ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சாரி சாரி... அப்டேட் போட்டுட்டேன்...
சோகப் பாட்டு போட இஷ்டம் இல்லை... சோ... ஜாலியா சாங்க்.... ஆனாலும் அப்டேட்டுக்கும் சாங்குக்கும் சம்பந்தம் இருக்கு... கொஞ்சமே கொஞ்சம்...
ஹேப்பி ரீடிங்....
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 103-2:
/*நான் நடந்தால் அதிரடி
என்பேச்சு சரவெடி என்னை சுற்றும் காதல் கொடி நீ
நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம் நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
என் பேரைகேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா */
ரிஷியின் இல்லத்தில் வளைகாப்பு விழா ஆரம்பமாக ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க.... சத்யா ரிஷிக்கு அடுத்தடுத்து அழைத்துக் கொண்டே இருந்தான்…
ரிஷி அதை எல்லாம் பார்த்தால் தானே…. அலைபேசியை எடுத்தால் தானே… அவன் உறைந்து பல நிமிடங்கள் ஆகி இருக்க… அப்போது… சாலையில் நின்றிருந்த காவலர் ஒருவர் அங்கு வந்தவராக…
“தம்பி… எவ்ளோ நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பீங்க… நானும் ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கேன்… இப்படியே பிரமை பிடிச்ச மாதிரி இருக்கீங்க” சொன்னவரை ரிஷி நிமிர்ந்து அமைதியாக மட்டும் பார்வை பார்க்க…
“ஏதாவது தொழில்ல நஷ்டம் ஆகிருச்சா… போட்ட பணமெல்லாம் முழுகிப் போயிருச்சா…. பார்த்த பெரிய இடம் மாதிரி இருக்கீங்க… ஆனால் இப்படி இங்க உட்கார்ந்திருக்கீங்க… “
ரிஷியிடம் அப்போதும் மாற்றமில்லை…
அப்போது… அதி வேகத்தில் ஒரு வாகனம் அவர்களைத் தாண்டிச் சென்று… பின் நின்று….
“ஹேய் போலிஸ் மாமா…. ஃபைன்தானே.. இந்தா பொறுக்கிக்கோ…. ரூல்ஸ் மீறாத குடிமகன்கள்… என்ஜாய்….” நூறு ரூபாய்க் கட்டைத் தூக்கிப் போட… அது ரிஷியின் முன் வந்து விழ
“பணக்கார நாய்ங்க… அப்பன் காசுல குடிச்சுட்டு கூத்தடிச்சு சுத்தறது… ஆட்டம் ஆடிட்டு … கடைசியில் இப்படி தெருவுல வந்து கிடக்கிறதே வழக்கமாகிருச்சு…“
ரிஷி இப்போது சட்டென்று நிமிர… அவன் பார்வையில் வலி மட்டுமே...
“சா… சாரி சார்… உங்களைச் சொல்லலை… இவனுங்களை மாதிரி டெய்லி நூறு பேரை பார்க்கிறோம்… அந்த ஆதங்கத்துல சொல்லிட்டேன்… ஒரு நாளைக்கு சித்தம் மொத்தமும் அடங்கி நிற்கிற நிலை வரும்… அப்போ யோசிக்கிற நிலைமைல கூட இருக்கமாட்டானுங்க… அவன்களை விடுங்க சார்… நான் சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கேன்” என்றபடியே
“விருதுநகர் கலெக்டர் இங்க ஒரு ஃபங்ஷனுக்கு வர்றாங்க… பெரிய இடம் அவங்க… இப்படிலாம் வழில உட்கார்ந்திருந்தா நாங்கதான் பேச்சு வாங்கனும்… இந்த இடத்தைக் கொஞ்சம் காலி பண்ணினா நல்லா இருக்கும்” சொன்ன போதே ரிஷிக்கு அப்போதுதான் அமுதினியின் தந்தையை தன் மனைவியின் வளைகாப்புக்கு அழைத்தது ஞாபகத்துக்கு வந்திருக்க… அப்போதும் பரபரக்கவில்லை….மெதுவாக எழுந்தவன்… தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்…
கணக்கில் அடங்காத தவறிய அழைப்புகளின் எண்ணிக்கை….
நிதானத்துக்கு தன்னைக் கொண்டு வந்தவன்… சத்யாவுக்கு அழைத்தவன்… தான் இருக்குமிடத்தைச் சொல்லி சத்யாவை அங்கு வரச் சொல்ல…
“ஆர் கே… எங்க போனீங்க… ஏன் ஒரு மாதிரி பேசறீங்க…” சத்யா படபடப்பாக அலைபேசியில் கேட்க…
“அமுதினியோட அப்பா… நான் கேட்டுக்கிட்டதுக்காக வந்திருக்கார்…சீக்கிரம் வர்றீங்களா… அவர் நம்ம வீட்டுக்கு வரும் போது நான் அங்க இருக்கனும்… பைக்ல வாங்க… கார் எடுத்துட்டு வந்தா லேட் ஆகிரும்…” ரிஷியின் குரலில் வெறுமை வெறுமை மட்டுமே…
சத்யாவும் வந்தான் அடுத்த ஐந்து நிமிடத்தில்... ரிஷி அலைபேசியில் அடையாளம் சொன்ன இடத்திற்கு வந்தும் சேர்ந்தான்…. வந்த சத்யாவிடம் முகம் காட்டாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டான் ரிஷி… வாழ்க்கையின் பல நிலைகளில் அடி வாங்கிய போதெல்லாம் தன் துக்கத்தை பகிர்ந்து… அவன் தோள் சாய்ந்து இளைப்பாறிய சத்யாவையே இன்று புறக்கணித்திருந்தான் ரிஷி….
“ஃபேபியோ வந்திருக்காரு… கார்லா பாப்பா வந்திருக்கு… ஹர்ஷித் வரலை… எல்லோரும் உங்களைத்தான் தேடிட்டு இருக்காங்க… இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க”
ரிஷி ஒன்றும் சொல்லாமல்... பின் இருக்கையில் அமர்ந்தபடி தன்னையே கண்ணாடியில் பார்த்தபடி வந்தவன்… தன் முகத்தைச் சரி செய்து கொண்டவனாக…
“நான் இப்போ எப்படி இருக்கேன்… “ சத்யாவிடம் சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்க…
“என்னாச்சு ரிஷி… “
“கேட்டதுக்கு பதில்…” ரிஷியின் குரலில் இருந்த கடினத் தன்மையில்
”ஆர் கே” என்றபடி பைக்கை சட்டென்று நிறுத்திய சத்யா இப்போது அவனைத் திரும்பிப் பார்க்க
“பைத்தியக்காரன் மாதிரி இல்லைதானே” ரிஷியின் குரல் வெகு நிதானமாக வெளி வந்திருக்க இருக்க… கண்களிலோ வெறுமை சூழ்ந்த விரக்தி மட்டுமே…
சத்யாவுக்கு அடிவயிற்றில் கலக்கம் ஏன் வந்தது என்று தெரியவில்லை…
தனசேகர் இறப்பிற்குப் ரிஷியின் ஆக்ரோசமும் ஆவேசமும் மட்டுமே பார்த்து பழகியவனுக்கு… இந்த அமைதி பெரும் குழப்பத்தைக் கொடுத்தது…
கலகலப்பான ரிஷி… ஆர்ப்பாட்டமான ரிஷி… ஆக்ரோஷமான ரிஷி… இதோ அவனின் இன்றையமுகமோ அனைத்தும் அடங்கிய ரிஷி…. அதை சத்யாவும் உணர ஆரம்பித்திருந்தான்….
ஆக்ரோஷமும்… கோபமும்… ஆவேசமும் கொண்ட ரிஷியிடம்... தன்மையாகப் பேசி சமாதானப்படுத்த பழகி இருந்த சத்யாவுக்கு சர்வமும் அடங்கிய ரிஷியை சமாதானப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை… பதிலே சொல்லாமல் மீண்டும் வண்டியை எடுத்திருந்தான்…
------------
நாராயணனும்… நட்ராஜும் ரிஷியின் இல்லத்துக்கு வந்த போது… மாவட்ட ஆட்சியரான அமுதினியின் தந்தை வந்த பரபரப்பில் அந்த இல்லம் இருக்க…. இவர்கள் இருவரையும் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை…
“மாமா… ரிஷி மட்டும் நம்மள ஒண்ணா பார்த்தான்னு வச்சுக்கோங்க… வானத்துக்கும் பூமிக்கும் எகிறுவான்…”
நாராயணன் புன்முறுவலோடு பார்க்க
“நாம சேர்ந்த சந்தோசம்னு சொல்றதை விட…. அவன் பொண்டாட்டி சந்தோசப்படுவான்னுதான் அவன் உச்சகட்ட சந்தோசமே…” நட்ராஜ் தன் மாமனாரிடம் சொன்னபோதே… சத்யா அவரின் கண்களில் தட்டுப்பட…
வேகமாக நட்ராஜ் மட்டும் சத்யாவின் அருகே வந்தவராக.
”அந்தப் பொண்ணு… அமுதினியோட அப்பா வந்திருக்காரா… ரிஷி எங்க…” என்ற போது நட்ராஜின் குரலில் அப்படி ஒரு கம்பீரம்…. உற்சாகம்… துள்ளல்..வெகுநாட்களுக்குப் பிறகு… நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு அவரிடம் நிமிர்வு வந்திருந்தது…
நட்ராஜின் உற்சாகமும்... கம்பீரமும்.... ரிஷியின் அமைதியும் வெறுமையும்... மாமனும் மருமகனும் முரண்களின் முகடுகளில் இருந்தனர்....
”அதோ கலெக்டர் சாரோடோ பேசிட்டு இருக்காரு…” என சத்யா ரிஷியை நோக்கி கைகாட்ட… நட்ராஜுக்கு தன் மருமகனிடம் தன் மாமனார் தன்னிடம் பேசி விட்டார் என்பதைச் சொல்லத் துடிக்கும் ஆவல் மட்டுமே… அதனால் ரிஷியையே பார்த்தபடி இருக்க….
ரிஷி யாரையுமே பார்க்கவில்லை…. வந்திருந்த அமுதினியின் பெற்றோரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்க… வேகமாக நட்ராஜ் அவர்கள் அருகில் செல்ல….
நட்ராஜைப் பார்த்த அடுத்த நிமிடம்… ரிஷியின் கண்களில் கோபத் துடிப்பு வந்து அடுத்த நொடி மறைந்தும் விட்டிருந்தது…
“கண்மணியின் இரண்டும் கெட்டானான வளர் பருவத்தில்… தொடர்ந்து அவளுக்கே தெரியாமல் பல நாட்களுக்குக் கொடுக்கப்பட்ட போதை மருந்து…” அந்த வார்த்தைகளை நினைத்த போதே… இறந்து போன மருதுவையும்… துரையையும் மீண்டும் தோண்டி எடுத்து ஆத்திரம் அடங்க மீண்டும் மீண்டும் கொலை செய்யும் ஆவேசம் வந்து போக… அன்று அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த இந்த நட்ராஜ்தானே… தொண்டைக் குழியில் ஆவேசத்தை உள்வாங்கியிருந்தான் ரிஷி… முகம் தானாகவே இறுக ஆரம்பித்திருந்தது…. அனைத்தையும் அடக்கிக் கொண்டபடி
”இவங்க… அமுதினியோட அப்பா அம்மா”
“இவர் நட்ராஜ்… கண்மணியோட அப்பா…”
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய ரிஷி அதற்கு மேல் பேசாமல் அமைதியாக இருந்துவிட…. நட்ராஜ் மருமகனை ஒருமாதிரியான ஏமாற்றத்துடன் பார்த்தபடி அமுதியினியின் பெற்றோரிடம் பேச ஆரம்பித்தார்…
எப்போதுமே ரிஷி… யாரிடமும்… நட்ராஜை இப்படி அறிமுகப்படுத்த மாட்டான்… என் முதலாளி… கண்மணி அப்பா… என் மாமனார் என அவன் சொல்லும் போதே அதில் உரிமையும்… பாசமும்… கர்வமும் இருக்கும்… இன்று அவன் குரலில் இருந்தது என்ன… மருமகனைப் பார்க்க… அவனோ அவரைப் பார்க்கவில்லை…
நெருங்கிய உள்ளங்கள் அத்தனையையும் வெகு தூரத்தில் நிறுத்தியிருந்தான் ரிஷி…. நட்ராஜும் அதற்கு விதிவிலக்கல்ல...
நட்ராஜ் மருமகனை தயக்கத்தோடு பார்த்தபடியே நின்றிருந்த போதே
அப்போது அருகில் நின்றிருந்த கண்மணியின் ஆசிரியர் பிரபா
”நீங்க தான் கண்மணியோட அப்பாவா…” பிரபாவதி நட்ராஜுடன் பேச ஆரம்பித்தார்…
”கண்மணி அன்னைக்கு உங்களத் தேடி வந்துருக்கலைனா… இவர் வீட்லதான் கண்மணி இருந்திருக்கனும்” எனச் அன்றைய நிகழ்வுகளைப் பேச ஆரம்பித்திருக்க
அமுதினியின் தந்தையுன் தாயும் பேச ஆரம்பித்தனர்…
”பிரபா மேடம் கண்மணியைப் பற்றி சொல்லி இருந்தாங்க… அந்தப் பொண்ணுக்கு அப்பா இருந்து இல்லாத மாதிரிதான்ன்னு…”
நட்ராஜ் வலியோடு தலை குனிந்தார்
”எங்க அம்மு இறந்த பின்னால… கண்மணியை தத்து எடுத்துக்கலாம்னு முடிவெடுத்துதான் வந்தோம்.. ஆனால்…” என்றவர்… அடுத்து என்ன நினைத்தாரோ.. பழைய கதைகளைப் பற்றி பேசாமல்
“அதெல்லாம் விடுங்க சார்... பழைய விசயம்லாம் இனி எதுக்கு... இப்போ நீங்க அவளை உங்க பொண்ணா ஏத்துக்கிட்டீங்கள்ள… அது மட்டுமில்லாமல்… நாராயணன் சார் எனக்கு அரசியல் வட்டார பழக்கத்தில் தெரியும்.. அவரோட பேத்திதான் கண்மணின்னு தெரிஞ்சதும் எனக்கு ஆச்சரியம் தான்… எனிவே எல்லாம் நல்லபடியா நடந்திருக்கு… அவ யார்கிட்ட சேரனுமோ அவங்ககிட்ட சேர்ந்துட்டா… நான் ரொம்ப ஹேப்பி…” அமுதினியின் தந்தை சிரித்தபடியே பேசியவர்…
“இது என்னோட பையன்..“ அருகில் இருந்த சிறுவனை அறிமுகப்படுத்தியவர்…
“நாகர்கோவில் கலெக்ட்ரா இருந்தப்போ… எங்களுக்கு எங்க பையனா கிடைத்தான்….” தேவையில்லாத வார்த்தைகளை விடுத்து… தத்தெடுத்து வளர்க்கும் தங்கள் மகனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்…
”கண்மணிக்கு அமுதினினா ரொம்ப பிடிக்கும் சார்… பெருசா பழகினது இல்லைனாலும்… அவளப் பற்றி என்கிட்ட அடிக்கடி சொல்வா…” நட்ராஜும் இப்போது சகஜமாக பேச அவரிடம் பேச ஆரம்பித்திருக்க
”அமுதினிக்கும் கண்மணினா ரொம்ப ரொம்ப பிடிக்கும்… கண்மணியோட ஃப்ரெண்டா இருக்க எவ்ளவோ ட்ரை பண்ணினா… அது அவளோட கடைசி நாட்களோட ஆசையும் கூட… கண்மணிக்கு என்னைப் பிடிக்கவே மாட்டேங்குதுனு டெய்லி அவ புலம்பாத நாளே கிடையாது…” என்றவர்… சட்டென்று ரிஷியிடம் திரும்பினார்… ரிஷி அமைதியாக இவர்கள் பேசுவதை மட்டுமே நின்று கேட்டுக் கொண்டிருந்தான்…
நட்ராஜுக்கு ரிஷியின் இந்த இந்த அமைதி அவனிடம் அவர் அறியாத ஒன்று…
ரிஷியின் முக மாறுதலும்… இந்த அமைதியும் நட்ராஜுக்குள் கவலையைக் கொண்டு வந்திருக்க… இதை எல்லாம் அமுதினியின் தந்தை அறிந்து கொள்ள முடியவில்லை… அவர் ஏதேதோ பேசியபடியே இருந்தார்… முடிவில்
”கண்மணியைப் பார்க்கலாமா… பேசலாமா… எனக்கு முக்கியமான வொர்க் இருக்கு…. உடனே கிளம்பனும்… அப்புறம் ஸ்டேஜ்ல வேண்டாம்… தனியா பேசனும்… டென் மினிட்ஸ்ல இங்கருந்து… செகரெட்டரியேட் போகனும்… அதுனாலதான்…” அமுதியின் தந்தை கேட்க... ரிஷி நட்ராஜைப் பார்க்க… அப்போது நாராயணனும் அங்கு வந்திருக்க…
நாராயணனுக்கு அவருக்கும் முன்னரே அறிமுகம் என்பதால்…. நாராயணனும் அமுதினியின் தந்தையும் பேசிக் கொண்டிருக்க
நட்ராஜ் ரிஷியிடம்
“ரிஷி….. சாரை உங்க ரூம்க்கு கூட்டிட்டுப் போங்க… கீழ எல்லா ரூம்லயும் ஆளுங்க இருக்காங்க… நான் மணியைக் கூட்டிட்டு வர்றேன் “ என்றவரிடம் ரிஷி அமைதியாக தலை ஆட்டி விட்டுச் செல்ல…
மீண்டும் ரிஷியின் மௌனம்…. ரிஷியின் வழக்கத்திற்கு மாறான மௌனம் நட்ராஜை உறுத்தியதுதான்… ஆனாலும் என்ன ஏது என்று கேட்கவில்லை… கேட்கவும் பயமாக இருந்தது நட்ராஜுக்கு... மருமகனின் இறுகிய பாவம்... அவரின் உற்சாகத்தையும் அடியோடு பறித்தது...
-------
ரிஷி.. கண்மணி மற்றும் அமுதினியின் பெற்றோர் மட்டுமே ரிஷியின் அறையில் இருந்தனர்…
கண்மணி முகம் மலர… சந்தோசமாக அவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்க… ரிஷியோ மௌனத்திரையின் துணையினால் தன்னை மறைத்துக் கொண்டிருந்தான்….
“உன்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்கனும்னு ரொம்ப நாளா ஏங்கிட்டு இருந்தேன் கண்மணி… என் பொண்ணுக்காக மட்டும் தான் இந்த ஏக்கம் கூட நீ ஏன் அவகூட கடைசி வரை ஃப்ரெண்டாகலை… பிரபா மேடம் சொன்னாங்க… அவ ரொம்ப நாள் உயிர் வாழ மாட்டாள்னு உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் பேசலை அவகிட்ட… எங்க அம்முக்கு அது ரொம்ப வருத்தம்… நீ ஏண்டா அவகிட்ட பேசலை…. ஃப்ரெண்டா ஏத்துக்கலை… ” அமுதினியின் தாய் கண்ணீர் மல்க கேட்டவராக கண்மணியை நோக்க
கண்மணி ரிஷியைப் பார்த்தாள் வார்த்தைகளின்றி…
ரிஷி அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை… அதே நேரம்… அமுதினியின் தாயிடம்… அவளுக்குப் பதிலாக அவன் பேசினான்
”நீடிக்காத நிலையில்லாத உறவுக்கு உயிர் கொடுத்து என்னாகப் போகுது… கண்மணிக்கு அந்த வலி பிடிக்கலை.. அதை விட பயம் … அதுனாலதான் அவ உங்க பொண்ணுகிட்ட பழகலை… விலகிட்டா… இதுதான் அவ குணம்” சொல்லி முடித்து எங்கோ பார்வையை வைத்திருக்க….
கண்மணியோ குற்ற உணர்வுடன் தன் தோழியின் தாயைப் பார்த்தவள்…
”நமக்கு ஒரு உறவு சந்தோசம் கொடுக்கலைனா இல்ல நாம அந்த உறவுக்கு சந்தோசம் கொடுக்க முடியலைனா விலகி இருக்கிறதுதான் நல்லது… நான் யார்கிட்டயும் நெருங்கிப் பழக நினைக்காததற்கு அமுதுவும் ஒரு காரணம் ஆன்ட்டி”
“அம்மா… அப்பா… அமுதினி… என் தாத்தா பாட்டி… இப்படி எனக்கு பிடித்தவங்க யார்கிட்ட நெருங்க நினைத்தாலும்… விதி என்னை விலகி நிறுத்திய சூழ்நிலை… அதுக்கு பழக்கமும் ஆகிட்டேன்… இப்படி நான் பல விசயங்கள்ள விலகியே வாழ்ந்துட்டேன்… வாழ்ந்துட்டு இருக்கேன்… என் பாட்டி சொல்ற மாதிரி… அதுதான் என் விதி போல”கண்மணியின் ஒவ்வொரு வார்த்தைகளும் கசப்பான நினைவுகளைத் தாங்கி வந்து விழ… அமுதினியின் தந்தைதான்… நிலைமையைச் சமாளித்தவராக…
“அதெல்லாம் இல்லடா… நீ ரொம்ப லக்கி… இப்படி ஒரு ஹஸ்பெண்ட் கிடைச்சிருக்காரே” எனும் போதே… கண்மணியும் ரிஷியைப் பார்க்கவில்லை… ரிஷியும் கண்மணியைப் பார்க்கவில்லை… இருவருமே அவரவர் வெறுமையான எண்ணங்களின் தாக்கங்களில் இருக்க
”உனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் கண்மணி” என்றவர்…
“இதைப் பிரிச்சுப் பாருங்க…. கண்மணிக்கு கொடுக்கிற கிஃப்ட் தான்… ஆனால் ரிஷி இது உங்களுக்குத்தான் மிகப்பெரிய கிஃப்ட்…” என்றவர் ரிஷியின் இருந்த நிலைமை உணர முடியாமல் சிரிப்புடன் சொல்ல… கண்மணி யோசனையுடன் அவரைப் பார்க்க
”இதை ரிலாக்ஸ்டா ஓபன் பண்ணிப் பாருங்க ரெண்டு பேரும்… ஏன் இதை பிரைவேட்டா கொடுக்கிறேன்…. ஏன் ஸ்டேஜ்ல கொடுக்கலேன்னு இந்த ஃபோட்டோவைப் பார்க்கும் போது தெரியும் உங்களுக்கு” என்றவரின் புன்னகையில் அமுதினியின் தாயும் சேர்ந்திருக்க
கண்மணிக்குத்தான் பகீரென்று இருந்தது….
“என்னவாக இருக்கும்… சின்ன வயசுல தேவையில்லாதது எல்லாம் பண்ணி வச்சிருப்போமே… ரொம்ப சின்ன வயசுல எடுத்த போட்டோவா… ”
“சேச்சே அமுதினிகிட்ட இருக்குனா… கண்டிப்பா 5த் படிக்கும் போது எடுத்த போட்டோவாத்தான் இருக்கும்… அப்படி என்ன அந்த ஃபோட்டோல இருக்கும்” கையில் அந்தப் புகைப்படம் சுற்றப்பட்ட பரிசினை வைத்து யோசித்துக் கொண்டிருந்த போதே…
“நாங்க கிளம்புகிறோம் கண்மணி… உன்னைப் பார்க்கனும்னு வந்தோம்… பார்த்துட்டோம்… எங்க ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கும்மா…” என்றபடி ரிஷியைப் பார்க்க…
ரிஷியும் அமுதினியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு தன் அறையை விட்டு வெளியேறி இருக்க…
தனியாக நின்றிருந்த கண்மணியோ ஆர்வம் தாங்காமல் அந்தப் புகைப்படத்தைப் பிரித்துப் பார்த்திருக்க… அவளையுமீறி விரிந்த புன்னகை அவளின் கன்னக் குழிகளோடு போட்டி போட்டு உறவாடியது…
அழகின் மறு உருவமாக இருந்த அமுதினியையும்… ஒப்பனை என்ற பெயரில் கண்களிலும் புருவங்களிலும் நிரம்பி வழிந்த கண்மையும்… பவுடரும்… என பப்பூனாக காட்சி அளித்த தன்னையும்… மீண்டும் ஒரு முறை பார்த்தவள்… அந்தப் புகைப்படத்தை… அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு அவளும் அறையை விட்டுக் கிளம்பியிருந்தாள்….
---
அமுதினியின் தந்தைக்கு மாவட்ட ஆட்சியராக பல முக்கிய வேலைகள் இருக்க… வந்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து கிளம்பியிருக்க… இங்கு கண்மணிக்கு வளைகாப்பு நடக்க ஆரம்பித்தது…
”ரிஷி… நீயும் அவ பக்கத்துல உட்காரனும்டா…” இலட்சுமி தனித்து நின்றிருந்த ரிஷியிடம் வந்து சொல்ல…
”அம்மா… பரவாயில்லை நான் இங்கேயே இருக்கிறேன்… “ என்றவனிடம்…
“அவ ஒண்ணும் சொல்ல மாட்டாடா… நான் பார்த்துக்கிறேன்…”
“அவளுக்காக பயந்து இல்லை… எனக்கு விருப்பம் இல்லை… கட்டாயப்படுத்தாதிங்க” ரிஷி சட்டென்று சொல்லி விட்டு தன் தாயை விட்டு விலகி நடக்க… இலட்சுமிக்கு அவனின் ஒட்டுதல் இல்லாத தன்மை வித்தியாசமாகப் பட்டிருக்க
“என்னடா…. உன் கோபத்தை காட்றீயா…. உனக்கு அவ மேல கோபம் இருந்தாலும்… அதை இப்போ காட்டனுமா… நீதானே அவளுக்கு வளைகாப்பு பண்ணனும்னு சொன்ன… இப்போ இப்படி நடந்துகிட்டா என்னடா அர்த்தம்… ”
“ம்மா… “ என்றவன்..
“இப்போ நான் இங்க இருக்கனுமா… இல்ல போகவா…” என்ற ரிஷியின் அதிரடியான குரலில் இலட்சுமி கலக்கமாகப் பார்த்தபடி வேறொன்றும் சொல்லாமல் சபையை நோக்கி நடக்க…
நட்ராஜும் நாராயணனும்… இலட்சுமியிடம் என்னவென்று கேட்க… இலட்சுமியும் விசயத்தைச் சொல்ல
நட்ராஜ் தான் இலட்சுமியை ஆறுதல் படுத்தினார்
“ரிஷி கண்மணி பக்கத்துல வந்து உட்கார்ந்தா… கண்மணி ஏதாவது சொல்லிருவாளோன்னு பயப்பட்றார்ன்னு நினைக்கிறேன்… ரிஷியாவது உங்ககிட்ட அமைதியா சொன்னார்… ஆனால் நம்ம மணி அப்படியா… இங்க இத்தனை பேர் இருக்காங்கன்னுலாம் பார்க்க மாட்டா… ரிஷி அவளைப் புரிஞ்சுதான் விலகி நிற்கிறார்“ என்றபோது இலட்சுமியும் நிதர்சனத்தை உணர்ந்தவராக… அமைதியாக இருந்து விட…
இப்போது விக்கி ரிஷியிடம் வந்தான்…
“டேய் என்னடா ஆச்சு… இப்போ உன் டர்னா… நீ அவளுக்கு செய்ய வேண்டிய சடங்கு இருக்குடா… நீயும் அவ பக்கத்துல உட்காரனும்… ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம்…” எனும் போதே
”ப்ளீஸ்… வந்தவங்க எல்லோரும் வந்த வேலையை மட்டும் பார்க்கறீங்களா” கையெடுத்து கும்பிட்டவனாக… வேகமாக அந்த இடத்தைக் விட்டு நகர்ந்தவன் வளைகாப்பு நடக்கும் சபையில் இருந்து இன்னும் வெகு தூரத்திற்குச் சென்றிருந்தான்…
இதை எல்லாம் பார்த்தபடி மேடையில் அமர்ந்திருந்த கண்மணியோ…
“அத்தை… என்னாச்சு” இலட்சுமியிடம் கேட்க…
“ரிஷி வரமாட்டேன்னு சொல்றான்… நீயாவது” தயங்கியபடி சொன்ன போதே
“யாரையும் கம்பெல் பண்னாதீங்க… ” பட்டென்று முடித்தவள்… அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல்…. தன் வைதேகிப் பாட்டியிடம் திரும்பி…
”நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க…” என்று முடித்தவள் தூரத்தில் நின்றிருந்த ரிஷியையும் பார்க்கத் தவறவில்லை…
ஊரில் இருந்து வந்திருந்த ரிஷியின் பாட்டியின் மேற்பார்வையில் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின…
அதற்கும் காரணம் இருந்தது…
“இங்க பாருங்க… உங்க முறை எப்படி வேணும்னாலும் இருக்கலாம்… பெருசா … பணக்காரத்தனம் கூட இருக்கலாம்… ஆனால் பொண்ணூ எங்க வீட்டுக்கு வந்த பொண்ணு…. அதுனால எங்க பக்க முறைல செஞ்சாதான் எங்களுக்கு மதிப்பு… நாங்க சொல்ற மாதிரிதான் நீங்க பண்ணனும்” வைதேகியிடம் கறாராகச் சொல்லிவிட… வைதேகியும் அதற்கு உடன்பட…. ரிஷியின் வீட்டுப் பக்க முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது…
“முதல்ல வேப்பிலைக்காப்பு போடுங்க…” வயதில் மூத்தவரான அந்தப் பாட்டி சொல்ல வைதேகியும் அவர் என்ன சொல்கிறாரோ அதையே தொடரவும் செய்தார்… கண்மணியும் சந்தோசமாக வேகமாக அவள் கைகளை நீட்டினாள்…
கண்மணியின் கைகளிலும்… கன்னங்களின் இரு புறத்திலும் சந்தனத்தை தடவிய வைதேகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மட்டுமே… ஏழு மாதக் கர்ப்பிணியான தன் பேத்தியை அந்த அலங்காரத்தில் பார்த்து…
கண்மணியும் முகமெங்கும் புன்னகையுடன் அவரை நோக்கி்… தன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவளாக… வேகமாக கந்தம்மாளைப் பார்த்தவள்…
“ஏய்க் கெழவி… நீயும் வா…” கண்மணி சத்தமாக சற்று தள்ளி நின்றிருந்த தன் கந்தம்மாள் பாட்டியைப் பார்த்து அழைக்க…. கந்தம்மாளும் கொஞ்சம் வெட்கத்துடன் தன் பேத்தியின் அருகே வந்து நிற்க…
“நீயும் பாட்டி கூட சேர்ந்து எனக்கு இந்த வேப்பிலைகாப்பை போடனும்…” என்று சொல்ல… வைதேகி நாராயணனைப் பார்க்க… நாராயணன் மலர்ந்த முகத்துடன் மனைவிக்கு சம்மதம் சொல்ல… வைதேகியும் கந்தம்மாளும் சேர்ந்து அவளுக்கு அந்தக் காப்பை பூட்ட…
”அடுத்து தங்க வளையல்… அதுக்கப்புறம் கண்ணாடி வளையல் அடுக்கலாம்…. “ சொல்லி ரிஷியின் பாட்டி இலட்சுமியைப் பார்த்தவராக
”என் பேரன் ரிஷி எங்க… அவனை முதல்ல போடச் சொல்லு… தாய் மாமா இருக்காங்களா… அவரும் முதல்ல போடலாம்”
”பாட்டி… அவன் கடைசியா போட்றேன்னு சொல்லிட்டான்…” இலட்சுமி எப்படியோ ரிஷியைத் தவிர்த்திருக்க…
அப்போது
“அர்ஜூன்” கண்மணி முன் வரிசையில் அமர்ந்திருந்த அர்ஜூனை அழைக்க.. அர்ஜூனும் இப்போது எழுந்து அவளருகே வந்தான்… சபையில் இருந்த அத்தனை பேருக்கும் ஒரு மாதிரியான மனநிலை… ரிஷியைக் கூட கண்மணி அழைக்கவில்லை.. அர்ஜூனை அழைத்தது யாருக்குமே முக்கியமாக ரிஷியின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லைதான்… ஆனாலும் கண்மணியிடம் அதைச் சொல்ல முடியுமா என்ன???…
கண்மணியோ யாரையும் கண்டு கொள்ளாமல்…
“நீங்க ரொம்ப நாளா எனக்காக கொடுக்கனும்னு வச்சுருந்தீங்களே… அந்தக் காப்பை இப்போ போடலாம்… எடுத்துட்டு வரச் சொன்னேனே எடுத்துட்டு வந்தீங்களா…”
அர்ஜூனும் எடுத்து வந்திருப்பதாக தலையை ஆட்ட… கண்மணியும் சந்தோசமாக அவனிடம் தன் கைகளை நீட்ட… ரிஷியோ தூரத்தில் இருந்தே நடப்பவை அனைத்தையும் பார்த்தபடி நின்றிருந்தான்… சத்யாவோ அவனை மிரட்சியுடன் பார்த்தபடி நின்றிருந்தான்…
அர்ஜூன்… அந்தக் காப்பை போட ஆரம்பிக்கப் போக…
“அர்ஜூன்” என்று கண்மணி அவனைப் பார்க்க
“நான் என்ன கேட்டாலும்… ஐ மீன் கர்ப்பிணிப் பொண்ணு என்ன கேட்டாலும் கொடுக்கனும்னு சொல்வாங்க… நான் எப்போதுமே யார்கிட்டயும் எதுவும் எனக்காக கேட்டதில்லை… நான் இந்த சமயத்தில உங்ககிட்ட மட்டும்தான் கேட்கிறேன்… கேட்கப் போகிறேன்... எனக்காக செய்வீங்களா” கண்மணி அர்ஜூனின் கண்களைப் பார்த்துக் கேட்க… அவன் பார்த்த அவள் கண்களில் அவனுக்கான வாழ்க்கையை நேராக்கும் பரிதவிப்பு மட்டுமே
அர்ஜூன் குழப்பமாக அவளைப் பார்க்க
“இப்போ அந்த ப்ரேஸ்லெட்டைப் போடுங்க… என்னோட ஆசையை அப்புறமா சொல்றேன்” கண்மணி அவனிடம் சொல்லி முடித்து அவனைப் பார்க்க… அர்ஜூன் என்ன சொல்வதென்று என்ன செய்வதென்று தெரியாத நிலை…
அர்ஜூனால் இப்போது தட்டிக் கழித்து விட்டு போக முடியாதபடியான நிலை… கண்மணி அவனிடம் உரிமையுடன் கைகளை நீட்டி இருந்தாள்
“என் ஆசையை நிறைவேத்துவீங்கன்னு நம்பி… என் கையை நீட்றேன்”
தன் முன் கைகளை நீட்டியபடி… கோரிக்கையையும் வைத்துக் கொண்டிருப்பவளிடம்… என்ன சொல்வது… எப்படி தவிர்ப்பது…
ரிஷி ஏன் அவளருகே வந்து அமர வில்லை இப்போது புரிந்தது அர்ஜூனுக்கு… தான் வசமாக மாட்டிய நிலையும் அவனுக்குப் புரிந்த நிலையில் வேறொன்றும் சொல்ல முடியாத நிலையில் கண்மணிக்கு காப்பைப் போட்டு விட..
தன் கையில் இருந்த அந்தக் காப்பைப் பார்த்தவள்…
“உண்மையைச் சொல்லனும்னா… இந்தக் காப்பு எனக்கு அவ்ளோ முக்கியத்துவம் இல்லை… அதாவது இது என் அம்மா… உங்க அத்தை எனக்காக கொடுத்தது இல்லை… கொடுத்த நபரும் முக்கியமானவங்க இல்லை… ஆனால் இன்னைக்கு உங்க வாழ்க்கையை நேராக்க இது யூஸ் ஆகியிருக்கு… மத்தபடி இது வேல்யூவே இல்லாத ஒண்ணு என்னைப் பொறுத்தவரை… நீங்கதான் இதுக்கு ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுத்துட்டீங்க….” கண்மணி அந்தக் காப்பைப் பார்த்தபடியே அர்ஜூனிடம் உறுதியான குரலில் சொல்லி முடிக்க.. அவளின் வார்த்தைகள் அங்கிருந்த யாருக்கும் ஒன்றும் புரியவில்லை…
அர்ஜூன் அமைதியாக விலகி நின்றுவிட்டான்… அமைதியாக விலகி நின்றிருந்தாலும் அவன் மனதில் குழப்பமும்… கோபமும் மட்டுமே… கண்மணியின் ஆசை என்னவென்று தெரியாதா அவனுக்கு… அதே நேரம்
அர்ஜூனைப் பார்த்த கண்மணியின் கண்களிலோ மிகப்பெரிய அமைதி… நிவேதாவுக்கான பக்கங்கள் அர்ஜூனின் வாழ்க்கைப்பக்கத்தில் தொடங்கப் போகும் தான் அச்சாரமிட்ட சந்தோசம் அப்போதே அந்தக் கண்களில் தெரிந்தது....
“அடுத்து கண்ணாடி வளையல் அடுக்கனும்…” பாட்டி அடுத்த அறிவிப்பை முழங்க…
இப்போது நாராயணன் முன் வந்தவராக…
“என் பேத்திக்கு… வைரத்தாலும் தங்கத்தாலும் என்னால இழைக்க முடியும்… ஆனால் இது அதைவிட எல்லாம் ரொம்ப விலை உயர்ந்தது… இன்னும் சொல்லப் போனால் விலை மதிப்பில்லாதது… என் பொண்ணு போட்ருந்த வளையல்… என் மாப்பிள்ளையும் நானும் இதைத்தான் அவளுக்கு பிறந்த வீட்டு சீரா கொடுக்கப் போகிறோம்” என்ற போதே கண்மணி ஆச்சரியமும்… குழப்பமும்… திகிலுமாக… நம்ப முடியாத பாவனையுடன் பார்க்க ஆரம்பித்திருக்க…அவளுக்கு மட்டுமல்ல சபையில் இருந்த மொத்த நபர்களுக்குமே இது சந்தோசமான அதிர்ச்சிதான்
தூரத்தில் நின்று பார்த்த ரிஷியின் இதழ்களிலோ விரக்தியான புன்னகை… அவன் மட்டுமே சலனமின்றி அந்த நிகழ்வைப் பார்த்தான்
அதே நேரம் கண்கள் கலங்கியதை அவனால் தவிர்க்கவே முடியவில்லை…
அந்த இரு உள்ளங்களுக்கும் மீண்டுமொரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி உண்டா… அவனை அவனே கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி…
நட்ராஜும் நாராயணனும்… சேர்ந்து கண்மணிக்கு வளையலைப் போட… அந்த நிமிடம் மொத்தக் குடும்பத்துக்குமே எதிர்பாராத சந்தோசம்… சத்தியமாக இதை யாருமே… ஏன் கண்மணியே எதிர்பார்க்கவில்லை…
“அப்பா… தாத்தா” கண்மணியின் குரல் தழுதழுத்திருந்தது…. அவளையும் மீறி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்திருக்க… வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தம் மட்டுமே கண்மணிக்கு…. எத்தனை வருட எதிர்பார்ப்பு… கனவு… ஆசை… எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பரிசு…. திக்கு முக்காடிப் போயிருந்தாள் கண்மணி… அடுத்த நொடி
”ப்பா… எனக்கு இது போதும்பா… “ என்றவள் தன் தந்தையின் மார்பில் தஞ்சம் புக.. அவள் நெற்றியில் வாஞ்சையுடன் தன் முத்தத்தைப் பதித்தார் அந்த தந்தை… ஆனந்தக் கண்ணீர் சூழ
“அவங்களை நீங்க பார்த்துப்பீங்க தானேப்பா…. அர்ஜூன் இனி நீங்க தாத்தா பாட்டியைப் பற்றி கவலைப்பட வேண்டாம்… என் அப்பா… அவங்க மருகன் பார்த்துப்பாரு என் தாத்தாவையும் பாட்டியையும்” என்றவள்
“பார்த்துப்பீங்கதானேப்பா… அம்மாக்கு இது போதும்பா… எனக்கும்பா ” கண்களில் கண்மணிக்கு கண்ணீர் ஊற்று மட்டுமே
“என் அப்பா.. ரொம்ப நல்லவர் தாத்தா… எனக்கு என் அப்பா ரொம்ப்ப ரொம்ப்ப முக்கியம்… அவரை எனக்கு அவ்ளோ பிடிக்கும்… அவருக்கு என்னைத் தவிர யாருமே இல்லை…. அவர் குழந்தை மாதிரி தாத்தா… அவரைப் புரிஞ்சுக்க உங்களுக்கு இவ்ளோ காலம் ஆகியிருக்கு“ உணர்ச்சிப் பெருக்கில் தழுதழுத்திருந்தவள்… அடுத்த நொடி…. தன் தந்தையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க .. மகளின் பேரன்பில் நட்ராஜ் உறைந்த நிமிடங்கள் அந்த நிமிடங்கள்…
”தேங்க்ஸ் தாத்தா… எனக்குத் தெரியும்… நான் உங்ககிட்ட ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கேட்டிருந்தால்… என் அப்பாகிட்ட பேசுங்கன்னு சொல்லியிருந்தால் பேசி இருப்பீங்கன்னு தெரியும்…. ஆனால் அப்படி கேட்க எனக்குப் பிடிக்கலை… உங்ககிட்டயும் சரி… அர்ஜூன் கிட்டயும் என் அப்பாவை ஏத்துக்கச் சொல்லி கெஞ்சப் பிடிக்கலை தாத்தா… அது ஏன்னு எனக்குத் தெரியலை…
“டேய் ஏண்டா இப்படி அழற…“ வேகமாக நாராயணன் தன் பேத்தியின் கண்ணீரைத் துடைக்க… அர்ஜூன் முதன் முதலாக கண்மணியின் நெகிழ்வான குரலைக் கேட்ட தருணம் அது… அதே போல நட்ராஜ் அவளுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் உணர்ந்த நிமிடங்கள்…
“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே…” அந்த உண்மையை முதன் முதலாக உணர்ந்தான் அர்ஜூன்… நட்ராஜை அவள் வெறுக்க ஆயிரம் காரணம் இருந்தும் கண்மணியால் அது ஏன் முடியவில்லை… அப்பா என்ற உறவை அவள் எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்பது அப்போதுதான் அர்ஜூனுக்குமே புரிந்தது…
கண்மணிக்கு நட்ராஜ் அப்பா என்பது பெயரளவில் இருந்த உறவு மட்டுமே… இப்படித்தான் அர்ஜூன் நினைத்திருந்தான்… கண்மணியும் அவளது தந்தைப் பாசத்தை இந்த அளவுக்கு காட்டியதுமே இல்லையே…
கண்மணியை தான் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கின்றோம் என்பது அந்த நிமிடம் அர்ஜுனுக்குப் புரிந்தது… ஒரு நாளும் அவனிடம் அவள் தந்தையின் மீதான அவளின் அன்பைப் பற்றி அவள் பேசியதில்லை… அவனிடம் அதற்காகக் கெஞ்சியதுமில்லை… கடமைக்காக நட்ராஜுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்று மட்டுமே அர்ஜூன் நினைத்திருந்தான்… அந்த வாழ்க்கையை மறக்கடித்து அவளைத் தங்களோடு அழைத்துச் சென்று விடலாம் என்பது மட்டுமே அவனின் நோக்கமாக இருந்தது…
ஆனால் இன்று கண்கூடாகப் பார்த்தான்… நட்ராஜின் மீதான அவளின் பாசத்தை… மகளாக அவளின் அப்பா மீதான பாசத்தை…
“டேய் என்னடாம்மா… அழாத நட்ராஜ் மகளின் கண்ணீரைத் துடைத்து விட்டவனாக… மகளை மீண்டும் நாற்காலியில் அமர வைக்க… வைதேகி நாராயணன் அருகில் வந்து நின்றவராக
“என் பொண்ணு ஆத்மா இன்னைக்கு சாந்தி அடைஞ்சிருக்கும்… உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி” வைதேகி நெகிழ்சியுடன் சொன்னவாறே அழ… இலட்சுமியும் ரிதன்யாவும் அவரைத் தேற்றினார்கள்…
ஒரு மாதிரியான நிம்மதியான உணர்வு அனைவருக்குமே நிரம்பியிருந்தது… ரிஷி கண்மணி பிரிந்து இருப்பது கூட இப்போது யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை… வருத்தமாக இல்லை… விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிக்கை அனைவருக்குமே வந்திருக்க… இலட்சுமி தன் மருமகளுக்கு தங்க வளையல்களைப் போட… அடுத்தடுத்து அனைவரும் போட ஆரம்பித்திருக்க… ரிதன்யாவின் முறையும் வந்திருந்தது…
“அண்ணி… நான் போடலாம் தானே…” தயக்கமாக ரிதன்யா கேட்க
”ரிது… உங்களுக்காக நான் ரொம்ப நாளா வெயிட்டிங்” என்று கண் சிமிட்டியபடி தன் மூத்த நாத்தனாருக்கு கைகளை நீட்ட…
“அண்ணி… “ என்றபடி அவளை அணைத்த ரிதன்யா… அவளின் நெற்றியில் முத்தம் வைக்க… கண்மணி அவளை சந்தோஷ அதிர்ச்சியுடன் பார்த்த போதே…
”நானும் நானும்…” ரித்விகாவும் ஓடி வந்து தன் அண்ணியின் கன்னத்தில் இதழ் பதித்து முத்தமிட… என அந்த நாள் அனைவருக்கும் சந்தோசத் தருணங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டிருந்ததது… ரிஷி என்கின்ற ஒருவனுக்கு தவிர…
“அண்ணி… அண்ணா உங்களுக்காக டான்ஸ்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தாரு… ஆனால் இப்போ வேண்டாம்னு சொல்லிட்டாரு…” ரித்விகா கவலையோடு சொல்ல…
கண்மணி பதில் சொல்லவில்லை… மாறாக
”ரித்வி… நீ வளையல் போட்டு விடலையா…”
தன் அண்ணன் பற்றிய பேச்சை நாசுக்காகத் தவிர்த்த தன் அண்ணியைப் பார்த்த ரித்வியின் முகம் கூம்பியதுதான்… ரிதன்யாதான் தங்கையிடம்
”நம்ம அண்ணி பற்றி உனக்குத்தான் எல்லாம் தெரியும்னு சொல்வ… அப்புறம் என்ன” ரிதன்யா ரித்விகாவை சமாதானப்படுத்தியது வேறு விசயம்…
கிருத்திகா… மகிளா… அவள் தாய்… என அனைவருமே கண்மணிக்கு வளையல் அணிவித்திருக்க… அடுத்து கண்மணிக்கு உணவூட்டும் சடங்கு… கிருத்திகாதான் கண்மணிக்கு தாயின் ஸ்தானத்தில் இருந்து சாதத்தை முதல் வாயாக ஊட்ட… கண்மணியின் கண்கள் கலங்கியபடி அதை வாங்கிக் கொண்டவள்… அடுத்து தன் பாட்டி வைதேகி்.. கந்தம்மாள்… இலட்சுமி… நட்ராஜ்… நாராயணன்… வேங்கட ராகவன்… என அனைவரையும் அவளாகவே தனக்கு ஊட்டச் சொல்லிக் கேட்க… ரிஷி இப்போதுமே தள்ளியே நின்றிருந்தவனாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தான்
…
ரிஷியின் கோபம்… கண்மணி அவனை ஒதுக்குகிறாள் என்பதால் மட்டுமே என அனைவரும் நினைத்திருக்க… இருவரில் யாரிடம் பேசுவது என்று அப்போதுமே குழம்பி நின்றிருந்தார்கள் பெரியவர்கள்…
ரிஷியைச் சமாதானப்படுத்துவதா… இல்லை கண்மணியைச் சமாதானப்படுத்துவதா… புரியாத மனநிலை…
பிடிவாதமாக இந்த வளைகாப்பு ஏற்பாடு செய்தவன் அவன் தான்… ஆனால் முற்றிலுமாக ஒதுங்கியும் இருந்தவனும் அவனே… இப்படி தள்ளி நிற்கவா நேற்றிலிருந்து கண்மணியை இங்கு தங்க வைக்க அந்தப் பாடு படுத்தினான்… இலட்சுமிக்கே மகனின் மீது கோபம் வந்திருக்க… ஒரு கட்டத்தில் இலட்சுமியும் தன் பொறுமையை இழந்திருந்தார்
---
வந்திருந்த சுற்றம்… நட்பு… உறவு என அனைவரும் சென்றிருக்க…
இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே….
”அப்புறம் என்ன ராகு காலம் வர்றதுக்கு முன்னாடி… புள்ளத்தாச்சிக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிச்சுட்டு… அவங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறதைப் பார்க்கலாம்… “
“ரிஷி இங்க வா…” பாட்டி ரிஷியை அழைக்க…
“என்னது இது… பொண்டாட்டி பிரசவத்துக்கு போறது சகஜம் தான்… புருசன்காரன் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்கிறதும் சகஜம் தான்… என்ன பண்றது… இந்தக் காலத்துலனாலும் பார்க்கிறதுக்கு பேசுறதுக்கு வசதி இருக்கு… எங்க காலம்லாம் யோசிச்சுப் பாரு… உங்க தாத்தாலாம் விட்ட கண்ணீர்ல எங்க ஊரு ஆறே நெறஞ்சு போச்சு…” என்ற போதே
அங்கிருந்த மொத்த கூட்டமும் பக்கென்று சிரித்து விட…. சிரிக்காத மூன்று முகங்கள்… ரிஷி… கண்மணி… இன்னொரு முகம் அர்ஜூன்…
”இது என்ன என் பேராண்டி ரிஷியா என்ன… வாயைத் திறந்தா மூடவே மாட்டான்… பேசிட்டே திரியிறவன்… என் பேத்தி அப்படி என்னம்மா மாய மருந்து போட்டா…”
“பாட்டி” ரிஷி பொறுமை இழந்து வார்த்தைகளை கடித்துத் துப்ப
அப்போது இலட்சுமி
“டேய்… கண்மணி பக்கத்தில வந்து நில்லு… ரெண்டு பேருக்கும் சேர்த்து திருஷ்டி கழிக்கனும்…”
“அம்மா… எனக்கு வேண்டாம்… நான் ரூம்க்கு போறேன்” ரிஷியின் கோபம் ஏற ஆரம்பித்துக் கொண்டிருக்க… தன் மகனின் நிலையை உணராமல்
”காலையில சாமி கும்பிட்ட உடனே எங்க போயிருந்த… போட்ருந்த பட்டு வேஷ்டியைக் கூட மாத்திட்டு வந்து நிக்குற… அப்படி என்னடா உனக்கு திடிர்னு கோபம்… இவ்ளோ நாள் அவ மேல இல்லாத கோபம்… இன்னைக்கு என்ன திடீர்னு… அப்படியே கோபம் இருந்தாலும்… உன் கோபத்தை எல்லாம்… இதுல காமிக்காத… உனக்கு இந்த சாமி… சடங்கெல்லாம் பிடிக்காதுதான்… அதுக்காக என் மருமக விசயத்துல எல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாது… பிரசவம்ன்றது மறுஜென்மம் எடுத்து வர்றது… அதுனால குறையில்லாமல் நாம நல்ல படியா வழி அனுப்பி வைக்கனும்… கண்ணு பட்ருக்கும்டா உங்களுக்கு” எனும் போதே… இலட்சுமி கையில் இருந்த ஆரத்தி தட்டு… பறந்து… அதில் இருந்த ஆரத்தி எல்லாம் பட்டு சிதறி இருக்க… ரிஷியின் முகம் சட்டை… உடல் முழுக்க ஆரத்தியின் சிவப்பு வண்ண திட்டுக்கள்…
மொத்த குடும்பமும்…. ரிஷியை அதிர்ச்சியுடன் பார்க்க…
“இது ஒண்ணுதான் குறைச்சல் எனக்கு… இது மட்டும் பண்ணிட்டா அப்படியே நான் நல்லா வாழ்ந்துருவேன்…” என்றபடி வேகமாக மாடி ஏறிய போதே…. அங்கிருந்த படியின் முனையில் இடித்திருக்க… இடித்த வேகத்தில் கால் கட்டைவிரலின் நகத்தில் அடிபட, அதில் காயம் ஏற்பட்டு… இரத்தம் கொட்ட ஆரம்பித்திருக்க…
“அம்மா…” வலியில் துடித்தபடி… ரிஷி அப்படியே அமர்ந்து விட… இலட்சுமி பதறிப் போய்…. அவனருகே போக… ரிதன்யா… ரித்வி…. என வேகமாக அவனருகே போக…
கண்மணியோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவனை…
“யாராவது பக்கத்துல வந்தீங்க… போங்க எல்லாரும் அவளை மாதிரியே எல்லாருமே என்னை விட்டுட்டு போயிருங்க… எனக்கு யாரும் வேண்டாம்.. யாருமே வேண்டாம்” வெறி கொண்டு உச்சஸ்தாயில் கத்த
இலட்சுமி இப்போதும் அவனை விடவில்லை
“அவ வேண்டாம்னு விட்டுட்டு போனது இன்னைக்குத்தான் தெரிந்ததா… நான் பேசலேனாலும் நீங்க அவளைப் பார்த்துக்கனும் சொன்னது நீதானே… நீதானே அவளுக்கு வளைகாப்பு நடத்தனும்னு சொன்ன… சொன்னவன் இப்படி நடந்துக்கிறது என்ன முறை… நீ சொன்னதை மதிச்சு அந்த பொண்ணும் வந்துச்சுதானே”
“நான் சொன்னதை மதிச்சு வந்தாளா… இல்லயே… நீங்க கூப்பிட்டீங்க அதுனால வந்தா… அதுனால நீங்களே வழி அனுப்பி வைங்க…” வலியை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தபடி சொன்னவன்… அடுத்த நிமிடமே எழுந்து மாடி ஏறப் போன போதே
“கண்மணி… நீயாவது அவன்கிட்ட பேசும்மா…” இலட்சுமி கலங்கிய கண்களோடு கண்மணியிடம் திரும்பியவராக[ பரிதவித்துச் சொல்ல… அவளோ அதற்கு மேல்
“அத்தை… நான் யாருக்காகவும்… யார் கூப்பிட்டதுக்காகவும் வரலை… என் குழந்தை இந்த வீட்டு வாரிசு.. என்னோட பிடிவாதத்துனால அந்தக் குழந்தைக்கு பாதிப்பு ஏதும் வரக் கூடாது… அதுக்கு இந்த சடங்குலாம் முக்கியம்… “ எனும் போதே
ரிஷி சட்டென்று நின்றவன்… கண்மணியை நேர்ப்பார்வை பார்த்து ஒரு முறை முறைக்க… கண்மணியும் பேச்சை நிறுத்தியிருக்க… ரிஷி அதற்கு மேல் நிற்கவில்லை…. மேலே ஏறிச் சென்று விட்டான்… தன் அறைக்குள் சென்று படாரென்று தன் அறைக்கதவையும் சாத்தியிருந்தான்....
---
“கண்மணி… என்னம்மா இது… நீயாவது இந்த சமயத்துல அமைதியா இருக்கலாமே… அவன் கோபம் உனக்கும் தெரியுமே… ” இலட்சுமி கண் கலங்கி கண்மணியிடம் வர… கண்மணியோ
“அத்தை… காலையில ஒரு சின்ன ஷாக் கொடுத்தேன்… அதுக்கான ரியாக்ஷன் தான் இது… பழகிக்கட்டும்…” என்றபடி… அலட்சியமாகத் திரும்ப…
அவள் முன் நின்றதோ அக்கினி பிழம்பாக காட்சி அளித்த மகிளா…
கண்மணியை எரித்த பார்வையோடு…. மகிளா வாய் திறக்கப் போன போதே…
”ஷ்… ஷ்…” அவள் உதட்டில் விரல் வைத்து அவளை நிறுத்தியவள்…
“உன் ரிஷி மாமாவுக்காக பேச இந்த உதடுகளுக்கு இனி உரிமை இல்லை… உன்னோட உரிமை… பேச்சு எல்லாம் காலாவதியான காசோலை போல… அதை உனக்கு சரியான நேரத்துல பயன்படுத்த தெரிய வில்லை… இனி அதுக்கு மதிப்பும் இல்லை… அது தேவையும் இல்லை… நீ எங்க இருக்கனுமோ… அங்கே இருக்க… அதுதான் உனக்கு சரியான இடமும் கூட… அதை தக்க வச்சுக்கோ… சரியா… உன் உரிமை… செல்லமா பிடிவாதம் பிடிக்கிறது… கை நீட்றது… சவுண்டு விட்றது எல்லாம் அதோ அங்க இருக்காரே ப்ரேம்… அவர்கிட்ட மட்டும் வச்சுக்க… என் விசயங்கள்ள… என் உரிமைல தலையிடறதை பார்த்துட்டு மத்தவங்க மாதிரி நான் பொறுமையா இருக்க மாட்டேன்… ஒரு தடவை என்கிட்ட தப்பிச்சுட்ட… பரவாயில்லை… ஆனால் இனி ரிதன்யா… ரித்விகா… இவங்ககிட்ட மட்டும்தான் உன் உரிமை இருக்கனும்… என்ன புரிந்ததா…” அமைதியான குரலில் எரிமலைக் குழம்புகளை வீச முடியுமா… கண்மணி வீசினாள் மகிளாவிடம்…
மகிளாவை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் அதிர்ச்சி அடைய வைத்தபடி…. கடிகாரத்தைப் பார்த்தவள்… அடுத்து இலட்சுமியைப் பார்த்து…
“டைம் ஆகிருச்சு பாருங்க… நாம அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாமா” என்று கேட்க… இலட்சுமியும் தலையாட்டினார் மன நிறைவில்லாமல்…
---
”ஊரு கண்ணு...
உறவு கண்ணு...
நாய் கண்ணு...
நரி கண்ணு...
நல்ல கண்ணு...
நொள்ள கண்ணு...
கொல்லி கண்ணு...
எல்லா கண்ணும் போகணும்”
கண்மணியைக்கு ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து முடித்து ஒரு வழியாக நிகழ்ச்சியை மங்களகரமாக முடித்து வைத்திருக்க…
“தாத்தா நான் எங்க வீட்டுக்கு போகவா…” கண்மணி தயக்கத்துடன் நாராயணன் - வைதேகியைப் பார்த்து கேட்டபடியே
“எனக்கு எங்க அப்பா பக்கத்தில எங்க வீட்ல இருக்கனும்…” சொன்னபோதே அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை…
நாராயணன் என்ன வேண்டாமென்று சொல்லப் போகிறாரா… நட்ராஜோடு பேசாதபோது கேட்டிருந்தாலே பேத்திக்காக சம்மதம் சொல்லியிருப்பார்… இப்போது நட்ராஜையே மருமகனாக ஏற்றுக் கொண்டபின்… அவரின் பதில் என்னவாக இருக்கும்…
“உனக்கு எங்க இருக்கனும்னு தோணுதோ… அங்க இரு… நாங்க வந்து பார்த்துட்டு போறோம்…” நாராயணனின் வார்த்தைகளில் கண்மணியின் கண்களில் சந்தோசம் வர…
“அர்ஜூன்… அப்பா வீட்ல இறக்கி விட்றீங்களா” என காரில் ஏறியவள்… அனைவரிடமும் விடைபெற்றபடி… கண்களை மூடி காரின் முன் இருக்கையில் அர்ஜூனின் அருகில் அமர்ந்தவள்…
மேலே பார்க்கக் கூடாது… மேலே பார்க்கக் கூடாது என மூளை சொல்ல… மனமோ முரண்டு பிடித்தது…. ஆனாலும் வழக்கம் போல அவள் மூளையே அவளை வென்றது… நிமிர்ந்து மேலே பார்க்கவில்லை… நிமிர்ந்து பார்த்திருந்தாலும் ஏமாற்றம் தான் கிடைத்திருக்கும் என்பது வேறு விசயம்… கண்மணி கிளம்பிவிட்டாள்...
-------------
அடுத்த சில நிமிடங்களில் கண்மணி இல்லத்தின் வாசலில் வந்து முன் வந்து நின்றது அர்ஜூனின் கார்… கண்மணியை இறக்கிவிட்டு அதே வேகத்தில் அர்ஜூன் அங்கிருந்தும் சென்றுவிட… அவன் சென்ற வேகமே இவள் சாமர்த்தியமாக அவனிடம் வாங்கிய வாக்கின் காரணமாக இவள் மீது அவனுக்கு இருந்த அவன் கோபத்தை சொல்லி இருக்க... அதை நினைத்து கண்மணியின் இதழ் ஓரத்தில் மெல்லிய புன்னகை திருப்தியோடு வந்திருந்தது…
இறங்கியவள் உள்ளே நுழைய… ஏனோ இப்போது கண்மணியையும் மீறி அவள் மூளை கொடுத்த எச்சரிக்கையையும் அலட்சியம் செய்து அவளது பார்வை மாடி அறையை நோக்கின…
அங்கிருந்த மாடிப்படிகளும்… அந்த மாடி அறையும்… அவனுக்கும் அவளுக்குமான… அவள் திருமதி ரிஷிகேஷ் ஆவதற்கும் முன்… அவன் அவளின் ரிஷிக்கண்ணாவாக மாறுவதற்கு முன்னரே அழகான நினைவுகளை கொடுத்த இடம்… அவனின் அவளாகவும் அவளின் அவனாகவும் ஆன பின்னோ….அவர்களுக்கே அவர்களுக்கென்று உரித்தான நினைவுப் பெட்டகங்களை உள்ளடக்கிய இடம்…
ஊடல்களும் கூடல்களும்…
சமாதானங்களும்… சண்டைகளும்….
தேற்றலும்… ஆற்றலும்….
கொஞ்சலும்… கெஞ்சலும்…
அவர்கள் பேசிய காதல் வசனங்களில் முற்றுப்புள்ளி தனக்கும் ஒரு பங்களிப்பு வேண்டும் என கெஞ்சிய தருணங்கள் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிய தருணங்கள்….
தொடர் வாக்கியமாக நிறுத்தம் இன்றி… நிறுத்தும் எண்ணமும் இன்றி… விடை பெற முடியாமல்… பேசி சலித்ததும்… பேசிக் களித்ததும் நினைவுக்கு வர… இன்றோ இருவருக்கும் இடையே ஒரு வார்த்தையும் இல்லாமல் வற்றிப் போன வறண்டு போன நிமிடங்களாகப் போனதேன்…
ஆறுதலுக்காக அல்லாடிய போதும்… காதல் கொண்டு அணை தாண்டிய போதும்… காமம் கரை தாண்டும் முன்னும்… குழந்தையாக மாறி அவளை அணைத்து இடை உரசிய அவன் மீசை குறுகுறுப்பும்… தாயாக மாறிய அவன் மார்பில் தலை சாய்த்து தாலாட்டாய் இவள் கேட்ட அவனின் இதயத் துடிப்பும் இனி இவளுக்கானது இல்லையா…
என் ரிஷிக்கண்ணாவின் கண்ணின் மணி இனி நான் இல்லையா…
தேடித் தேடி வந்து அவளிடம் தன் காதலுக்காகப் போராடியவன்… இன்று நொந்து ஓய்ந்து போனதற்கு காரணம்…
இவளா… விதியா…
”நேற்று வரை போராடியவன் இன்று ஓய்ந்து விட்டான்…. நாளை புரிந்து கொண்டு அவனுக்கான வாழ்க்கையை வாழவும் ஆரம்பிப்பான்…” மீண்டும் கண்மணி தனக்குள் சமாதானப்படுத்திக் கொண்டாலும்…
அவன் பார்வை… அவன் வார்த்தைகள்… அவன் கொஞ்சல்கள்… அவன் ரவுடியாக அவனை ஆள அவன் கொடுத்த உரிமை… அவன் அம்முவாக அவளுக்கு அவன் கொடுக்கும் அன்புச் சலுகை… இவை எதுவுமே அவளுக்கு கிடைக்காதா இனி… அத்தனையும் அவ்வளவுதானா… வருவானா…
நினைத்த போதே… கண்கள் கலங்க ஆரம்பித்திருக்க… வழக்கம் போல கண்ணீரை கண்மணி நிறுத்த நினைத்த போதே…
நொடி நேரம் தான்… தன் கண்களையே நம்ப முடியாமல் கண்மணி மீண்டும் கண்களைச் சிமிட்டிப் பார்க்க…
இயந்திரப் பாவை மெழுகுப் பாவையாக மாறிய நிலை…
அவளின் கண்ணீர் முத்துகளை நிறுத்தும் உரிமையை அவள் மனம் இழந்திருக்க.. கண்ணீர் அவள் கண்களில் இருந்து கரை தாண்டியிருக்க…
அழுத்தம் கொண்ட அவள் மனதை இளக வைக்கும் விந்தை தெரிந்தவன் அவன் ஒருவன் மட்டுமே… அவள் கணவனே…. அவளின் கண்ணாளனே… இதோ நினைவுகளை நிஜமாக்கி அவள் முன் வந்து நின்றவனும் அவனே….
“வெல்கம் மிஸஸ் ரிஷிகேஷ் அலைஸ் அம்மு…” கண்சிமிட்டியபடி அழகான பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக வரவேற்றதும் அவனே…
புருவம் உயர்த்தி… தன்னவளை தலைசாய்த்துப் பார்த்து… அவளின் ரிஷிக்கண்ணாவாக புன்னகை செய்ய…
ரிஷிகேஷியின் உற்சாகமான குறும்பான புன்னகை… அழகான ஆரோக்கியமான தொற்று வியாதியோ… அங்கு நின்றிருந்த அத்தனை பேரிடமும் அது தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்க… சற்று முன் வரை அங்கிருந்த யாரின் முகங்களிலும் நிறைவான சந்தோசம் இல்லை… இப்போதோ கண்மணியைத் தவிர அத்தனை பேரின் இதழ்களும் ஆச்சரிய புன்னகையில் விரிந்திருந்தன ரிஷிகேஷின் அதிரடியில்….
-----
/* கை நீட்டும் தூரம் காட்சி மாறும்
பூவைக் கண்டாலே போதை ஏறும்
முன் பின்னே என்றும் ரோஜா கூட்டம் நானோ உன்கையில் பொம்மலாட்டம்
நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி உன்னை சுற்றும் காதல் கொடிநான்
நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம் நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா… */
Really R💞K 🔥 jii.. Kanmani's words to Raj & Narayanan.. Such a feeling jii.. Rk's changeover ultimate jii.. But the pain..? Rishi is magical while Kanmani is mysterious.. Much Awaiting jii..