கண்மணி… என் கண்ணின் மணி (EPILOQUE) –
/* ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா
வா என்று கட்டளை இட்டானா
முத்தத்தில் கைவிலங்கிட்டானா
கைதாகினாள் தேவ சேனா */
ஐந்து வருடங்களுக்குப் பிறகு…
அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தை சுற்றி இருந்த பகுதிகள் எல்லாம் ஒரே சுவரோட்டிகள்… தொழில்துறை அமைச்சரின் தொண்டர்கள்… இந்த ஏற்பாட்டினை செய்திருந்தனர்…
’ஆர்கே’ குழும நிர்வாக இயக்குனர் நட்ராஜுக்கு அமெரிக்க பல்கலைகழகம் முனைவர் பட்டம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ’ஆர்கே’ ’இண்டஸ்ட்ரீஸுக்கும் விருதுகள் பல என உலக அளவில் அங்கீகாரமும் கிடைத்திருக்க… மீண்டும் தாயகத்திற்குத் திரும்பிய நட்ராஜுக்கு தமிழ்நாட்டின் சார்பாக தொழிற்துறை அமைச்சரின் வரவேற்பு… அதன் விளைவு… அந்தப் பகுதி முழுவதும் வாழ்த்துக்கான சுவரொட்டிகள்… ஆனால் அதில் முழுக்க முழுக்க அரசியல் வாடை மட்டுமே அடித்தது… நட்ராஜ்… ரிஷி… விக்கி இவர்களின் உருவப்படங்களோ சிறியதாக இருக்க… தொழில் அமைச்சரின் புகைப்படம் மட்டுமே மிகப்பெரியதாக அந்த சுவரொட்டியை ஆக்கிரமித்திருந்தது…
ஒருவழியாக ரிஷி… விக்கி… நட்ராஜ் மூவரும் சென்னை விமானநிலையத்தை வந்தடைந்திருக்க…
அவர்களை வரவேற்க வந்த ’ஆர்கே’ இண்ட்ஸ்டிரிஸின் மேலாளர் ……
”சார்… நாம உடனே போக முடியாது… அரசு சார்பா உங்கள வரவேற்க வந்துட்டு இருக்காங்க… இண்டஸ்டிரியல் மினிஸ்டர் தான் வர்றாரு… அதுக்கப்புறம் மீடியா, ப்ரெஸ் மீட்டிங்க்… இதெல்லாம் இருக்கு… இதைத் தவிர்க்க முடியாது சார்…” மூவரிடமும் சொல்ல…
விக்கி, நட்ராஜ்க்கு பிரச்சனை ஏதும் இல்லை… ஆனால் ரிஷி யோசனை பாவத்தோடு.. அதே நேரம் அலட்சிய பாவத்தோடு,
“எல்லோரும் இருக்கனும்னு அவசியம் இல்லைதானே… மாமாவும் விக்கியும் இருப்பாங்க… எனக்கு முக்கியமான வேலை இருக்கு… அதுனாலதான் இன்னைக்கு நாங்க வந்ததே…” என்றபோதே… தொழில்துறை அமைச்சர் அந்த இடத்திற்கு வருகை தந்த பரபரப்பு அந்த விமானநிலையத்தில் தானாகவே வந்திருந்தது…
ரிஷி இப்போது அங்கிருந்து வாயிலை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்க… அதே நேரம் அமைச்சர் அருமைநாயகமும் உள்ளே வந்திருக்க… ரிஷிகேஷும்… அருமைநாயகமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி இருக்க…
“வணக்கம் தம்பி…” அருமைநாயகம் ரிஷியின் வழியை மறைத்திருக்க அவர் முகமெங்குமோ போலி புன்னகை…
என்னதான் அவரைப் பிடிக்காது என்றாலும்… ரிஷியின் பார்வையும் புன்னகையுடனே அவரிடம் சாதாரணமாகப் படிய… அருமைநாயகம் அவனிடம் வேகமாக தன் கையில் இருந்த மலர்க்கொத்தைக் கொடுத்தவர்….
“வாழ்த்துக்கள் தம்பி… என்ன சீக்கிரமா கிளம்பிட்டீங்க போல” எனச் சத்தமாகப் பேசி ரிஷியிடம் கைகுலுக்கியவர்… அடுத்த நொடியே தன் குரலைத் தணித்தவராக…
“எனக்குத் தெரியும் தம்பி… உங்களுக்கு என்னைப் பார்க்க… பேசப் பிடிக்காதுனு… ஆனாலும் என்ன பண்றது… நம்ம ரெண்டு பேரும் அடிக்கடி மீட் பண்ணி ஆக வேண்டிய நிலைமை…“ என்றவரின் பார்வையில் இப்போது வில்லத்தனம் கலந்திருக்க…
”பொண்டாட்டியும் புருசனும் ஆட்டம் ஆடுனீங்கள்ள… சீக்கிரமா முடிவு கட்டப் போறேன்… இன்னைக்குத்தானே வந்திருக்கீங்க… போங்க…. போங்க… அடுத்தடுத்து பல விசயங்களைக் கேட்க வேண்டியிருக்கு… வாழ்த்துக்கள்”
ரிஷி சிரித்தபடியே…
“யார் யாருக்கு முடிவு கட்டியிருக்கான்னு பார்க்கலாம் சார்… ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் முடிவு கட்டிருக்கீங்கன்னு இப்போதே நீங்க சொல்லக் கூடாது…. நடக்கும் போது பார்க்கலாம்…. பை த வே… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நான் போகனும்… கிளம்பலாங்களா சார்…” ரிஷி இப்போது பவ்யமானக் குரலில் பேசி.. கையெடுத்துக் கும்பிட்டு அங்கிருந்து விடைபெற…
அருமைநாயகமும் வில்லங்க சிரிப்போடே… அவனை வழி அனுப்பி வைத்தவராக… பிடிக்கவில்லை என்றாலும்… தன் பதவியின் பொருட்டு… நட்ராஜ் விக்கியை நோக்கிச் சென்றிருந்தார்…
---
சென்னை மத்திய சிறை….
விமான நிலையத்தில் இருந்து வந்திறங்கிய ரிஷி… நேராகச் சென்றது சென்னை மத்திய சிறைக்குத்தான்…
இவன் வருவதற்கு முன்னே…
ஹர்ஷித்தும்… சத்யாவும் அங்கு வந்து நின்றிருக்க… அவர்களைப் பார்த்தபடியே தனது காரை நிறுத்தியவன்…
”சாரி… ஃப்ளைட் லேட்டாகிருச்சு….” எனும் போதே ஹர்ஷித் அவனிடமிருந்து கார் சாவியை வாங்கியவனாக
“அண்ணா… நீங்க பேசிட்டு இருங்க… நான் காரை அங்க நிறுத்திட்டு வர்றேன்… பார்க்கிங் அங்க இருக்கு… இங்க ரொம்ப நேரம் நிற்கக் கூடாது” ஹர்ஷித் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி இருக்க
ரிஷி ஆச்சரியமாகவும் பெருமையாகம் ஹர்ஷித்தைப் பார்த்தவன்… அடுத்த நொடியே
“ஆன்ட்டி எப்போ வர்றாங்க… டைம் என்ன…” ரிஷியின் குரலில் தீவிரத்தன்மை அனிச்சையாக வந்திருக்க…
“எல்லாம் பேசியாச்சு… வர்ற டைம் தான்…”
“ஹ்ம்ம்… ஹர்ஷித் ஒத்துக்க மாட்டான்னு நெனச்சோம்… ஆனால் அவன் ஓகே சொன்னது அவ்ளோ சந்தோசம்…” என்ற ரிஷி
“ஆதவனோட அம்மா பாவம் சத்யா… கணவர்… பிள்ளை ரெண்டு பேராலும் நிம்மதி இழந்தவங்க… ஹர்ஷித் கண்டிப்பா அதுக்கு மருந்தா இருப்பான்… ஹர்ஷித்துக்கும் ஒரு நிரந்தர உறவு கிடைக்கும்… அவனுக்கும் தலை சாய்க்க ஒரு மடி கிடைக்கும்…”
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன்…
“என் அம்மாக்கு ஹர்ஷித் பற்றி என்னைக்குமே தெரியக்கூடாது ரிஷி… அப்படியே ஹர்ஷித் விசயம் தெரிந்தாலும்… அப்பா எதுவும் தெரியாமல் இறந்துட்டார்னு அம்மாக்குத் தெரியக்கூடாது… எல்லாமே அப்பாக்குத் தெரியும்… அப்பா இந்த விசயத்தை நம்பலை… இந்த விசயத்துல இருந்துதான் அப்பா திருமூர்த்தி கேசவனுக்கு எதிரா மாறினாங்க… அதுக்கப்புறம் தான்… கம்பெனி விசயத்துல அப்பாவுக்கு துரோகம் பண்ணினாங்கன்னு சொல்வேன்… எனக்கு என் அம்மா நிம்மதி முக்கியம் சத்யா… அப்பாதான் நிம்மதி இல்லாம இறந்தாங்க… அப்பா அம்மாக்கு துரோகம் பண்ணிய வருத்தத்தோடத்தான் இறந்தாங்கன்னு தெரியவே கூடாது… அதுவே என் அப்பாக்கு நான் பண்ற நன்றிக்கடன்…” எனும் போதே ஹர்ஷித்தும் அங்கு வந்து சேர்ந்திருக்க…
தன்னருகே வந்து நின்றவனை தோளோடு தோளாகச் சேர்த்துக் கொண்டவன்
“கொஞ்சம் இந்த வயசுக்குத் தகுந்த மாதிரியும் ஜாலியா இருக்க பழகுடா…” தன் வளர்ப்புத்தம்பியை பார்த்தபடியே சொன்னவன்…
“இதுவரைக்கு உன்னை யார் யார்கிட்டயோ ஒப்படைச்சிருக்கேன்… முதல் தடவை உன்கிட்ட ஒருத்தவங்கள ஒப்படைக்கப் போறேன்… கணவனால… மகனால காயப்பட்ட மனசு… நீதாண்டா அவங்களைப் பார்த்துக்கனும்… என்னோட பொறுப்பை உன்கிட்ட ஒப்படைக்கிறேன்… என் நம்பிக்கையை காப்பாத்துவேன்னு நினைக்கிறேன்… அவங்களோட வேதனைக்கெல்லாம் மருந்தா நீ இருக்கனும்… உன்னோட தனிமை கண்டிப்பா தீரும்…”
ஹர்ஷித்… ரிஷியின் கைகளைப் பிடித்து அழுத்தியிருக்க…
“பேசுடா… கலகலன்னு பேசு… வாழ்க்கையை வாழு… அனுபவி.. உன் வாழ்க்கைல கண்டிப்பா நல்லதுதாண்டா நடக்கும்… ”
”அண்ணா… நான் நல்லா இருக்கேன்… நீதான் நம்ப மாட்டேங்கிற…. கார்லாகிட்ட வந்து கேளு… என்னைக் கழுவி கழுவி ஊத்துவா… “
சிரித்தவன்…
“உன்னை ஓரளவுக்கு நார்மலுக்கு கொண்டு வந்துட்டேன்… அதுக்கு ஃபேபியோ குடும்பம் முக்கிய காரணம்… இப்போ ஆதவன் அம்மாவையும் அங்க அனுப்புறேன்… எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நினைக்கிறேன்… ” என்ற ரிஷியிடம் ஹர்ஷித் இப்போது…
“ஆனால் நாங்க ஏன் இங்க இருக்க வேண்டாம்னு சொல்றீங்கண்ணா… “ கேள்வி கேட்க
இந்த இடத்தில் ரிஷிக்குப் பதிலாக சத்யா பேசினான்….
“இல்லடா… இங்க உங்களச் சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் பழசை ஞாபகப்படுத்துவாங்க… முக்கியமா ஆதவன் அம்மாக்கு எல்லாமே புதுசா இருக்கனும்… அவங்களுக்கு புது உலகம் கிடைக்கனும்… இங்க இருக்க வேண்டாம்… உனக்கு கிடைத்த புது உலகத்தை அவங்களுக்கும் கொடு… எல்லாம் ரெடியா இருக்கு…”
சத்யா சொல்லி முடித்திருக்க… ரிஷி தொடர்ந்தான்…
“தென்.. அப்பா உனக்காக எழுதி வைத்த சொத்தெல்லாம் உன் பேர்க்கே அப்படியே வந்திரும்… அது போல யமுனாவும் அவங்க அப்பா இறந்த பின்னால… உன் பேர்க்கு எழுதி வைச்சதும் உனக்கே” என்றவன்…
அமைதியாக நின்ற ஹர்ஷித்தைப் பார்த்து தயங்கியபடியே
”கேசவன் குடும்பச் சொத்தையும்… உன் பேருக்கு மாத்தச் சொல்லிட்டாங்க ஆன்ட்டி…”
ஹர்ஷித் ஏதுமே பேசாமல் அமைதியாக இருக்க…
“டேய் நீ இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்… மனசுல உள்ளதை சொன்னதால் தானே… எனக்கும் தெரியும்….” ரிஷி கவலையாகக் கேட்க…
“இல்லண்ணா… நீ ஃபீல் பண்ணாத… இந்த சொத்து… உறவு.. பாசம் எல்லாமே எனக்கே எனக்கானது இல்லதானே… என்னதான் இத்தனைக்கும் உரிமையாளனா ஆகப்போறேன்னாலும்… அதுதான்… அவ்வளவா சந்தோசம் இல்லண்ணே… நீங்க கண்மணி அண்ணியை எனக்கு உதாரணமா காட்டுவீங்களே… நானும் அவங்களும் ஒண்ணுனு… ஆனால் அப்படி இல்லைணா… கண்மணி அண்ணி… எதெல்லாம் அவங்க உரிமையோ… சொந்தமோ… அதை எல்லாம் விட்டு விலகி இருந்தாங்க… அது எல்லாம் அவங்ககிட்ட வந்து சேர்ந்துச்சு… அவங்களும் சந்தோசமா ஆனாங்க.... ஆனால் எனக்கு அப்படியா…”
ரிஷி இப்போது…
”உன் வருத்தம் புரியுதுடா… இதுவரை உன் வாழ்க்கைல நடந்ததை மாத்த முடியாது… ஆனால் இனி உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு… அதை மாத்தி எழுத ட்ரை பண்ணு… அதுக்கான வழிகளைத் தேடு… கண்டிப்பா உனக்கான பாதை கிடைக்கும் ஹர்ஷித்…”
எனும் போதே ஆதவனின் அன்னையும் அவர்களை நோக்கி வெளியே வந்திருக்க… ரிஷி ஹர்ஷித்…. சத்யா மூவரும் அவரின் அருகே சென்றிருந்தனர்…
அந்தத் தாயின் பார்வை… முதன் முதலாக ஹர்ஷித்திடம் சென்றிருக்க…. ஹர்ஷித்தின் முகத்தில் சின்ன மலர்ச்சி…
ஆதவனின் தாய்… ஹர்ஷித்தின் தாயாக மாறிய தருணம்…. அவர் ரிஷியை நன்றியுடன் நோக்கியவராக…. கைகள் கூப்ப…
“ஐயோ ஆன்ட்டி… என்ன இதெல்லாம்… ” பதறியவனாக… அவரின் கைகளை இறக்கியவன்
“என் அப்பாவை அவங்க வழிக்கு கொண்டு வரனும்னுற வெறில இவனோட வாழ்க்கைல ஆதவனும் கேசவ்வும்… விளையாண்டுட்டாங்க… என்னை விட இவன் தான் ஆன்ட்டி… அதிகம் பாதிக்கப்பட்டவன்…” என்றபடியே ரிஷி அவரிடம்
“நீங்க இப்போ ஹர்ஷித்தோட அம்மா… ஹர்ஷித் உங்களோட பையன்… இதுதான் உங்க வாழ்க்கை…. இவனை ஏத்துக்கங்க… புதுப் பிறவி எடுத்துருக்கீங்கன்னு நெனச்சுக்கங்க…” ரிஷி சொன்னதை அந்தத் தாய்-மகன் இருவரும் ஏற்றுக் கொண்டிருக்க
இவர்கள் இருவருக்கும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் ரிஷியும் சத்யாவும்… செய்து வைத்திருக்க…
ரிஷி ஹர்ஷித்திடம்
“நீங்க ரெண்டு பேரும்… உடனே கிளம்பணும் ஹர்ஷித்… கொஞ்ச நாளைக்கு இவங்களை இங்க இருக்கிற டென்ஷன் ஏதும் அண்டாம பார்த்துக்க… கொஞ்சம் இவங்க ரிலாக்ஸ் ஆகட்டும்…. அதுக்கப்புறம்… இந்த சொத்து…அது இது எல்லாம் நாம பார்த்து ஃபிக்ஸ் பண்ண ட்ரை பண்ணுவோம்.. கார்லாகிட்ட சொல்லி இருக்கேன்… கண்டிப்பா அவ இவங்களை மனரீதியாகவும் நல்லா பார்த்துப்பா…”
அடுத்தடுத்து அனைத்து தேவையான விபரங்களையும் சொல்லி… அவர்கள் இருவரையும் ஆஸ்திரேலியப் பயணத்திற்குத் தயார்படுத்தியவன் குரலில் இப்போது தயக்கம் வந்திருந்தது…
”வெளியில இருந்து பார்க்கும் போது ரிஷி இவ்ளோ நல்லது பண்றான்னு தோணினாலும்… உண்மையிலேயே நான் இதை எல்லாம் என்னோட சுயநலத்துக்காகவும் பண்றேன்றதுதான் உண்மை… அன்னைக்கு ஹர்ஷித்தை வேற யார்கிட்டயும் ஒப்படைக்காமல் நான் பார்த்துக்கிட்டதுக்கு காரணம் என்னவோ… அதுவேதான் இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் ஆஸ்திரேலியா அனுப்புறதும்…” என்றவன் கண்களில் இலேசாக சிவப்பு
“எனக்கு… என் அம்மா முக்கியம்… என் தங்கைகள் முக்கியம்… என் அப்பா அவங்களுக்கு விட்டுச் சென்ற பிம்பம் முக்கியம்” என்றவன் இப்போது ஹர்ஷித்தைப் பார்த்து
“தனசேகர்… திருமூர்த்தி… கேசவன்…. இவங்க மூணு பேருமே தெரிந்தோ தெரியாமலோ உன்னோட வாழ்க்கைல அங்கமாயிட்டாங்க… சொந்த அப்பா அவர் ஏதும் அறியாமலேயே போயிட்டார்… யாரோ ஒருத்தர் உன்னை சொந்த மகன்னு மனசால நினச்சபடியே அவரும் போயிட்டார்… கடைசியா உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர் வீட்டுக்கே இப்போ வாரிசா ஆகிட்ட…”
ரிஷி சொல்ல… அங்கு அமைதி மட்டுமே…. ரிஷி இப்போது இயல்புக்கு வந்தவனாக
“யமுனா காத்துட்டு இருப்பா… நீங்க அங்க இருந்துட்டு நைட் கிளம்பிருங்க… நான் வர முடியாது… ஏர்ப்போர்ட்டுக்கு போகும்போது சத்யா வந்திருவாரு… “ என்றபடி… அடுத்து சில நிமிடங்களில் ரிஷியும் சத்யாவும்… அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றிருக்க… ஹர்ஷித் தன் தாயோடு யமுனாவின் வீட்டை நோக்கிச் சென்றிருந்தான்…
ரிஷி சொன்னது போல… ரிஷி மட்டுமல்ல ஹர்ஷித்தும்… திருமூர்த்தி-தனசேகர்-கேசவன்… இவர்கள் கூட்டணி திருவிளையாடலில் பந்தாடப்பட்ட அப்பாவிதான்… அமைதியாக நேர்வழியில் சந்தோஷமாகச் சென்றிருந்த ரிஷியின் வாழ்க்கை அவனது இருபது வயதில் புயலடித்து திசை மாறி இருக்க சென்றிருக்க… ஹர்ஷித்தின் வாழ்க்கையிலோ அவனுடைய இருபது வயதில் அவனுக்கென்று நிரந்தமான குடும்பம் என்ற ஒன்று ஆரம்பமாகி தென்றல் வீச ஆரம்பித்திருந்தது…. அது அவன் வாழ்க்கையில் நிரந்தமாக இருக்க வேண்டும் என ரிஷியைப் போல நாமும் வேண்டிக் கொள்வோம்…
---
சத்யாவும் ரிஷியும் மட்டுமே அந்த வாகனத்தில்…. சத்யா வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருக்க… ரிஷி அமைதியாக அமர்ந்திருந்தபடி… சாலையே வெறித்தபடி வந்து கொண்டிருந்தான்…
என்னதான் அவன் அமைதியாக வந்தாலும்… அவன் எண்ணங்களில்… அருமை நாயகத்தின் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது…
“உனக்கு ஆப்பு வச்சுட்டேன்… உன் பொண்டாட்டிக்கு மிகப்பெரிய ஆப்பு காத்துட்டு இருக்கு…” இந்த இடத்திலேயே அவன் எண்ணங்கள் சுற்றிக் கொண்டிருக்க…
அதே நேரம்… அவனின் நெரித்த புரிவங்களின் இயக்கத்தை வைத்தே சத்யாவும் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டவனாக…
“என்னாச்சு… ஆர் கே…”
“ப்ச்ச்… “ என்று ஆரம்பித்தாலும்… விமானநிலையத்தில் நடந்ததை ரிஷி சத்யாவிடம் சொல்லி முடித்திருக்க…
”நான் உன் கூடவே இருந்திருக்கனும் ரிஷி…” சத்யாவின் குரலில் வருத்தம் மட்டுமே
“அட உடனே… இந்த வசனத்தை ஆரம்பிச்சிருவீங்களே… அதெல்லாம் சமாளிச்சுறலாம்… திவாகரும்.. வேலனும்… ஏற்கனவே க்ரவுண்ட் வொர்க் ஆரம்பிச்சுட்டாங்க… நான் ஆஃபிஸ் போறதுக்குள்ள அத்தனையும் எனக்கு வந்துரும்… இப்போவே பாதி வந்திருச்சு” ரிஷி மொபைலைப் பார்த்தபடியே சொன்னவன்
“நான் ஒரு சைட்டுக்கு ப்ரோபோசல் கொடுத்திருந்தேன்… அதை ரிஜெக்ட் பண்ணிருக்கான் அந்த அருமை நாயகம்” ரிஷியின் குரலில் ஏளனம் மட்டுமே…
”அந்த இடமெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை… ஆனால் கண்மணிகிட்ட அடிக்கடி மோதுறான்… அவளும் பொறுமையாத்தான் போயிட்டு இருக்கா… அவ கோபம் எல்லை மீறுறதுக்குள்ள நான் ஏதாவது பண்ணனும்னு நினச்சுட்டு இருந்தேன்…. இன்னைக்கு இவ்ளோ தெனாவெட்டா பேசறதைப் பார்த்தால்….. ஏதோ சம்பவம் பின்னால பண்ணிட்டு… என்கிட்ட சவால் விட்ருக்காருன்னு தோணுது…. என்னன்னு தெரியலை… ஆனால் கண்மணிக்குத்தான் ப்ளான் பண்ணிருக்காங்கன்னு தெரியுது… அதான் யோசிச்சுட்டு இருக்கேன்… அதைக் கண்டுபிடிச்சுட்டோம்னா… அது போதும்… அது மட்டும் கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அந்த அருமை நாயகத்துக்கு …” இப்போது குரலில் ஆவேசம் வந்திருந்தது…
”ரிஷி…” சத்யா அவனின் ஆக்ரோஷத்தை தணிக்கும்படியான குரலில் பேச ஆரம்பித்த போதே… ரிஷியின் அலைபேசி ஒலிக்க… அந்த எண்ணைப் பார்த்தவனுக்கு… அப்படி ஒரு மகிழ்ச்சி…. சந்தோஷம்… என அனைத்தும் வந்திருக்க… அழைப்பை எடுத்து… ஸ்பீக்கரில் போட்டிருக்க…
“ரிஷிக்கண்ணா…” மழலை மொழியில் இரண்டு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலிக்க…
”டேய் தங்கங்களா…” இப்போது ரிஷியின் குரலில் உற்சாகம் வந்திருக்க
“எங்க இருக்கீங்க…” இப்போதும் இருவருமாகக் கேட்க…
“நான் அப்பா இதோ இங்கதாண்டா இருக்கேன்… சீக்கிரம் வீட்டுக்கு வந்திருவேன்…” ரிஷி வேக வேகமாகச் சொல்ல…
“வந்துருவீங்க தானே… இங்க ராஜ் தாத்தா… அப்புறம் விக்கி மாமா… எல்லோரும் வந்துருக்காங்க… நீங்க மட்டும் வரலேன்னு…. இந்த இலட்சுமி பாட்டி புலம்பலோ புலம்பல்… இவங்கள சமாளிக்க முடியலை… அதான் போன் பண்ணினோம்… கொஞ்சம் பேசுங்க இந்த இலட்சுமி பாட்டிகிட்ட” சாதனா சொல்ல
தன் மழலைகளின் மழலை மொழியில் தன்னை மறந்தவனாக … தலைக்கேசத்தை கோதியவனுக்கு… இதழ்களில் புன்னகையின் அளவு இன்னுமே அதிகரித்திருக்க… அதன் விளைவாக அவன் புன்னகையின் சத்தமும் வெளி வந்திருக்க
“சிரிக்காதீங்க ரிஷிக்கண்ணா… உங்க அம்மா எப்போ பாரு அழுதுட்டே இருக்காங்க… பையனுக்கு வேலை இருக்கும்… இல்லைனா வந்திருக்க மாட்டானா திங்க பண்ணவே மாட்டேங்கிறாங்க…” இது பவித்ரனின் குரல்
சத்யாவின் முகத்திலும் இப்போது புன்னகை… அதே புன்னகையோடு
“அதுசரி… எப்படி ரிஷி… மேடம் மட்டுமில்லாமல்… உங்க பசங்களும்… அதே வேவ்லென்த்ல இருக்காங்க..” சத்யா மெதுவாகக் கேட்க…
“ரிஷிக்கண்ணா…” ஒலித்த அந்தக் குரல்களில் இப்போது அதிகாரம் மட்டுமே
“பாட்டிகிட்ட பேசுங்க… மணி வர்ற வரை… நீங்க வர்ற வரை… இவங்களை நாங்க எப்படி சமாளிக்கிறது…” பவித்ரன் கேட்க
“கண்மணி சொல்லிட்டுத்தான் போனா…. ஆனா பாட்டிதான் விக்கி மாமா வந்துட்டாங்க… நீங்க வரலைனு புலம்புறாங்க…” சாதனா சொல்லியபடியே இலட்சுமியிடம் அலைபேசியைக் கொடுத்திருக்க
இப்போது இலட்சுமியின் குரல்…
“ஏண்டா… குடும்பம்னு ஒண்ணு இருக்கிறது ஞாபகம் இருக்கா இல்லையா… மாசத்துல பாதி நாள் வெளிநாடு வெளிநாடுனு போயிற… இன்னைக்கு கூட…. ஃப்ளைட்ட விட்டு இறங்கின பிறகும் வீடு வந்து சேரலைனா என்னடா அர்த்தம்… சம்பந்தியும்… மாப்பிள்ளையும் உன்கூடத்தானே வந்தாங்க… மாப்பிள்ளை அவர் பொண்டாட்டி… மகன்னு தேடிப் போயிட்டாரு… இதோ அவங்களை இங்கயும் கூட்டிட்டு வந்துட்டாரு… சம்பந்தியும் மகளையும் பேரப்பசங்களையும் பார்த்துட்டு ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாரு… நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்க..”
“கண்மணி கிளம்பிட்டாளா…” ரிஷி தன் அன்னை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் மனைவியைப் பற்றி விசாரிக்க
“அவ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே போயிட்டா… அவ ஒழுங்கா உன்னைக் கண்டிச்சு வச்சிருந்தா ஏன் இப்படி ஆகுது… உன் இஷ்டத்துக்கு ஆட விட்றாள்ள…. அவளைச் சொல்லனும்… மணிகிட்ட பேசுனியா” எனும் போதே…
“ம்மா… சின்ன வேலை வந்திருச்சும்மா…. அதை முடிச்சுட்டு வீட்டுக்கு வரனும்னு பார்த்தா… அடுத்து ஒரு வேலை… அதான் ஆஃபிஸ் போயிட்ட்டு இருக்கேன்… நானே அவகிட்ட நேரம் பார்த்து பேசுறேன்…” என்றபடியே
“டேய் அப்பா… பைடா… அப்பா சீக்கிரமா வந்துருவேன் இன்னைக்கு… வரும்போது அம்மாவையும் கையோட கூட்டிட்டு வந்துறேன்… உம்மா… பை…”
“பை ரிஷிக்கண்ணா… உம்ம்ம்ம்ம்ம்ம்மா…” என சாதனாவும்… பவித்ரனும் ஒரு சேர அவனுக்கு பை கூற… அலைபேசியை அணைத்தவனின் முகமெங்கும் பெருமை… அதோடு உற்சாகமும் சேர்ந்திருக்க…
அதே உற்சாகத்தோடு… தன் மனைவிக்கும் அழைக்க… நீண்ட நெடிய அழைப்புடன் அந்த அழைப்பு சென்று முடிந்திருக்க… ஏமாற்றம் இருந்தபோதும் மனைவியின் பொறுப்பை அறிந்தவனாக… புரிந்தவனாக… கேசத்தைக் கோதியபடியே… பெருமூச்சு விட்டவன்… கார் சன்னலின் வெளியே பார்வையை வைத்தபடியே வந்தவன்… சில நிமிடங்கள் கழித்து தானாகவே சத்யாவின் புறம் திரும்பி…
“மேடம் பிஸி போல…” சத்யாவிடம் சொல்லி முடிக்கவில்லை… கண்மணியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்திருக்க…
“ஹலோ…” என்ற வார்த்தையிலேயே அவள் அவனின் மனைவியாகப் பேசவில்லை என்று தெரிந்ததுதான்… இருந்தாலும்
“ஸ்பீக்கர்ல போட்ருக்கேன்… சத்யா பக்கத்துல இருக்கார்” ரிஷி முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக சொல்ல
“ரிஷி… நான் மீட்டிங்ல இருக்கேன்… அப்புறமா பேசுறேன்… “ என்றவள்
”வைக்கிறேன்…” முடித்தாளோ முடிக்கவில்லையோ… வார்த்தைகள் முடியும் முன்னேயே கண்மணி வைத்துவிட… ரிஷியும் அதற்கு மேல் கண்மணியைத் தொந்தரவு செய்யவில்லை….
தங்கள் அலுவலகத்திற்கும் வந்து சேர்ந்திருந்தார்கள்… ரிஷியும் சத்யாவும் இப்போது…
---
ரிஷி வரும் முன்னரே… தினகரும்… வேலனும்… ரிஷிக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து அனுப்பியிருக்க… ரிஷியும் இப்போது அதை அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்திருந்தான்,,,
தினகரனும்… வேலனும்… இப்போது சத்யா இருந்த இடத்தில் நின்று ரிஷிக்கு தோள் கொடுத்து உதவினார்கள்… ரிஷியும் அவர்களை நிர்வாகத்தில் மரியாதையில் தனக்கு அடுத்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தான்…
முதன் முதலாக அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவர்களை… அவ்வளவு ஈஸியாக ரிஷி மறந்து விடுவானா?…. விட்டு விடுவானா?… அவர்கள் நினைத்ததை விட இருவரையும் மிக உயர்ந்த இடத்தில் ஏற்றி விட்டிருந்தான் ரிஷி… தொழிலில் மட்டுமல்லாது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலுமே… மனைவி குழந்தை என தினகரும் வேலனும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி சந்தோசமாகவே நகர்ந்திருந்தனர்…
“அண்ணாத்த… அந்த அருமைநாயகம் வேணும்னே பண்ணிருக்காரு …”
“உங்க மேல கோபம் இல்ல… மணி அக்கா மேலதான் அத்தனை கோபம்னு நினைக்கிறேன்… கோபம்ன்றதை விட… அக்கா மேல… அக்கா வளர்ச்சி மேல பொறாமை தல…” திவாகர் சொல்லி முடிக்க….
தலை அசைத்தவனாக ரிஷி இப்போது…
”மீடியா சைட்ல விசாரிக்கச் சொன்னேனே… எப்போ ரிப்போர்ட் வரும்’ ரிஷி கேட்க… அதே நேரம் வேலனுக்கும் அழைப்பு வந்திருக்க… வேலனும் பேசி முடித்து விட்டு வைத்தான்…
பேசி வைத்தவன் முகத்தில் கலவரம் மட்டுமே…
”தல… செமையா ஸ்கெட்ச் போட்ருக்காங்க… நாம சொன்ன மாதிரிதான் மணி அக்காவோட பேரைக் கெடுக்கத்தான் ப்ளான் பண்றாங்க…”
ரிஷி வேலன் – தினகரைப் போல கலவரம் எல்லாம் ஆகவில்லை…
“என்ன சொன்னாங்க…” வேலனைப் பார்த்துக் கேட்டவன் குரலில் நிதானம் மட்டுமே…
”அக்கா லேண்ட் விசயத்துல உங்களுக்கு… நம்ம கம்பெனிக்கு ஃபேவரா இருக்கிற மாதிரி… தகவலை மாத்திக் கொடுத்துக்காங்கன்னு சொல்றாங்க…… மீடியால இந்த விசயத்தைக் கசிய விட சொல்லியிருக்கான் அந்த அருமைநாயகம்”
ரிஷி யோசனையுடன் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன்… பின் நிமிர்ந்தவனாக
“அவன்கிட்ட நேரடியாகவும் மோத முடியாது… அவனை விடாமலும் இருக்க முடியாது… கட்சிக்கும் அவமானம் வர விட்றக் கூடாது…” ரிஷிக்குள் இன்னும் யோசனைகள் பல ஓடிக் கொண்டிருக்க…
“தூக்கிறலாமா அண்ணாத்த… அக்காவைப் பார்க்கிற இடத்தில இல்லாம் சவால் விட்டுனு இருக்கான்… ரொம்ப சவுண்ட் விட்ற மாதிரி இருக்கு… ஒரு வார்த்தை சொல்லு தல “ வேலனும் தினகரும் சொல்ல
“எதிர்கட்சியா இருந்து இதெல்லாம் பண்ணியிருந்தா… கட்டம் கட்டியிருக்கலாம்… ப்ச்ச்… இப்போ அது முடியாதுல… நிதானமா தெளிவா யோசிக்கனும்…” சில நிமிடங்கள் கண் மூடி இருந்தவன்… கண் விழித்த போது முகம் தெளிவாகி இருக்க…
தனது காரியதரிசிக்கு அழைத்தவன்…
”இன்னைக்கு “சிஎம்” மீட் பண்ணலாமா… இன்னைக்கு ஸ்டேட் சார்பா அவர் நமக்கு கொடுத்த கௌரவத்துக்கு… அங்கீகாரத்துக்கு நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்… அப்பாயின்மெண்ட் செக் பண்ணிச் சொல்றீங்களா…”
சொல்லி வைத்தவனிடம்
”ஏன் தல… டேரெக்டாவே பேசலாமே… தலைவர் கூட அவ்வளவு நெருக்கம் தானே நீங்க…
”இப்போ அஃபீசியலாவே போவோம்… எல்லோருக்கும் அதுதான் நல்லது” என ரிஷி முடித்து விட்டிருக்க…
அதே போல அடுத்த நிமிடம்…
ரிஷிக்கு முதல்வரைச் சந்திக்கும் பிரத்தியோக அனுமதி… அதிலும் உடனடியாகக் கிடைத்திருந்தது …
அனுமதி கிடைத்த அடுத்த நொடியே… இருக்கையை விட்டு எழுந்தவன்…
“சத்யா… நீங்க ஹர்ஷித் விசயத்தைப் பார்த்துக்கங்க… போன்ல அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்… சரியா… இன்னும் ஒன் ஹவர்ல நான் தலைவரைப் பார்த்துட்டு… அப்புறம் தான் வீட்டுக்குப் போகனும்… கம்பெனி விசிட்டுக்கு நெக்ஸ்ட் மந்த் வர்றேன் “ ரிஷி சொன்னபடியே பரபரப்புடன் வெளியேறி இருந்தான்…
---
அடுத்த சில மணி நேரங்கள் கடந்திருக்க… முதல்வரைச் சந்தித்துவிட்டும் வந்திருந்தான் ரிஷி… சென்றபோது இருந்த அதே பரபப்போடு மீண்டும் கம்பெனி வந்தவன்… கூடவே உற்சாகமாகவும் இருந்தான்… உடனடியாக தீனா வேலனையும் அழைத்தான்…
“தீனா… அந்த மீடியா பெர்சன் கிட்ட சொல்லி வை… ஃப்ளாஷ் நியுஸ்க்கு… இன்னைக்கு நைட் சுடச்சுட நியூஸ் கிடைக்கப் போகுதுனு… என்ன் செய்தினு கேட்டால் அமைச்சரவையில் மாற்றம்… அருமை நாயகத்தின் பதவி பறிப்பு… இந்த செய்திதான்னு சொல்லி வை…” ரிஷி முடித்திருந்தான்…
---
தலைமைசெயலகம்… மாலை மூன்று மணி அளவில்…
முதல்வர் அறையில்… அருமை நாயகம்… கைகளைப் பிசைந்தபடி
“தலைவரே… “ எனத் தயங்கி ஆரம்பித்த போதே… அவரோ படபடவென ஆரம்பித்திருந்தார்…
“சொல்லுங்க என்ன காரணம்… ’ஆர் கே’ இண்டஸ்ட்ரிஸ்க்கு அந்த லேண்ட் அப்ரூவல் ரிஜெக்ட் பண்ணினதுக்கான காரணம் சொல்லுங்க…” முதல்வரின் நேரடியான கறாரான கடின வார்த்தைகளில்…
“அந்த இடம் ஃபேக்டரிக்கான சூழலே இல்லை தலைவரே… ”
“அப்போ உங்க துறைக்கு வேணும்னு ஏன் கேட்டு வாங்குனீங்க…” கேள்வி கேட்டவரிடம் இப்போது அருமை நாயகம் விழிக்க…
“உண்மையான காரணம் இப்போ உடனே வேண்டும்”
“அது வந்து… அந்தப் பொண்ணு…”
“கண்மணி… உங்களை மாதிரி அமைச்சர்… அவங்களுக்கான மரியாதை வேண்டும்….” எனும் போதே
“நிதி அமைச்சர் அந்த ’ஆர் கே இண்டஸ்டிரிஸோட ஒன் ஆஃப் த பார்ட்னர்… இப்போ நாம இந்த இடத்தை அந்த ரிஷிக்கு கொடுத்தோம்னா… நம்ம கட்சிக்குத் தான் கெட்ட பேர்…” எனும் போதே…
முதல்வரின் கண்களில் தீப்பொறி பறந்திருக்க
“ஓ… நம்ம கட்சி மேல இருக்கிற அக்கறைல மிஸ்டர் ரிஷிகேஷுக்கு அப்ரூவல் கொடுக்கலை… அவர் மேல இருக்கிற தனிப்பட்ட வெறுப்புல இல்லை… அப்படித்தானே
“ஆமா… ஆமா… அதுதான் உண்மை தலைவரே…”
“அப்போ இதென்ன…”
“உளவுத்துறைல இருந்து வந்த மெசேஜ்… “ அலைபேசிப் பதிவைப் போட்டுக் காண்பித்தார்…
இப்போது அருமை நாயகம்… ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்… பின் என்ன நினைத்தாரோ.. தைரியமாக நிமிர்ந்தவராக…
“யார் அந்த கண்மணி…. நம்ம கட்சியில நேத்து வந்து சேர்ந்தவ… மிகப்பெரிய ஓட்டு வித்திசாயத்துல ஜெயிச்சதுனால… அவளுக்கு இவ்ளோ பெரிய பதவி…” எனும் போதே… முதல்வரின் செயலாளர் கண்மணியின் வருகையை முதல்வருக்கு சொல்லியிருக்க…
“ஒரு நிமிசம்… நிதி அமைச்சர் கண்மணியும் இப்போ வந்துருவாங்க… அவங்க இருக்கும் போதே பேசலாம்…” எனும் போதே கண்மணியும் அங்கு வந்திருக்க…
“வாங்க…“ கண்மணி அவர் அழைக்கும் முன்பே அவருக்கு முதல்வருக்கு வணக்கம் செய்தவளாக… அருகில் நின்றிருந்த அருமை நாயகத்தையும் வணங்கி இருக்க… அருமைநாயகமோ அலட்சியமாக கண்மணியைப் பார்த்துவிட்டு மீண்டும் முதல்வரிடம் பேச ஆரம்பித்தார்
“அப்படி என்ன தலைவரே இந்தப் பொண்ணு எங்களை விட எல்லாம் உசத்தி… நேத்து பெஞ்ச மழைல இன்னைக்கு பூத்த காளான் மாதிரி… அவ்ளோதான் இந்தப் பொண்ணு…”
கண்மணி அவரின் பேச்சைக் கேட்டபடியே… முதல்வரைப் பார்க்க… அவரோ பார்வையாலே கண்மணியிடம் அமைதியாக இருக்கும்படி சொல்லியிருக்க… கண்மணியும் அமைதியாக இருந்தாள்…
“தாத்தா பெரிய சொத்துக்காரரு… அதை வச்சு கட்சிக்குள்ள வந்துட்டு… பணத்தை வச்சு மக்களையும் வளச்சுப் போட்டு ஜெயிச்சதும் இல்லாமல்… அமைச்சரவைலயும் இடம்… கஷ்டமாக இருக்கு தலைவரே… தகுதியே இல்லாதவங்களுக்கு இந்த அங்கீகாரம் ஏன்… அப்போ இவ்ளோ நாள் கட்சியில இருந்த எங்களுக்கு… உழச்சவங்களுக்கு என்ன மதிப்பு… முதல்ல இந்தப் பொண்ணுக்கு கட்சியோட கொள்கை… அடிப்படை என்னன்னு தெரியுமான்னு கேளுங்க… இவளுக்கு அமைச்சரவைல இடம் வேற” என்ற போதே கண்மணி ஏதோ சொல்ல வாயெடுக்க…
“அவரைப் பேச விடுங்க கண்மணி…”
அருமை நாயகம் மிதர்ப்பான பார்வையில் இப்போது கண்மணியிடமே நேராகப் பேச ஆரம்பித்திருந்தார்….
“இவளுக்கு நீங்க நிதி அமைச்சர் பதவி கொடுத்தா ரெவின்யூ டிபார்ட்மெண்டை கையில எடுத்துகிட்டு… அவ புருசனுக்கு என்னென்ன பண்ணனுமோ… அதை எல்லாம் பண்ணிட்டா…”
இப்போது கண்மணியின் பார்வை கோபத்தில் விரிந்திருக்க… இப்போது கண்மணி பேச ஆரம்பித்தாள்… முதல்வரிடம்…
“இவர் இவ்ளோ பெரிய குற்றச்சாட்டு என் மேல வைக்க என்ன காரணம்… எனக்குப் புரியல தலைவரே… இதுல என் கணவர் எங்க இருந்து வந்தாரு… என்னைப் பற்றி இவர் பேசலாம்… ஆனால் என் கணவரை ஏன் இழுக்கிறாரு…” கண்மணி வேகமாகக் கேட்க
“நிலம் கையகப்படுத்தல(land acquisition) உங்க துறை விதி மீறி நடந்திருக்குனு குற்றம் வைத்திருக்கிறார் அருமைநாயகம்…”
“அதாவது நீங்க உங்க கணவருக்கு சாதகமா… அவரோட தொழிலுக்கு ஏற்ற இடங்களை எல்லாம் அரசு சார்பா கையப்படுத்திருக்கீங்கன்னு சொல்ல வர்றார்…”
கண்மணி கோபப்பார்வையை அருமை நாயகம் மேல் வைத்தவளாக…
“எனக்கு ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் தருவீங்களா…” என்றபடியே அவரிடம் சம்மதம் வாங்கியவளாக… வெளியே நின்றிருந்த தனக்கு கீழ் இருந்த நிர்வாக அதிகாரியிடமிருந்து கணினியை கொண்டு வர சொன்னாள் கண்மணி…
கணினியும் வந்திருக்க… அதில் இருந்த விபரங்களை எல்லாம் காட்டியவலாக
“இது இந்த வருசத்துல தனியார் நிலம்… புறம்போக்கு நிலம்… அங்க இருந்த மக்களுக்கு… நாம பண்ணின காம்பன்சேஷன்… எல்லாமே இருக்கு… அது மட்டுமில்லாம எந்தந்த துறை இதை பயன்படுத்தலாம்… அந்த அனாலிஸிசும் உங்ககிட்ட சப்மிட் பண்ணியிருக்கோம்… சுற்றி இருக்கிற நிலங்களோட பயன்பாடு… மக்களோட வாழ்க்கை முறை… அவங்களோட தேவை… இந்த விபரங்களும் இதில இருக்கு… இதெல்லாம் பார்த்துதான்… முடிவு பண்ணினது எல்லாம்… என்னோட தனிப்பட்ட விருப்பம் இதுல எங்க இருக்கு… அதுமட்டுமில்லாமல்.. இறுதி முடிவு எடுக்கிறதும் நீங்கதான்… அப்படி இருக்கும் போது… இது எல்லாம் தெரிந்த இவர்… தனிப்பட்ட முறைல என் மேல இவ்ளோ பெரிய குற்றச்சாட்டு சுமத்துறது ஏன் … இது என் மேல மட்டுமில்லை… நம்ம அமைச்சரவை குழு மேலேயே குற்றம் சாட்ற மாதிரிதானே தலைவரே” கண்மணி விவரிக்க
இப்போது முதல்வர்…
“கேட்டிங்கதானே மிஸ்டர் அருமை நாயகம்… நீங்க கண்மணி மேல குற்றம் வைக்கலை… மொத்த அமைச்சரவையையே… என்னோட தலைமையவே குற்றம் சாட்டியிருக்கீங்க…”
“உங்க துறை நிர்வாகத்துல குறுக்கிடலை…. ஆர்கே இண்டஸ்ட்ரீசோட அப்ரூவல் ரிஜெக்ஷனை விட்றலாம்… ஆனால் ஏன் கண்மணியை டார்கெட் பண்ணுனீங்க… மீடியா வரை தவறான தகவல்களை பரப்பி வச்சுருக்கீங்க… எதிர் கட்சியில இருக்கிறவங்க இந்த மாதிரி பண்ணியிருந்தால் கூட அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்…ஆனால் நம்ம கட்சியிலேயே…” என்று நிறுத்தியவர்…
”உட்கட்சி பூசல் இருக்கலாம்… ஆனால் அது கட்சியோட… ஆட்சியோட நிலைப்பாட்டையே உடைக்கி்ற அளவுக்கு இருந்தால் என்னால அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது…”
“இளைஞர்களுக்கு வழி விடனும்னு பேசினால் மட்டும் போதாது… அதை செயல்லயும் காட்டனும்… கண்மணி எல்லா தகுதியும் இருந்த ஒரு வேட்பாளர்… அதை விட இந்தியா அளவுல… அதிக ஓட்டுக்கள் வித்திசாயத்தில் ஜெயித்த பத்து வேட்பாளர்ல அவங்க ஒருத்தவங்க… இது சாதாரண விசயம் இல்லை… இன்னும் அவங்க சாதிப்பாங்க…” என்ற போதே
“அந்தத் திமிர்தான் தலைவரே… இந்தப் பொண்ணு கட்சியில யாரையும் மதிக்க மாட்டேங்குது… குரல்லயே அதிகார ஆணவத் திமிரைக் காட்டுது… இன்னைக்கு சப்போர்ட் பண்ற நீங்க ஒரு நாள் இந்தப் பொண்ணத் தூக்கி எறிவீங்க பாருங்க…”
கண்மணி ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்…. அவள் பேசவும் நினைக்கவில்லை… தலைவரே பேசும் போது அவளுக்கு பேசத் தேவையும் இருக்கவில்லை
”நான் இந்த ரூம்ல சும்மா உட்கார்ந்திருக்கேன்னு நினைச்சுட்டீங்க அப்படித்தானே… தொகுதி நிலவரம்… மக்கள் குறைனு… மட்டும் இல்லை… என்னோட தலைமைல இருக்கிற அமைச்சரவை செயல்பாட்டையும் பார்த்துட்டு தான் இருக்கேன்… அமைச்சரா மட்டும் இல்லை…. தொகுதி சட்டசபை உறுப்பினரா அவங்களோட நிர்வாகமும் உழைப்பும் எல்லாம் எனக்கும் தெரியும்… அந்தத் தொகுதி வட்டம்…. மாவட்டம்னு… மட்டும் இல்லை… இங்க கட்சில எல்லோரும் கண்மணிகூட சுமூகமாத்தான் இருக்காங்க… உங்களுக்கு மட்டும் இவ்ளோ பகை எதுக்கு ” என்றபடியே….
“கண்மணி நீங்க போகலாம்… உங்களோட தெளிவான அறிக்கைகளுக்க்கும்… விளக்கங்களுக்கும் நன்றி…” என்றவர்…
“அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட உங்க விருப்பு வெறுப்புகளை விடுத்து கட்சிக்காக… மக்களுக்காக உழைப்பீங்கனு நான் வச்சிருக்கிற நம்பிக்கையைக் காப்பாத்துவீங்கன்னு நம்புறேன்..” என்று கண்மணியிடம் சொல்ல
”கண்டிப்பா சார்…” என்றபடி கண்மணியும் வெளியேறி இருக்க… ரிஷி, தினகர்-வேலனிடம் சொன்ன செய்தி உண்மையாக ஆரம்பித்திருந்தது அந்த நிமிடத்தில் இருந்து…
----
கண்மணி என்னவோ அங்கு அமைதியாகத்தான் அங்கிருந்து வந்தாள்… ஆனால் மீண்டும் தன் அறைக்கு வந்த போதோ… அவளின் மனதில்… முகத்தில் படபடப்பு…
இப்படி ஒரு குற்றச்சாட்டை அவள் எதிர்பார்க்கவே இல்லை… நிலம் கையக்கபடுத்த ஊழலில் தானா… அவள் நினைத்தே பார்க்கவில்லை… அதுவும் கணவனுக்காக நிலத்தை எல்லாம் கையக்கபடுத்துகிறேனா..
“எப்படிப்பட்ட அபத்தமான வார்த்தைகள்… இப்படி அவள் ஒரு நாளும் யோசித்ததே இல்லை… ”
தலை முழுவதும் பாரமாகி இருக்க… அதே நேரம் அவளது அலைபேசியில் அவளது கணவனும் அழைத்திருக்க
“சொல்லுங்க…” அவள் கடுப்பாக ஆரம்பித்த போதே அவள் மனநிலை அவனுக்குத் தெரியாதா என்ன…
“என்ன மேடம்… உச்சாணிக் கொம்புல ஏறி இருக்கீங்க போல… கொஞ்சம் பார்த்து பண்ணுங்க… கீழ இறங்கி வாங்க…”
“பெரிய அக்கறைதான்… காலைல வந்து இறங்கியிருக்கீங்க… இதுவரை என்னை வந்து பார்க்கலை… என் கூட பேசலை… இதுல நான் இறங்கனுமா” கண்மணி பொறிந்திருக்க
“அடிப்பாவி… நான் பேசினேன்… நீதான் மீட்டிங்னு சொல்லி வச்சுட்ட…”
“நான் அப்படித்தான் சொல்லுவேன்… நீங்க தான் என்கிட்ட பேச ட்ரை பண்ணியிருக்கனும்… இவ சொல்லிட்டா… அதுதான் சாக்குனு வச்சா என்ன அர்த்தம்… “ கண்மணி படபடவென ஆரம்பித்திருக்க
“இருடி… நான் பேசுறதுக்கும் சான்ஸ் கொடுடி…”
“இப்போதான் ஒருத்தன் பேச்சைக் கேட்டுட்டு வந்து அதுல ஒரே தலை வலி… இனி நான் யார் பேச்சையும் கேட்கத் தயாரா இல்லை…. அதுவும் முக்கியமா… உங்க பேச்சை கேட்கத் தயாராகவே இல்லை… வைக்கிறேன்… வந்துட்டாரு… ” முடிக்கும் போதே முணுமுணுப்போடு முடித்திருந்தவள்… சொன்னபடி அலைபேசியைத்தான் வைக்கவில்லை…
”என்ன மினிஸ்டர் மேடம் செம்ம காண்ட்ல இருக்காங்க போல… ரிஷி ஏதாவது பண்ணுடா…” தனக்குள் சொல்லிக் கொண்டவனாக…
“பேசத்தயாரா இல்லைனாலும்… அமைச்சர் மேடம் என் கூட வரத் தயாரா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… 15 நாள் மிஸ்ஸிங் சிண்ட்ரோம்… ஹான் உங்களுக்கு இல்லை… ஐ மீன் எனக்கு…. வந்து காப்பாத்துவீங்கன்னு நினைக்கிறேன்…“ ரிஷியின் குரலில் ஏக்கமும்… அதே நேரம் அவள் வரவேண்டும் என்ற கட்டளையும் கலந்து இருக்க
“இவ்ளோ நாள் அங்க இருக்கும் போது அந்த சிண்ட்ரோம் தெரியலை… இங்க வந்து இறங்கின உடனே அப்டியே பொண்டாட்டிய மிஸ் பண்ற மாதிரி நடிப்பை போட்றது” வாய்க்குள்ளேயே முணங்கினாலும்… ரிஷிக்கும் கேட்கும் விதத்தில் முணங்க…
“நீதானே அம்மு சொல்லியிருக்க… நான் இல்லைனு ஃபீல் பண்ணக்கூடாது… காத்தா இருப்பேன்… கனவா இருக்கேன்னு… நீ எனக்காக எழுதின புக்கை இப்போ கூட இப்போ கூட கைல வச்சிருக்கேனே… நீ இல்லைனு ஃபீல் பண்றப்போலாம் அதைத்தான் எடுத்து படிச்சுப்பேன்… ” ரிஷி சந்தடி சாக்கில் அவளை மடக்கியிருக்க
“இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…” கண்மணியின் குரலில் இப்போது புன்சிரிப்பு வந்திருக்க
“நான் எதெதுல குறைச்சல் இல்லேன்னு அப்புறமா பேசிக்கலாம்… வந்து சேரு… உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…” என்று ரிஷி வைத்திருக்க….
”மாலதி… நான் இன்னைக்கு…. என் ஹஸ்பண்டோட கிளம்புறேன்…. காரை அப்புறமா எடுத்துட்டு வந்துறச் சொல்லுங்க..” என்றபடியே கிளம்பியவள் கணவனின் அருகில் அவன் வாகனத்திலும் இருந்தாள் அடுத்த சில நிமிடங்களில்…
“என்ன அமைச்சரே… என்ன முகமே சரி இல்லையே… என்னாச்சு…” மனைவியைப் பார்த்தபடியே ரிஷி ஸ்டியரிங்க் வீலில் தாளம் போட்டபடியே கேட்க…
கண்மணி அமைதியாகவே அமர்ந்திருக்க
“சொன்னா நானும் ஏதாவது பண்ணுவேன்… உங்க பொதுவாழ்க்கைல ஏதோ என்னால முடிந்த சின்ன ஹெல்ப்…” ரிஷி வேண்டுமென்றே அவளிடம் விளையாடிக் கொண்டிருக்க
“ஒண்ணும் தேவையில்லை… உங்க பிஸ்னஸ்ல நான் தலையிட்றேனா… அதே மாதிரி என்னோட ப்ரொஃபெஷனல்லயும் நீங்க தலையிடாதீங்க…”
“ஓகே நான் கேட்கலை… விட்ருவோம்… உங்க பாடு… உங்க தலைவர் பாரு… உங்க மக்கள் பாடு… எனக்கென்ன… ஆனால் என் பொண்டாட்டியை கூல் பண்ணலாம் தானே… ஒரு லாங்க் ட்ரைவ்… அவங்க ரிஷிக்கண்ணாவோட வரலாம்ல…” ரிஷி கண்சிமிட்டிக் கேட்க…
இப்போது கண்மணியின் முகத்திலும் புன்னகை பெரிதாகவே வந்திருக்க…
”ரைட்டு… மினிஸ்டர் முகத்தில் மின்மினி… அதே ஜோர்ல நாமளும் கிளம்புவோம்” ரிஷி கண்மணியைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி தன் வாகனத்தையும் எடுத்திருந்தான்…
---
இரவு மணி எட்டாகி இருக்க
“சாதும்மா… சாப்பிடுடா…. வித்ரா நீயும்தான்டா… இங்க பாரு… மிதுன் எவ்ளோ சமத்தா சாப்ட்றான்… அத்தை ஊட்டி விட்டா சாப்பிடுவீங்கதானே” ரிதன்யா கண்மணி-ரிஷி மக்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்க
“முடியாது… கண்மணி ஏன் இன்னும் வரலை… நாங்க வெயிட் பண்ணிட்டு இருப்போம்னு தெரியாதா… ரிஷிக்கண்ணா வந்தாலே இந்தக் கண்மணி இப்படித்தான்… அவ ஒழுங்காத்தான் இருந்தா… இவ்ளோ நாளும் கரெக்டாத்தான் வந்துட்டு இருந்தா… ”
ரிதன்யாவும் ரித்விகாவும்… தங்கள் அன்னையின் முகத்தைப் பார்க்க…
“இவங்க ரெண்டு பேரும்… அவங்க அம்மா,அப்பா பற்றி பேசலாம்… கோபப்படலாம் ஆனால் நாம பேசக் கூடாது… ” இலட்சுமி சொல்ல
”கண்மணி லேட்டானா எங்களுக்கு கால் பண்ணுவாதானே….”
இலட்சுமி தலை ஆட்ட
“அப்போ நாங்க சமத்தா சாப்பிடுவோம் தானே… இன்னைக்கு ஏன் லேட்டா வருவேன்னு எங்களுக்கு சொல்லலை… அதான் அவ மேல எங்க கோபம்…” கோபத்துக்கான காரணத்தை குழந்தைகள் சொல்லி முடித்திருக்க
அதே நேரம் ரிஷியின் வாகனமும் உள்ளே வந்த சத்தம் கேட்டிருக்க… அவ்வளவு நேரம் கோபத்துடன் இருந்தவர்கள்.. அடுத்த நொடியே
“ஹை ரிஷிக்கண்ணா…. வந்துட்டாங்க….” வேகமாக குழந்தைகள் இருவரும் வெளியே ஓடி வந்திருக்க… அவர்களை விட வேகமாக ரிஷியும் காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவனாக…. ஓடி வந்த தன் மக்கள் இருவரையுமே ஒரே நேரத்தில் வாறி அணைத்தவனாக…. தூக்கியவன் தட்டாமலை சுற்ற….
கண்மணி சிரித்தபடி…
“சாரி பாப்பு… அம்மா “ எனும் போதே
“எங்களுக்கு சாரிலாம் ஒண்ணும் தேவையில்ல… ரிஷிக்கண்ணா வந்ததுனால உன்னை மன்னிச்சு விட்றோம்” ரிஷியிடமிருந்தபடியே பேசியவர்கள் கண்மணியிடம் கோபத்துடன் முகத்தைத் திருப்பி இருக்க
”நன்றி நன்றி…” கண்மணியும் அவர்களிடம் முறுக்கிக் கொண்டு போக…
“நாங்க ரிஷிக்கண்ணாகிட்ட சாப்ட்டுக்கிறோம்… நல்ல கதை கேட்டுகிறோம்… தூங்கிக்கிறோம்…” வேண்டுமென்றே பவித்ரன் அவளைக் கோபப்படுத்த
“மிகவும் நன்றி… என்னை ஆளவிடுங்க… இனி உங்க பாடு… உங்க ரிஷிக்கண்ணா பாடு… எனக்கு ஸ்டோரி எழுத டைம் கெடச்சா சந்தோசம்தான்” கண்மணியும் உள்ளே நுழைந்திருந்தாள்…
“அவ கிடக்கிறா… அப்பா வந்துட்டேன்ல… அப்பா பார்த்துக்கிறேன்… ” ரிஷி தன் குழந்தைகளுடன் உள்ளே வந்தான்… மனைவியைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தவனுக்கு குழந்தைகளை சமாதானப்படுத்துவதா கடினம்…
குழந்தைகளுடன் சேர்ந்தே உள்ளே வந்தவனை… விக்கியும் ரிதன்யாவும் வரவேற்றனர்…. நண்பனைப் பார்த்த அடுத்த நொடியே… ரிஷி முறைத்தபடி
“துரோகிய… நண்பன்ற பேர்ல… மாப்பிள்ளைன்ற பேர்ல… கூடவே வச்சுருக்கேன்… ஏண்டா உன் குடும்பஸ்தன் பட்டத்தை இவ்ளோ சின்சியரா நிறைவேத்தனுமா… “ ரிஷி கடுப்பாகக் விக்கியிடம் கேட்க
“உனக்கென்னப்பா… நீ பேசக் கூடத் தேவையில்ல… அடுத்த நிமிசமே உன் பொண்டாட்டியும் புள்ளைங்களும் உனக்காக கரஞ்சுருவாங்க …. ஆனால் என் நிலைமை அப்படியா… 15 நாள்… என்னோட தனிமை இன்னும் எக்ஸ்டெண்ட் தான் ஆகும்… தேவையா எனக்கு… “ எனும் போதே ரிதன்யா முறைத்திருக்க
“பார்த்தியா நீ இருக்கும் போதே எப்படி முறைக்கிறான்னு…” என்றவனிடம் ஏதும் பேசாமல்… குழந்தைகளிடம் பேசினான்
”சாதும்மா… விது…. நீங்க ரெண்டு பேரும் அத்தைகிட்ட சாப்பாடு போட்டு வாங்கிட்டு வருவீங்களாம்… அதுவரை… நான் மாமாகிட்ட பேசிட்டு இருப்பேனாம்…. இந்த டீலுக்கு ஓகேவா…”
“பரவாயில்லை ரிஷிக்கண்ணா… முக்கியமான வேலை இருக்குனா… நாங்க அத்தைகிட்டயே சாப்பிட்டுக்கிறோம்…. மணி சொல்லிருக்கா… அப்பா அம்மா பிஸியா இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு… அவங்களை புரிஞ்சு நடந்துக்கனும்னு….”
ரிஷி பெருமையுடன் தன் மக்கள்களை பார்த்து இறக்கி விட….
“ரிது வா… நாங்க உங்கிட்டயே சாப்பிட்டுக்கிறோம்… ஆனால் எங்களுக்காக மட்டுமில்லை… அப்போதான் மிதுன் குட்டியும் அதிகமா சாப்பிடுவான்.. அதுனாலதான்…” ரிதன்யாவிடம் சொல்ல
“அடேங்கப்பா… அம்மா… அப்பா… அத்தைங்க ரெண்டுபேர் என அத்தனை பேர் வாயையும் நீங்க ரெண்டு பேரும் மொத்தமா வாங்கி வச்சுருக்கீங்க… வாங்க வாங்க…” என தன்னையும் அவர்களில் அடக்கியவளாக… தன் மருமக்களை தூக்கியிருந்தாள் ரிதன்யா…
---
ரிஷி இப்போது விக்கியிடம் காலையில் இருந்து நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் விளக்கியிருக்க..
”இவ்ளோ நடந்திருக்கு… சி எம்மை நீ பார்க்கலைனா… கண்மணியைப் பற்றி தவறாத்தானே நியூஸ்ல வந்திருக்கும்… “ விக்கி கோபத்தோடு கேட்க
“இல்லடா… அதுக்கு முன்னாடியே…. தகவல் அவர் காதுக்கு போயிருக்கு… அதுக்கப்புறம் தான் நானும் அமைதி ஆனேன்… ஆனால் கண்மணி டென்ஷன் ஆகிட்டா… அதான் அவகிட்ட கொஞ்சம் தனியா பேசி நார்மலுக்கு கொண்டு வந்தேன்… அவ கொஞ்சம் ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட்… அவ பாட்டுக்கு அந்த அருமை நாயகத்தை அறஞ்சுட்டு வந்தாலும் வந்துருவாளோன்னு பயம் வேற… ஆனால்” என்று நிறுத்தியவன்…
”பொது வாழ்க்கைனு வந்தால் தனிப்பட்ட கோபம் வெறுப்பு விருப்புனு உடனே காண்பிக்க கூடாதுனு அவளும் ஓரளவு பழகிட்டா… அதுனால அவன் தப்பிச்சான்… ” என்ற ரிஷியிடம்
“கண்மணிக்கு இந்த ஃபீல்ட் ஓகேன்னு நினைக்கிறியாடா… அவ சும்மாவே மனசுல இருக்கிறதை இறக்கி வைக்க மாட்டா… இப்போ இன்னும் அதிகமாகுமே… கிருத்திகா மேடம் என்ன சொன்னாங்க…. அவ மனசுல இருக்கிறதை வெளில எவ்வளவுக்கெவ்வளவு இறக்கி வைக்கிறாளோ வெளியில சொல்றாளோ அந்த அளவுக்கு நல்லதுன்னு… ஆனால் இப்போ…” என விக்கி கண்மணியின் மனநிலை பற்றி யோசித்துப் பேச
”அதெல்லாம் நான் பார்த்துப்பேண்டா… சொல்ல முடியலேன்னாலும் என்கிட்ட அதைக் வெளிக்காண்பிச்சுருவா… அவளுக்கு இந்த வேலை பிடிக்கும்டா… பொதுவாகவே அவ கஷ்டப்பட்றவங்களுக்கு அவளால முடிந்த அளவு உதவி பண்ணுவா… இப்போ அதிகாரத்தை கைல வச்சுட்டு பண்றா… தேவை இருக்கிற மக்களுக்கு அவளோட உதவிகள் போகும்… அரசுத் திட்டங்கள் எல்லாம் தேவையில்லாத இடத்துல போய் சேர்வதை கண்டிப்பா தடுப்பா… அவளுக்கு இந்த பதவி தேவையான ஒன்றுதான்… அதே நேரம்… அவளுக்கு எந்த பிரச்சனைனாலும் நான் பார்த்துப்பேன்…” எனும் போதே நாராயணன் வைதேகியோடு வருகை தந்திருக்க…
ரிஷியும் விக்கியும் தங்கள் பேச்சை நிறுத்தியவர்களாக… அவர்களிடம் சென்றிருந்தனர்…
---
தனது மாமனார் பெற்ற கௌரவத்தைக் குடும்ப அளவில் கொண்டாடும் பொருட்டு… ரிஷிதான் சிறிய விருந்து ஏற்பாடு செய்திருந்தான்… அதற்குத்தான் அனைவரையுமே அழைத்திருந்தான்…
நாராயணன் குடும்பம் முதல் வேங்கட ராகவன் குடும்பம் வரை அழைப்பு விடுத்திருக்க… அனைவரும் அங்கு ஒன்று கூடி இருந்தனர்…
மகிளா அவள் குடும்பம் அவள் சொந்தம் என ஐக்கியமாகி விட… ரிஷி குடும்பத்தில் பெரிய விசேசங்கள் என்றால் மட்டுமே அவளது பிரசன்னம் இருக்கும்…
அதே போல அர்ஜூனும் இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியா வருவதில்லை… அவனின் வாழ்க்கை வட்டமுமும் அவன் மனைவி அவனது பெண் குழந்தை என அமெரிக்க வாழ்க்கையில் அடங்கிவிட்டது…
அதே நேரம்… கண்மணி… நாராயணன்-வைதேகி… இவர்களிடம் மட்டுமே அவன் தொடர்பும் சுருங்கியிருந்தது… ரிஷியே நாராயணன்… நட்ராஜ் இருவரின் தொழில் தொடர்புகளையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தால்… இந்தியாவை சார்ந்த தொழில்களில் அர்ஜூன் தலையிடுவதில்லை…
அதே போல ரிஷி-அர்ஜூன் இருவரும் தொழில் சம்பந்தமாக பேசிக் கொள்வதோடு… மற்றபடி அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த விதமான குறுக்கீடும் ஏற்படுத்திக் கொள்வதில்லை…
ரிஷியை அர்ஜூன் என்று முழுமையாக நம்பினானோ… அன்றே அவன் கண்மணி வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகி இருந்தான்… நிவேதாவுக்கு உண்மையாக வாழவும் ஆரம்பித்திருந்தான்… அவளுக்காகவே அவள் காதலுக்காகவே வாழ்க்கையை வாழ ஆரம்பித்தவன்… சந்தோசமாக தன் குடும்ப வாழ்க்கையில் பூரணமும் அடைந்திருந்தான்…
---
இங்கு வெகுநாட்களுக்குப் பிறகு… குடும்பங்கள் ஒன்றாகக் கூடியிருக்க… கண்மணி ரிதன்யா ரித்விகா இவர்கள் மூவர் கூட்டணியிலும்… குழந்தைகளின் ஆரவாரத்திலும் அங்கு கலகலப்பு மட்டுமே…
நட்ராஜின் தந்தையும் தாயும் கண்மணி இல்லத்திலேயே வந்து தங்கி விட்டனர்..… கண்மணி-கந்தம்மாள் இடையே இப்போதெல்லாம் வாக்குவாதங்கள் இல்லை… மாறாக கந்தம்மாளுக்கும் பவித்ரன் – சாதனா இவர்களுக்கிடையே மட்டும் தான் இப்போதெல்லாம் சண்டை பறக்கும்…
“ஏன் எங்க கண்மணியைத் திட்ற கெழவி…. ”
“நீங்க அவ பேசுறதைக் கேட்க மாட்டேங்கறீங்களே ஏன்… எப்போ பார்த்தாலும் போட்டியாவே பேசிட்டு இருக்கீங்க… ஒழுங்கா அவ என்ன சொல்றாளோ அதைக் கேளுங்க”
“எங்க மணி என்ன பேசினாலும் அது கரெக்டாத்தான் இருக்கும்… அவ ஒருத்தவங்களைத் திட்டினாலும் அது காரணமாத்தான் இருக்கும்” என்று கண்மணிக்கு சார்பாகப் பேசி வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள் இருவரும்
“புள்ளையா பெத்து வச்சுருக்கா… பிறக்கும் போது உள்ளங்கை அளவுக்கு கூட இல்லை… ஆத்தாவைப் பேசுனா பீரங்கி சுட்ற மாதிரி பேச வந்துருதுங்க… அப்படியே ஆத்தா மாதிரியே… விட்டுக் கொடுக்குதுங்களா பாரு இலட்சுமி… அப்படி வளர்த்து வச்சிருக்கா… ஊர் நியாயம் எல்லாம் பேசுதுங்க… மரியாதை மட்டும் வரலை… அவ ஆத்தாகாரியும் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கா… ஆனா மரியாதையை மட்டும் சொல்லிக் கொடுக்கலை.. என்ன வளர்ப்போ… என்ன செல்லமோ… ரிசிக்கண்ணாவாம்… கண்மணியாம்… பேர் சொல்லிக் கூப்பிடுதுங்க ரெண்டும்… அம்மா அப்பான்னு வாயில வருதா… அப்படியே வந்தாலும் அது கூட ஸ்ஸூடைல… மாம்மா, பப்பானு இங்க்லீஸ்காரனுங்க புள்ளை மாதிரி“
எனும் போதே இலட்சுமி அவரிடம்
“நம்மை மரியாதையா கூப்பிடறாங்களே… அது வரைல சந்தோதசம்னு போக வேண்டியதுதான் சம்பந்தி… கண்மணி ரிஷியை எப்படி கூப்பிடறாளோ அப்படியே இதுங்களும் கூப்பிடுது… அவன் அவளைக் கூப்பிடற மாதிரியே கண்மணியை அவ இவன்னு சொல்லுதுங்க… என்ன பண்றது… பெரியவங்களானா தானா மாறிருவாங்கன்னு கண்மணியே சொல்லிட்டாள்ள… விடுங்க… அவங்களே கவலைப்படலை… நாம எதுக்கு கவலைப்படனும்” எனும் போதே
“கண்மணி… இங்க வாயேன்… இதுக்கு என்ன அர்த்தம்… இந்த ஸ்டோரில இதுக்கு என்ன மீனிங்… இது இல்லைதானே… ரிதன்யா தப்பா சொல்லிக் கொடுக்கிறா” சாதனா அழைத்திருக்க… கண்மணியும் மகள் அழைத்தவுடன் அங்கு சென்றிருக்க…
ரிதன்யா இப்போது… “நான் சொல்றதுதான் சரி…” எனும் போதே
“எங்க அம்மா சொல்றதுதான் சரி… அதைக் கேளுங்க… எங்க அம்மா சொன்னா எப்போதுமே சரியாத்தான் இருக்கும்… நீ சொல்லு கண்மணி” ரிதன்யாவை அடக்கி இருக்க
இப்போது ரித்விகா… தன் அக்காவிடம் திரும்பினாள்… ரிதன்யா கண்மணியையும் ரித்விகாவையும் முறைக்க
“பொறுமை… பொறுமை… எங்க சதுவும் விதுவும்… அவங்க அம்மாக்கு ஜால்ரா அடிக்கிறதை விதமா விதமா காட்டவா… இப்போ பாரு…
“டேய் விது… இன்னைக்கு பிரியாணி எப்படி இருந்துச்சு சொல்லு…”
“நல்லா இருந்துச்சு… ஆனால் எங்க மணி செய்றதுதான் பெஸ்ட்…” கண்மணி வாயை மூடிக் கொண்டு சிரிக்க… ரிதன்யாவோ பொங்கி இருந்தாள்…
“சாப்பிடும் போது ஒரு வாய் கூட விடாமல் சாப்பிட்டுட்டு…. என்ன பேச்சு பேசுதுங்க பாருங்க அண்ணி…” எனும் போதே
“ரிது… இதை விட இன்னொரு ஒரு பிட்டு இருக்கு… அதைக் கேளு” என்றபடி… ரித்விகா… சாதனாவை தன் மடியில் வைத்தவளாக…
”உங்க அம்மா அழகா ரிதன்யா அத்தை அழகா சொல்லு”
“எங்கம்மா தான் அழகு…” சாதனா வேகமாகச் சொல்ல…
“சரி… உங்கம்மா அழகா… “ என்றபடி… தனது அலைபேசியில் இருந்த நடிகையான உலக அழகியின் புகைப்படத்தையும் காட்டி இருக்க…
“எங்கம்மாதா தான் சோ பியூட்டிஃபுல்… அவ்ளோ அழகு… என்ன கண்மணி… அப்படித்தானே…. ரிஷிக்கண்ணா கூட அப்படித்தானே சொல்லுவாங்க… எங்க அம்மாவைக் கண்ணு வைக்காதீங்க” என்றபடி தன் அன்னையிடம் தாவியவள்… அவள் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் பதித்திருக்க… அடுத்த நொடி பவித்ரனும் அவளிடம் தாவி இருக்க… இருவரின் முத்த மழையிலும் கண்மணி நொடியில் நனைந்திருந்தாள்…
ரிதன்யா இப்போது…
“அது எப்படி அண்ணி… எங்க அண்ணாதான் அப்படின்னா… இதுங்களும் உங்க மேல இப்படி வெறித்தனமான பாசமா இருக்குதுங்க… “ ரிதன்யா வாய் திறந்து கேட்டே விட…
கண்மணி அவளிடம் ஏதும் சொல்லவில்லை… மாறாக தன் குழந்தைகளிடம் அழுத்தமாக இதழ் பதித்திருக்க… அவர்களும் அதே வேகத்தில் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவர்களாக
“லவ்யூ மாம்மா…” இருவருமே அவளைக் கட்டிக் கொள்ள… புன்னகையுடன் தங்கள் குழந்தைகளுடன் அங்கிருந்து கடந்திருந்தாள் கண்மணி
தன் தாய் பவித்ராவிடமிருந்து தனக்கு கிடைக்காததை எல்லாம்… தன் மக்களுக்கு வாறி வழங்கியவள்… அவர்களிடமிருந்தே இழந்த தன் தாய்பாசத்தையும் பெற்றிருந்தாள் கண்மணி என வார்த்தைகளில் விவரிக்க வேண்டுமா என்ன… பார்ப்பவர்கள் அனைவருக்குமே அது தெள்ளத் தெளிவாக விளங்கும் ஒன்று…
---
அனைவருக் வரவேற்பறையில் பேசிக் கொண்டிருக்க… தொலைக்காட்சியிலோ அமைச்சரவை மாற்றம்… புதிய தொழிதுறை அமைச்சராக… **** நாளை ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பார்… என வேறொரு முக்கிய ஆளுங்கட்சி வேட்பாளர் பெயர் போடப்பட்டிருக்க..
கண்மணியை அனைவரும் பார்க்க… அவளோ ரிஷியைப் பார்த்தாள் கேள்விக் குறியோடு…
விக்கி ரிஷியின் அருகே வந்தவனாக…
“என்னடா… என்ன பண்ணி வச்ச… நீ உன் பொண்டாட்டிகூட ஈவ்னிங் எஸ்கேப் ஆனபோதே நெனச்சேன்…. என்னமோ நடந்திருக்குனு…”
“அந்த ஆளு… என் ஆளு லைன்ல குறுக்க வந்தான்…. அதான் நாம ஏதாவது பண்ணனும்தானே… அதுக்கு முன்னால அவன் இருக்கிற இடத்தை மாத்தனுமே… இப்போதைக்கு அதை மட்டும் பண்ணிருக்கேன்… இனிதான் இருக்கு அவனுக்கு… ”
விக்கி… வித்தியாசமாகப் பார்க்க… அந்தப் பார்வையில் யோசனையுடன் கலந்த கவலையுமே இருக்க
“என்ன மச்சான் பார்க்கிற… நீ நண்பனா ஆகிட்ட… ரிதன்யா என் தங்கச்சியா ஆகிட்டா… அதுனால சேதாரத்தில இருந்து தப்புனீங்க… இல்லை…” அவனையுமறியாமல் விக்கியை நோக்கி ஆட்காட்டி விரல் உயர்ந்திருக்க… அவன் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் இப்போதும் இருக்க… எப்படியோ கண்களை மூடி நிதானத்திற்கு வந்தவன்
”ரிதன்யா பண்ணின தப்பை எல்லாம் கண்மணி கன்சீவா இருக்கும் போது… அம்மை போட்ருந்தப்போ அவளை கவனிச்சுகிட்டதுல எப்படியோ நான் சமாதானம் ஆகிட்டேன்தான்… ஆனாலும் எதையும் மறக்கல… “
விக்கியும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன்….
“நீ சொல்றதுலாம் புரியுதுடா… இவ்ளோ வெறித்தனம் ஏன்… அதுதாண்டா எனக்குப் புரியல… இது சரியே இல்லடா…” விக்கி அவனுக்கு அறிவுரை கூற ஆரம்பித்த போதே…. ரிஷி சட்டென்று இயல்புக்கு மாறியவனாக… புன்னகைத்தவனாக…
“அதெல்லாம் பார்த்துக்கலாம்டா… நீயும் மாமாவும் பிஸ்னஸ்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுங்க… நான் மத்ததெல்லாம் பார்த்துக்கிறேன்… “
“சாரிடா….” இப்போது விக்கி அவனிடம் மெதுவான குரலில் சொல்ல…
“ஏண்டா… இன்னும் எத்தனை வருசத்துக்கு இந்த சாரிய தூக்கிட்டு வருவ… எத்தனை தடவை சொல்றது… அவ என் மேல கோபமா தள்ளி இருந்ததுக்கு நீ காரணம் இல்லைனு… அதை சாக்கா வச்சுட்டு என்கிட்ட பேசிருக்கான்னு உனக்கு புரியலையா… புரிஞ்சுக்க ட்ரை பண்ணலையா…”
“ஹ்ம்மா எல்லாம் புரியுது… ஆனால் கண்மணி மத்தவங்க அளவுக்கு என்கிட்ட மட்டுமே பேச மாட்டேங்கிறாளே… வீட்டுக்கு மாப்பிள்ளைன்ற மரியாதை அந்த அளவுக்கு மட்டுமே பேசுறா, பழகுறா… அப்போ என் மேல இருக்கிற கோபம் அது போகலைனு தானே அர்த்தம்”
“டேய்… நான் தான் சொல்லிருக்கேனே… சத்யா… எங்க மாமா இவங்கள்ளாம் என்கிட்ட நெருக்கமா இருக்காங்க… அவங்ககிட்டலாம் கண்மணி பேசாமல் இருக்காளா.. கண்மணிக்கு தெரியாதது கூட சத்யாக்கு தெரியும்… அதுக்காக சத்யாகிட்ட பேசாமல் இருக்காளா…”
“அப்போ நான் மட்டும் உன்னை கொத்தி எடுத்துட்டுப் போயிருவேனாடா… ரொம்பப் பண்றாடா உன் பொண்டாட்டி…” விக்கி கொந்தளித்துப் பேச
ரிஷியோ சிரித்தவனாக…
“அது ஒரு மாதிரி பொசஸிவ்னெஸ்டா… சத்யா… அவங்கப்பா… வேலன், தினா… இவங்க கூடலாம் என்னோட ரிலேஷன்ஷிப் நெருக்கமானதுதான்… ஆனால் உன் கூட இருக்கிற நட்புல என்னோட எமோஷனலும் இருக்குதானே… அதுதான் அவளுக்கு லைட்டா உன் மேல பொறாமை… என்னதான் என்னை நீ அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு போனாலும்… மறுபடியும் நீ வந்து நின்னப்போ நண்பான்னு கட்டிபிடிச்சேன் பாரு… அதுலயே அவளுக்குத் தெரியும்… நீ எனக்கு எந்த அளவுக்கு க்ளோஸ்னு… “
இப்போது விக்கி கண்மணி விசயத்தை விட்டவனாக…
“சாரிடா மச்சான்… அன்னைக்கு நான் ஏதோ ஒரு ஆர்வத்துல… தாத்தா ஓகே சொல்லிட்டார்னு உன்னை நேர்ல பார்த்து சொல்லாமல் போனது தப்புதாண்டா… அப்போ புரியலைடா… அது உன்னை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்னு… ச்சேசேய் இப்போ நினைக்கும் போது கூட எனக்கு என்னை நினைத்தால் அசிங்கமா இருக்குடா… எவ்ளோ செல்ஃபிஷா இருந்திருக்கேன்னு…”
ரிஷியின் கண்களில் இலேசான ஈரம் படர்ந்திருக்க… தன் இருக்கையில் பின்னால் சாய்ந்தான்
“ஒரு மாதிரி யப்பா.. சொல்லவே முடியாத ஃபீல்டா… அதுக்கப்புறம் அதை விட அதிகமான விசயங்கள் நடந்திருந்தாலும்… முதன் முதலா… மனசுல வந்த வலி… நீ என்னைப் பிரிந்த வலிதாண்டா… ஒரே நாள்ள உனக்கும் எனக்கும் அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சிருச்சுனு… அந்த வீடு… அந்த தனிமை சொன்னுச்சு… ரெண்டு வருச நட்பு இவ்ளோதானான்னு… நீ என்னை எந்த இடத்துல வச்சிருந்தேன்னு நினைச்சப்போ “ ரிஷி சில நொடிகள் அன்றைய நினைவுகளுக்கே சென்றவன்… பின் தொடர்ந்தான்…
”அந்த வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் இனிமே அனாதைனு நினைக்கிற அளவு ஃபீல் பண்ணேண்டா… ஆனால் எனக்கு அப்போ தெரியலை…. இன்னும் கொஞ்ச நாள்ள உண்மையிலேயே எல்லாம் இழந்து அனாதையா நிக்கப் போறேன்னு….” ரிஷியின் கண்கள் அவனது அப்பா நினைவில் கலங்க ஆரம்பித்த போதிலும் சட்டென்று மாறியவனாக… அமைதியாக இருக்க…
“டேய் மச்சான்… “ விக்கி தழுதழுத்த போதே
“ஆனால்… ஒண்ணு மட்டும் புரிஞ்சதுடா… மத்த ஃப்ரெண்ட்ஸ்க்கும் உனக்கும் உள்ள வித்திசாயம்… என்கிட்ட நீ சந்தோசத்தை… நட்பை மட்டும் ஷேர் பண்ணலை… கோபமா என்கிட்ட பேசினாலும்… என்னோட பழக்க வழக்கங்கள் பிடிக்கலைனாலும்… என்னோட குணங்கள் உனக்கு நேர் மாறா இருந்தாலும்… என்னை விட்டுக் கொடுக்காம இருப்பியே… என்னை எப்படிலாம் பார்த்துக்கிட்டேனு எனக்குத் தெரியும்டா… உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கும் தெரியும்டா…. அதேபோல இன்னொரு முடிவும் பண்ணினேன்… இனிமேல எவனையும் உன்னை வச்ச இடத்துல வைக்கக் கூடாதுனு…”
“இது எல்லாவற்றையும் விட… தனிமையை முதன் முதலா எனக்கு அறிமுகப்படுத்தினது நீதாண்டா மாப்பிள்ளை… அங்க இருந்து… “ என்று சொன்னவன் சன்னல் வழியே தான் இருந்த ’கண்மணி’ இல்லத்தின் மாடி அறையைக் காட்டியவனாக…
“இதோ இங்க வரை அந்தத் தனிமை நீண்டதுதான் கொடுமை…”
“சொல்லப் போனால் நானே எனக்குத் தண்டனை கொடுத்துக்கிட்டேண்டா… என்னை அந்தத் தண்டனைல இருந்து மீட்கிறதுக்கு எனக்கு வழியும் தெரியலை… அப்பா… அம்மா… குடும்பம்… பாசம்… எல்லாத்தையும் விட்டு விலகி… மூழ்கிட்டு இருந்தேன்…. திரும்ப பழைய இடத்துக்கு வர நினைச்சாலுமே… என்னால முடியலைடா…”
“அப்படி மூழ்கிட்டு இருந்தவனை நம்பி ஒருத்தி வந்தாடா… வந்தாளா… அப்படிக் கூட சொல்ல முடியாது… அவளைப் பிடிச்சு இழுத்தவனே நான்தானே…. மூச்சு திணறி மூழ்கிட்டு இருந்த என்னை கைப்பிடிச்சு கரை சேர்த்தா… அவ பிடிவாதக்காரிதான்… கோபக்காரிதான்… சண்டைக்காரிதான்… ஆனால் நான் என்ன கோபப்பட்டாலும்… பிடிவாதம் பிடிச்சாலும்… சண்டை போட்டாலும்… இந்த உள்ளங்கை உள்ளங்கைனு சொல்வாங்களே… அதுல வச்சு தாங்குனாடா… எனக்கு நீயெல்லாம் முக்கியம் இல்லை… என் குடும்பம் … என் தொழில்… என் பழி வாங்கும் வெறி… இதுதான் எனக்கு முக்கியம்னு அவளை தள்ளி வச்சுதான் வாழ்ந்தேன்… எல்லோரும் அவளை என்ன சொன்னாங்க தெரியுமா… இந்தக் கண்மணி ஒரு பைத்தியக்காரி… இளிச்சவாயி… இவனைப் போய்… இவ அருமை தெரியாதவன் கிட்ட இவ்ளோ பாசத்தைக் கொட்றான்னு….”
”அவளுக்கும் தெரியும்… அவளை எல்லோரும் எப்படி பேசுறாங்கன்னு… “
“காதல்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு… நமக்கு பிடிச்சவங்க கிட்ட ஐ லவ் யூ சொல்றதும்.. அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பொருள் வாங்கித்தரதும்னா… நானும் அதைத்தான் காதல்னு நெனச்சேன்… ஆனால் அது காதல் இல்லைடா… கண்மணி எனக்குக் காதலைக் காட்டினா…”
“எனக்கு நிம்மதியைத் தர்றது எதெல்லாமோ… அதைத் தேடித்தேடி தந்தா… என் அம்மாவைப் பார்த்துகிட்டா…. ரிதன்யாவை என் தங்கச்சின்னு அவ பண்றதையெல்லாம்… பேசுறதை எல்லாம் பொறுத்துகிட்டா… ரித்விகாவை அவ பொண்ணு மாதிரி நடத்துனா… என்னோட உலகம் எதுன்னு அவளுக்குத் தெரியும்…. அந்த உலகத்தில நிம்மதியைக் கொடுத்தா… கடைசியில அந்த உலகமா அவளே மாறிட்டா…”
“என் கண்மணிடா… எனக்காக பிறந்தவடா… எனக்காகப் பிறந்தவளுக்கு எவ்ளோ கஷ்டம்… யாருக்காக அதை எல்லாம் கடந்து வந்தா… எனக்காக மட்டுமே… அப்போ அவ… அவ காதல்… அவ சந்தோசம்… எல்லாம் எனக்கு எவ்ளோ முக்கியம்… அதுல ஒரு சின்ன சறுக்கல் வந்தால் கூட நான் இப்படித்தான் ஆவேன்… அவளுக்கு எதிரா எவனாவது வந்தால் துவம்சம் பண்ணுவேன் தான்… அடிச்சு தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன்தான்…”
“நான் இப்படித்தான்… இதுதான் நான்… கண்மணியோட ரிஷிக்கண்ணா… அவன் இப்படித்தான் ஆக்ரோஷமா இருப்பான்…”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
”ரிஷிக்கண்ணா… விக்கி மாமா… உங்க ரெண்டு பேரையும் அங்க தேடிட்டு இருக்காங்க…” பவித்ரன் இருவரையும் அழைக்க… இருவரும் வரவேற்பறைக்கு வந்திருக்க…
அங்கு அனைவரும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தனர்..
ஒரு வழியாக வந்த அனைவரும்… கிளம்பிச் சென்றிருந்தனர்… நட்ராஜ் வழக்கம் போல தன் மனைவியோடு தான் வாழ்ந்த நினைவுச்சின்னமான கண்மணி இல்ல வீட்டிற்குச் சென்று விட… இலட்சுமியும் உறங்கச் சென்று விட…. ரித்விகாவோ அவள் அறைக்குச் சென்றிருந்தாள்…
மணி இரவு பத்தாகி இருக்க…
“குட்டீஸ்ங்களா… தூங்கப் போகலாம்… பத்து நிமிசம் தான்… மொபைல் அளோவ்ட்… அதுக்கப்புறம் வச்சுறனும் ஓகேவா… ” கண்மணி தன் மக்களைத் உறங்குவதற்கு ஆயத்தபடுத்தி இருக்க
“ம்ஹூம்ம்… கண்மணி… இன்னைக்கு மொபைல் வேண்டாம்… ரிஷிக்கண்ணா கூட நாங்க டெண்ட் ஹவுஸ் கட்டி விளையாடுவோம்… சீக்கிரம் பால் கொண்டுவா கண்மணி… நாங்க விளையாடனும்… நீ லேப்டாப்பை எடுத்துகிட்டு உன் ரூம்ல போய் கதை எழுதிக்கோ…” சாதனா வேகமாகச் சொல்ல
“அடேங்கப்பா… அப்பாவைப் பார்த்ததும்… என்ன ஒரு தாராளக் குணம்…. சரிங்க மேடம்…” எனும் போதே…
“கண்மணி… நாங்க உனக்கு கிஃப்ட் பண்ணின ஸ்டோரி எங்க…” சாதனா கேட்க…
கண்மணி தன் மொபைலின் பின்புறத்தைக் காட்ட…
“அதை எடுத்துதா… ரிஷிக்கண்ணாகிட்ட காட்டனும்…” சாதனா கை நீட்ட… கண்மணியும் எடுத்துக் கொடுத்திருக்க… மழலைகள் அந்தக் காகிதச் சுருளைத் தங்கள் தந்தையிடம் காட்டினர்…
“ரிஷி கண்மணி… என ஆங்கிலத்தில் முதல் பக்கத்தில் ஆரம்பித்து… கடைசிப் பக்கத்தில் சாதனா… பவித்ரன்… முடித்திருக்க அதோடு அங்கும் இங்குமாக படம் வரைந்திருக்க… “ ரிஷி புரியாமல் தன் மகளைப் பார்க்க
“உங்க அப்பா கொஞ்சம் டியூப்லைட்… விளக்கமா விளக்கனும்… சொல்லுங்க… நான் பால் எடுத்துட்டு வர்றேன்… ரூம்க்கு போங்க” என்றபடி கண்மணி சமையலறைக்குள் சென்று விட…
“கொழுப்புடி உனக்கு…” ரிஷி மனைவியை வாய்க்குள் முணுமுணுத்தபடி தன் குழந்தைகளுடன் படுக்கையறைக்குச் சென்றான்.…
---
“ஹையோ ரிஷிக்கண்ணா… உங்களுக்கு இது கூடத் தெரியலையா… இது நான் அப்புறம் இது ’விது’… இது கண்மணி… அப்புறம் இது நீங்க ரிஷிக்கண்ணா… ’ஹேப்பி ஃபேமிலி’…. அடுத்து… இது என்ன தெரியுமா… எங்களோட பெர்த்டே செலிப்ரேஷன்… அடுத்து இது என்ன தெரியுமா… நாம ஜாலியா ட்ரிப் போறோம்… அடுத்து ’ஹேப்பி எண்ட்’ சாதனா சொல்லி முடித்திருக்க
“எப்புட்றா…. உங்கம்மா மூளை அப்டியெ இங்க ட்ரான்ஸ்ஃபெர் ஆகிருச்சா…”
ரிஷி பெருமையுடன் தன் மகளைப் பார்க்க… பவித்ரனோ வேகமாக
“அப்படி இல்ல ரிஷிக்கண்ணா… நீங்களும் அடிக்கடி இங்க இருக்க மாட்டிங்க… நானும் சதுவும் ஸ்கூலுக்கு போயிருவோம்… நாம யாருமே கண்மணி கூட இருக்க மாட்டோமே… கண்மணி மட்டும் தானே தனியா இருப்பா… எங்களுக்கு ஸ்கூல்ல எல்லாம் கண்மணி ஞாபகமாத்தான் இருக்கும்… ரிஷிக்கண்ணாவும் அவ பக்கத்துல இல்லை… நாமளும் இங்க வந்துட்டோம்… நம்ம கண்மணிக்கு துணையா யார் இருக்கான்னு…”
“ஏண்டா… எங்க அம்மா… அவ அப்பாலாம் இல்லையா… போலிஸ் பாதுகாப்பு வேற… அப்புறம் என்ன” ரிஷி கடுப்புடன் கேட்க
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது… நீங்க இல்லேல்ல… நாங்களும் இல்ல… நீங்கதானே சொல்லிருக்கீங்க… கண்மணியை ஒரு பெரிய மான்ஸ்டர் தொரத்தும்னு… நாம கொஞ்சம் அசந்தா அது கண்மணியைத் தூக்கிட்டு போயிரும்னு…”
“நம்ம சொன்ன மான்ஸ்டர் கதைக்கு இவ்ளோ எஃபெக்டா…” ரிஷி தன் மனதுக்குள்… நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது…
”சது எழுதினா… ஆனால் நான் ட்ரா பண்ணேன்…”
”எப்படி இருக்கு ரிஷிக்கண்ணா… சொல்லு ரிஷிக்கண்னா” அவனை ஆளுக்கு ஒரு புறம் பிடித்து உலுக்க ஆரம்பித்திருக்க
ரிஷிக்கு ஒருபக்கம் சந்தோசம்… பெருமை என்றாலும்… கண்மணியோடான அவனது காதலை விட… அவர்கள் பிள்ளைகளின் தாய்ப்பாசம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது கொஞ்சம் பொறாமையைக் கொடுத்ததுதான் இருந்தாலும் அதை எல்லாம் தகப்பனாக தள்ளி வைத்தவனாக…
“ஹ்ம்ம்… செமையா இருக்குடா… அம்மாக்கு மட்டும் தான் ஸ்டோரியா… உங்க அப்பாக்கு இந்த மாதிரி ஒரு ஸ்டோரி இல்லையே…” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ரிஷி கேட்க
“எழுதலாம்… ஆனால் மான்ஸ்டர்லாம் நீங்க கொல்வீங்களே… அதெல்லாம் எழுத எங்களுக்குத் தெரியாதே… ஒண்ணு பண்ணுங்க… நீங்க கண்மணிகிட்ட கேளுங்க… அவ சூப்பரா எழுதித் தருவா… ரித்வி… ரிதன்யாக்கெல்லாம் எழுதித் தர்றாளே…”
“ம்க்கும்… அவ ஸ்டோரியா… எனக்கா… “ கையெடுத்துக் கும்பிட்டவனாக
”அவ ஸ்டோரில நாம சிங்கிள் சீன்ல கூட வந்துறக் கூடாதுடா… அதுதான் நமக்கும்.. நம்ம உடம்புக்கும் மனசுக்கும் நல்லது… ”
“ஏன் அப்படி…” புரியாமல் அந்தக் குழந்தைகள் கேட்க…
“அதெல்லாம்… அப்படித்தான்…” என்றவன்…
“சரி சரி… நீங்க டெண்ட் ரெடி பண்ணுவீங்களாம்…. நான் போய்… உங்க அம்மாகிட்ட உங்களுக்கு பால் ரெடி ஆகியிருச்சான்னு பார்த்து வாங்கிட்டு வருவேனாம்…” என்று ரிஷி கண்மணியைத் தேடிக் கிளம்ப…
“ரிஷிக்கண்ணா… பால் நீங்களே வாங்கிட்டு வந்திருங்க… இதோ இந்த லேப்டாப்பையும் மணிகிட்ட எடுத்துக் கொடுத்திருங்க… அவ டைப் பண்ணட்டும்… நாம அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ” சாதனா சொல்ல…
“அப்புறம் மறக்காமல் சார்ஜும் போட்டு வைங்க…” பவித்ரன் முடித்திருக்க
“சரிங்க மேடம்… சரிங்க சார்… “ என்று தன் மக்களிடம் தலை ஆட்டியவன்…
“நல்லா ட்ரெயின் பண்ணி வச்சுருக்கா… அவளுக்கு ஏத்த மாதிரியே…“ வெளியேறியவன்… கண்மணியின் அலுவலக அறையில் அவளது மடிக்கணியை வைத்தவன்…. மறக்காமல் அதற்கு சார்ஜையும் போட்டவனாக… சமையலறைக்குச் சென்றான்…
--
வேகமாக சமையலறைக்கு வந்தவன்… அதன் வாசலுக்கு வந்த போதோ.. மெல்ல அடி எடுத்து பூனை நடை நடக்க ஆரம்பித்திருக்க…
இரண்டு அடி கூட ரிஷி எடுத்து வைத்திருக்க மாட்டான்…. அதற்குள்ளாகவே…
“என்ன… பூனை சைலண்டா எண்ட்ரி ஆகுது” கண்மணி அவன் புறம் திரும்பாமலேயே… கேட்க…
ரிஷி இப்போது சாதரணமாக நடக்க ஆரம்பித்தான்… அவள் அறியக்கூடாது என்று மெல்ல அடி எடுத்து வந்தவனைத்தான் திரும்பாமலேயெ அவன் மனைவி கண்டுபிடித்து விட்டாளே…
இப்போது சாதாரண நடையையும் வேக அடிகள் எடுத்து வைத்தவனாக… கண்மணியின் அருகே போயிருந்தான்…
கண்மணி அடுப்பில் இருந்த பாலைப் பார்த்திருக்க… இவனோ மேடையில் சாய்ந்து அவளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்… கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி…
பால் பொங்க ஆரம்பித்திருக்க… கண்மணி அடுப்பை குறைத்தவளாக ரிஷியைப் பார்க்க… அவனோ அவளை பார்வையாலேயே கபளீகரம் செய்து கொண்டிருக்க… கண்மணி மீண்டும் பாலைப் பார்த்தாள்… அடுப்பையும் அணைத்திருந்தாள்…
“என்னப்பா… ரெண்டு குழந்தைகளோட அப்பாவே… என்ன பார்வையே சரி இல்லையே…” பால் பாத்திரத்தை ஆற்றியபடியே… அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாகக் கேட்க…
”ஏன் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பான்னா… பொண்டாட்டியப் பார்க்கக் கூடாதா… இது என்ன புதுக்கதையா இருக்குடி…” ரிஷி நக்கலாகக் கேட்டபடியே அவளை நோக்கி வர…
“சூடான பால் முகத்தில் பட்டு… கணவனுக்கு முகமெங்கும் காயம்… இப்படி ஒரு நியூஸ் பேப்பர்ல வரனுமா பாஸ்…”
“ராட்சசி… என் முகத்துலேயே பால் ஊத்திருவியா நீ” அவளை வேகமாக இழுத்து அணைத்திருக்க… இப்போது கண்மணியின் கைகளின் பிடி தளர்ந்திருக்க… பால் பாத்திரமும் ஆடி பால் அலம்பியிருக்க… ரிஷி அவளைப் பிடித்த வேகத்திலேயே அவளை விட்டு விலகியிருக்க
“இதை இதைத்தான் சொன்னேன்… நான் ஊத்துவேன்னு சொன்னேனா.. இப்போ புரியுதா... தள்ளிக்கங்க” இயல்பாகப் பேசியபடியே… பாலை இரு குவளைகளில் மாற்றி எடுத்தபடி திரும்பியிருக்க…
இப்போது ரிஷி… கண்மணியின் பேச்சைக் கேட்டபடியே… அவளை அங்கேயே வைத்து சிறை செய்திருந்தான்… தன் இரு கைகளின் துணையால் அணை கட்டியபடியே….
கண்மணிக்கும் விலக முடியாத நிலை… இரு கைகளிலும் பால் குவளைகள் இருக்க… விலக முடியாத நிலைதான்… ஆனாலும் ரிஷியை அலட்சியமாகப் பார்க்க… ரிஷியின் புருவமோ அவளை நோக்கி உயர்ந்தது… அனுமதி வேண்டி…
“என்ன பீடிகைலாம் பலமா இருக்கு… எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்ளோ நடவடிக்கை ரிஷிக்கண்ணா” கண்மணியும் இப்போது அடுப்பு மேடையில் இலகுவாகச் சாய்ந்தபடியே கேட்க…
“இந்த தெனாவெட்டுதாண்டி… உன்கிட்ட இருக்கிற ப்ளஸ்ஸே… பேசிக்கா இந்தப் பொண்ணுங்க எல்லாம் இந்த சீன்ல வெட்கப்படுவாங்க… கன்னம் சிவக்கும்… அப்புறம் கட்டை விரல்லாம் கோலம் போடும்… ஆனால் என் கண்மணிக்கு…” எனும்போதே
“ஆமாம் இவர் போய் ஒவ்வொரு பொண்ணாப் பார்த்துட்டு வந்தவரு…… மேரேஜ் ஆகி ஏழு வருசம் ஆகிருச்சு… இதுல வெட்கம் வேற… அடப் போய்யா…” சொன்ன கண்மணி அடுத்த நிமிடம் அவன் சிறைபிடித்த கரங்களுக்கடியில் குனிந்து… அவனை விட்டு… அவன் கைபிடிச்சிறையை விட்டு வெளியேறி இருக்க… ரிஷி அப்படி எல்லாம் அவளை விட்டு விடுவானா என்ன….
மீண்டும் அவளை தன் கைக்குள் கொண்டு வந்தவனாக…
“பேசிட்டே இருக்கும் போது போனா எப்படி பொண்டாட்டி… நான் உன்னைத் தொடாமல்… விரல் கூடப் படாலம் எவ்ளோ டீசண்ட்டா பேசிட்டு இருந்தேன்… இப்போ இது தேவையா…” கண்மணி அவனிடம் அவஸ்தையாக நெளிந்திருக்க…
“ரித்வி… கீழதான் இருக்கா… படிச்சுட்டு இருக்கா…. அவளும் பால் கேட்டா… அவ தேடி வரப் போறா ரிஷி… கை எடுங்க…”
“அப்போ நான் சொல்ற டீலுக்கு ஓகே சொல்லு…”
”டீல் கூட அப்புறமா சொல்றேன்… ஓகேன்னு மட்டும் சொல்லு…” ரிஷி அவளை வம்படியாக ஓகே சொல்லக் கேட்க
“டீல் என்னன்னு சொல்லுங்க…”
“அது ஒரு நாலு பக்கம் இருக்கும்… அது சொல்லி முடிக்கிறதுக்குள்ள ரித்வி வந்துருவா பரவாயில்லையா…”
கடுப்பாக முறைத்தவள்… அமைதியாகவே நிற்க
“சரி…” என்றவன் அவளுக்கு அவனுக்குமான இடைவெளியைக் குறைத்து… நெருக்கம் கூட்டியவனாக… அவள் காது மடலில்… உதடுகள் உரசியபடியே…
“நாலு பக்க டீல்… யோசிச்சுக்க… சொல்லி முடிக்கிறதுக்குள்ள… ஒரு நாப்பது அம்பது… கிஸ்.. டச்…..எக்சட்ரா… எக்சட்ரா…. எல்லாம் இருக்கும்… பார்த்துக்க… புத்திசாலிப் பொண்ணா ஓகே சொல்லிரு…“ அவனின் கிசுகிசுத்த குரலில்…. சூழ்நிலை உணர்ந்தவளாக அடுத்த நொடியே
“ஓகே ஓகே…” படபடத்த இதய ஒலி அவன் காதுகளை அடையும் முன்னே… சட்டென்று சொல்லி விட… இப்போது சிரித்தபடியே ரிஷியும் அவளை விட்டிருக்க… அதே நேரம் ரித்விகாவும் வந்திருக்க…
“அண்ணி… எனக்கு மில்க்…” என்றபடியே அண்ணன்-அண்ணி அருகேயும் வந்திருக்க…
“இதோ இங்க இருக்கு ரித்வி… எடுத்துக்கோ” எனக் கண்மணி ரித்விகாவுக்கு பால் எடுத்து வைத்திருந்த குவளை இருந்த இடத்தைக் காட்ட… ரித்விகாவும் எடுத்துக் கொண்டபடியே…. தனது அறைக்கு செல்ல திரும்பியவள்… சமையலறையின் வாசல் வரை சென்று மீண்டும் திரும்ப… நல்ல வேளை ரிஷி சமத்தாக அவன் இடத்திலேயே நின்றிருந்தான்…
அதனால் கண்மணி-ரிஷி இருவரும் ரித்விகாவிடமிருந்து தப்பிதிருந்தனர்…
“அண்ணி… நீங்க உங்க ரூம்ல எழுதப் போறீங்களா…”
கண்மணி பதில் சொல்லும் முன்னேயே ரிஷி… கண்களால் கண்மணியை மிரட்டி இருக்க… ரித்விகா தொடர்ந்தாள்…
”இல்லை ஏன் கேட்கிறேன்னா… நானும் நைட் படிக்கப் போறேன்… ரெண்டு ரூம்ல எதுக்கு வீணா லைட்… ஏசி… அதுக்குத்தான் கேட்டேன்” கண்மணியின் மறு பிம்பமாக இருந்த ரித்விகாவிடம் இப்போது கண்மணிதான் தடுமாறினாள்
“எழுத… ” எனக் கண்மணி ஆரம்பித்த போதே ரிஷி கண்மணியை முறைத்திருக்க…
”எ… எ எழுதுனாலும் எழுதுவேன்… ஆனால் டவுட்…” எனும் போதே
“அண்ணி அடுத்த எபிசோட் எப்போ தருவீங்கன்னு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் நானும் ரிதன்யாவும்… நீங்க பாட்டுக்கு… அமைச்சர்… அம்மா ரோல்னு சுத்திட்டு இருக்கீங்க… செம்ம சஸ்பென்ஸ்ல நிறுத்தியிருக்கீங்க… கொஞ்சம் பார்த்து பண்ணுங்க…”
”ஏன் அவளுக்கு அமைச்சர்… அம்மா… மருமகள்… அண்ணி ரோல் மட்டும் தானா… பொண்டாட்டினு ஒரு ரோல் இருக்கே… அதுக்கெல்லாம் மரியாதையே இருக்காதா… நான்லாம் சீன்லயே வரலை…”
“நீங்க எதுக்கு அண்ணிய டிஸ்டர்ப் பண்ணப் போறிங்க… அடப் போங்கன்னா…” என ரிஷியிடம் அலட்சியமாக ரித்விகா சொல்லிய போதே…
“நீயும் ரிதுவும் இவ ஆர்ட்டிக்கிள் தானே படிக்கிறீங்க… அப்போ இப்படித்தான் பேசுவீங்க” ரிஷி ரித்விகாவை ஓட்டியபடியே… வேண்டுமென்றே கண்மணியை வாற…
“ஹலோ… நானும் ரிதுவும் தான் அண்ணியோட ஃபர்ஸ்ட் ரீடர்ஸ்… அண்ட் ஃபேன்ஸ்… என்ன தெரியும் உங்களுக்கு… கழுதைக்கு தெரியுமா…. கற்பூர வாசனை…”
ரித்விகா கடுப்பு பாதி பெருமை பாதி எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“அது சரி…” ரிஷி தலையாட்டியவனாக மனைவியிடம் குனிந்தவன்…
“புருசனும் பொண்டாட்டியும் தனியா கிச்சன்ல இருக்கும் போது… இவ்ளோ நேரம் என் தங்கை இருக்காளே… இதுலருந்தே தெரியுதே… உன் கதை எப்படி இருக்கும்னு… என் தங்கச்சி எவ்ளோ அப்பாவியா இருக்கா” கண்மணியின் காதுக்குள் முணுமுணுக்க…
”அண்ணா… நான் லிப் ரீடிங் பண்ணி… நீ என்ன சொன்னேன்னு நான் கேட்ச் பண்ணிட்டேனே… “
“அண்ணி… நாம நம்ம கதைல ஹீரோக்கு வைக்கிற ஆப்பை அண்ணனுக்கு இறக்கிறலாமா…” கண்மணி வாய்க்குள்ளாகவே சிரிப்பை அடக்கி இருக்க…
ரிஷி இப்போது… கையெடுத்து கும்பிட்டவனாக…
“தெரியுதும்மா… தெரியுது… நீங்க ரெண்டு பேரும் சும்மாவா என்ன… பார்ட்னர்ஸ் இன் கிரைம்ல… ரவுடினு நெத்தில பேர் ஒட்டலை ரெண்டு பேருக்கும் அவ்ளோ தான்…”
“அந்தப் பாலைக் கொடு…. நான் என் புள்ளைங்களுக்கு கொடுத்துக்கிறேன்…” என ரிஷி கிளம்பியிருக்க…
ரித்விகா அவனிடம்
“யார்கிட்ட… அண்ணி ஸ்டோரில நெறைய வச்சுருக்காங்க… ஒவ்வொண்ணா எடுத்து விட்டோம்னு வச்சுக்க தாங்க மாட்டண்ணா… போனா போகுதுனு நாங்க நல்ல பிள்ளையா இருக்கோம்… பிழச்சுப் போங்க…”
தங்கையை முறைக்க முடியாமல்…
”நீ ரூமுக்கு வாடி அங்க இருக்கு உனக்கு…” உதட்டசைவில் மனைவிக்கு எச்சரிக்கை செய்திருக்க
”நாங்களும் வளர்ந்துட்டோமாக்கும்… எங்களுக்கும் எல்லாம் தெரியுமாக்கும்….” ரித்விகா அண்ணனை விட்டாளா என்ன…
ஆனால் இப்போது ரிஷி நின்றிருந்தான்…
”நீ ஒழுங்கா படிக்கிறியா…” இப்போது ரித்விகாவிடம் ரிஷி அண்ணனாக மாறி இருக்க
”ஃபர்ஸ்ட்… அவ இப்போ என்ன இயர் படிக்கிறான்னு சொல்லுங்க பார்ப்போம்” கண்மணி இப்போது ரித்விகாவோடு கூட்டு சேர்ந்து கணவனுக்கு எதிராக அவனைப் பார்க்க…
ரிஷி யோசனை பாவத்தோடு கணக்கீட்டுக்குப் போக
“டக்குனு பாஸ்…”
“சீக்கிரம் சொல்லுண்ணா”
கண்மணியும்… ரித்விகாவும் அவனை அவசரப் படுத்த
“ஹவுஸ் சர்ஜனா போயிட்டு இருக்கிற டாக்டர் தங்கச்சிகிட்ட எப்படி படிக்கிறேன்னு கேட்டால் என்ன அர்த்தம்ண்ணா….” ரித்விகா எரிச்சலாகக் கேட்டாலும்… கொஞ்சம் அதில் கோபமும் இருக்க
ரிஷி இப்போது….
“நாம எப்போதுமே கொஞ்சம் கால்குலேஷன்ல வீக் தங்கச்சி… அதான்… மத்தபடி நான் ஒண்ணும் அக்கறை இல்லாமல்லாம் இல்லைடா பாப்பு…”
“நம்பிரு ரித்வி… ” கண்மணி ரித்விகாவிடம் நக்கலாகச் சொல்ல…
”ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்க தானே… நான் கிளம்புறேன்” ரிஷி அங்கிருந்து இடத்தைக் காலி செய்திருக்க…
கண்மணி ரித்விகாவிடம் பேச ஆரம்பித்தாள்……
“இல்ல ரித்வி… இன்னைக்கு எழுதல… இன்னைக்கு டயர்டா இருக்கு…. நான் தூங்கப் போறேன்…” எனும் போதே…
“டயர்ட்… தூங்கப் போறிங்க… நம்பிரு ரித்வி… போதுமா அண்ணி..” ரித்விகா தன் அண்ணியிடம் கண்சிமிட்டியபடியே…
“அண்ணி… என்னை இன்னும் சின்னக் குழந்தையாவே ட்ரீட் பண்றீங்க… நானும் அதையே மெயிண்டெயின் பண்ணிக்கிறேன்… குட்நைட் அண்ணி… “ தன் அண்ணியைக் கிண்டலடித்தபடியே… ரித்விகாவும் கிளம்பி விட… கண்மணிக்குமே சில அலுவல வேலைகள் இருக்க… நேராக அலுவலக அறைக்குச் சென்றவள்… அவற்றை முடித்து விட்டு தங்கள் படுக்கை அறைக்குச் சென்றிருக்க… அங்கோ…
ரிஷி… பவித்ரன்… சாதனா மூவரும் போர்வையால் குடில் செய்தபடி… விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு… அலைபேசி ஒளியில்… பேசிக் கொண்டிருக்க… கண்மணியும் மெல்ல அன்ன நடை நடந்து… அவர்களை நோக்கிப் போனவள்…
“மேடம் சார்ஸ்…” போர்வையைத் தூக்கி… அந்தக் குடிலுக்குள் அவளும் உள்ளே செல்ல முயற்சி செய்ய
“ஹலோ இது எங்க வீடு… பெர்மிஷன் கேட்டுட்டுத்தான் வரணும்… “ சாதனாவும் பவித்ரனும் சொல்ல
“எனக்கேவா… நானே பெர்மிஷன் கேட்கனுமா“ கண்மணி முறைக்க
“ஹலோ… இது பவித்ர விகாஸும் இல்லை… கண்மணி இல்லமும் இல்லை… உன் இஷ்டத்துக்கெல்லாம் வர முடியாது…. இது எங்க வீடு… பெர்மிஷன் கேட்டாகனும்… இல்லைனா… உள்ள வர முடியாது” குழந்தைகள் கறாராகக் சொல்லி விட
”சாரி சாரி…” என்று போர்வைக் குடிலை விட்டு வெளியேறியவள்
“நானும் ஜாயின் பண்ணிக்கலாமா…” கண்மணியும் வெளியே அமர்ந்து குழந்தைகளிடம் அனுமதி கேட்க…
இப்போது மழலைகள் இருவரும் தங்கள் தந்தையைப் பார்த்தனர்… தன் அன்னைக்கான அனுமதி வேண்டி…
“யோசிக்கனுமே தங்கங்களா..… ஆனால் நம்ம கண்மணிக்கு கொஞ்சம் திமிர் தெனாவெட்டு எல்லாம் ஜாஸ்தி ஆனா மாதிரி இல்லை… ”
“அப்படிலாம் இல்ல ரிஷிக்கண்ணா…. அவ எப்போதும் போலத்தான் இருக்கா…” வேகமாக குழந்தைகள் சொல்ல
“அப்போ நம்ம வீட்டுக்குள்ள சேர்த்துக்கலாம்னு சொல்றீங்க…” ரிஷி கேட்டபடியே குழந்தைகளின் நடுவில் படுத்திருந்தவன்… கட்டிலின் இன்னொரு முனைக்குச் சென்றிருக்க…
“ஆமாம் ரிஷிக்கண்ணா… பாவம் தானே கண்மணி… நம்ம வீட்டுக்குள்ள சேர்த்துக்கலாம்… ”
“சரி நீங்க சொல்றதுனால கண்மணியை நாம நம்ம வீட்டுக்குள்ள அளோ பண்ணலாம்… ஆனால் உங்க அப்பா சொல்றதுக்கெல்லாம் ’ஓகே’ சொல்ல முடியுமான்னு அவகிட்ட கேளுங்க… உங்க அம்மா ’ஓகே’ ன்னு சொன்னா உள்ள விடலாம்”
வேகமாக குழந்தைகள் இருவரும்…
“கண்மணி… ரிஷிக்கண்ணாக்கு ஓகே ஓகேன்னு மட்டும் தலை ஆட்டிரு… நீயும் உள்ள வந்துறலாம்… ரிஷிக்கண்ணா…. சூப்பர் சூப்பர் கதையா சொல்வாங்க… வெம்பயர்… சூப்பர் மேன்… ஜாம்பி … பேட் மேன்… அயர்ன் மேன் , அப்புறம் சூப்பர் வுமன்,யூனிகார்ன் ஸ்டோரி… எல்லாம் சொல்வாங்க… ப்ளீஸ் ப்ளீஸ்…”
“உங்களுக்கு முன்னாடியே நாங்களும் எல்லாம் கேட்ருக்கோம்… ஓகே ஓகே… சொல்லிட்டேன்னு சொல்லுங்க… “ என்றவள்…
“பெரிய இவருக்கு… பம்பாய் பட அரவிந்த்சாமின்னு நெனப்பு…” முணுமுணுத்தபடியே கண்மணியும் அவர்களோடு சேர்ந்திருக்க…
“பப்பா… மான்ஸ்டர் அப்புறம் என்ன பண்ணுச்சு…” மழலைகள் இருவரும் கதையை விட்ட இடத்தில் இருந்து கேட்க ஆரம்பித்திருக்க… ரிஷியும் கதை சொல்ல ஆரம்பித்திருக்க… மழலைகள் இருவரும்… ஒரு கட்டத்தில் தூங்க ஆரம்பித்திருக்க.. கண்மணியும் ரிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருக்க…
“ஓகேவா…” அவளைப் பார்த்தபடியே கேட்ட ரிஷியின் குரலில்… கரகரப்பும்… தாபமும்… காதலும் வழிந்து ஓட… கண்மணியின் கண்களே அவனுக்காக சம்மதத்தைச் சொல்ல… மெல்ல குழந்தைகளை விட்டு எழுந்தவள்…. கீழே அவர்களுக்காக மெத்தையை விரிக்கப் போக… இப்போது ரிஷி அவளைத் தடுத்தவனாக… சட்டென்று அவளைத் தூக்கியிருக்க…
“எ… என்ன… என்ன பண்றீங்க…” கண்மணி ரகசியக் குரலில் கணவனிடம் கேட்டாலும்…. குழைந்தாலும்… பார்வை குழந்தைகளிடமே இருக்க..
ரிஷியின் பார்வை… எதிர்ப்புறத்தைக் காட்ட… கண்மணி… அவன் தோள் மேல் கரம் போட்டவளாக…
”என்ன ’ஆர் கே’ சார்… ஆர் ஃபார் ரொமான்ஸ் மோடுக்கு செமையா ட்யூன் ஆகிட்டீங்க போல…”
”யெஸ் அம்மு… ’கே’ ஃபார் கிஸ் மோடுக்கு கண்மணியாகிய தாங்களும் டியூன் பண்ணிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது…”
“அப்படீங்களா… கே ஃபார்… கிக் பாக்ஸ் மோடும் என்னிடம் உள்ளது ரிஷிக்கண்ணா…”
“ஆர் ஃபார் ரேப் மோடும் எங்கிட்ட இருக்கு கண்மணி… நான் பொறுப்பில்லை இதுக்கு… நீதான் என்னைக் கெட்ட பையனா பேச வைக்கிற…” எனும் போதே
இப்போது அவனுக்கு அவன் தோளிலேயே அடி விழுந்திருக்க…”
“ஹ்ம்ம்… தூக்கிட்டு போறவனுக்கு நல்ல பரிசு கொடுக்கிறடி… எவ்ளோ கஷ்டப்பட்டு… இந்த ரூம் பால்கனிக்கும்… நம்ம தாஜ்மஹால் மொட்டை மாடி ரூமுக்கும் பாலம் கட்டி கனெக்ஷன் போட்ருக்கேன்… என் லவ்ஸ என்னைக்காவது பாராட்டி பரிச் கொடுத்திருக்கியாடி…”
“ஆமாம் இவர் அப்படியே லவ்ஸ்ல பொங்கி கட்டினாராக்கும்… ரெண்டு பேரும் என்னை விடவே மாட்றாங்கன்னு… அவங்ககிட்ட இருந்து என்னை எஸ்ஸாக்கி தனியா கூட்டிட்டு வந்து சார் ரொமான்ஸ் பண்றதுக்கு செட் அப் பண்ணிட்டு… இதுல லவ்னு வேற கதை…” கண்மணி அவனிடம் பேசியபடியே …
“ரிஷி… ப்ளீஸ் இறக்கி விடுங்க…நான் நடந்தே வர்றேன்…” கண்மணி கெஞ்ச ரிஷியும் இப்போது இறக்கி விட்டிருக்க… இறங்கிய கண்மணி அவனோடு கரம் கோர்த்தபடி நடந்து வந்தவள்… கொஞ்சம் கொஞ்சமாக ரிஷியின் கண்மணியாக மாறிக் கொண்டிருக்க… கோர்த்திருந்த கரங்களின் அழுத்தம் கூடியிருக்க…
அதிலேயே அவளின் தாபம் உணர்ந்தவனாக… மனைவியை தன்னோடு அணைத்தபடியே… மாடி அறைக்கும் வந்திருந்தான் ரிஷி…
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்தபடியே… உள்ளே போகப் போனவன்… திடீரென்று என்ன நினைத்தானோ… அறையைத் திறக்காமலேயே தன்னவளைப் பார்த்தவன்..
“அம்மு… இந்த மாதிரி நைட்… தனிமை… இப்போலாம் நமக்கு அடிக்கடி கிடைக்கிறதே இல்லைல… முக்கியமா இந்த படி… பேசிட்டு இருக்கலாமா…” ரிஷி…
கண்மணியோ பேசும் நிலையிலேயே இல்லை… இதில் மறுத்துப் பேசும் நிலையிலா இருப்பாள்… சரியென்று தலை ஆட்டியிருக்க… ரிஷி முதலில் அமர… கண்மணி அவன் அமர்ந்த படிக்கட்டிலேயே அருகில் அமர்ந்தபடி… அவன் மேல் சாய்ந்திருக்க… அவன் கரங்களோ அவளை சுற்றியிருந்தது
“ஓய்… ஏதாவது பேசுடி… அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” ரிஷி அவளைப் பார்த்துக் கேட்க… அந்த இடத்தையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் கண்மணி…
”அந்த கேட்… பைக் நிறுத்துற இடம்.. இந்த இடம்… இந்த ரூம்… இது எல்லாமே நமக்கே நமக்கான இடம்… இதுல எத்தனை ஞாபகங்கள்… அப்படித்தானே ரிஷிக்கண்ணா…” என்றவள்… இப்போது தன் கையில் தான் போட்டிருந்த ரிஷியின் கைகாப்பைப் பார்த்தபடியே
“ஆனால் எனக்கு ஏன்னு தெரியல…. இனி நினைத்தாலும் அந்த நாட்களை மீட்க முடியாதுதானே ரிஷி… ஏன் அப்படி பைத்தியக்காரத்தனம் பண்ணினேன்னு தெரியலை…” கண்மணி அவனிடம் சாய்ந்திருக்க…
“காரணம் காதல்… காதல் முத்திட்டா அடுத்த ஸ்டேஜ் பைத்தியக்காரத்தனமான வேலைதானாம்…” பொறுமையாக… நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லியபடியே ரிஷி அவளின் உச்சந்தலையில் முத்தம் வைத்திருக்க… கண்மணி புன்னகைத்தாள் அவனைப் பார்த்து…. அதே நேரம்
“அந்த மாதிரிதான் இந்தக் கண்மணிக்கும் அவ ரிஷிக்கண்ணா மேல அப்படி ஒரு காதல் வந்திருச்சாம்….” கண்மணி சிரித்திருக்க
”காதல்னா உங்க காதல் இல்லை எங்க காதல் இல்லை… அவனுக்காக ஒரு கதையே எழுதினாளாம்… அவ இல்லைனா அவன் எப்படி இருக்கனும்னு… அவன் எப்படி வாழனும்னு… அப்படி ஒரு காதலாம் அவளுக்கு”
“ஏன் அப்படி ஒரு காதல் அவளுக்கு அவன் மேல…” கண்மணி புரியாமல் கேட்க
“அவளுக்கு எப்போதுமே அவ ரிஷிக்கண்ணாவை விட அதிகமா லவ்ல இருக்கோம்னு காட்டனுமாம்… ஆனால் அது நடக்கவே நடக்காதுனு அவளுக்குத்தான் புரியலை…” கண்மணியின் உச்சந்தலையில் தன் நாடியை வைத்தவன்
”அவளோட ரிஷிக்கு அவ மேல அதை விட காதலாம்… அவனை அவ வின் பண்ணவே முடியாதாம்… உனக்குத் தெரியுமா… அதுனாலதான் அவளோட பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் பொறுத்துகிட்டு… மன்னிச்சுட்டானாம்…” கண்மணி பதில் பேசவில்லை… அமைதியாக இருக்க… ரிஷி அவளைப் பார்க்க… அவளின் மூக்குத்தி ஒளியில் வழக்கம் போல தன்னை இழந்தவன்…
“இந்த மூக்குத்தி தாண்டி… என் அம்முவை கண்டுபிடிக்க விடாமல் பண்ணிருச்சு…. “ செல்லமாக அவளின் மூக்குத்தியைத் தட்டியவனாக… சிலாகித்திருக்க… கண்மணி இப்போதுமே அமைதியைத் தொடர
“என்னடி… எப்போதும் என் காதல் தான் பெருசு… டெஸ்டினி… அது இதுன்னு போட்டிக்கு வருவ… இன்னைக்கு என்ன சைலண்ட் ஆகிட்ட… “கேட்டவனையே பார்த்தபடி இருந்த அவள் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்…
ரிஷி அவள் முகத்தைத் தன் புறம் திருப்பியிருக்க…
“எனக்கு உங்களைப் பிடிக்கும்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்… டெஸ்டினி… இப்படி ஏதேதோ சொன்னாலும்… இதுதான் காதலான்னு… ஆத்ம பந்தமான்னு நான் எனக்குள்ளேயே கேட்டுகிட்ட இடம் எது தெரியுமா…” கண்மணி அவனைப் பார்த்தபடி கேட்க…
“விக்கி வந்து நாம ரெண்டு பேருக்கும் சண்டை ஆனதே… அப்போ கூட எனக்கு காயம் பட்டு ஹாஸ்பிட்டலுக்கு போனேனே… உங்க மேல எனக்கு அவ்ளோ கோபம்… அந்த விக்கிகிட்ட அவ என்னைப் பற்றி பேசலேன்னு… அவன் அவ்ளோ பேசுறான்… ஆனா என் ரிஷிக்கண்ணா என் பொண்டாட்டி பற்றி நீ பேசாதடான்னு ஒரு வார்த்தை சொல்லலைன்னு… உண்மையிலேயே எனக்கு என்னை மீறின கோபம் தான் ரிஷி உங்க மேல…. ஆனால் மயக்கத்தில இருந்தப்போ… உங்க மேல கோபமாத்தான் இருந்தேன்…. எனக்கு யார் குரலும் கேட்கலை…. அப்பா.. அர்ஜூன்… அத்தை… விக்கி… தாத்தா… பாட்டி இப்படி எல்லோரும் அங்க பேசிட்டு இருந்தாங்க தானே… ஏன் சுத்தி இருந்த மத்தவங்களும் அங்க பேசினாங்கதானே… ஆனால் எனக்கு ஒரே ஒரு வாய்ஸ்…. உங்க வாய்ஸ் அது மட்டும் தான் என் காதுல விழுந்துட்டே இருந்தது…அப்போதான் நானே ஃபீல் பண்ணினேன் ரிஷி… எனக்கு உங்க மேல இருக்கிற காதலோட வலிமைய…” கண்மணியின் குரலில்லேயே… அவள் வார்த்தைகள் கோர்த்த வேகத்திலேயே தெரிந்தது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றாள் என்பதை…
“அடுத்து உங்க நிலையும் அன்னைக்குத்தான் எனக்குத் தெரிஞ்சது… உண்மையைச் சொல்லப் போனால் அப்போதான் எமோஷனலா வீக் ஆகிட்டேன்… காதல்னு ஃபீல் வந்த உடனே தான் நான் ஏதேதோ பண்ணிட்டேனோன்னு தோணுது…”
இப்போது ரிஷி அமைதி ஆகி இருக்க…
“என்ன நீங்க சைலன்ட் ஆகிட்டீங்க… பொண்டாட்டி மேல லவ் இருக்கா இல்லையா பாஸ்… “ கண்மணி கேட்டவளாக….
“ஹலோ.. இந்த மூச்சு…. காத்து… அது இருக்கிறது வரை தெரியாது… இந்த டைலாக்லாம் விட்டாலாம் செல்லாது… லவ் இருக்கா.. இல்லையா… அது மட்டும்தான் சொல்லனும்…”
ரிஷி இப்போது வாய் திறந்தான்…
“நான் உன்னை லவ் பண்ணலைடி…”
“ஓ…. இப்போ வரைக்கும் ரிஷி சார்க்கு லவ்வே வரலை… சொல்லுங்க…” கண்மணி கண் சிமிட்டியபடியே அவனை வம்பிழுக்க
“நீ எனக்கு வேணும்…. நீயே என்னை வேண்டாம்னு சொன்னாலும் எனக்கு நீ வேணும்… அப்போ இது காதலா சொல்லு… நான் ஹீரோவா சொல்லு… சோ நான் ஹீரோ இல்லை… வில்லன் தான்… ஆனால் ஹீரோவா மாறின அதிர்ஷ்டம் எது தெரியுமா… உனக்கும் என்னைப் பிடிச்சிருந்ததே அதுனால மட்டும் தான்… ”
சொன்ன ரிஷியையே பார்த்திருந்தவள்…
”நான் என்னோட பத்து வயசுல பைத்தியக்காரியா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தேன்னு சொல்வாங்க… ஆனால் உண்மையிலேயே பைத்தியக்காரியா நடந்துகிட்டது எப்போ தெரியுமா.. நான் கன்சீவா இருந்தப்போ தான்… ஒவ்வொரு நிமிசமும் நரக வேதனை ரிஷி… கண்ணு முன்னால எனக்காக… என் காதலுக்காக… என் அருகாமைக்காக நீங்க துடிக்கிறதைப் பார்த்துட்டு… எனக்குள்ள்ள அவ்ளோ வேதனை… வெளியில கூட சொல்ல முடியாத கொடுமை… நம்ம கல்யாண நாள் அன்னைக்கு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனிங்களே… அதுக்காக என்னென்ன பண்ணுனீங்க… அதெல்லாம் பார்த்து செத்துட்டேன் ரிஷி… என் ரிஷி இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு கடைசியில நானே காரணமே ஆகிட்டேன்னு…” கண்மணி முழுக்க முழுக்க உணர்வுகளின் தாக்கத்தில் இருக்க… ரிஷியுமே அந்த நிலைமையில் தான் இருந்தான்…. அவன் மேல் சாய்ந்திருந்த அவனின் தோளில் மெல்ல நீர்ப்படலம் அதிகரிக்க ஆரம்பித்திருக்க… ரிஷி சுதாரித்தவனாக…. கண்மணியை அந்த தாக்கத்திலிருந்து மாற்ற நினைத்தவனாக
”என்னாச்சுடி… இவ்ளோ எமோஷனல் ப்ரேக்டவுன்… இன்னைக்கு உங்க கட்சியில நடந்ததை விசயத்தாலா… அந்த அருமை நாயகம்லாம் ஒரு ஆள்னு… அடிப்போடி… அந்த விசயத்துக்காகவா கண்ணீரை வேஸ்ட் பண்ற… நான் தலைவர்ட்ட பேசலேனாலும்… உனக்கு எதிரா நடந்திருக்காது”
“தெரியும்… என் கண்ணீரை யார்க்காகவும் வேஸ்ட் பண்ண மாட்டேன்… அது ஒரே ஒருத்தனுக்கு மட்டும் தான்… நான் சிரிக்கிறதும் அவனுக்காகத்தான்… அழறதும் அவனுக்காக மட்டும் தான்… ” என்றவளை… காதலுடன் பார்த்தவன்…
“லைட்டா காத்துல பறக்கற ஃபீல் வருதுடி கர்வத்துல…” ரிஷியின் வார்த்தைகளில் இருந்த நக்கல் அவன் குரலில் இல்லை…
கண்மணி அவனிடம்… இப்போது ஆர்வமாக
“பொண்டாட்டி மேல லவ்வும் இல்லைனு சொல்லிட்டீங்க… ஆனால் ஏன் ரிஷி… என்னைப் பற்றி மட்டும் ஏன் யோசிக்கிறீங்க…”
“அப்டியா… ஆனால் ஊர் உலகம் வேற மாதிரி சொல்லுதே… இந்த ரிஷிக்கு அவன் பொண்டாட்டியப் பத்தி கவலையே இல்லைனு… காலைல கூட என் அம்மா திட்டினாங்களே… அப்போ அது உண்மை இல்லையா..”
கண்மணி அவனிடம்
“கேட்டதுக்கு பதில்…” அவனை மிரட்டியிருக்க
“ஏன்னா… என் பொண்டாட்டி மினிஸ்டராக்கும்… அவளுக்கு அவளைப் பற்றி யோசிக்க டைம் கிடைக்காதாம்… அவ புருசன் நான்தான் அவளுக்கும் சேர்த்து யோசிக்கனும்..”
இப்போது கண்மணி சிரித்தபடியே மூக்கை உறிஞ்சியவளாக… ஒரு வழியாகச் சமாதானம் ஆனவள்…
“சரி… ஓகே ஓகே வான்னு எதுக்கு பாஸ் கேட்டீங்க.… இப்படி பேசுறதுக்கா…” கண்மணி புருவம் உயர்த்தி குறும்புடன் சீண்ட… சீண்டலான குறும்பு பார்வைதான் என்றாலும்… அதில் அவளின் தாபமே ஓங்கி இருக்க
“அதுவா…. அதுவா… அந்த ஓகே எதுக்காகன்னா” என்றவன் … அவளையேப் பார