ஹாய் ப்ரெண்ட்ஸ்...
எப்சோட் போட்ருக்கேன்... நல்லா வந்திருக்கா... இல்லையான்லாம் தெரியல... என்னோட மனநிலை கதைல எங்காவது ரெஃப்லெக்ஃட் ஆகி இருக்கானு கூட தெரியலை...
மரணம்... நமக்கு வரப்போகுதுன்னு தெரிந்தால்... அந்தப் பயத்தில் நம்மைப் பிடிச்சவங்களை விட்டு நாமளே ஒதுங்குவோம்... இதுதான் இந்தக் கதையோட கான்செப்ட்... (ரிவீல் பண்ணக் கூடாதுன்னு தான் இருந்தேன்... மே பி கதையோட சுவாரஸ்யம் போகும்... பரவாயில்லை... சொல்லாமல் இருக்க முடியவில்லை)...
வருண்... என் அக்கா பையன்... அதை என் கண் முன்னாடி காட்டிட்டுப் போயிட்டான்...
புற்றுநோய்... கியூர் பண்ணக்கூடிய நோய்னு... அவன் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்... அதுக்கப்புறம் பத்துவருசம் கழித்து அவன் மூலமா அது எவ்ளோ பெரிய கொடிய நோய்ன்னு கண்கூடா உணர்ந்தேன்.... கடந்த சில மாதங்கள்... என்னோட ஒவ்வொரு வீக் எண்டும்... கதை அப்டேட் போட்றது... அப்புறம் அவனைப் போய்ப் பார்த்துட்டு வர்றதுன்னும் இருக்கும்... இப்போ... எனிவே...
என்னோட பெர்சனல்ஸ் அண்ட் எமோஷனல்ஸ் எப்போதுமே பெருசா பொதுவெளில இருக்காது... எனக்குள் மட்டுமே... இப்போதும் அதைப் போலவே கடந்து செல்கிறேன்... சோ நோ மோர் வேர்ட்ஸ்
கதைக்கு மட்டும் கமெண்ட்ஸ் போடுங்க,,, ஃப்ரெண்ட்ஸ்.... ரிஷி அண்ட் கண்மணி... உங்களுக்காக... படிச்சுட்டு சொல்லுங்க... என்னோட மத்த கதை போல எமோஷனல் ரோலர்கொஸ்ட்டர் ரைட்ல தான் இந்தக் கதையும் பயணிக்கும் ... அதே போல கதை முடியும் போது ஹேப்பியாத்தான் இறங்குவீங்க.... fingers crossed
இப்படிக்கு
வாருணி
அத்தியாயம் 70-1:
மணி மாலை கிட்டத்தட்ட ஆறு மணி… கண்மணி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் கவனம் வைத்திருக்க… படாரென்று கண்மணி இல்லத்தின் வெளிக் கதவு திறக்கும் சத்தம்…
அந்த பெரும் சத்தத்தின் அதிர்வில் மாணவர்கள் அனைவரும் பாடத்தில் வைத்திருந்த கவனத்தை விடுத்து அதிர்ந்து வேகமாக வெளிக்கேட்டை நோக்கிப் பார்க்க ஆரம்பித்திருந்தனர்…
அதேபோல் மேடையில் அமர்ந்திருந்த கண்மணியின் முன் நின்று அவளிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்த மாணவியும் கண்மணியிடம் இருந்த கவனம் சிதறி திரும்ப… கண்மணியோ இமை மட்டும் உயர்த்தி பார்வையினை மாற்றி அத்தனை ஆர்ப்பாட்டத்துடன் நுழைந்த ரிஷியை எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்க்க… அத்தனை ஆர்ப்பாட்டத்துடன் உள்ளே நுழைந்த ரிஷியும் அவளைப் பார்த்தான் தான்… ஒரு நிமிடம் தான்…. அடுத்த நொடியே பார்வையை மாற்றி… பைக் நிறுத்துமிடம் சென்று பைக்கை நிறுத்தியவன்… அடுத்த சில நிமிடங்களில் நேராக வீட்டை நோக்கிச் சென்று விட்டான்…
அவன் கண்மணியின் கண்ணில் இருந்து மறையும் வரை… அவனிடம் கவனம் வைத்திருந்தவள்… அதன் வீட்டினுள்ளே சென்ற பின் தான் மாணவர்கள் புறம் திரும்பினாள்… திரும்பியவள்…
“ஒரு சத்தம் கேட்கக் கூடாதே… படிங்க எல்லோரும்” என்று மாணவர்களை மீண்டும் படிக்க வைத்தவள்… சந்தேகம் கேட்ட மாணவிக்கு மீண்டும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்…
---
ரிதன்யாவின் இறுக்கமான முகமும்… அவளது அருகில் இருந்த பெட்டியும்… அவள் அந்த வீட்டை விட்டுக் கிளம்பத் தயாராகி விட்டாள் என்று சொல்லாமல் சொல்ல… மகிளா, ரித்விகா இருவரும் ரிதன்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்…
ரிதன்யாவோ யாருக்குமே பிடி கொடுக்காத பாவனையில் இருக்க.. எதுவுமே பேசாமல் வேதனையுடன் அமர்ந்திருந்தார் இலட்சுமி…
குலதெய்வம் கோவிலுக்கு போய்விட்டு வந்தால்… குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்று நினைத்திருக்க… இதோ புதிதாக ஒரு குழப்பம்..
பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்… அதைவிட… இலட்சுமியின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பதை எல்லாம் அந்த நொடியில் உணர்ந்தார் இலட்சுமி… அவரவராக முடிவெடுக்கும் அளவுக்கு பெரிய ஆளாக மாறி விட்டார்கள்…
ரிஷி தான் அப்படி மாறிவிட்டான் என்று நினைத்திருக்க… இதோ இன்று ரிதன்யாவும்…
தான் பெற்ற மக்களே தன் பேச்சைக் கேட்கவில்லை எனும் போது வீட்டுக்கு வந்த மருமகள் அவளைப் பற்றி கேட்க வேண்டுமா… அதுவும் கண்மணி மாதிரி பெண்ணிடம்… இலட்சுமி யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் பரிதவித்த நிலையில் வேதனையில் ஒரு ஓரமாகஅமர்ந்திருந்தார்… வீட்டுக்குள் வந்த மகனைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை…
ரிஷி தன் அன்னையைப் பார்த்தான்… அவரோ வாய் மூடி மௌனமாக அமர்ந்திருக்க
அங்கிருந்த சூழ்நிலையில் மகிளாவின் கணவன் பிரேம் தான் வாய் திறந்தான்… அவனும் அங்குதான் இன்னும் இருந்தான்
“ரிஷி… “ என்று பிரேம் அழைக்க.. ரிஷி அவனைப் பார்க்க
“என்னதான் கோபம் இருந்தாலும்… வந்தாலும்… வீட்டை விட்டுப் போன்னு சொல்றது கொஞ்சம் அதிகப்படிதான் ரிஷி…. கண்மணி கிட்ட இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கலை…” என்று கண்மணியிடமிருந்து புகாரை ஆரம்பித்த போதே
மகிளா ரிஷியின் முன் வந்து நின்றாள்…
“இது அவ வீடாம்… அவளோட உரிமையாம்… நம்ம ரிதன்யா இருக்கக் கூடாதாம்… வெளில போன்னு எங்க எல்லார் முன்னாடியுமே சொல்றா அந்தக் கண்மணி… ரிதன்யாக்கு யாரும் இல்லைனு நெனச்சுட்டு இருக்காளா என்ன” மூக்கை விடைத்துக் கொண்டு மகிளா பேச ஆரம்பிக்க…
ரிதன்யா வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்… கதவையும் அடைத்துக் கொண்டாள்…
ரிஷியோ… மகிளாவை விடுத்து… ஏன் பிரேமுக்கு கூட பதில் சொல்லாமல் தன் அன்னையைப் பார்த்தவனிடம்… இலட்சுமி இப்போது பேச ஆரம்பித்தார்
”ஆமாம் ரிஷி… என் கண்ணு முன்னாடியேதான் கண்மணி சொன்னா ரிஷி… மனசே தாங்கலை… நம்ம ரிதன்யாவுக்கு வாய்த்துடுக்கு அதிகம் தான்… எனக்கும் தெரியும்… இருந்தாலும் நீ சொல்வியா அந்த வார்த்தையை… எவ்வளவுதான் கோபம் வந்தாலும்… வீட்டை விட்டு வெளிய போன்னு… சொல்லு ரிஷி…” என்ற போதே ரிஷி
“சொல்வேன்…” கொஞ்சம் கூட தயங்காமல் சொல்ல… அதைக் கேட்ட இலட்சுமி… மகிளா.. பிரேம்… ஏன் ரித்விகா கூட நம்ப முடியாத பார்வையுடன் ரிஷியைப் பார்க்க… ரிஷியின் முகத்தில் சிறு சலனமும் இல்லை…
அனைவரையும் தவிர்த்தவன்… நேராக ரிதன்யா இருந்த அறைக்குள் சென்றவன்… கதவைத் தட்டியவன்…
“ரிது… உனக்கு அண்ணன்ற உறவு இன்னும் இருக்குன்னா… கதவைத் திற” அவன் குரலை பெரிதாக உயர்த்தவில்லை… ஆனால் அவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொடுத்த நிதானமும் அழுத்தமும்… ரிதன்யாவை கதவைத் திறக்க வைத்திருக்க…
தன் தங்கையைப் பார்த்தவன்…
”நான் உன்கூட தனியா பேசலாமா… அதுக்கப்புறம் நீ இங்க இருக்கிறதா… இல்லை கிளம்புறதான்னு முடிவெடு… அது உன்னோட இஷ்டம்… நான் உன்னைக் கட்டாயப் படுத்தமாட்டேன்…”
தன் அண்ணன் இப்படி கூட பேசுவானா விட்டேற்றியாக…
‘உன் முடிவு உன் இஷ்டம்… வீட்டை விட்டு போக நினைத்தால் போய்க் கொள்… என்கிறானே…’ அவன் கேட்டவுடன் அவனை நிமிர்ந்து அதிர்ந்து பார்த்த ரிதன்யாவை தீர்க்கமான பார்வை பார்த்தான் ரிஷி…
---
அடுத்து ஒரு அரை மணி நேரம் கடந்திருக்க… ரிதன்யாவிடம் பேசிவிட்டு ரிஷி வீட்டை விட்டு வெளியே வந்தவன் கண்மணியைப் பார்க்க… கண்மணி இப்போதுமே மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டுதான் இருந்தாள்…
ரிஷி அவள் அமர்ந்திருந்த இடம் நோக்கிப் போகமல்… அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த கல்மேடையில் அமர்ந்தபடி… கண்மணியைப் பார்த்தபடியே தன் அலைபேசியில் பாடலைக் கேட்க ஆரம்பித்தான்… அதாவது அவள் வருகைக்காக… அவளிடம் பேசுவதற்காக அவன் காத்திருக்கின்றான் என்பதைக் காட்டும் படி அமர்ந்திருந்தான் வேண்டுமென்றே…
அவனது முகத்தில் கோபமோ இறுக்கமோ இல்லை… மிக மிகச் சாதாரணமாகவே அமர்ந்திருந்தான்… பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்…
சரியாக பத்தே நிமிடங்கள் தான்… அவன் பொறுமையாக அமர்ந்திருந்த நிமிடங்கள்… அதாவது கண்மணிக்காக அவன் கொடுத்த நிமிடங்கள்… அமர்ந்திருந்தவன்.. எழுந்தான்… நடக்க ஆரம்பித்தான்
மனைவியை நோக்கியபடியே… அவளை மட்டுமே பார்த்தபடியே… நிதான அடிகளை எடுத்து வைக்க ஆரம்பிக்க.. கண்மணி அவனை நிமிர்ந்து பார்க்கத்தான் இல்லை… ஆனாலும் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவள் கருத்தில் தப்பாமல் இல்லை… அவன் வந்து அமர்ந்ததில் இருந்து இப்போது தன்னை நோக்கி வருவது வரை உணராமல் இல்லை… ஆனால் எந்த பிரதிபலிப்பும் காட்டாமல் தன் பணியில் கவனமாக இருக்க… ரிஷி இப்போது அவளருகில்… வந்திருந்தான்… வந்தவன்… கண்மணியின் அருகே அமர்ந்தவன்… கண்மணியிடம் பேசாமல்
“டேய் பசங்களா… எல்லோரும் வீட்டுக்கு கிளம்புங்க… நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்” மாணவர்களை நோக்கி ரிஷி இயல்பாகச் சொல்ல… அங்கு அமர்ந்திருந்த அத்தனை மாணவர்கள் கண்களிலும் அப்படி ஒரு பிரகாசம்… ரிஷி வார்த்தைகளைக் கேட்டவுடன்… ஆனாலும்… அவர்களது ’மணி அக்கா’ சொல்லவில்லையே… தயக்கமாக… எதிர்பார்ப்போடு கண்மணியை அத்தனை பேரும் பார்த்தனர்… அவள் வார்த்தைக்காக…
“நாளைக்கு எக்ஸ்ட்ரா அரை மணி நேரம்… கிளாஸ்” நேரடியாகக் கிளம்பச் சொல்லாமல் கண்மணி சொல்ல… குழந்தைகளோ புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க…
”டேய்… இப்போ போகலாம்… நாளைக்கு இந்த டைம காம்பென்ஷேட் பண்ணனுமா.… உங்க மணி அக்கா சொல்ல வர்றது அதுதான்… சோ கிளம்புங்க… கிளம்புங்க… என்ஜாய்” ரிஷி சொல்லி முடிக்கவில்லை… அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் அப்படி ஒரு சந்தோச ஆரவாரத்துடன் சிட்டாகப் பறந்திருந்தனர்… அடுத்த சில நொடிகளில்…
---
அனைவரும் சென்றிருக்க… ரிஷி கண்மணி மட்டுமே அந்த இடத்தில்…
இப்போதும் கண்மணியின் கவனம் அவள் கையில் வைத்திருந்த கணக்குப் புத்தகத்தின் பக்கங்களில் மட்டுமே பதிந்திருக்க… ரிஷியின் பார்வையோ அவளிடம் பதிந்திருந்திருந்தது…
இன்னும் அவள் அருகே ஒட்டி அமர்ந்தவன்… குனிந்து அவளைப் பார்த்தபடியே
“”ஓய்..” அழைத்தவனின் குரலில் இம்மியளவும் கடுமை இல்லை… அதிகாரம் இல்லை… கனிவு மட்டுமே இருக்க… கண்மணி இப்போதும் நிமிரவில்லை… அவள் கையில் இருந்த புத்தகத்தை கையில் வாங்கியவனாக…
“இதெல்லாம் நான் படிக்கிற காலத்திலேயே தொட்டதில்லை… கணக்கு டீச்சரம்மாவைக் கல்யாணம் பண்ணி… என்னென்ன பண்ண வேண்டியது இருக்கு” சலிப்பாகச் சொல்லியபடி அவளிடமிருந்து வாங்கிய புத்தகத்தை சற்று தள்ளி வைத்தவன்… அவளையேப் பார்க்க… அவளோ அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை… தன் விரல்களைப் பார்த்தபடி… அமர்ந்திருந்தாள்…
அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல்… பார்க்க முடியாமல்… கண்மணி தலை குனிந்தபடி… சோர்ந்து… அமர்ந்திருந்த விதம் இன்னுமே அவனை இம்சிக்க…
“கண்மணி… எப்போதுமே… எது பண்ணினாலும்… சரியோ தவறோ… அவ செஞ்சதுக்கு வருத்தப்பட மாட்டாளே… இப்போ என்ன ஆச்சு…”
சட்டென்று கண்மணி அவனை இப்போது நிமிர்ந்து பார்க்க…
“என்கிட்ட எதுவுமே சொல்ல மாட்ட நீ… “ ரிஷி ஆழமான பார்வை பார்க்க…
“பரவாயில்லை எனக்கு அது தேவையும் இல்லை…” என்றபடியே அவளது அலைபேசியை அவளிடமிருந்து தன் கைக்கு மாற்றியவன்…
”மகிளா, விக்கினு எனக்கு போன் பண்றாங்க… ஆனால் நீங்க பண்ண மாட்டீங்க… நாங்க பண்ணினாலும் எடுக்க மாட்டீங்க… அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த போன்… என்ன பண்ணலாம் இதை”
அவளது அலைபேசியை வெறித்த அவனது பார்வை… என்னமோ அலைபேசிதான அத்தனைத் தவறையும் செய்திருந்தது போல அவனது மொத்த கோபமும் அதன் மேல் இருப்பது போலக் காட்டிக் கொண்டிருந்தது…
அதைப் பார்த்த அந்த நொடியே… சிறு புன்னகை கண்மணியையும் மீறி அவளது முகத்தில் அதன் பதிவை நிலை நிறுத்த…
“சைக்கோ வில்லன்லாம் அவங்க வைஃப்கிட்ட இப்டித்தான் பேசுவாங்க ரிஷி… அந்த மோட்ல பேசுறீங்க… ஆனால் என்ன… உங்களுக்கு அது செட் ஆகலை…” என்றவளிடம்
உரிமையான முறைப்பான ஒரு பார்வை மட்டுமே… கண்மணியின் முகம் மீண்டும் தன் புன்னகையைத் தொலைத்திருக்க..ந்
கண்மணி அமைதியும்… ஆழிக்கடலின் அமைதியும் ஒன்று… அதே போல் அந்த ஆழிக்கடலின் கோப ஆர்ப்பாட்டமும் அவளுக்கு பொருந்துமே… அவள் கோபப்பட்டால் என்ன ஆகும் என்று அவனுக்குமே தெரியும்… அமைதியாக சலனமின்றி அமர்ந்திருந்தான் ரிஷி… தன் மனைவியின் நினைவுகளில்… நிமிடங்கள் செல்ல அவனாகவே ஆரம்பித்தான்…
”ஏன் போனை எடுக்கலை… கண்மணி” எங்கோ பார்த்தபடி கேட்டவனின் குரல் இலேசாக தடுமாறி வர… இருந்தும் சமாளித்தவனாக
”எத்தனை கால் பண்ணிருக்கேன் பாரு” அவளின் அலைபேசியை அவளிடமே காட்ட… கண்மணி அமைதியாகவே இருந்தாள் இப்போதும்…
மீண்டும் மௌனமான நிமிடங்கள்… இப்போது கண்மணி முறையானது மௌனத்தை உடைப்பது…
“இப்போ உங்களுக்கு எதுக்கு பதில் வேண்டும்… போன் ஏன் எடுக்கலைன்றதுக்கா??… இல்லை ஏன் உங்க தங்கையை வீட்டை விட்டுப் போன்னு சொன்னேன்றதுக்கா???…”
“ஏன் போன் எடுக்கலை” பதில் கொடுக்காமல் ரிஷி மீண்டும் கேள்வியாய்க் கேட்க…
“ஏன்னா… நீங்க அவங்களுக்குத் தேவை… உங்க குடும்பத்துக்கு… அதாவது அந்த உலகத்துக்கு… நீங்க மட்டும் தான் இருக்கீங்க… என்னால அது மாறக் கூடாது… அதுதான் போனை எடுக்கலை… ”
புரியாமல் பார்த்தவனிடம்
“ஆனால்… உங்க தங்கச்சிய வீட்டை விட்டு போன்னு சொன்னாலும்… நீங்க கஷ்டப்படுவீங்கதானே… கோபத்துல அதை மறந்துட்டேன்…. ப்ச்ச்… உங்களை யாருமே கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைப்பேன்… இன்னைக்கு நானே உங்களுக்குப் பிரச்சனை ஆகிட்டேன்… அது மட்டுமில்லை… போனைப் போட்டு.. ஏன் ரிதுவை அப்படி பேசுன.. மன்னிப்பு கேளுன்னு சொன்னா… பேசி பிரச்சனை வந்திருமோ… சண்டை போட்ருவோமோ… அந்த பயம்தான் போதுமா… அதுதான் போனை எடுக்கலை” கண்மணி பட படவென்று சொல்லி முடிக்க
அவள் சொன்ன முன்னதை எல்லாம் விட்டவன்… கடைசி வரிகளைப் பிடித்துக் கொண்டவனாக
”ஏன் பிரச்சனை வந்தால் என்ன… நாம சண்டை போட்டால் என்ன… பேசனும் கண்மணி… அப்போதான் உன் மனசுல என்ன இருக்கு… என் மனசுல என்ன இருக்குனு தெரியும்….”
“ப்ச்ச்” என்றபடி கண்மணி திரும்ப முயற்சிக்க..
“மத்தவங்ககிட்ட ஓகே… நீ என்கிட்டயும் அப்படி இருக்க ட்ரை பண்ணாத…”
அவளின் கன்னம் பற்றி தன் புறம் திரும்ப வைத்தவனின் வார்த்தைகளின் அழுத்தம் அவன் கைகளில் வந்திருந்ததோ… அவன் கைகளின் அழுத்தம் அவள் கன்னத்தில் நன்றாகவே உணர்ந்தவள்… அவனை மட்டுமே பார்க்க..
“நீ என்ன நினைக்கிறேன்னு நீ சொன்னால்தானே புரியும் கண்மணி” வார்த்தைகளின் நெகிழ்வு… அவள் கன்னமும் உணர்ந்திருந்தது …
அந்த வார்த்தைகளைக் கேட்டு கண்மணி இப்போது அர்த்தப் பார்வை பார்க்க… ரிஷியும் புரிந்தவனாக
“ஒத்துக்கிறேன்… நான் சொல்லாமலேயே நீ என்னைப் புரிஞ்சுக்குவதான் … இது ரிலேஷன்ஷிப் கண்மணி… மைண்ட்ரீடிங் கேம் இல்லை.. அதைப் புரிஞ்சுக்கோ… நாம சண்டை போட்டா கூட பரவாயில்லை… அதுவுமே பேசாமல் தப்பா அண்டர்ஸ்டேண்ட் பண்ணிட்டா என்ன ஆகும் சொல்லு ” என்று நிறுத்தியவன்
”சின்ன வயசில என் அம்மா ஒரு கதை சொல்வாங்க… காதல்னா என்னன்னு சொல்வாங்க. வறுமைல இருக்கிற ஒரு லவ்வபிள் கப்புள் ஸ்டோரி அது… ஹஸ்பண்டுக்கு வாட்ச் ஸ்ட்ராப் வாங்கிக் கொடுக்க அவங்க முடிய வித்து ஸ்ட்ராப் வாங்கிக் கொடுப்பாங்க… அதே மாதிரி… வைஃபுக்கு ஹேர் க்ளிப் வாங்கிக் கொடுக்க… அந்த ஹஸ்பண்ட் வாட்ச்ச வித்துருவான்னு… அவங்களுக்குள்ள அப்படி ஒரு லவ்வ்னு”
கண்மணி அவனையேப் பார்க்க…
“அப்போ நான் கேட்பேன்… லவ்லாம் ஓகே… இப்போ ரெண்டு கிஃப்டும் வீணாகிருச்சேன்னு…. அவங்க ஒழுங்கா பேசி இருந்துருக்கலாமேன்னு கிண்டல் பண்ணுவேன்…”
”அந்த மாதிரி உன்னை நான் புரிஞ்சுகிட்டேன்னு… நீ என்னைப் புரிஞ்சுக்கேட்டேனு ஏதாவது பண்ணி… எதுக்கும் உபயோகம் இல்லாமல் போயிறக் கூடாது… பிராக்டிக்கலாவும் யோசிக்கனும் கண்மணி… அதுதான் என்னோட ஒப்பீனியன்..”
பேசிக் கொண்டிருக்கும் போதே…
“மணி அக்கா… கரண்டு திடீர்னு பூடுச்சு… என்னன்னு வந்து பாறேன்” என்றபடி அவளது வீட்டில் வாடகைக்கு இருந்த இன்னொரு குடித்தன வீட்டின் சிறுமி வந்து சொல்ல…
“இதோ வரேன்.. உங்க வீட்ல மட்டுதான் போல… இன்னா பண்ணீங்க” என்றபடி எழுந்தவளிடம்
“நீ இரு… நான் பார்க்கிறேன்… மாடிக்குப் போ…” என்று அவளை அனுப்பி வைத்தவனிடம் அவளும் மறுவார்த்தை ஏதும் சொல்லாம் போய்விட்டாள்…
ரிஷி அவளுக்கு யோசிக்க கால அவகாசத்தை வேண்டுமென்றே கொடுத்தான்… தனது முதல் அழைப்பு அவளிடம் தவறிய அழைப்பாக போன போதே அவன் அவனாக இல்லை… அவனது கோபம் உச்சிக்கு ஏறி இருந்தது…. அடுத்தடுத்து அவன் அழைக்க… கண்மணி எடுக்காமல் போக… மெல்ல தன் உணர்வுக்கு வந்தவனுக்கு… அவனது கோபம் மாறி இருந்தது… தன் அழைப்பை அவள் ஏற்கவில்லை என்பது மாறி… கண்மணியின் மனநிலையை நோக்கி சென்றிருந்தது… தனது கோபம், ஆக்ரோஷம் எல்லாம் அவளுக்குத் தெரியும்… அப்படிப்பட்டவள் போனை எடுக்கவில்லை என்றால்… எந்த அளவு மனம் உடைந்திருக்கின்றாள்…
ரிஷியாக யோசித்து ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கு சென்றிருந்தவன்… கண்மணியின் ரிஷியாக யோசித்த போது… தெளிவுக்கு வந்திருந்தான்… நிதானத்திற்கு வந்திருந்தான்…
---
இதன் தொடர்ச்சி... நாளை வரும்
Lovely update