மாள் பேசிக் கொண்டே
“இங்க பாரு… இப்போதான் மறுபொறப்பு எடுத்து வந்திருக்க… பாத்து சூதானமா இரு… பொண்ணுங்கதான் கவனமா இருக்கனும்… அவனுக்கென்ன” என்று ரிஷி போன திசையையே பார்த்தபடி சொன்னவள்…
“இவன் வேகத்துக்கு ரெட்டைப்பிள்ளை என்ன மூணு நாலே ஒரே நேரத்துல வந்திருக்கும் போல… தப்பிச்சா என் பேத்தி” பேத்தியை நெட்டி எடுத்தவளாக… கந்தம்மாள் தனக்குள்ளாகச் சொல்லிக் கொள்ள… நல்ல வேளை ரிஷியின் மானம் காற்றில் பறக்காமல் கந்தாம்மாளின் மனசாட்சியிடம் மட்டுமே போயிருந்தது…
ஒருவழியாக தன் பேத்தியோடு வெளியே வந்த கந்தம்மாளின் முகம் இப்போதும் பேயறந்தார்போல இருக்க… கண்மணி சமாதானப்படுத்தி அழைத்து வந்தாலும்… அவருக்கு இன்னும் குழப்பமே….
“ரிஷி எங்கூட வந்தாரு…. அப்புறம் இந்த ரூம்குள்ள அவரை யாரோ இழுத்தாங்க… இந்த ஆடுகாளி வெளிய வந்தா… அவளை ரிஷி இழுத்தாரு… அப்போ முதல்ல ரிஷி பேரனை யார் இழுத்தா..”
கந்தம்மாள் தனக்குள் கேட்டுக் கொண்டதோடு… கண்மணியிடமும்… கேட்க… கண்மணி… இப்போது மாட்டிக்கொண்டவளாக விழித்தாலும்… சமாளித்தாள் தான்…
“ஹான் …. என்னைக் கேட்டா… எனக்கென்ன தெரியும்… கெழவி… ரொம்ப யோசிக்காத… வா வா போகலாம்…”
“ஏண்டி பேய் கீய் இருக்குமோ… அந்த ரூம்ல… “ கந்தம்மாள் பவித்ராவிகாஸின் அந்த அறையை நடந்து வரும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்திருக்க… அதே நேரம் சங்கீத் விழா நிகழ்ச்சியும் ஆரம்பமாயிருக்க
“கெழவி… வா… செமயா இருக்கும்… நம்ம கோவில்ல கூழ் ஊத்துவாங்கள்ள… அந்த டைம் அப்போ ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடுவாங்களே… அது மாதிரி இங்கயும் செமயா இருக்கும்… வா..”
”ஹான் அப்படியா… டிசுக்கோ டான்ஸ்லாம் ஆடுவாங்களே… ஜிகுஜிகுன்னு கலர்ர்ல ட்ரெஸ் போட்டுட்டு ஆடுவாங்களே அது மாதிரியா…”
“அதேதான்… அங்க ஆட்றதுக்குன்னு தனியா ஆளுங்க வருவாங்க… அவங்க ஸ்டேஜ்ல ஆடுவாங்க… நாம அவங்களோட சேர்ந்து கீழ ஆடுவோம்… இங்க நாம மட்டும் ஆடனும் அவ்ளோதான் வித்தியாசம்… ஹைலைட்டே பொண்ணு மாப்பிள்ளை ஆட்றதுதான்” கண்மணி சங்கீத்துக்கு விளக்கம் கொடுத்தவளாக தன் பாட்டியையும் அழைத்துப் போனாள்…
அங்கு மாடியில் விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… ரிஷியும்… மகிளாவும் விழா அமைப்பாளர்களாக மாறி இருக்க… கண்மணி பார்வையாளர் வரிசையில் அமைதியாக அமரப் போக…
இளைய தலைமுறையினர் அனைவரும் கண்மணியையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்க… அவர்களிடம் மறுத்த போதே அர்ஜூன்-நிவேதா , விக்கி-ரிதன்யா… என விழா நாயகர்களே கண்மணியை அழைத்திருக்க
கண்மணி ’என்ன சொல்லி… மறுக்கலாம்’ என யோசித்துக் கொண்டிருந்த போதே…
“என்னோட வைஃபுக்கு இப்போதான் டெலிவரின்றதுனால அவங்களை விட்றலாமே…” ரிஷி கண்மணியைக் காப்பாற்றி விட்டிருக்க… கண்மணியும் எப்படியோ தப்பித்தாள்…
வைதேகி… அர்ஜூனின் தாய்… இவர்கள் கடவுள் பாடல்களை பாட ஆரம்பித்து பின் அடுத்த தலைமுறையினர் வசம் விழாவினை ஒப்படைத்திருக்க…
ரிஷி இப்போது நிகழ்ச்சியை தானே ஏற்று நடத்த ஆரம்பித்திருந்தான்
“ஃப்ரெண்ட்ஸ்… என்னதான் ஒரே குடும்பமா நாம ஆகப் போறோம்னாலும்… போட்டினு வந்துட்டா ரெண்டு குரூப் வேண்டும்…. சோ…. இப்போ நாம எல்லோரும் ரெண்டு குரூப்பா பிரியனும்”
”மாமா… ரெண்டு குரூப்னா… எந்த கேட்டகரி… அதையும் சொல்லு… சரி நான் சொல்றேன்…” என மகிளா விளக்க ஆரம்பித்தாள்…
ஃபர்ஸ்ட் அந்தாக்ஷரி ரவுண்ட்… இந்த ரவுண்ட்ல எல்லோருமே கலந்துக்கனும்… நோ வியுவெர்ஸ்… நானும் ரிஷி மாமாவும் ஆர்கனைஷர்ஸ்…”
“தென்… எந்த கேட்டகரினா… பொண்ணு வீடு… பையன் வீடு… இப்படித்தான் பிரிச்சிருக்கனும் ”
”ஆனால் இங்க ரெண்டு பொண்ணு… ரெண்டு பையன் வீடு இருக்காங்களே… சோ…
”தனசேகர் … நாராயணன் பேமிலி அவங்க ஒரு பக்கம்….”
’வேங்கட ராகவன் பேமிலி அவங்க ஒரு பக்கம்…”
”எல்லொரும் அவங்கவங்க ஃபேமிலி பக்கம் போகலாம்…”
மகிளா விளக்கம் அளித்து முடித்திருக்க…. குடும்பங்களும்…. அதே போல் பிரிந்திருந்தார்கள்….
கண்மணியும் ‘தனசேகர் மற்றும் நாராயணன்’ குடும்ப உறுப்பினராக அவர்கள் பக்கம் போக ஆரம்பித்திருக்க
இப்போது வேங்கட ராகவன்…
“அம்மா கண்மணி… நீ நம்ம ஃபேமிலி பக்கம் வந்துரும்மா” உரிமையுடன் கண்மணியை அழைக்க
இலட்சுமி வேகமாக….
“அவ எங்க வீட்டு மருமக… அவ எப்படி உங்க குடும்ப பக்கம் வரமுடியும் “
இலட்சுமியாவது சாதரணமாகக் கேட்டார்…. நாராயணனோ பதறியவராக…
“அவ எங்க வீட்டுப் பொண்ணு…”
“மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க…” நட்ராஜையும் கூட்டு சேர்க்க
வேங்கட ராகவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“அவ எங்க வீட்டு குலசாமி…. உங்க குடும்பத்துக்கெல்லாம் அவ உறவு முறைதான்… ஆனால் எங்களுக்கு குலசாமி… சோ எங்களுக்குத்தான் உரிமை அதிகம்…”
ரிஷி இரண்டு குடும்ப மூத்த தலைமுறையையும் பார்த்தவனாக…
”மக்களே… பொறுமை… நான் ஒருத்தன் இருக்கேன்றதை மறந்துட்டு சண்டை போட்றீங்க ஐ மீன் இந்த விழா நடத்துறவனை மறந்துட்ட்ய் சண்டை போட்றீங்கன்னு சொன்னேன்… உங்களைப் பொறுத்தவரை இது முடியாத வழக்கு… அதுனால யாருக்குமே பிரச்சனை வரமாக கண்மணியை நான் எடுத்துக்கிறேன்… ஐ மீன் நடுவரா என் டீம்ல வச்சுக்கறேன்…” என்றபடியே கண்மணியை அழைத்து தன் அருகே வைத்துக் கொண்டவன்…
”கண்மணி யார் பக்கம்… இப்போ ப்ராப்ளம் சால்வ் ஆகியிருக்குமே” கண்மணி யாரின் உரிமை… என்பதை வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் காட்டியிருந்தான் ரிஷிகேஷ்….
அதன் பின் அந்தாக்ஷரி தொடங்கி இருக்க… இரு குழுவில் இருந்தவர்களும்… ஒருவர் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல பாடல்களை பாட ஆரம்பித்திருக்க…
ரிதன்யா சில நிமிடங்கள் தான் விக்கியின் அருகில் அமர்ந்திருந்தாள்… அதன் பின் ரித்விகாவோடு சேர்ந்து கொண்டு…. அவளும் பாட ஆரம்பித்திருக்க…
நிவேதா விக்கி கூட அவ்வப்போது தங்கள் பங்களிப்பை அளித்திருக்க… அர்ஜூன் மட்டுமே அமைதியாக விழாவினைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்…
“மாமா…. அர்ஜூன் சார் … சைலண்டா இருக்காங்களே…. ஏதாவது பண்ணுங்க மாமா..’ மகிளா ரிஷியின் அருகில் வந்து சொல்ல…
கண்மணி முறைத்தாள் ரிஷியைப் பார்த்து… அவள் முறைப்புக்கான காரணத்தை ரிஷியும் கண்டுகொண்டவனாக
“ஏய் நீ ஏண்டி… கண்லயே பஸ்பம் ஆக்குற… உங்க அம்மாஞ்சிய ஒண்ணும் ராகிங் பண்ணலாம் மாட்டோம்… போதுமா” மனைவியிடம் சொன்னவன்…
“மகி.. கொஞ்சம் சும்மா இருக்கியா… அர்ஜூனைச் சொன்னவுடனே இவ என்னை முறைக்கிறா…. இவளை விடு… அர்ஜூன் இருக்காரே அவரெல்லாம் மேரேஜ் பண்ண ஒத்துகிட்டதே பெரிய விசயம்… அவரைப் போய் பாடவெல்லாம் சொன்னோம்னு வச்சுக்கோ… அப்புறம் நிவேக்கா லைஃப் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிரும்…. நாம அந்தப்பக்கம் போகாமல் நாம வந்த வேலையை மட்டும் பாப்போம் செல்லம்…” என்றவனை கண்மணி இப்போது உண்மையாகவே முறைத்திருக்க… இப்போதும் ரிஷி அவளைப் புரிந்தவனாக
“ஏன் நீ உன் அம்மாஞ்சிக்காக உர்ருனு மூஞ்சியை மாத்தும் போது… நான் என் அத்தைப் பொண்ணை செல்லம்னு கூப்பிடக் கூடாதா…” ரிஷி கண்மணியையே தில்லாக எதிர்த்துக் கேட்க…
கண்மணி அப்போது பதில் சொல்லவில்லை… அவனிடம் முறைப்பைத் தொடராமல் விழாவைக் கவனிக்கத் தொடங்க… ரித்விகா இருந்த அணி நாராயாணன் குடும்பம் என்பதால் அவர்களே வெற்றி பெற்றிருக்க…
ஒரு வழியாக அந்தாக்ஷரி நிகழ்ச்சியும் முடிந்திருந்தது….