அத்தியாயம் 98-2
/*பாலைவன பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவன பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேன் இரைத்த பால் நிலவு தீ இரைத்து போவதென்ன
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன
என் ஜீவன் நீ இன்றி என்னாளும் வாழாது என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா */
ரிஷி வேறு உடைக்கு மாறி இருந்தவனாக… தரையில் அவனது படுக்கையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்க… அறைக்குள் நுழைந்த இலட்சுமியின் மனமும் சற்று இலேசாகி இருந்தது தன் மகனை அப்படி பார்த்ததும்…
அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த ரிஷியின் கண்களில்… ஏமாற்றம் தோன்றி அடுத்த நிமிடமே இயல்புக்கும் மாறி இருக்க...
“ம்மா… நானே வந்துருப்பேனே… இதோ வர்றேன்… சாரி…” என வேகமாக கை கழுவ எழுந்தவனை… எழ விடாமல்…
“நான் ஊட்றேன்… நீ உன் வேலையைப் பாரு” என்ற இலட்சுமி அவனை வேறு ஏதும் பேச விடாமல் சாப்பாடைக் கொடுக்க… ரிஷியும் அமர்ந்து விட்டான்…
தாயின் கையால் ஒரு வாய் உணவு போன உடனேயே… .
“ஏம்மா…. இந்த டைம்ல… அவளால சாப்பிட முடியாதா… ரொம்ப வாமிட் வருமா… சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வாமிட் பண்ணிட்டா அப்புறம் சாப்பாடு எப்படி தங்கும்… அவ பசியே தாங்க மாட்டாளே… அடிக்கடி சாப்பிடனும் தானே… அவ ஒரு ஆள்னா பரவாயில்ல…” ரிஷியின் எண்ணமெல்லாம் அவன் மனைவியே
“நீ சாப்பிடு… அதெல்லாம் அவ பார்த்துப்பா… அவ சின்னப் புள்ள இல்லை… என்னையே அவ எப்படி கவனிச்சுக்கிட்டா… அவ குழந்தையை அவ பார்த்துக்க மாட்டாளா..” என்றபடியே அடுத்த கவளத்தை ஊட்ட… ரிஷி யோசித்தபடியே
”ஏம்மா… அவளுக்கு பிடிச்ச மாதிரி அவங்க சமைச்சுக் கொடுப்பாங்களா… அவளுக்கு தோசைல எண்ணெய் அதிகமா ஊத்துனா பிடிக்காது… டீல சுகர் அதிகமா பிடிக்காது… பால் பாயசத்துல நட்ஸ் மட்டும் தான் போடனும்… ட்ரை க்ரேப்ஸ் போட்டா பிடிக்காது… சாதம் ரொம்ப வெந்ததுனா பிடிக்காது… குழம்புல காரம் அதிகமா இருக்கனும்… காயே சாப்பிட மாட்டா… கஷ்டப்பட்டு சாப்பிட வைக்கனும்… அவ வெரைட்டியா சாப்பிட மாட்டா… ஆனா செலக்டிவா சாப்பிடுவாளே… வைதேகி பாட்டி வீட்ல வித விதமா சமைச்சுக் கொடுப்பாங்க… ஆனா அவ டேஸ்ட்டுக்கு சமச்சு கொடுப்பாங்களா…” என்றவனை இலட்சுமி முறைக்க…
“ஆனால்… தயிர் சாதம் மூணு வேளையும் கொடுத்தா சாப்பிடுவா… அட்லீஸ்ட் அதையாவது ஒழுங்கா சாப்பிடனும்… ஆனால் இப்ப அது பிடிக்குமா அவளுக்கு” என்றபடியே தாயிடம் அடுத்த கவளத்தை வாங்கியவன்…
“நைட் தூங்கவே மாட்டா… கதை எழுதுறேன்னு அந்த லேப்டாப்பை வேற மடில தூக்கி வச்சுக்குவா… கேட்டா இப்படி எழுதினால்தான் வார்த்தை கொட்டும்னு டையலாக் வேற பேசுவா… மிரட்டி தூங்க வைக்கனும்…”
”ரிஷி…” இலட்சுமியின் கைகள் நடுங்க ஆரம்பித்திருக்க…
“அவளுக்கு காலைல பன் அதோட டீ… இல்லை ரஸ்க்.. அதுவும் கேக் ரஸ்க்னா ரொம்ப பிடிக்கும்… மேடத்துக்கு கேக் பிடிக்காது ஆனால் கேக் ரஸ்க் பிடிக்கும்…”
“அப்புறம் அவளுக்கு காலைல எழுந்துக்கவே பிடிக்காதுமா…. இன்னும் கொஞ்ச நேரம் ரிஷிக்கண்ணான்னு என்னையும் எழுந்துக்க விட மாட்டா… ஆனா நீங்கள்ளாம் என்ன நினைச்சுருப்பீங்க… கண்மணி 5 மணிக்கெல்லாம் எழற பொண்ணுனு… அவ மேலோட்டமா பார்க்கும் போது கண்மணி தொட முடியாத சிகரம் மாதிரி தோணும்… ஆனா அவ கருங்கல்லால ஆன சிகரம் இல்லம்மா… பனிப்பாறைல செஞ்ச சிகரம்மா…”
”சாப்பிட்றா… எங்களுக்கும் எல்லாம் தெரியும்… “ இலட்சுமி கண்மணியின் பேச்சில் இருந்து அவனை திசைமாற்ற எண்ண.. அவன் மாறினால் தானே
“ம்மா… அவதான் உங்ககிட்ட பேசுறாள்ள… அவளை நீங்க போய் பார்த்துக்கங்கம்மா… கோபமா பேசினாலும் நீங்க அவளை விட்றக் கூடாது சரியா… எங்க போயிருக்கா… இதோ நாலு தெரு தள்ளி இருக்கிற அவங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு… எவ்ளோ நாள் அவ என்னை விட்டு விலகி இருக்கான்னு பார்த்திருவோம்… ம்மா… இன்னொன்னு சொல்லவா… எனக்கு அவ மூச்சுக்காத்து மாதிரினா… அவளுக்கு நான் அவளோட நிழல் மாதிரி… என்னை விட்டு அவளால இருக்க முடியாதும்மா… இப்போ அவ எனக்கு பயந்து இருட்டுக்குள்ளா இருக்கா… வெளிச்சத்துக்கு வரவே பயப்பட்றா… அதுதான் ஏன்னு எனக்குத் தெரியலம்மா”
இலட்சுமி ஒய்ந்த முகத்துடன் அவனைப் பார்க்க
“ம்மா… உன்னையும் ரித்வியையும்… ஏன் ரிதன்யாவையும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்மா… எனக்காக அவளை யாரும் ஹர்ட் பண்ணிறாதீங்கம்மா… “
“அம்மா…புரியுதா” ரிஷி அவளைப் பார்த்துக் கேட்டவன்…
இலட்சுமி பேச ஆரம்பிக்கும் முன்பே
“அம்மா… நீங்க எல்லோரும் அவளைப் பத்திரமா பார்த்துக்குவீங்கதானே… ஆனால் அவ உங்க யார்கிட்டயுமே முழுசா நெருங்க மாட்டாளே… அதுதான்மா என் கவலையே… அவளை நீங்க எல்லாரும் சந்தோசமா வச்சுக்குவீங்களா… ஆனால் அவ சந்தோசம் எதுன்னு உங்க யாருக்குமே தெரியாதே…” மீண்டும் ரிஷி கவலையில் ஆழ்ந்திருக்க
“அவ மட்டும் கன்சீவா இல்லாமல் இருந்திருந்தால் வச்சுக்கங்க… எப்படியாவது இங்க வர வச்சுருப்பேன்… அதுக்கு என்னென்ன பண்ணனுமோ அத்தனை வழியும் தெரியும்…” தனக்குள் சொல்லிக்கொண்டவன்… இன்னும் என்னென்னவோ கண்மணியைப் பற்றி பேசிக் கொண்டிருக்க
அவன் பேசினானா… புலம்பினானா… அவன் தாய்க்கே தெரியாத நிலை… அவனை எப்படி சமாதானப்படுத்துவது.... அவன் பேச்சை எப்படி நிறுத்துவது... அதுவும் தெரியவில்லை இலட்சுமிக்கு....
இலட்சுமி தவித்திருந்த சமயத்தில்... அவனது அலைபேசிக்கு அழைப்பு வந்திருக்க… அப்போதுதான் அவன் பேச்சையே நிறுத்தியவனாக…. அவனது அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன்… பேசி முடித்துவிட்டு…
”சத்யா வந்திருக்காரும்மா… நான் போய் பார்த்துட்டு வந்துறேன்…” என்றபடி சட்டென்று கிளம்ப ஆரம்பித்திருக்க… இலட்சுமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… சற்று முன் புலம்பியதென்ன… இப்போது கிளம்புவதென்ன…. ரிஷியை எங்கு வைப்பது என்றே தெரியாத நிலை… எப்படியோ அவன் கண்மணியைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வேலை என்று கிளம்பியது ஆறுதலாகத்தான் இருந்தது இலட்சுமிக்கு….
யாரையுமே நோக முடியாத நிலையில் இலட்சுமி இருந்தார்…
“அம்மா… வர்றேன்…” என்றபடியே மாடிப்படிகளில் ரிஷி இறங்க ஆரம்பித்திருக்க… அதே நேரம் ரிஷியின் அலைபேசியில் மீண்டும் அழைப்பு வந்திருக்க… வேகமாக எடுத்தான்… அது கிருத்திகாவிடமிருந்து வந்த அழைப்பாக இருந்ததால்…
“ஃப்ரிதான் ஆன்ட்டி… நீங்க வரச் சொன்னால் உடனே வர மாட்டேனா… ஏன் ஆன்ட்டி இப்படிலாம் கேட்கறீங்க…” என கிருத்திகாவிடம் பேச ஆரம்பித்தவன்
”கண்மணி கிளம்பிட்டாளா… பேசுனீங்களா அவகிட்ட… “ என்றபடியே… இறங்கி வந்தவன்… சத்யாவைப் பார்க்கப் போகாமல்… கிருத்திகாவின் வீட்டுக்கே மீண்டும் சென்றிருந்தான்…
---
”நீ சந்தேகப்பட்டு சொன்னது… கிட்டத்தட்ட சரிதான் ரிஷி… அவ டெலிவரி ட்யூ டேட் டிசம்பர் எண்ட் தான்… “
கிருத்திகா சொல்ல… ரிஷி யோசனையோடு அவரைப் பார்த்தவன்
“ஏன் இப்படி இருக்கா… அவங்கள பிடிக்கல பிடிக்கலேன்னு சொல்லிட்டே அவங்க அம்மா கூடவே இவ கம்பேர் பண்ணிக்கிறா… சொல்லப் போனால் அவங்களுக்கு இவளே கொடுத்த ட்யூட் டேட்ல பிறக்கலை… ப்ரீ மெச்சூர்ட் பேபிதானே… மூணு மாசத்துக்கு முன்னாடியே பிறந்துட்டு என்னை படுத்தி எடுக்கிறா…” ரிஷி கடுப்புடன் பேச ஆரம்பித்திருந்தான்... கண்மணியின் தவிப்பெல்லாம் அவன் நினைக்கக் கூட இல்லை...
“அவளோட அதீக கற்பனை ஓட்டம் தான் இதுக்கு காரணம் ரிஷி… அதைக் கண்ட்ரோல் பண்ணத்தான் அவளைக் எழுதச் சொன்னதே…” கிருத்திகா வருத்ததோடு சொன்னபடியே
“உண்மையைச் சொல்லப் போனால் கண்மணிக்கு அவ அம்மாவை ரொம்ப பிடிக்கும் ரிஷி… நம்மகிட்ட தான்… அவங்க அம்மாவைப் பிடிக்காது… அவங்க மாதிரி இருக்க மாட்டேன்னு நடிக்கிறா… யோசிச்சுப் பாருங்க... ராஜை ஏன் யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறா… அவங்க தாத்தா பாட்டியையும் விடாமல் இருக்கா ஏன்… அவ அம்மா இல்லாத இடத்தை இவ நிரப்பிட்டு இருக்கா அவ அறியாமலேயே… அவ அம்மாவைப் பற்றி இவ பேசுவா ஆயிரம் இதே நான் ஏதாவது அவ அம்மாவைப் பற்றி தப்பா சொன்னா போதும்… சண்டைக்கு வந்திருவா..“
“அவ அம்மா பாசம்… அப்பா பாசம்… அது எல்லாம் இருக்கட்டும்… நான் என்ன பண்ணினேன் அவளுக்கு…” ரிஷி கோபத்துடன் கேட்க
“அவ உன்னை அவளை விட அதிகமா நேசிக்கிறா ரிஷி… அதுதான் அவ பிரச்சனையே… எங்க நாம இறந்துட்டோம்னா அவ புருசன் இன்னொரு நட்ராஜா மாறிருவானோன்னு பயப்படுறா…” கிருத்திகா சுற்றி வளைத்து எல்லாம் பேசாமல் நேரடியாக விசயத்துக்கு வந்திருக்க
”பைத்தியமா இவளுக்கு…” ரிஷி பல்லைக் கடித்தபடியே கேட்டவன் அதே நேரம்…
“அவ ரிப்போர்ட்ஸ்ல ஏதாவது..” முகம் வெளிறியவனாக கேட்க…
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை… எல்லாமே நார்மல் தான்… நானே பேசினேன்… டாக்டர் கிட்ட… அவங்க ஹாஸ்பிட்டல்லதான் அவ செக் அப் போயிட்டு இருக்கா… அர்ஜூனும் விசாரிச்சுட்டான்…”
“அப்புறம் என்னவாம் இவளுக்கு… இவளை எல்லாம்… எஙக் போய் எனக்கு முட்டிக்கிறதுன்னே தெரியலை ஆன்ட்டி… நடக்காத ஒரு விசயத்தை இவளே கற்பனை பண்ணிட்டு இப்படி இருக்காளா… இவ்வளவு பிடிவாதமா… இப்படிலாம் நெகட்டிவா யோசிக்கிற அளவுக்கு அவளை நினச்சுக் கூடப் பார்க்கலை...” ரிஷி இப்போதுமே கோபமாகத்தான் இருந்தான்
“கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை… அவ எண்ணம் தப்புனு அவளுக்கு புரிய வைங்க… அதுவரை அவ போக்குல விடுங்க… எவ்ளோ நாள் இப்படியே இருக்கப் போறா… எப்டினாலும்..பத்து மாசம் தான் அவளோட கற்பனையோட ஆயுள்… டெலிவரி முடிந்து கைல குழந்தையோட வந்து உன்கிட்ட தான் வந்து நிப்பா… அப்போ உங்க கோபத்தை காமிங்க”
“என்னது பத்து மாசமா… அவளை விட்டு நான் தள்ளி இருக்கனுமா… விளையாடறீங்களா…” பட்படத்தவனாக
”ப்ச்ச்… அதெல்லாம் விடுங்க.. இவ இப்படி ஒவ்வொரு விசயத்திலும் இப்படி முடிவு எடுத்தா எங்க வாழ்க்கை என்னாகும் ஆன்ட்டி… இப்போதாவது நானும் அவளும் மட்டும் தான்… பரவாயில்லை… ஆனால் இவ இப்படியே தொடர்ந்தா நாளைக்கு எங்க குழந்தைகளும் இதுனால பாதிக்கப்படுமே… இப்படியே விட்டுட்டா அவளை எப்படி மாத்துறது… எல்லா விசயத்திலும் அவ இமாஜினேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்றது… இப்பவே இதுக்கு சரியான தீர்வெடுக்கனும்… இப்படிலாம் அவளை என்னால விட முடியாது” ரிஷியின் குரலில் இப்போது வேதனை மட்டுமே…
“புரியுது ரிஷி… இப்போ என்ன… கொஞ்ச நாள் தள்ளி இருந்தால் தான் என்ன… அவ வெளிநாடு போகலை தானே… அப்புறம் என்ன… பாட்டி வீட்ல இருக்கா… நான்லாம் என் ஹஸ்பண்டோட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை மொத்தமா கணக்கு பண்ணினா 5 வருசம் கூட ஒண்ணா இருந்திருக்க மாட்டோம்… மேரேஜ் ஆன அடுத்த மாதமே விட்டுட்டுப் போயிட்டாரு… கன்சீவா இருந்தபோது மூனு மாசத்துல என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்… நித்தின் பிறந்து 6 மாதம் ஆன பின்னால தான் மறுபடியும் நான் கனடாவே போனேன்… அவருக்கு ப்ரொஃபெஷனல் அப்படி… இப்போ கூட அவரும் நானும் பிரிஞ்சுதான் இருக்கோம்… அதுக்காக நானும் அவரும் சந்தோசமா இல்லைனு எடுத்துக்க முடியுமா… அவளை மாதிரியே நீங்களும் பிடிவாதம் பிடிக்கனுமா”
ரிஷி சலிப்போடு பார்த்தான்… பின் கேட்டான்
“இப்போ என்ன பண்ணனும் நான்…” முதல் முறை ரிஷி கிருத்திகாவைப் பார்த்தபோது கிருத்திகாவிடம் கேட்ட அதே கேள்வி... அமைதியாக அவனையேப் பார்த்திருக்க
”அவகிட்ட யாரும் பேச மாட்டீங்க... அவ மனசை மாத்த மாட்டீங்க... சொல்லுங்க என்ன பண்ணனும் நான்... ” அவன் பாவனையில் கிருத்திகா சிரித்தவளாக… அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல்…
“ஆனாலும் உனக்கு ஓவர் நம்பிக்கைதான் ரிஷி… இங்க ஒரு குழந்தைக்கே இவ்ளோ பாடு பட்றீங்க.. குழந்தைங்களா..” என்ற போதே ரிஷி வெட்கச் சிரிப்புடன்… நெற்றிக் கேசத்தை தள்ளுவது போல வேறெங்கோ பார்த்தபடி சில நொடி தன் பார்வையை கிருத்திகாவிடமிருந்து விலக்கியவன்… தன்னைச் சமாளித்துக் கொண்டவனாக
“அது ஒரு ஃப்ளோல வந்திருச்சு ஆன்ட்டி… ” என்றவன்…
“ஆனா… உங்க தத்துப் பிள்ளை ஜோசியம் சொல்லியிருக்கா… எங்களுக்கு பத்து பிள்ளைக்கு பாக்கியம் இருக்குனு… ஆனால் ரெண்டுனு கண்ட்ரோல் பண்ணியிருக்கா… பட் எனக்கு அந்த ஐடியாலாம் இல்லை… பார்க்கலாம்”
கிருத்திகா சிரிப்பை அடக்கியபடியே
“அவளுக்கு ஏன் உன்னை இவ்ளோ பிடிக்குதுனு இப்போ தெரியுது ரிஷி…” என்றபோதே
“கண்மணிக்கு ரிஷியை எவ்ளோ பிடிக்கும்னு சொல்றதுக்கு உலகமே வரும்… ஆனா ரிஷிக்கு கண்மணியை எவ்ளோ பிடிக்கும்னு சொல்றதுக்கு ஒரு ஆள் கூட இல்லை… எனக்காக அவகிட்ட பேசுறதுக்கு ஒரு ஜீவன் கூட இல்லை… பார்த்தீங்கள்ள இன்னைக்கு எல்லோருடைய வாயையும் எப்படி அடச்சான்னு… அதுமட்டும் இல்லை எனக்கு மத்தவங்க சிபாரிசு தேவையும் இல்லை…”
”இப்போ இந்த நிமிசம் நெனச்சேன்னா… அவளை மிரட்டி என்கிட்ட வர வைக்க முடியும்… ஆனால் நான் பண்ண மாட்டேன்… என்னை விட்டு விலகி இருக்காதான்… ஆனால் அதுக்கு காரணம் அவ என்னை வெறுக்கலை… அவளோட பயம் தான்னு சொல்றது எனக்குப் புரியுது… நீங்க சொன்ன மாதிரி கொஞ்ச நாள் தானே தானே… விலகி இருக்கிறேன்… அதுக்காக மொத்தமா விலகியும் இருக்க மாட்டேன் நான்…”
சொன்னவன்… சொன்னது போலவே… கண்மணியை விட்டு விலகியும் இருக்க ஆரம்பித்திருந்தான்… அவனின் அன்றாட அலுவல்கள்… வேலைகள் என தன்னை மூழ்கடித்துக் கொண்டான் தான்…
அதே நேரம் ரித்விகா… இலட்சுமி இவர்களை அடிக்கடி பவித்ரா விகாசுக்கு போய் வருமாறும் பார்த்துக் கொண்டான் ரிஷி… கண்மணிக்குப் பிடித்தமானவை அனைத்தையும் இவர்கள் மூலமாகவே அவளுக்குக் கிடைக்கும் படியும் பார்த்துக் கொண்டான்…
அதுமட்டுமல்லாமல்… ரிதன்யாவிடம்
“நீ திடீர்னு அண்ணினு பாச மழை பொழிஞ்சா… கண்டிப்பா அவளோட கடந்த காலம் உனக்கு தெரிஞ்சிருஞ்சுன்னு அவளுக்குத் தெரிஞ்சிரும்… அதை விரும்பவும் மாட்டா… அவ என்கிட்டயே சொன்னதில்லை… இப்போ இருக்கிற நிலைல இதையும் போட்டு குழப்பிக்குவா… நீ அவளைப் பார்க்கப் போக வேண்டாம் ரிது.. எனக்காக ப்ளீஸ்” ரிதன்யா கண்மணி சந்திப்பையும் தவிர்த்துவிட்டான் ரிஷி…
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்திருக்க… இடைப்பட்ட இந்த நாட்களில்… ஆதவனுக்கும் ஜாமின் கிடைத்து வெளியில் வந்திருந்தான்…
வந்தவன்… தன் அடி ஆட்கள் அத்தனை பேரையும் வர வைத்தவன்… மருதுவை அழைத்தான் தன் முன்னே…
“நீ வந்ததுல இருந்து எனக்கு ட்ரைவர் வேல மட்டும் தான் பார்த்திருக்க… உனக்கு தகுந்த வேலையே கொடுத்ததில்லை… இந்த முறை உனக்கு வாய்ப்பு தருகிறேன்… உனக்கு ரொம்ப பிடித்த வேலைதான்…” என்றபடியே
”பொண்ணு… ரொம்ப பெரிய இடம்… அவ்ளோ ஈஸியா தொட முடியாத இடம்… உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… மேரேஜ் ஆன பொண்ணுதான்… ரொம்பக் கஷ்டப்படத் தேவையில்லை… ” என்றபடி அந்தப் புகைப்படத்தை எடுத்தான்…
கண்மணியின் இப்போதைய புகைப்படம்… ஆதவன் மருதுவின் முன் வைத்திருக்க… கண்மணியின் புகைப்படத்தை பார்த்த மருதுவோ தன் மனதின் படபடப்பை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க…
”விட்டால் போட்டோவையே சாப்ட்ருவ போல மருது… ” ஆதவன் நக்கலாகச் சொன்னபடியே…
“ஆனால் பெரிய அதிர்ஷ்டம் தான் நீ பண்ணியிருக்க.. எனக்கு அதிர்ஷ்டமா இல்லை உனக்கு அதிர்ஷ்டமான்னு பார்க்கலாமா…”
“இவ மூலமா எனக்குத் தேவையானது எல்லாம் மறுபடியும் என் காலடிக்கு வந்தா… இவ உன் காலடிக்கு வரமாட்டா… அப்படி இல்லைனா… உனக்கே உனக்குதான் இவ… எவ்ளோ நாள் வேணும் உனக்கு“
“ஒரு நாள் போதுமா… அவ புருசனை மறக்க வைக்கிறதுக்கு” மருதுவை நோக்கிக் கேட்ட ஆதவன் குரலில் கல்மிஷப் புன்னகை கூடவே அதில் குரூரமும்…
மருதுவின் பார்வை அப்போதும் மாறாமல் கண்மணியின் புகைப்படத்தையே பார்த்தபடி இருக்க…
“சொல்லு மருது… ஓகே வா… போட்டோவையே பார்த்தா எப்படி…. உனக்குத் தைரியம் இல்லைனா சொல்லு… நான் நம்ம சூரஜை வச்சு முடிச்சுக்கிறேன்…” என்ற போதே…. மருதுவின் கைகளில் கண்மணியின் புகைப்படம் சென்றிருக்க
“குட்… இப்போ இந்த போட்டோவை வச்சுக்க… பார்க்கலாம் உன்னோட லக் எவ்ளோ வொர்க் அவுட் ஆகுதுனு…” என்றபடியே மற்றவர்களைப் பார்த்தவன்….
”உங்களுக்கும் வேலை வச்சுருக்கேன்…” என்றபடியே…
ரிதன்யா… ரித்விகா புகைப்படங்களை காட்டியவன்…
“இவங்கள கடத்தனும்… கடத்தனும்னா… ஜஸ்ட் கடத்தனும்… அவ்ளோதான்…”
”இப்போ எல்லாரும் போகலாம்.. சீக்கிரமா இந்த வேலைக்கு கட்டம் கட்டலாம்…” என்று அனுப்பி வைத்திருந்தான்…
அப்போது காரியதரிசி
“நம்ம ஆளுங்க எல்லாரும் சொக்கத் தங்கங்க சார்… இவங்க மேல நீங்க சந்தேகப்பட்டுட்டீங்க… தேவையில்லாமல் நட்ராஜ் மேட்டர்…” ஆதவனிடம் சொல்லிக் காட்ட
”அதுனால என்ன… அந்த நட்ராஜை நாம தான் போட்டுத் தள்ள ஆள் அனுப்பிச்சோம்னு தெரியாமல் ரிஷி ரொம்பவே குழம்பிப் போயிருக்கான்தானே… யார் அந்த புது எதிரினு குழம்பித்தானே நிற்கிறான்… இன்னும் குழப்புவோம்… குழம்பின குட்டைலதான் மீன் பிடிக்க முடியும்… அவன் ஆடினான்…. வேடிக்கை பார்த்தோம்… இப்போ நாம ஆடுவோம்… ஆனால் அவன் வேடிக்கை பார்க்கக் கூடாது… துடிக்கனும்… நான் அனுபவிச்ச அத்தனை வேதனைக்கும் அவனைப் பதில் சொல்லியாகனும்… கண்டிப்பா சொல்லுவான்…”
வெறித்தனமாகக் கத்தியவன்…. தன் கோபத்தை ஆத்திரத்தை எல்லாம் மதுவில் காட்ட ஆரம்பித்திருக்க… அவன் சிற்றின்ப தேடல்களின் தேவைகளுக்காக சேவகம் செய்ய சேவகிகளும் அவனுக்காக காத்திருக்க… அதே நேரம் அவன் கண்களிலோ புகைப்படத்தில் பார்த்த கண்மணியும் அவள் கண்களுமே…
”இந்தக் கண்ல இருக்கிற திமிரும்… தெனாவெட்டும்… என்னையே அவ பக்கம் இழுக்குதேடா… அந்த ரிஷிக்கு இவ்வளவு பலமும் அதிர்ஷ்டமும் அவ பக்கத்தில இருக்கிறதுனாலதானே… அவ என் பக்கம் வந்துட்டா… எனக்கும் எல்லாமே என் பக்கம் வந்திருமா… என் அம்மா ரொம்ப நாளா மருமகள் கேட்டாங்க… அவங்க புருசனைத்தான் மேல அனுப்பிட்டேன்… மகனா நான் ஒண்ணுமே பண்ணலையே… கடைசி காலத்துல அவங்க ஆசைப்பட்ட மாதிரி மருமகள்…” போதையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே புரியாமலேயே… உளறியபடியே இன்னும் இன்னும் போதையில் மூழ்கி இருந்தான் ஆதவன்…
---
“என்ன மருது… ஹ்ம்ம்.. மஜாதான் உனக்கு…” என்று அவனின் கூட்டாளிகள் நக்கல் செய்து கொண்டிருக்க… மருதுவின் மனதிலோ சிந்தனை மட்டுமே…
“அந்த ரிஷிக்கு போன் செய்து இதைச் சொல்வோமா வேண்டாமா” யோசித்த போதே… அவன் அன்று தன்னை நம்பாமல் அடித்து துவைத்தது ஞாபகத்துக்கு வந்திருக்க…
“மணிக்காக மட்டுமே இதுநாள் வரை இவன்கிட்ட பேசினது… மணியைக் கடத்துற பொறுப்பு என்கிட்ட வந்துருச்சு… அவளை நான் இந்த ஆதவன் கிட்ட இருந்து நான் காப்பாத்திருவேன்… இதை எதுக்கு ரிஷிக்கிட்ட சொல்லனும்… அவன் தங்கச்சிங்க எப்படி போனால் எனக்கென்ன… என் மணி பத்திரமா இருக்கனும் அவ்ளோதான்… அவ மட்டும் தான் எனக்கு முக்கியம்…” என்றபடியே ரிஷியைத் தொடர்பு கொள்ளாமல் விட்டும் விட்டான்…
---
ரிஷியின் அலுவலகத்திற்கு வெகு நாளைக்குப் பிறகு சத்யா வந்திருந்தான்...
”சத்யா… நான் பார்த்துக்கிறேன் சத்யா… அவன் வெளில வந்தால் என்ன… ஒண்ணும் பிரச்சனை இல்லை… பார்த்துக்கலாம்… என்ன பண்ணிருவான்… ”
“இல்ல ஆர் கே… அந்த மருதுவையும் அன்னைக்கு அடிச்சுட்டீங்க… அவன் இனி நமக்கு சாதகமா இருப்பானா தெரியலை… நம்ம ஆளுங்க வேற அதிகமா இங்க இல்லை… ஃபேக்டரி திறந்தவுடன் அங்க வந்துட்டாங்க… இப்போ நட்ராஜ் சாரை வேற யாரோ கொல்லப் பார்த்திருக்காங்க… இன்னும் சொல்லப் போனால்… உங்க பிஸ்னஸ்ல கூட புதுசா எதிரிங்க வந்திருக்கலாம்… அவங்க கூட நட்ராஜ் சாரை குறி வச்சுருக்கலாம்.. நீங்க சிக்கல்ல மாட்டிக்கக் கூடாதுனு பார்க்கிறேன்… கொஞ்ச நாளைக்கு நான் இங்க இருக்கேன்… எனக்கு என்னமோ எதுவுமே சரியா படலை… ரிஷி உங்க உயிர் அது இங்க பல பேருக்கு முக்கியம்… தனசேகர் சாரை இழந்தது மாதிரி உங்களையும்” என்ற போதே சத்யாவின் குரல் மெலிதாக மாறி இருக்க
“ஹையோ சத்யா… யார் உயிரும் யார் கைலயும் இல்லை… புரிஞ்சதா… பாஸிட்டிவா நினைங்க…“ என்றபடி சத்யாவின் தோளைத் தட்டிக் கொடுத்தவன்
“இப்போ என்ன… நீங்க சென்னைல இருக்கனும் அவ்ளோதானே… இருங்க… போதுமா…” என்று சத்யா சென்னையில் இருக்க சம்மதம் சொல்லிவிட… சத்யாவும் இப்போது சிரித்திருக்க
“பாவம் உங்க ஃபேமிலி… என்னால சென்னைக்கும் நம்ம ஊர்க்கும் மாறி மாறி அலையுறாங்க… என்னைத்தான் திட்டப் போறாங்க” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்க…
“அப்டிலாம் அவங்க நினைக்க மாட்டாங்க ஆர்கே… எங்க எல்லோருக்கும் தனசேகர் சார் கடவுள் மாதிரி… அவர் புள்ளை நீங்க அதை விட ஒரு படி மேல“ சத்யா நெகிழ்வாக சொல்ல…
“சத்யா… முடியலை… இப்படி பேசறதை எப்போதான் விடப் போறிங்களோ... நான்தான் உங்களுக்கு ஏழேழெ ஜென்மத்துக்கும் கடன் பட்டிருக்கேன்…” என ரிஷி தழுதழுக்க ஆரம்பித்த போதே…. சத்யா வேகமாக பேச்சை மாற்றி இருந்தான்
“தினகரும் வேலனும் எங்க ஆர்கே” சத்யா கேட்க…
“போன் பண்ணிருக்கேன்… வந்துருவானுங்க….” ரிஷி சொல்லி முடிக்கவில்லை… இருவரும் அங்கே வந்திருக்க
“எங்கடா எங்க தலையோட வால் ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்னு நெனச்சோம்… வந்துருச்சு…” வேலன் சத்யாவை ஓட்ட…
“அதான் உங்க தலையை உங்க ஏரியாலேயே லாக் பண்ணி வச்சுட்டீங்களே… அப்புறம் என்ன வாலைப் பற்றி கவலைப்படறீங்க ” சத்யாவும் சளைக்காமல் ஓட்ட
“ம்க்கும்… நாங்களா லாக் பண்ணினது… கண்மணி இல்லத்தோட எக்ஸ்டெண்ட்… கண்மணி மாளிகை… சத்தமே இல்லாமல் எங்க தலை வேலைய முடிச்சிருச்சு பார்த்தீங்களா… வசந்த மாளிகை சிவாஜியோட நவீன வெர்ஷன் தான் எங்க அண்ணாத்த” என்ற தினகரை முறைத்த ரிஷி…
“ஏண்டா கண்மணிக்காக மட்டும் தான் பண்ணேன்னு நினைக்கிறீங்களா… நீங்களும் தாண்டா எனக்கு முக்கியம்… அன்னைக்கு கண்ணீர் விட்டீங்களே… எங்க ஏரியாவை விட்டு போயிருவீங்களான்னு… அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் தெரியுமா..” ரிஷி சொல்ல
“நம்பிட்டோம் அண்ணாத்த… நம்பிட்டோம்… ரிஷி அண்ணாத்த வேலன் தினகருக்காக அவங்கள விட்டு பிரிய முடியாமல் எங்க ஏரியால வீடு கட்றார்னு நம்பிட்டோம் அண்ணாத்த…”
“நம்பனும்… நம்பனும்… நம்பிக்கை தான் வாழ்க்கை தம்பிகளா… என் முதலாளியை விட்டு நான் போக முடியாமல்தான் அந்த இடத்தை வாங்கினேன்னு சொன்னாலும்… நீங்க அதையும் நம்பனும்.. ” ரிஷி சிரித்தபடி சொல்ல
”அண்ணாத்த பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடையாதுனு சொல்வாங்க… பார்த்துக்கங்க… ”
“அப்டினா… எனக்கு ஏழு ஜென்மத்துக்கும் சாப்பாடே கிடைக்காதுடா தம்பிங்களா” ரிஷி சொல்ல… அந்த அறை முழுவதும் அவர்களின் சிரிப்பு பரவியிருக்க… அப்போது ப்ரேமும் மகிளாவும் உள்ளே வந்தனர்
“ஹேய் ப்ரேம்… ஓய் மகிளா… வாங்க வாங்க… எங்க உங்க ஜூனியர் மகிளா வரலையா” முகமெங்கும் புன்னகையுடன் வரவேற்றான் ரிஷி…
”இல்லை ரிஷி… பாப்பாக்கு குல சாமி கோவில்ல முடி போடப் போறோம்… அதுதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்…” சொன்ன பிரேம்
தயங்கியபடியே ரிஷியின் முகத்தைப் பார்த்து பின் மனைவியின் முகத்தைப் பார்க்க…
ரிஷி என்னவென்று கேட்க
“அந்த ஃபங்ஷன் முடிந்த பின்னால… உங்க கல்யாண நாளையும் எங்க கல்யாண நாளோட சேர்த்து நம்ம ஊர்லயே விமரிசையா கொண்டாட்றதுக்கு பார்ட்டிலாம் ஏற்பாடு பண்ணியிருந்தோம்…”
ரிஷி புருவம் சுருக்க….
“எல்லாம் இவ ஏற்பாடு தான்… ஊர்ல உங்க கூட சண்டை போட்ட அன்னைக்கே ப்ளான் பண்ணிட்டா.. உங்களுக்கும் கண்மணிக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கனும்னு… ஆனால்” என்று நிறுத்திய போதே…
ரிஷி மகிளாவைத் திட்ட ஆரம்பித்திருந்தான்
“ஏன் மகி… “ என்று மகிளாவை கடிந்தவனிடம்... அவன் திட்டியதை எல்லாம் காதில் வாங்காமல்
“நான் வேணும்னா கண்மணி கிட்ட பேசவா மாமா… நான் சந்தோசமா இருக்கேன்னு அவகிட்ட சொல்லவா… எனக்காகத்தானே அவங்க உன்னை பழி வாங்கினாங்களாம்” மகிளாவின் குரல் மெலிந்து வந்திருக்க…
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் முகத்தில் சலனமற்ற பார்வையே… பிரேமின் கைகளைப் பிடித்துக் கொண்டவன்…
“சத்தியமா இவ்ளோ பொறுமையானவரை… நல்லவரை நான் எங்கேயும் பார்த்ததில்லை ப்ரேம்… இவ அப்பா உண்மையிலேயே சொக்கத் தங்கத்தைத்தான் அவர் பொண்ணுக்காக பார்த்திருக்காரு….” என்றவன்… அடுத்த நொடியே மகிளாவைப் பார்த்து முறைத்தபடியே
“ப்ரேம்… என் அத்தை மக இன்னும் வளரவே இல்லை… நீங்களும் வளர விட மாட்டீங்க போல… இவ என்ன சொன்னாலும் கேட்பீங்களா என்ன… யோசிக்கவெல்லாம் மாட்டீங்களா… கொஞ்சம் மிரட்டவும் பழகிக்கங்க” என்றவன் முகத்தில் நிம்மதியான புன்சிரிப்பு பிரேமைப் பார்த்து…
“எனக்கும் கண்மணிக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை… முக்கியமா நீ காரணம் இல்லை… போதுமா…” என்று மகிளாவின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்தும் விட… அதைக் கேட்டும் மகிளாவின் முகம் கூம்பி இருக்க
அவளருகே வந்தவன்…
“லூசு… மூஞ்சிய இப்படி வச்சுக்காத… பார்க்க சகிக்கலை… போட்ட மேக்கப் எல்லாம் வேஸ்டாகிருச்சு பாரு” ரிஷி சொல்லி முடிக்கவில்லை… மகிளா அவனை அடிக்க கையை ஓங்கி இருக்க… வேகமாக அவளை விட்டு விலகியவன்…
“இடிதாங்கி… அடிதாங்கி… அனைத்தும் இவ்விடம் மட்டுமே தாங்கும்” அவள் முன் ப்ரேமை நிறுத்தியவனாக…
“அல்ரெடி உன் மாமாக்கு அன்லிமிட்டெட்ல அள்ளிக் கொடுத்திருக்கா அவன் பொண்டாட்டி… தாங்காதுமா இந்த பாடி” தன் நிலைமையையும் சொல்லத் தவறவில்லை…
அடுத்த அரைமணி நேரத்தில் வந்தவர்கள் அனைவரும் சென்றிருக்க… ரிஷி தினகர் வேலன் மட்டுமே இப்போது ரிஷியுடன் இருந்தனர்…
சற்று முன் வரை கலகலப்புடன் இருந்தவனா எனும்படி அதற்கு முற்றிலும் மாறான நிலையில் ரிஷி அமர்ந்திருக்க…
”என்ன அண்ணாத்த யோசனையா இருக்க… மணி அக்காவை நெனச்சா “ என வேலனும் தினகரும் கவலையுடன் கேட்க… ரிஷியின் இதழிலோ விரக்தியான புன்னகை மட்டுமே…
“ஹ்ம்ம்… யோசனைதான்… ரொம்ப நாளா ஒரு விசயத்தை என்னை விட்டு தள்ளி வச்சுருந்தேன்…. அதை மறுபடியும் தொட்ற நாள் வந்திருமோன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…”
அடுத்த நிமிடமே அவன் எதைச் சொல்ல வருகிறான் எனப் புரிந்ததால்
“அய்யோ அண்ணாத்த… மணி அக்காக்கு மட்டும் தெரிந்தால்… பின்னி பெடலை எடுத்துரும்… ஏற்கனவே சண்டை… இது வேறயா…” வேலனும் தினகரும் அலறி இருக்க…
“நீங்க எதுக்குடா அலறுறீங்க... அவளுக்குத் தெரியனும்டா… துணையிலும் பெரிய துணை மாதுவின் துணையே… அஃதில்லையேல் மதுவின் துணையே பெருந்துணை…” என்றவன்… அதை அவன் மனைவிக்கும் காட்டியிருந்தான் அவன் முதல் வருடத் திருமண நாளில்…
-----
/* ஒற்றை வழி பாதையிலே
உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலே
உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட
அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா */
Lovely
Ipaum ivanuku over confidence mani ah kapathiruvanam mkum
Aadavan marthu kiyala tana