அத்தியாயம் 70-2
கண்மணி அங்கிருந்து செல்ல, ரிஷியும் மின்சாரம் பிரச்சனையான வீட்டை நோக்கிச் சென்றவன்… அங்கிருந்த மெயினைப் பார்த்து…
“ஃபியூஸ் போயிருக்கு…” என்றபடியே அதைச் சரி செய்து கொடுத்து விட்டு… மின்சாரம் மீண்டும் வந்ததை உறுதிபடுத்தி விட்டுத்தான்… மாடி அறையை நோக்கிப் போனான் ரிஷி..
போனவன்… அறையை நோக்கிப் போகவில்லை..கண்மணி மாடி அறையில் இருக்க மாட்டாள் என்பது தெரியாதவனா… மாடியை நோக்கிச் செல்ல… கண்மணியோ… ரிஷியின் வடிவாக மாறி இருந்தாள்…
இவனது வழக்கம் அது… மன அழுத்தம் அதிகமானால்… அது தாங்காமல் மாடியில் நின்றபடி வெட்டவெளியை வெறித்து நின்றிருப்பது… இன்று அவன் மனைவி அவன் நிலையில்… அவனால்… அவன் குடும்பத்தால்… அவன் தங்கையால்
முன் நெற்றிக் கேசத்தை அழுந்தக் கோதியவனின் மனம்…. பல்வேறு யோசனையில்… அனைத்துமே கண்மணி என்ற ஒரே இடத்தை நோக்கி மட்டுமே…
எண்ணம் மட்டும் அல்லாது… இப்போது கால்களும் அவளை நோக்கியே….
கண்மணியோ இவனின் வருகை உணர்ந்தும், திரும்பாமல் நிற்க… வார்த்தைகளின்றி… கைப்பிடிச்சுவரில் அவள் இருபுறமும் கரம் வைத்து... ரிஷி அவளைத் தன் கைகளுக்குள் சிறை வைத்தான்… அவள் பின் நின்றவாறே….
அந்த சிறையை விரும்பும் பாவையாக… அவளுமே அவன் மார்பில் சாய்ந்தாள் எந்த ஒரு ஆர்ப்பாட்டமுல் இல்லாமல்… அவன் மார்பில் தலை சாய்ந்தபடியே
“ரிஷி..” என்றவள் குரலில் வழக்கமான கர்ஜிக்கும் கண்மணியின் ஓங்கி ஒலிக்கும் குரலும் இல்லை… ரிஷியை ரிஷிக்கண்ணாவாகத் தாங்கும் அவனின் கண்மணியாகவும் அவள் குரல் இல்லை…
“எனக்கு அழணும் போல இருக்கு ரிஷி… ஆனால் அழ முடியலை…” என்றவள் திரும்பி அவன் நெஞ்சில் முகம் புதைக்க… பதில் சொல்லவில்லை அவன்... மாறாக.. கைப்பிடிச் சுவரில் இருந்த கரங்களை விலக்கியவன்… கண்மணியை முற்றிலுமாக சிறை செய்திருக்க… அந்த சிறையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்… அவள் மனதின் வலிக்கான மருந்து அவன் கரங்களின் ஆறுதலில்தானோ என்னவோ... என்னமோ... மெல்ல மெல்ல தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தவளாக
“நான் ஓகே ரிஷி இப்போ… ஆனால் ரிதன்யாவை வீட்டை விட்டு போன்னு நான் சொன்னதும் உங்கள கஷ்டப்படுத்தும்னு இந்த மரமண்டைக்கு புரியலை ரிஷி… “
“ரிதன்யா என்ன சொன்னா” ரிஷி கேட்டான் இப்போது… ஆனால் அவளிடமிருந்தோ பதில் இல்லை…
சட்டென்று அவள் முகத்தை நிமிர்த்தி… அவளது முகத்தைப் பார்க்க… அலைபாய்ந்த விழிகளை ஆராய்ச்சி செய்தவனாக…
“நீ சொல்லாம இருந்தால் அதைவிட நான் கஷ்டப்படுவேன்…’ நிர்பந்தித்தவனாக அவளையேப் பார்க்க… அவனது முகத்தில் முதலில் இருந்த இலகுத்தன்மை இல்லை… கண்டு கொண்டவளாக… சட்டென்று தன்னை… தன் முகத்தை மாற்றியவள்
”அவங்க மேல நான் உரிமை எடுத்துக்கூடாதாம்… அதாவது அவங்க விசயத்தில் நான் தலையிடக் கூடாதாம்” என்று தன் விழிகளை விரித்து சின்ன கல்மிஷப் புன்னகையோடு சொன்னவள்…
“ஆனால் அவங்க மட்டும் என் மேல உரிமை எடுத்துக்குவாங்களாம்…. அது ரிதன்யாவுக்கே தெரியலை” அவள் சொன்ன வார்த்தைகளில் முகம் சுருக்கியவனாக… ஓரளவு கிரகித்தவனாக
”அடிக்க வந்தாளா??” ரிஷி இந்த அளவுதான் நினைத்தான்… அதற்கு மேல் நினைத்துப் பார்க்கவில்லை... நினைக்கவும் தோன்றவில்லை
“கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தேன்… அறஞ்சுட்டாங்க… லைட்டாத்தான் இருந்தாலும்….கோபம் உச்சிக்கு ஏறிருச்சு.. … அதான் அப்படி சொல்லிட்டேன்.. ஒரு நொடி உங்களையே மறந்துட்டேன் ரிஷி”
அவள் சொல்லி முடித்தாளோ இல்லையோ... அடுத்த நொடி... அவன் கண்களில் சிவப்பாக நரம்புகள் தோன்ற ஆரம்பித்திருக்க… நெற்றிப் பொட்டில் அவனின் கோபம் உச்சத்தில் இருந்தது நன்றாகவே தெரிய ஆரம்பித்திருக்க… ரிஷியை முற்றிலுமாக அறிந்திருந்தவள்… அவளை அணைத்திருந்த அவன் கரங்களின் இறுக்கம் அறியாமல் இருப்பாளா????… இல்லை அவன் கோபம் உணராமல் இருப்பாளா
”அவங்ககிட்ட நான் உரிமை எடுத்துக்கிறது பிடிக்கலையாம்… ஆனால் என்கிட்ட அவங்க உரிமை எடுத்துப்பாங்களாம்… இது என்ன பாலிசி ரிஷி… எனக்கு அதுதான் புரியலை… மத்தபடி நான் பெருசா எடுத்துக்கலை… கூல்“ நிமிர்ந்து சிரித்தவளை பார்த்தபடி நின்றிருந்தான் ரிஷி… இப்போது அவனின் கோபம் மறைந்து… வேதனையின் சாயல் மட்டுமே
இவன் செல்லமாக ரவுடி என்று அழைத்தாலும்… அவள் மனைவி ரவுடி தான் … இதுவே ரிதன்யா இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அந்த ஆளின் நிலை என்ன ஆகி இருக்கும் என்று அவனுக்கு தெரியாதா என்ன…
ரிஷி நினைத்த போதே
“ஏன் திருப்பி அடிக்கலைனு எனக்கே தெரியல ரிஷி… உங்க தங்கைன்லாம் விடலை… என்னமோ தெரியலை ரிதன்யா மேல எனக்கு கோபம் வர மாட்டேங்குது… பதிலா என்னை ஏன் அவங்களுக்குப் பிடிக்கலைன்ற விரக்திதான் வருது… ”
இதழ் சுழித்து விரக்தியாக சிரித்து வைத்தவன்… அமைதியாகவே இருந்தான் இப்போதும்… இப்படியும் சொல்லலாம்... அவளை பேச விட்டான்
கண்மணியும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்….
“பலமாலாம் இல்லை ரிஷி… லைட்டா… கை பட்டுச்சு அவ்ளோதான்… அவங்களுக்கும் அடிக்கனும்னு எண்ணம்லாம் இல்லை ரிஷி… கை ஓங்கதான் ட்ரை பண்ணிருப்பாங்க போல…. அவங்கள மீறி பட்றுச்சு… ” கண்மணியும் பொய் சொல்வாள் என உணர்ந்த நிமிடங்கள்…
”நிறுத்துரியா… அடி வாங்கிட்டு வந்து இங்க கதை சொல்றா…” என்ற போதே…. மாடிப்படிகளில் யாரோ மேலே ஏறி வரும் அரவம் இருவருக்கும் கேட்க… வேகமாக அவனை விட்டு விலகப் போனவளை விடாமல் தனக்குள்ளே வைத்தபடி சுவரில் சாய்ந்து கொண்டபடி… மாடிப்படியில் கவனம் வைக்க… கண்மணியும் பெரிதாகப் போராடவில்லை…. அவன் அணைவிலேயே நின்றிருந்தபடி அவளும் மாடிப்படியைப் பார்க்க…
அங்கு வந்தவளோ ரிதன்யா…
ரிஷி கண்மணி இருவரையும் ஒன்றாகப் பார்த்தவள்.. அவர்கள் அந்த நிலையில் நின்றிருப்பதை எதிர்பார்க்கவில்லை.. அதே போல இவளைப் பார்த்து விலகவும் நினைக்கவில்லை இருவரும்…
“இப்போது நிற்பதா… இல்லை வந்த வழியே அப்படியே கிளம்புவதா… “ ரிதன்யாவுக்கே தெரியாத நிலை… எப்படியோ.. அதிர்ந்த பார்வையை பெரும்பாடு பட்டு மாற்றியபடி… சமாளித்தவளாக… தன் அண்ணனைப் பார்த்தும் பார்க்காமலும்
“ப்ரேம் அண்ணாவும்… மகி” என்று ரிதன்யா ஆரம்பித்தபோதே…
“நான் போன்ல பேசிக்கிறேன்… கெளம்பு” பட்டென்று சொல்லி அவளின் வார்த்தைகளைக் கத்தரித்து மீண்டும் மனைவியின் புறம் திரும்பி விட ரிதன்யாவின் முகம் சட்டென்று சிவந்தது அவமான உணர்வில்…
“வீட்டுக்கு வந்த விருந்தாளியை வழி அனுப்பக் கூட வரமாட்டானா… என்னையும் கிளம்பச் சொல்கிறான்…” கண்களில் கண்ணீர் படலம் காட்சியை மறைத்தாற் போல பிரமை…
இருந்தும்
“அண்ணா” என்று தொண்டை அடைக்க மீண்டும் அவனை அழைத்தவளிடம்…
“ரிது நான் உன்கிட்ட பேசினப்போ… யாராவது வந்து தொந்தரவு பண்ணாங்களா… அண்ணா தங்கை… நாம பேசிட்டு இருக்கும் போதே டீசென்ஸி மெயிண்டெயின் பண்ணாங்க மத்தவங்க… நீயும் ஃபாளோ பண்ணா ”
என்று நிறுத்தியவன்…. அதற்கு மேல் பேசவில்லை… வார்த்தைகளை அவளையே நிரப்பிக் கொள்ள அவகாசம் கொடுத்து அவளைப் பார்க்க
அதற்கு மேல் ரிதன்யாவும் நிற்க வில்லை.. கண்ணைக் கரிக்க… விழி நீரைத் துடைத்தபடி வேகமாக கீழே இறங்கிப் போய்விட்டாள்…
---
“அம்மு… “ தன்னை அழைத்தவனிடம்… அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கணித்து
“தங்கச்சிக்காக மன்னிப்பு கேட்கிறது … அப்புறம் விளக்கம்… இதெல்லாம் கேட்க வேண்டாம்… நீங்க வர்றதுக்கு முன்னாடி மனசெல்லாம் இறுக்கமா இருந்தது… ஆனால் எப்போ வந்தீங்களோ அந்த நிமிசமே அதெல்லாம் மாறி… மனசு இலேசான மாதிரி ஃபீல்…இதோ இப்போ அப்படியே காத்துல பறக்கிற மாதிரி ஃபீல்… நீங்க என் பக்கத்தில இருந்தால் லைட்டா ஃபீல் பண்றேன் ரிஷி…”
”ஹ்ம்ம்ம்” என்று மட்டுமே அவள் வார்த்தைகளுக்கு பதில் சொன்னவன் மனமோ வேறெதேதோ கணக்குப் போட்டுக் கொண்டிருக்க…
“எஃன்னை எங்கேயாவது லாங் ட்ரைவ் கூட்டிட்டு போங்க ரிஷி… ஆஸ்திரேலியால கேட்டது… இன்னுமே நீங்க நிறைவேத்தலை… இப்போ இன்னைக்கு உடனே” என்றவள்….
“ஃபாஸ்ட்டா… ஸ்பீடா… பறக்கனும் நான்… அந்த மாதிரி ஒரு ட்ரைவ்… ஓகே சொல்லுங்க ரிஷி… ப்ளீஸ்… ப்ளீஸ்… ரிஷிக்கண்ணா… போலாமா… மாட்டேன்னு சொல்லாதீங்க… உங்க கண்மணிக்காக… போகனும் ரிஷி” அடம்பிடிக்கும் குழந்தையாக அவனின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கேட்க…
ரிஷியும் மற்றதெல்லாம் விட்டவனாக…
”போகலாம்… போகலாம்... இப்டியே போக முடியாதே… புடவையை மாத்திட்டு சல்வார் போட்டுட்டு வா…“ என்று அவன் சொல்ல வேகமாகத் தலையாட்டியபடி தன்னை விட்டு நீங்கியவளை…. பார்த்தபடியே நின்றிருந்தான் ரிஷி… வெறுமையான எண்ணங்களோடு
“இதோ இந்த மாடியில் எத்தனை நாளோ… அவனுக்கு ஆறுதலாக இருந்தவள்.. இன்று இவனின் அணைவில்…”
“இவன் தேங்கிய போதெல்லாம்... இவனுக்கு ஒரு அன்னையாக இருந்து தேற்றியவள் இன்று குழந்தையாக பரிதவிக்கிறாள்….”
கண்மணி மிகவும் வருந்தி இருக்கிறாள் என்பது நன்றாகவேத் தெரிந்தது ரிஷிக்கு அவளின் உடல் மொழியில்.. பார்வையில்… பேசும் வார்த்தையில்…
ரிதன்யா- தங்கையே அவனுக்கு தூரமாகிவிட்ட … பாரமாகிவிட்ட உறவாக மாறியிருந்தாள் ரிஷிக்கு… பெருமூச்சு விட்டவனாக தன் இருசக்கர வாகனத்தை எடுக்க கீழே இறங்கி வர
“அண்ணா … நீ என் அண்ணாதானா” குரல் கேட்டு பட்டென்று அவள் குரல் கேட்ட திசை நோக்கிப் பார்த்தான் ரிஷி…. அங்கிருந்த மரத்தடியில் இருந்து அவனை நோக்கி வந்தாள்… ரிதன்யா
அருகே வந்தவளிடம்... மிக இயல்பாக
“நீ அப்படி நினைக்கிறியா ரிது… அதாவது நான் உன் அண்ணான்னு… ”
”உங்ககிட்டலாம் கேஷுவலா… ஃப்ரெண்ட்லியா இருந்தது தப்புனு நினைக்க வச்சுட்ட இன்னைக்கு… என்னை மாதிரியே கண்மணியையும் நினச்சுட்ட… அல்ரெடி உன்கிட்ட சொல்லிருக்கேன்… அவ எனக்கு பிரிஷியஸ்னு”
ரிதன்யாவுக்கோ பற்றிக் கொண்டு வந்தது அவன் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே
“அவளப் பற்றிப் பேசாத… உனக்கு அவ்ளோ முக்கியமா போய்ட்டாளா அவ… அதுவும் எங்கள எல்லாம் விட” கிட்டத்தட்ட கத்தினாள் என்றே சொல்ல வேண்டும்… அந்த அளவுக்கு அவள் குரல் உயர்ந்திருக்க.
“ஷ்ஷ்” தன் உதட்டில் கை வைத்து அவளை அமைதியாக இருக்குமாறு அடக்கியவன்…
“கத்துனா நீ பெரிய ஆள்னு நினைப்பா…”
“இன்னைக்கு நீ பண்ணின காரியத்துக்கு நீயா இல்லாம வேற யாராவது இருந்திருந்தா” ரிஷி ஆரம்பிக்க
“என்ன பண்ணிருப்பாளாம் …” ரிதன்யா இப்போதும் எகத்தாளமாகக் கேட்க… ரிஷியோ
”கண்மணிய இழுக்காத… அவ இல்லை நான்… நீன்றதுனலா என்கிட்ட இருந்து தப்பிச்ச… இல்லை… அவ மேல கை வச்சவங்கள ” ரிஷியை சொல்லி முடிக்க விடவில்லை
“என்ன பண்ணிருப்ப… கொலை பண்ணிருவியா என்ன..” ரிதன்யா நக்கலாகக் கேட்க
கண்களை மூடித் திறந்தவன்… இலேசாகச் கோணல் சிரிப்பை பதிலாகக் கொடுத்தவன்… கழுத்தில் கைகொடுத்து தலையை இடவலமாக திருப்பியபடி…
“உன் அண்ணனை நீ இன்னும் பழைய ரிஷிகேஷாவே நினைக்கிற… அப்படியே நெனச்சுக்கோ… உனக்கும் பிரச்சனை இல்லை… அப்டியே இருந்துக்கோ” அடக்கப்பட்ட இறுக்கம் பார்வையில்… வார்த்தைகளிலோ நிதானம் … சட்டென்று அவளுக்குள் இரத்தம் ஜில்லிட்டு நின்றார்ப் போல உணர்வு…
ரிதன்யா கூர்மையாகப் பார்த்தாள் தன் அண்ணனை…
அவன் கண்கள் அந்நியமாக அவளைத் தள்ளி நிறுத்திப் பார்த்தாற் போன்ற உணர்வு…. பிரமைதான் என்று தானே தள்ளி வைத்தவளாக…
ரிஷியின் அருகே சென்று அவன் கைகளை தனக்குள் வைத்தபடி... கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்
“நான் உன்னை இன்னும் என் அண்ணனாத்தான் பார்க்கிறேன் அண்ணா… ஆனால் நீதான் கண்மணி கண்மணின்னு அவ பின்னால ஓடிட்டு இருக்க… இல்லையில்ல உன்னை அவ பின்னால ஓடி வர வைக்கிறா… கொஞ்ச நேரம் முன்னாடி வந்து என்கிட்ட பேசுனியே அந்த பாசம் எங்க போனுச்சு… அப்போ கூட என் அண்ணா எங்களுக்காக இருக்கிறான்னு நெனச்சேன்… ஆனால் அவகிட்ட பேசிட்டு வந்த பின்னால நீ யாரோ மாதிரியே இருக்கன்னா… எப்படி… உன்னைக் கைக்குள்ள வச்சுருக்கான்னு உனக்குத் தெரியலையா.. ஆனால் எனக்கு இப்போ எல்லாமே புரியுது… உன் பக்கத்தில இருக்கும் போது ஒண்ணுமே தெரியாத நின்னாளே அப்போ அந்த நிமிசம் எல்லாம் தெளிவா விளங்கிருச்சு… “ என்றவள்
“அவ நடிக்கிறது உனக்குத் தெரியலையாண்ணா… கண்ணத் திறந்து பாருண்ணா… உனக்கும் எல்லாமே புரியும்ணா” அவன் கண்களைப் பார்த்து கைகளைப் பிடித்தபடி… கெஞ்சிய ரிதன்யாவின் முகத்தில் கவலை மட்டுமே இருக்க
சிரித்தவன்
“எல்லோருக்கும் ரெண்டு கண் தான்… ஆனால் எனக்கு என் கண்மணி மூணாவது கண்… இதுக்கு மேல நான் கண்ணத் திறந்து பார்க்கனுமா… ” அவள் கைகளில் இருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டவன்
“கண்மணிக்கு ஒரு சின்ன பிரச்சனைனாலும் என்னைப் பொறுத்தவரை அது பெருசுதான்… அதுக்கு காரணமா யாரா இருந்தாலும்… அது நீயா இருந்தாலும் நான் தூக்கிருவேன்… சோ… சீக்கிரமா இன்னொரு வீட்ல வாழத் தயாராகு… விக்கியப் பற்றி நான் சொன்னதை யோசித்து எனக்கு நல்ல முடிவா சொல்லு… நான் உன்னைக் கம்பெல் பண்ணல… என் பொண்டாட்டிக்கே உரிமை இல்லாத இடத்தில நான் தெரியாமல் சொல்லிட்டேன்… அதுக்கு ஒரு சாரி” சொன்ன ரிஷியை அதிர்ச்சியுடன் நம்ப முடியாத பாவனை பார்த்தவள்…. வார்த்தையின்றி நின்றிருக்க…
“உன் மேல அவ்ளோ கோபம் எனக்கு இருக்கு… உன்னைத் திருப்பி அடிக்க நொடி போதாது... ஆனால் அதைக் காட்ட முடியாத நிலை… சொல்லக் கூட முடியாமல் பரிதவிக்கிறா... அவளுக்கு உன்னைக் கம்ப்ளெயிண்ட் பண்ணக் கூட மனசு வரலை... அவளப் போய்... ப்ச்ச்.. உன்கிட்ட பேசி டைம வேஸ்ட் பண்ண விருப்பம் இல்லை.. எனக்கு.... அவளோட மனநிலையை மாத்தனும்... அதுதான் எனக்கு முக்கியம்... அதுக்காக உன்னை விட்டுட்டுப்ப் போகிறேன்... மனசு வலிக்குது ரிது... இத்தனை வருசத்துல அவ குரல் இறங்கி ஒரு நாள் கேட்டதில்லை… அப்படிப்பட்டவள” என்ற போதே அவன் அலைபேசி ஒலிக்க… எடுத்துப் பார்த்தவன்…
“எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு… கெளம்புறியா…” என்றபடி தனது அலைபேசியை காதில் வைத்தபடி…
“ஹான் சத்யா… நான் தான் கால் பண்ணேன்…”
“நான் சொல்றதை கவனமா கேட்டுக்கங்க… என்னோட காலேஜ்ல வந்து விசாரிச்சாங்கள்ள… அவங்க டீடெயில்ஸ் சொல்றேன்…” என்று ஆரம்பித்தவன்… ரிதன்யா இன்னுமே ஸ்தம்பித்து அங்கு நின்றிருப்பதைப் பார்த்தவன்…
”ஒரு நிமிசம் சத்யா… இங்க கொஞ்சம் பிரைவசி இல்லை… வெயிட் பண்ணுங்க… “ என்று தள்ளிச் செல்ல… ரிதன்யாவின் கண்களிலோ… தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது…
”எப்படி இருந்த தன் அண்ணன்… இப்படி எப்படி மாறிப் போனான்… “
”சற்று முன் அவளிடம் தனியே பேசும் போது கூட எப்படி பேசினான்… விக்கிக்கும் தனக்கும் திருமணம் என்பதை சொல்லி என் சம்மதத்தை கேட்ட போது கூட இப்படியெல்லாம் பேசுவான் நினைக்கவில்லையே…”
”அந்த கண்மணி… அதாவது அவன் மனைவி இடையூறாக மாறியதால் தனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறானா…”
அப்படியே ஆணி அறைந்தார்ப் போல அதிர்ந்து நின்றாள்
சில மணி நேரங்கள் முன்பு தன்னை தனியாக அழைத்து அவன் பேசியதை நினைத்துப் பார்த்தாள்…
”விக்ரம் உன்னை விரும்புறான்… நீ என்ன சொல்ற… எனக்கு அவனைப் பிடிச்சுருக்கு… ஆனால் நீ என்ன சொல்றியோ… அதுதான் கடைசி” கண்மணிக்கும் அவளுக்கும் நடந்த பிரச்சனையைப் பற்றி பேசாமல் விக்கியை இழுக்க… இவளும் மற்றதெல்லாம் மறந்து அவள் அண்ணனோடு பேச ஆரம்பித்தாளே… ஆனால் இப்போதுதானே தெரிகிறது ஏன் இந்த அவசர திருமண ஏற்பாடு என்று…
அப்படியே கல்லாக மாறி நின்றிருந்தவளின் அலைபேசியும் சரியாக அடிக்க… அது விக்ரமுமாக இருக்க… கண்களில் அருவி பொங்க… அதைத் துடைத்தபடி… மாடிக்கு சென்றாள் ரிதன்யா…
அதன் பிறகு என்ன… அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு ரிதன்யாவின் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்வது என்பது மட்டுமே பிரதானமாகிப் போனது விக்கிக்கு….
“என்னடி… உன்னை சபெஜெக்டுக்குள்ளேயே இழுக்காமல்… உங்க அண்ணாகிட்ட பேசி… நம்ம மேரேஜுக்கு சம்மதம் வாங்கினதுக்கு சந்தோசமா ஏதாவது தருவேன்னு பார்த்தால்… இப்படி அழுது வடியுற” ஒருகட்டத்தில் விக்கி கடுப்பாக கோபமாக குரலை உயர்த்த… அதன் பின்னரே ரிதன்யா சமாதானம் ஆகி இருந்தாள்….
ஒரு வழியாக சமாதானம் ஆனவள் சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்து விட்டாள்…
“நான் அடிச்சது தப்பா விக்கி… அண்ணா எப்படி பேசுறாரு தெரியுமா… அவர் இப்படியெல்லாம் பேசுற ஆளே கிடையாது” என மீண்டும் தேம்ப ஆரம்பிக்க…
அவள் குற்ற உணர்வோடு பேசுவதைத் தாங்க முடியாதவனாக
“ஏன் அவன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் அந்த ரைட்ஸ் இருக்கா என்ன…’ விக்கி எடுத்துக் கொடுக்க…. ரிதன்யா ஓரளவு அமைதி ஆனவளாக
“உங்கள் அடிச்சது இன்னுமே எனக்கு ஆறலை விக்கி… ஆனால் இதுவரை அவகிட்ட அண்ணா ஒரு வார்த்தை அவகிட்ட பேசினது இல்லை…. தட்டிக் கேட்டது இல்லை.. ஆனால் இன்னைக்கு என்கிட்ட வேற யாராவது இருந்திருந்தால்னு எப்படி உருமுனாங்க… அப்போ அண்ணன் முகத்தைப் பார்க்கனுமே.... அவ அழக் கூட இல்லை... குரல் மாறிருச்சாம் கண்மணிக்கு... அதுக்கு இவ்ளோ பெரிய சீன் தெரியுமா... ” மூக்கை உறுஞ்சியபடியே சொன்னவள்…
”அப்படி என்ன அவ பெரிய இவள்னு… அவளைத் தாங்கிப் பிடிச்சுட்டு இருக்காங்க… ஏன் விக்கி என் அண்ணன் இப்படி மாறுனான்… அப்பா போனாங்க… பணம் போச்சு… அம்மாக்கு உடம்பு சரி இல்லாமல் போனது… இப்போ எங்க அண்ணாவும் எங்களுக்காக இல்லை… என் பழைய அண்ணன நாங்க பார்க்கவே முடியாதா… என்னை அரிசி முட்டைனு கிண்டல் பண்ற என் அண்ணன் வேணும் விக்கி… “ அவளின் குரல் மீண்டும் தழுதழுக்க ஆரம்பிக்க
“ரிது… ரிதும்மா… இப்போ எதுக்கு இவ்ளோ அழுகை… நானும் அங்க இல்லை… நீ வருத்தப்படறதை பார்க்க… கஷ்டமா இருக்குடா… நம்ம ரிஷியை பற்றி தெரியாதா என்னா… அவனுக்கு யாரையுமே தப்பா பார்க்கத் தெரியாது… கள்ளம் கபடமில்லா மனசு… அதை யூஸ் பண்ணிகிட்டு அவ ஆடிட்டு இருக்கா… அந்தக் கண்மணியோட வேஷம் கலையுற நாள் சீக்கிரம் வரும்… நம்ம ரிஷி எங்க போகப் போறான்… ” என்றவனின் குரலில் இருந்த ஸ்திரத்தில்… ரிதன்யா தன் கவலைகளை விட்டவளாக… கண்ணைத் துடைத்தவளாக
“ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் விக்கி… உங்களுக்கு ஏன் கண்மணியை இவ்ளோ பிடிக்கலை” முதன் முதலாக ரிதன்யா விக்கியிடம் கேட்க… விக்கியும் உடனே விளக்க ஆரம்பித்தான்
அன்று நடந்ததைச் சொல்லி முடித்தவன்
“உன் அண்ணன் கூட சைட் அடிக்கிறேன்ற பேர்வழியா எல்லா பொண்ணையும் பார்ப்பான்… ஆனால் நான் ஒரு பொண்ணை கூட நிமிர்ந்து பார்க்காதவன்… அப்படிப்பட்ட என்னைப் போய் அவளைத் தப்பா பார்க்கிறேன்னு தப்பா நினைச்சுட்டா… அப்புறம்… அது என்னமோ தெரியலை.. பார்த்த முதல் தடவையில் இருந்தே வேணும்னே ரிஷிக்குத்தான் அவ முக்கியத்துவம் கொடுத்த மாதிரி ஃபீல்… அதே மாதிரி ரெண்டு மூணு தடவை… நடந்துச்சு… ஆனால் அவ யாரோவா இருந்திருந்தா அதெல்லாம் பெரிய விசயமா இல்லாமல் போயிருக்கும்… ரிஷிக்கு பொண்டாட்டியா வந்து நிப்பான்னு கனவுல கூட நினைக்கலை… உனக்குத் தெரியுமா… இவளால கண்மணின்ற பேர் கூட வெறுப்பாகிருச்சு…இதுல என்ன கொடுமைனா.. என் அண்ணா பொண்ணு பேர் கூட கண்மணிதான்” விக்கி சொல்லி முடிக்க…
அவன் சொன்னதை எல்லாம் கேட்டபடி இருந்தவள்… இப்போதும் பேசாமல் இருக்க… அவள் மௌனம் உணர்ந்தவனாக
‘இப்போ என்ன சொல்லிட்டான் என் நண்பன்… இவ்ளோ ஃபீலிங்… ” என்றவன்
”பார்த்துக்கலாம் வா… என் பொண்டாட்டிய திட்டிட்டானா அந்த ராஸ்கல்… அவன” என விக்கி சொல்ல
“ஹலோ… என் அண்ணாவை மரியாதை இல்லாமல் பேசுனீங்க” என ரிதன்யா அவனிடம் பொய்க் கோபம் கொள்ள… விக்கி சிரித்தபடி….
“ஹ்ம்ம்ம்… அண்ணா-தங்கை பெரிய ஷிப் போல…. பயமா இருக்கே” பயந்தவனாக விக்கி பாவனை செய்ய…. ரிதன்யாவின் சிரிப்பு கலகலப்பாக வெளிவர
“ரிது… ரிஷிக்கு நாம இருக்கோம்னு அவன் உணர ஆரம்பிச்சாலே போதும்… அந்தக் கண்மணியெல்லாம் ஒரு ஆளே கிடையாது நமக்கு… விடு… கண்மணின்ற மாயைல இருக்கான்… சீக்கிரம் அதை விட்டு வெளிய வருவான்… நான் வர வைப்பேன்” என்ற போதே… அவனது அலைபேசியில் இரண்டாவது அழைப்பு வர…
“உங்க அண்ணாதான் கால் பண்றான்… வை… அப்புறம் பேசுறேன்” என்று விக்கி இவளது அழைப்பை துண்டித்தபடி ரிஷியின் அழைப்பை ஏற்க
”விக்கி… நீ இந்தியா வரும்போது… நான் ஆதவனோட பார்ட்டனர்ஷிப்ல இருக்க மாட்டேன்… நீயுமே… “ என்று ஆரம்பிக்கும் போதே ரிஷி தடலாடியாகச் சொல்ல
புருவம் சுருக்கினான் விக்கி
“ஏண்டா… என்னாச்சு… 3, 4 மன்த்ஸ் கழிச்சு பண்ணப் போறேன்னு சொன்ன விசயத்தை இப்போவே ஏண்டா பண்ற…” விக்கி யோசனையுடன் கேட்க
”அவ்ளோ நாள்… எதுக்கு… தேவையில்லைனு தோணுச்சு…“ சட்டென்று சொன்னவனிடம்
”அந்த அளவு ரிது… உனக்கு… சாரி சாரி உன் பொண்டாட்டிக்கு பிரச்சனையா இருக்கா… உடனே அவளுக்கும் எனக்கு மேரேஜ் பண்ண நினைக்கிற நீ… அந்த ஒரே காரணத்துக்காக இப்போதே நான் உன் ஃப்ரெண்டுனு அந்த ஆதவனுக்கு தெரியப்படுத்திட்டு… அவனை விட்டு விலகப் போற… எல்லாம் சரி… அந்த ஆதவன் எவ்ளோ பெரிய ஆள்னு தெரியும் தானே… உன்னை???… உன்னை என்ன... நம்மள சும்மா விடுவானாடா..” விக்கி ஆத்திரத்தோடு கேட்க
“பார்க்கலாம்… என்ன பண்ணுவான்னு… அதை விடு நான் பார்த்துக்கிறேன்… நான் சொல்றதை மட்டுமெ கேளு... அந்த ஆதவன் உனக்கு போன் பண்ணுவான்… நீ எப்போதும் போலவே அவன்கிட்ட பேசு… நம்ம ரெண்டு பேரையும் பற்றி தெரிந்தே பேசுவான்… நீயும் எதுவும் தெரிந்தது போலே காட்டிக்காமல் பேசு… அதைச் சொல்லத்தான் போன் பண்ணினேன்” ரிஷி சொல்ல வந்ததை சொல்லி முடிக்க…
“ரிஷி உன்கிட்ட என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியலைடா…. சாதாரண விசயத்தை சீரியஸா பார்க்கிற… சீரியஸான விசயத்தில் சாதாரணமா இருக்க.. எல்லாமே தப்பு தப்பா பண்றியோன்னு தோணுதுடா… கொஞ்சம் நிதானமா யோசிடா… ரிது பண்ணது தப்புதான்… அதுக்கு இவ்ளோ பெரிய ரியாக்ஷன்.. உடனடியா உன்கிட்ட இருந்து வரும்னு நினைக்கலடா…. அந்த ஆதவன் நீ நினைக்கிறபடி சாதாரண ஆள் இல்லைடா … “
நிறுத்தியவன்…
“ப்ச்ச்… ஆதவனை விடு… உன் பக்கத்திலேயே உனக்கு ஆபத்து இருக்கு… அதுவே உனக்கு புரியலை… நீ எப்படி ஆதவனை புரிஞ்சுக்குவ… சாவி கொடுத்த பொம்மை மாதிரி இருக்குடா நீ பண்றதெல்லாம் பார்க்கும் போது… உன்கிட்ட நிறைய பேசனும்டா.. அப்போதான் உனக்கே புரிய வரும்” விக்கி பேசிக் கொண்டிருக்கும் போதே ரிஷி மறித்தவன்
“எது சாதாரண விசயம் விக்கி… ’கண்மணி’ அவ எனக்கு சாதாரண விசயமா… இல்லை அவளால எனக்கு ஆபத்தா… கேட்டுக்கோ…. என்னோட மொத்த பலமும் அவதான் … அதே போல என் பலவீனமும் அவதான்… அவ என் பக்கத்துல இருந்தா இந்த உலகத்தையே தலைகீழா புரட்டுவேன்… இப்போ புரியும்னு நினைக்கிறேன் உனக்கு… நீ எனக்குப் புரிய வைக்கப் போறியா… உனக்கு புரியாதுதான்… இந்த ஆறு வருசமா… நீ என் பக்கத்தில இல்லை… ஆனால் ரிதன்யா… பெரிய அறிவாளின்னு நினைத்தேன்… ஆனால் ரித்விகாவுக்கு இருக்கிற அறிவுல பாதி கூட அவளுக்கு இல்லை… இருந்திருந்தால் கண்மணிய இன்னைக்கு அடிச்சிருந்திருப்பாளா… அவ யார்னு நினச்சுட்டு இருக்கீங்க… “
“ஷட் அப் ரிஷி… கண்டவ புராணம்லாம் கேட்க எனக்கு டைம் இல்லை… வைக்கிறேன்…” சட்டென்று முகத்தில் அடித்தாற் போல போனை வைத்த விக்கி… என்ன நினைத்தானோ மீண்டும் ரிஷிக்கு அடித்தவன்…
“பத்திரமா இருடா… ஆண்ட்டி.. ரிதன்யா, ரித்விகாவுக்கு இன்னும் செக்யூரிட்டி டைட் பண்ணிக்கோ… அந்த ஆதவன் நேரடியா நம்மகிட்ட வரமாட்டான்… உனக்கு புரியும்னு நினைக்கிறேன்…” சொல்லிவிட்டு வேகமாக வைத்து விட…
யோசனையுடன் நின்று கொண்டிருர்ந்த ரிஷியின் காதுகளில்… அவன் கண்மணியின் குரல்….
“ரிஷி… போலாமா…” என்று அவன் கைகளைப் பிடித்தபடி உற்சாகக் குரலில் கேட்டவளின் உற்சாகம் பார்த்தவன் முகமும் மலர… துள்ளலாக நடை பயின்று பைக்கை எடுத்து அவள் முன்னால் வந்து முன்றவனிடம்…
“எனக்கு செம்ம ஃபாஸ்ட்டா போகனும் ரிஷி… ஸ்லோவாலாம் போகக் கூடாது… யாருக்கும் தொந்தரவில்லாமல்… அப்படி ஒரு ஹைவேஸ் பார்த்து என்னைக் கூட்டிட்டுப் போங்க” என்றவளிடம் சம்மதமாக தலை ஆட்டியவன்… கூட்டிச் சென்ற இடமோ… கண்மணியே எதிர்பார்க்காதது…
---
Viki rithu one side ah partha epudi
Lovely update