/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
இந்த எபிசோட்ஸ்... திங்க் பண்ண.. எழுத கடினமான அத்தியாயங்கள்... அதுமட்டுமில்லாமல் எக்கச்சக்க சீன்ஸ் கவர் பண்ற எபிசோட்ஸ்.. அண்ட் மொத்த ப்ளாஸ்பேக்கும் முடிச்சுட்டு வளைகாப்பு சீன்ல கண்டினியூ ஆகிற சீன்ஸ்...
மே பி... சில சீன்ஸ் சில கேரக்டர்ஸ் தெளிவா இல்லாமல் கூட போகலாம்.... முடிந்த அளவுக்கு நானும் ட்ரை பண்ணி எழுதிட்டு இருக்கேன்...
அண்ட்.... இனி டைம் இல்ல... இப்போ சொல்லலைனாலும் பின்னால ஒரு எபிசோட்ல அந்த கேரக்ட்ரோட... மைண்ட்செட்ட... க்ளாரிட்டியை இன்னொரு எபிசோட்ல சொல்லிறலாம்னு எஸ்கேப்பும் ஆக முடியாது... எப்போதுமே ஃபைனல் எபிசோட்ஸ் எழுதும் போது ரைட்டரா எனக்கு இருக்கிற இன்னொரு அழுத்தம் என்னன்னா... நம்ம ரியாலிட்டி லைஃப விட.. கற்பனை கதாபாத்திரங்கள் அதிகமா நம்மை அதிகமா யோசிக்க வைக்கும்... சோ அதை ரொம்ப நாள் இழுத்துட்டு இருக்க முடியாது... அதே நேரம் இந்தக் கதையையும் சரியா முடிக்கனும்… இந்த எண்ண ஓட்டம் என்னோட வழக்கமான எல்லா வேலையுமே ஒரு மாதிரி நான் சிங்ல போக வைக்கும்...
சோ எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் முடிக்கிறேனோ... அந்த அளவுக்கு நான் தப்பிச்சேன்... ஆனாலும் கதை ஒழுங்கா வரலைனா... போனால் போகுது கற்பனை கதாபாத்திரங்கள் தானேன்னு அப்டேட் போடவும் மனசும் வர மாட்டேங்குது...
அண்ட் கண்மணி ரிஷி.... இந்தக் கதை லவ் சேக்ரிஃபைஸ் கான்செப்ட் கிடையாது... அண்ட் ஆதவன் போர்ஷனும் ஹைலைட் இல்லை… லைட் கான்செப்ட் தான்... ரிஷி-கண்மணி பிரிந்த பின்னால உடனே கிளைமேக்ஸ்னா…
இந்தக் கதை தம்பதிகளின் பிரிவுக்கான கதை இல்லை.... அது வேற கதைக்காகன கதை.. அதாவது நான் யோசிச்ச முதல் கதை ‘ஜீவஜீவிதம்’ அதோட கதைக்களம் ஆதவன் மாதிரியான கேரக்டர்னால மாறுகிற ரெண்டு பேரோட லைஃப்... காதல் தோல்வி... ஏன் இவங்க லைஃப் இப்படி ஆனதுன்ற ஃபீல்.. டீன் ஏஜ்ல என்ன மாதிரி யோசிச்சிருக்கேன்னு எனக்கே காமெடியாத்தான் இருக்கு... ஒரு வேளை நான் லவ் பண்ணியிருந்தேன்னா அப்படிலாம் கதை யோசிச்சுருக்க மாட்டேனோ என்னவோ... அப்போ நமக்கு லவ்வும் தெரியாதுதான்... ஆனால் நம்மளச் சுற்றி நடக்கிற… ஃப்ரெண்ட்ஸோட லவ்... அதோட பிரிவு... இதெல்லாம் பார்த்து தோணியிருக்கலாம்… இவங்க லைஃப் இன்னும் ஒரு ஏழெட்டு வருசம் கடந்து இருந்து இவங்க மீட் பண்ணினா எப்படி இருக்கும்னு... அப்படி யோசிச்ச கதைதான்… ஜீவ ஜீவிதம்
ஜீவா&ஜீவிதா... ஜீவிதா நான் முதன் முதல்ல யோசிட்ட கேரக்டர்… இந்த ஜீவிதா கேரக்டர்ல இருந்துதான்... மே பி கீர்த்தனா... கண்மணி... அண்ட் மது கேரக்ட்ரஸ் பார்ஷியலா வந்திருக்கலாம்... காதல் தோல்வி... வாழ்க்கைத் தோல்வி... ஏழு வயது பையனோட தனிமையான வாழ்க்கை… எல்லாமே சோகம்... அதுனாலேயே அந்தக் கதை எழுதல.... ரொம்ப எமோஷனல் ஸ்டோரி... இன்னொரு காமெடி என்னன்னா... ஜீவா போர்ஷன்ஸ் அதிகமா திங்க் பண்ணினது இல்லை... அது வரவும் இல்லை... ஏனோ ஹீரோ கேரக்டர் யோசிக்க வரலை... ஹீரோயின் செண்ட்ரிக் ஸ்டோரி மாதிரிதான் மைண்ட் ஃபுல்லா ஓடிட்டு இருக்கும்... ஜீவா ஜீவிதா லவ்வர்ஸா கான்செப்ட் மட்டும் தான் மைன்ட்ல இப்போ வரைக்கு இருக்கு... இந்தக் கதை ஹஸ்பெண்ட் வைஃப் ஸ்டோரி கிடையாது... ... ஆனால் கண்டிப்பா ஒரு நாள் எழுதுவேன்... கதை நாம அடிக்கடி படிச்ச பார்த்த கதைதான்… ஆனால் சொல்ற விதம் வேற மாதிரி இருக்கும்… எப்படி கண்மணி-ரிஷி கதை பெரிய கதைரோ… அது போல இதுவும் பெரிய கதையாத்தான் வரும்னு நினைக்கிறே… ஆனால் லவ் அண்ட் லவ் ஒன்லி மட்டும் தான் இந்தக் கதையா இருக்கும் … பார்க்கலாம் அந்த ஆண்டவன் அருள் எப்போ கிடைக்கும்னு…
அடுத்து நம்ம கதை என்னன்னா…
ஹீரோயின் அன்கண்டிஷனல் கதை எழுதி எழுதியே டயர்ட் ஆகிட்டேன்... சோ அடுத்த கதை ஆன் கோயிங் செழியன் ஆராதனா கதைக்கு வருவோம் … ஆராதனா கேரக்டருக்கு கண்மணி கிட்ட இருந்தே ட்ரெய்னிங் ஸ்டார்ட் ஆகிருச்சு... நாயகனின் Hidden love vs நாயகியின் explicit vengeance இதுதான் ‘உறவான நிலவொன்று சதிராட’ கதைக்களம்... மே மந்த் ல ஸ்டார்ட் பண்ணிருவேன்... வழக்கம் போல உங்க ஆதரவை அந்தக் கதைக்கும் கொடுப்பீங்கன்னு நம்புகிறேன்...
நன்றி நன்றி…
பிரவீணா விஜய்*/
அத்தியாயம் 101-1
ரிஷி தன்னை உணர்ந்து செயலாற்றும் முன்னரே காவல் துறையும் உள்ளே கீழே வந்திருக்க… ரிஷி அப்போதுதான் உணர்வுக்கே வந்தவனாக… தன் மனைவியின் நிலையை நினைத்துப் பார்த்தவனாக…
வேகமாக அவளிடம் ஓடினான் ரிஷி… ஆதவன் உண்மையிலேயே இறந்துவிட்டானா… இல்லையா… இதெல்லாம் பார்க்கும் அளவிற்கு அவனுக்கு பொறுமையும் இல்லை… கண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே… அவள் தன்னை அந்தச் சூழ்நிலையிலும் நினைக்கவில்லையே என்ற வேதனையை எல்லாம் தள்ளி வைத்தவனாக
“அம்மு… கண்மணி… சொல்லுடி என்ன நடந்துச்சு… உண்மையைச் சொன்னால்தாண்டி என்னால உன்னைக் காப்பாற்ற முடியும் “ அவளின் முன் மண்டி போட்டவனாக அவளிடம் கெஞ்சியவன்… வேக வேகமாக அவளை சோதனையிட்டான்… அவளிடம் அந்த ஆதவனை கொன்ற ஆயுதம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தான்… ஒன்றுமே இல்லாமல் இருக்க….
”ப்ளீஸ்டி… அவங்க வர்றதுக்குள்ள நாம ஏதாவது பண்ணனும்…” ரிஷி கெஞ்ச ஆரம்பித்திருக்க… கண்மணி அவனிடம்… தன் முந்தானைத் தலைப்பைக் காட்டி இருக்க… அதில் இருந்த ப்ளேடைப் பார்த்தவனுக்கு ...அவளுக்கு இந்த எண்ணம் தன்னிடமிருந்துதான் வந்ததோ என்ற குற்ற உணர்ச்சியில் தனித்தவனாக…
”இதுக்கும் நானே காரணமாகிட்டேனாடி… அன்னைக்கு நான் ப்ளேடு எடுத்துட்டு வந்த மாதிரி…” என்றவனைப் பார்த்து கண்மணி விரக்தியாகச் சிரித்தாள்… இது இன்று நேற்று வந்த பழக்கமல்ல…. இது அவளின் குழந்தைப் பருவத்தில் இருந்தே இருக்கின்றது என்பது தன் கணவனுக்குத் தெரியாதே…
”என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியாதா... ரித்வி சொன்னான்னு ஏண்டி வந்த ” ரிஷி ஆவேசமாக அவளை உலுக்க… கண்மணி அப்போதும் பதில் சொல்லவில்லை… இப்போது ரிஷியின் கோபம் ஆவேசம்… பச்சாதாபம் எல்லாம் போய்… பரிதவிப்பு மட்டுமே எஞ்சியிருக்க
“உனக்காக அன்றைக்கு யாரும் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் இன்றைக்கும் அதே நிலைமையா…” அவள் முகத்தைக் கையில் ஏந்தித் தவித்த ரிஷியின் கண்களை மட்டுமே பார்த்தாள் கண்மணி… கணவனின் கண்கள் அது தனக்காகத் தவித்த தவிப்பை மட்டுமே பார்த்தவளின் கண்கள் அவனிடம் மட்டுமே தனக்கான ஒளியைக் கண்ட அதே நொடி… சில மணி நேரங்களுக்கு முன் இருளில் தத்தளித்த தன் நினைவுகளுக்கும் சென்றது….
கண்மணியின் கண்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருக்க… கைகளும் கட்டப்பட்ட நிலையில் எங்கோ அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள்…
எப்போதும் போல அப்போதும் தான் எடுத்த முடிவு தவறென்று நினைக்கவில்லை… எதையும் எதிர்கொள்ளும் தைரியம் அவளிடம் இருந்தது… ரிஷி மட்டுமே அவளது பலவீனம்… அவனைத் தவிர அனைத்தையுமே தைரியமாக எதிர்கொள்வாள்…
ரித்விகா இவளை அழைத்துச் சொன்ன போதே… அதுவும் ரிஷிக்கு ஆபத்து என்ற நிலையில் அவள் வேறேதுவும் யோசிக்கவில்லை… கிளம்பி விட்டாள்… அவர்கள் வர சொன்ன இடத்திற்கும் சென்றவளை… கண்களைக் கட்டி ரிதன்யா இருந்த இடத்திற்கும் அழைத்து வந்திருந்தாள்…
கண்மணிக்கு முன்னரே விக்கி வந்திருக்க… விக்கியும் அவர்களிடம் மாட்டி இருக்க… விக்கியும் ரிதன்யாவும் பேச முடியாதபடி கட்டப்பட்டிருந்தனர்… கண்மணி அங்கு வந்தது இருவருக்குமே அதிர்ச்சியாக இருக்க… ரிதன்யாவுக்கோ குற்ற உணர்ச்சி அதிகமாகி இருந்தது…
ஆதவன் அண்ணன் என்று இந்த பழகிய நாட்கள் வந்து போயிருக்க… இவ்வளவு வஞ்சம் வைத்தா இவன் இத்தனை நாட்கள் இருந்திருக்கின்றான்… ரிதன்யா கண்கள் மட்டுமே கண்ணீர் வடிந்திருக்க…
இன்னொரு புறமோ… தனக்காக வந்த தன் அண்ணியை… “அண்ணி” என்று வாய் விட்டு கதறிக் கூட அழைக்க முடியாத நிலையில் அவள் இருந்தாள்..
தன் அண்ணனின் மேல் இப்படி ஒரு வஞ்சமா இவனுக்கு…. ரிதன்யாவுக்கே அது ஆச்சரியம் தான்… எதுவுமே அறியாமல் இருந்துவிட்டோமா… தன் அண்ணன் இன்னும் என்னவெல்லம் தாங்கினான் தங்களுக்காக… மறைத்திருக்கின்றான்… யார் யாரிடமெல்லாம் போராடியிருக்கின்றான்… தன் அண்ணி எந்த அளவுக்கு அவனுக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றாள்… எதுவுமே அறியாமல்… மகிளாவை மட்டுமே தன் அண்ணன் வாழ்க்கை… அதை இழந்து விட்டான் என வேதனையில் இருந்த காலம் நினைவுக்கு வந்திருக்க… தன் முட்டாள் தனத்தை எல்லாம் நினைத்து மனம் வெம்ப ஆரம்பித்த போதே ஆதவனின் கண்மணியைப் பார்த்து அழைத்த வார்த்தை இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது…
”கண்ணம்மா…” ஆதவன் அழைத்தபடி கண்மணியின் அருகில் வந்திருக்க… ரிதன்யா மற்றும் விக்கிதான் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்… கண்மணியோ சற்று கூட பதட்டமில்லாமல்
“ஆதவன்… தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்க… ரிஷியோட போட்டி போட்டு ஜெயிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு… எதுக்காக இவ்ளோ கீழ்த்தரமா … பழி வாங்குறதுக்கு ஏன் அவங்க வீட்டு பெண்களை குறி வைக்கிறீங்க…” கண்கள் கட்டப்பட்ட நிலையில் கண்மணி ஆவேசமாகக் கேட்க
ஆதவனோ சிரிக்க ஆரம்பித்தவனாக…
“ஹையோ கண்ணம்மா… உனக்குப் புரியலையா… ரிஷி… ரிதன்யா இவங்களோட எல்லாம் போட்டி போடவே இல்லை… அந்த ரிஷி அவன்லாம் எனக்கு இனி தேவையே இல்லை… ரிஷினா உனக்கு ரொம்ப பிடிக்குமாமே… அவனை வச்சு உன்னைப் பிடிக்கலாம்னு பார்த்தா நீயே வந்துட்ட கண்ணம்மா” என்றவனின் விரல்கள் கண்மணியின் கன்னத்தை வருடி... அவள் கன்னக் குழியில் தன் பயணத்தை நிறுத்தியிருந்தது...
அதைப் பார்த்த விக்கியும் ரிதன்யாவும் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு சென்றிருக்க… அங்கு அதிர்ச்சி அடைந்திருந்த மற்றொரு நபரோ… மருது… அவன் கண்கள் ஆக்ரோஷத்தில் தீப்பிழம்பை உமிழ்ந்திருக்க… ஆதவன் தான் அதை அறியவில்லை… கண்மணிக்கும் தெரியவில்லை…
கண்மணி வேகமாக ஆதவனிடமிருந்து… அவன் குரல் வந்த திசையில் இருந்து எதிர்புறம் மாற்றியவளாக
”சரி.. நான்தான் வந்துட்டேன்ல… ரிதன்யாவை அனுப்பு” கண்மணி கொஞ்சம் கூட பதட்டப்படாமல் கண்களை மூடியிருந்த நிலையிலும் சொல்ல…
“ஹ்ம்ம்… இந்த தைரியம் தான் கண்ணம்மா… நீதான் எனக்கு பொருத்தமான ஜோடி… அந்தப் புள்ளப் பூச்சி ரிஷி இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளாகிட்டான்னா… அதுக்கு காரணம்… கண்மணின்ற இந்த அழகு தேவதை… தைரிய தேவதைதான்… அந்த தேவதை அவன்கிட்ட இருக்கிறது சரியே இல்லை…. அதுதான்… நான் எடுத்துகிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றவனின் குரல் கண்மணியின் கழுத்தருகே ஒலித்திருக்க…
“ரிதன்யாவை அனுப்புனு சொன்னேன் ஆதவன்” கண்மணியின் குரல் இன்னும் கடினமாகி இருக்க… அவள் தொண்டைக் குழியின் அதி வேக இயக்கமே அவளின் பதட்டத்தை ஆதவனுக்கு காட்டி இருக்க
“அனுப்பிடலாம்… அனுப்பிடலாம்… ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்… அது உண்மையான்னு செக் பண்ணிப் பார்க்கனும் கண்ணம்மா” ஆதவன் கண்மணியின் காதருகில் ரகசியமான குரலில் கேட்க…. இப்போது கண்மணி அனிச்சையாக அவளையுமறியாமல் அவனிடமிருந்து விலக முயற்சிக்க… அவளது இதயமும் படபடக்க ஆரம்பித்திருந்தது…
“வெயிட் வெயிட்… இப்பவே பதட்டப்பட்டா எப்படி கண்ணம்மா… நான் என்ன செக் பண்ணனும்ணா… ’கண்மணி’ இந்த வார்த்தை… இந்த பேர் ஒரு மந்திர வார்த்தையாமே… இந்த மந்திரவார்த்தையைச் சொன்னாலே மாயாஜாலம் நடக்குமாமே… ரிஷி மாதிரி… இங்க… இதோ தரையில கீழ கிடந்தவங்க எல்லாம்… அதோ அந்த கோபுரத்துக்கு போகிற மாதிரி மேல போயிருவாங்களாமே…. உண்மையா என்ன… “ என்றபடியே…
விக்கியின் அருகில் வந்தவன்…
“ஏன் விக்கி… உன் ஃப்ரெண்ட் அந்த ரிஷிகேஷ் நான் பார்க்க… எப்படி இருந்தவன் தெரியுமா… இன்னைக்கு அவன் ’ஆர் கே’ வாம்… அவன் பின்னால ஆயிரம் பேராம்.. ஹான் அவனுக்காக உயிரைக் கூடக் கொடுப்பாங்களாமாமே… கேள்விப்பட்டேன்… அப்படி என்னடா அவன்கிட்ட திடீர்னு வந்துச்சு… என் முன்னால நிக்கிறதுக்கெல்லாம் பயப்பட்டவன்… இன்னைக்கு ஹீரோவாகிட்டானா… நெவர்… என் அப்பாவையே அவனைக் கம்பேர் பண்ணி என்னை கீழ்த்தரமா பேச வச்சிட்டான்ல அந்த ரிஷி… “ அங்கிருந்த சுவற்றில் கைகளை குத்திக் கொண்டவன்..
ரிதன்யா அருகில் வந்தான் இப்போது…
“ரிது… உன் அண்ணனை நீயே.. நீ என்ன உன் இன்னொரு தங்கச்சி… அவ கூட மதிச்சுப் பேச மாட்டா…. இன்னைக்கு அவனுக்கு இவ்ளோ மரியாதையா… எப்படி… எப்படி… இந்தத் தகுதி…. மரியாதைலாம் எப்படி வந்தது… எங்கிருந்து வந்தது…. என் கால்தூசிக்கு பெற மாட்டான் அந்த ரிஷி… அவன் அவன் இங்க எல்லோருக்கும் தலைவனா… தலையில தூக்கி வச்சு கொண்டாட்றானுங்க அந்த கேடு கெட்ட நன்றி கூட்டங்கள்… “ ஆதவனின் பழி வெறியும் பொறாமையும் எல்லை மீறி இருக்க
“அவன் ’ஆர் கே’ வாகவே இருந்துட்டு போகட்டும்… அவன் கிட்ட வேலை பார்க்கிற அந்த அடிமை நாய்களுக்கு ஆண்டவனாகவே இருக்கட்டும்… வேலையே பார்க்காமல் காசைத் தூக்கி எறிஞ்சிட்டு இருந்தான்ல… அப்படித்தான் இருப்பாங்க அந்த வேலைக்காரனுங்க… எனக்கு அந்த ரிஷி வேண்டாம்… அவன் அப்பாவோட கம்பெனி வேண்டாம்… பிச்சை போட்டு அவனை விட்றேன்… ” என்றவன் கண்மணியின் அருகில் நெருங்கியவனாக
”எனக்கு வேற எதுவும் வேண்டாம்.. இந்த மந்திரக் கோல் மட்டும் போதும்… எல்லாம் என்னைத் தேடி வரும்… என்ன கண்மணி அப்படித்தானே… அந்த மாயாஜாலம் எனக்கும் நடக்கும் தானே… அப்போ அந்த ரிஷி கீழ வந்துருவான்…. நான் மேல போயிருவேன் தானே… இனி உனக்கு நான் மட்டும் தான்… என்னை மட்டும் தான் நீ நினைக்கனும்…உன் எண்ணம் நினைவு எல்லாமே நான் நான் இந்த ஆதவன் மட்டும் தான் இருக்கனும்… என்ன புரியுதா… என்னை மட்டும் நினைப்பியாடி…”
கண்மணியின் கோபத்தை அவள் சிவந்த முகமே காட்ட.. அதையும் ஆதவன் ரசித்தவனாக…
“கோபப்பட்டா நீ இவ்வளவு அழகா மாறிருவியா கண்ணம்மா… இதுக்காகவே உன்னைக் கோபப்படுத்தலாம் போல…” என்றவனின் விரல்கள் அவள் மூக்கின் நுனியைத் தொடப் போக…
“பாஸ்…” மருது வேகமாக ஆதவனுக்கும் கண்மணிக்கும் இடையில் வந்து நிற்க..
“என்னடா… “ எரிச்சலுடன் ஆதவன் மருதுவை நோக்கிய போதே…
“போன்… நீங்க கேட்டிங்களே” மருது ஆதவனின் கவனத்தை திசை மாற்றி இருக்க…
”கொடு… கொடு…” என்ற ஆதவன்… மீண்டும் கண்மணியிடம் கவனம் வைத்தவனாக…
”கண்மணி… இப்போ என்ன மாயாஜாலம் நடக்குதுனு பார்க்கிறியா… சாரி சாரி…. உன் கண்ணைக் கட்டிட்டேன்ல… அவங்க குரலை எல்லாம் கேட்கக்ப் போற பாரு… அப்போ தெரியும் நீ யார்னு…” என்றவன்… அலைபேசியில் நட்ராஜிலிருந்து ஆரம்பித்திருந்தான்…. அடுத்த சில பல நிமிடங்களில்….. நட்ராஜ்…. நாராயணன்…. அர்ஜூன்… என மூவரும் அங்கு வந்து சேர்ந்திருக்க… அவர்களும் ஆதவன் கட்டுப்பாட்டில் வந்திருக்க
“வாவ் கண்மணி…. இப்போ ஒத்துக்கிறேன்… ‘கண்மணி’ ஒரு வார்த்தை… மூணு பேர் என் கட்டுப்பாட்ல… நான் என்ன சொன்னாலும் கேட்பாங்களாமே…” ஆதவன் மித மிஞ்சிய ஆணவத்தில் ஆடியவனாக
“இவங்க கிட்ட நான் என்ன கேட்கப் போறேன்னா…. என் கண்ணம்மாவை எனக்கே கொடுங்கன்னு கேட்கப் போறேன்… அவங்க கொடுக்கலைனாலும்… நான் எடுத்துப்பேன்… அதைச் சொல்லத்தான் அவங்க எல்லோரையும் வர வச்சேன்… உரிமைக்காரவங்ககிட்ட சொல்லிட்டு எடுத்துட்டு போறதுதான் நம்ம பண்பாடு…” ஆதவன் கண்மணியிடமே கேட்க
”இங்க பாருங்க… உங்க எல்லோரையும் ஏன் இங்க வரவச்சேன்னா… உங்க வீட்டு பொண்ணு… இனி என் அந்தப்புரத்தை அலங்கரிக்கப் போகிற நாயகி… என் ஆதர்ச நாயகி…”
“ச்சீ … நா***… வெட்கமாயில்ல உனக்கு” அர்ஜூன் வெறித்தனமாக கத்த ஆரம்பித்திருக்க…
“அப்போ நீ எந்த கேட்டகரில வருவ… கல்யாணமான பொண்ணு இவ பின்னாடிதானே சுத்திட்டு இருக்க… அதுமட்டும் இல்ல இவ உன்னை விட்டுட்டுதானே அந்த ரிஷி பின்னாடி போனா… என் பின்னாடியும் வருவா… அதுனால ஒரு தப்பும் இல்லை… ஆக அனைத்தும் சரியே… என்ன கண்ணம்மா அப்படித்தானே… முதல்ல அர்ஜூன்… இப்போ ரிஷி… இனி ஆதவன்… ஹான் கடைசி வரை ஆதவன் மட்டுமே ” என்றவன் கண்மணியைத் தன்புறம் கொண்டு வர முயற்சித்த போதே…
“பாஸ்… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க…. நான் பார்த்துக்கிறேன்… ஏன் இவ்வளவு டென்ஷனா பேசுறீங்க… இந்தாங்க தண்ணி குடிங்க” மருது மீண்டும் இடையில் வந்திருக்க….
“டேய்… நீ என்னடா… இடையில இடையில வந்து நிற்கிற…” என்றவன் மருது கொடுத்த தண்ணீரையும் குடிக்கத் தவறவில்லை… அதே நேரம்… நட்ராஜும் மருதுவைக் கவனித்திருந்தார்… கண்டும் கொண்டார்… நட்ராஜ் கண்களில் கொலை வெறி ஏற ஆரம்பித்திருந்தது…
”டேய்… அவளை விடு… ஏதாவது அவளுக்கு ஆச்சு” அர்ஜூன் திமிற ஆரம்பித்திருக்க
“ஹலோ… கண்மணிக்கு ஒண்ணும் ஆக விடமாட்டேன்… ஏன்னா இனி அவ இந்த ஆதவனோட கண்ணம்மா… சோ நீங்கள்ளாம் கண்மணின்ற ஒருத்தியை மறந்துருங்க… அவளுக்காக துடிக்கிறதையும் நிறுத்திருவீங்களாம்… நான் மட்டும் அவளுக்கு போதும் இனி… ”
“உனக்கு என்னடா வேணும்… என் சொத்தையே வாங்கிக்க…. ஆனால் என் பேத்தியை விட்ரு…” நாராயணன் கதற…
“உன் பேத்தி என்கிட்ட வந்தால்… தானா உன் சொத்தும் வந்துறப் போகுது… எனக்கு உன் பணம் முக்கியம்னா… இவளை வச்சு மிரட்டியே வாங்கி இருக்க மாட்டேன்… எனக்கு இவ வேணும்… நீ உன் பணபலம்… ஆள்பலம் எதை வேணும்னாலும் என்கிட்ட காட்டலாம்… ஆனால் அதெல்லாம் நான் சமாளிப்பேன்… கேட்டுப்பாரு உன் வட்டத்துல…. கண்டிப்பா யாராவது ஒருத்தன் என்கிட்ட மாட்டியிருப்பான்… சோ இனி அவ உன் பேத்தி கிடையாது மறந்துரு… நான் அவளை யாருக்குமே தெரியாத இடத்துக்கு…. யாருமே வர முடியாத இடத்துக்கு கூட்டிட்டுப் போகத்தான் போகிறேன்… ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் கொடுக்க நினைத்தேன்… ஏன்னா நான் மிரட்டி ஏதும் வாங்க நினைக்கல… காதல்… காதல் மட்டும் தான்…. என் கண்ணம்மா மேல “ ஆதவன் எல்லை மீறிக் கொண்டிருந்தான்… ரிஷியின் மேல் இருந்த மொத்த கோபத்தையும்… அவனால் பட்ட அவமானத்தையும் கண்மணியின் மீதான காதல் என்று காட்டிக் கொண்டிருந்தான்….
“லூசாடா நீ… அவ இன்னொருத்தனோட பொண்டாட்டி… “ நாராயணன் கலங்கிய பரிதவித்த குரலில் சொல்ல
“அடுத்தவன் பொண்டாட்டிக்கு புருஷனா இருக்கிறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்லை… அதே போல அடுத்தவன் பொண்ட்டாட்டியை என்னை மட்டுமே நினைக்க வைக்கிற வித்தையும் எனக்குத் தெரியும்… அதைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம் தாத்தா… ஒரே ஒரு நாள்… என்கூட இருந்தால் போதும்… அந்த ரிஷியெல்லாம் மறந்துருவா… அதுக்கப்புறம் இந்த ஆதவனுக்கு மட்டும் தான் அடிமையா இருப்பா… சாரி சாரி பொண்டாட்டி.. சாரி சாரி… இதுவும் தப்பான வார்த்தை தானே… அவ இன்னொருத்தனுக்கு பொண்டாட்டி ஆகிட்டாளோ… அப்போ அவ என்னவா எனக்கு இருப்பா… அதை என் வாயால சொல்லனுமா… என்னை ரொம்ப பேச வைக்கிறீங்களே… அந்த உறவு முறைலாம் விடுங்க… எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் எப்படி இருக்கு…” நக்கலாக ஆதவன் கண்மணியின் அருகில் போய் நின்று கேட்ட போதே
“என் பொண்ணுகிட்ட ஏதாவது தப்பா நடந்துகிட்ட உனக்குத்தாண்டா அழிவு காலம்… “ ஆதவனிடம் கொதித்தவர்… தன் ஒட்டு மொத்த கோபத்தையும் மருதுவிடம் கொட்ட ஆரம்பித்திருந்தார்….
“டேய் பொறுக்கி ராஸ்கல்… உன்னை பத்து வயசுலருந்து வளர்த்ததுக்கு… எனக்கு… என் பொண்டாட்டிக்கு… என் பொண்ணுக்கு… இன்னும் என்னடா பாக்கி வச்சுருக்க… எல்லோரையும் விட நீதான் நீ மட்டும் தான் முக்கியம்னு உன் மேல நம்பிக்கையும் பாசமும் வச்சுருந்தாளே அப்படிப்பட்டவளுக்கு இன்னும் என்னென்ன அவமானமெல்லாம் கொண்டு வரப் போற… அன்னைக்கு துரை… இன்னைக்கு இந்த ஆதவனா… உன்னைக் கொல்லாமல் விட மாட்டேண்டா நான் ” நட்ராஜ் ஆவேசக் குரலில் மருதுவை நோக்கிக் கேட்க… நட்ராஜைத் தவிர மற்ற அனைவரும் மருதுவை நோக்கினர்… அதிர்ச்சியான பார்வையோடு…
தன் தந்தையின் வார்த்தைகளில்…. கண்மணியின் தேகம் முதன் முதலாக நடுங்க ஆரம்பித்திருந்தது… யாரை வாழ்நாள் முழுவதும் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ… அவன் அவளருகிலா… கண்மணியின் தேகம் நடுங்கி பின் இறுகியிருக்க… ஆதவன் ஒன்றும் புரியாமல் மருதுவை நோக்க… மருதுவோ நட்ராஜின் காலடியில் கிடந்தான்…
“முதலாளி… என்னை மன்னிச்சிருங்க முதலாளி… என் ’மணி’ க்கு நான் இன்னொரு தரம் துரோகம் நினைக்க மாட்டேன்… இது என் மணி மேல சத்தியம்” நட்ராஜின் காலைப் பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்திருக்க…
ஆதவனோ ஆச்சரியத்தில் மருதுவைப் பார்த்தவன்….
”இது என்னடா… புது ட்விஸ்ட்… மருது… நாலாந்தர ரவுடி… அவனோட மணியா… அப்போ கண்மணி பதிவிரதை சீதை இல்லையா… பாஞ்சாலிக்கு டஃப் கொடுப்பா போலயே…” சொன்ன அடுத்த நொடி…. மருது அவனிடம் பாய்ந்திருக்க… மருதுவின் கைகளில் இருந்த கத்தியினால்… ஆதவனைத் தன்வசம் கொண்டு வந்திருக்க...
ஆதவன் மருதுவை வன்மமாகப் பார்த்த போதே…. மருது அதைக் கண்டு கொள்ளாமல் அங்கு நின்றிருந்த அடி ஆட்களை நோக்கி…
“டேய்… எல்லோரும் இங்கயிருந்து உடனே இடத்தைக் காலி பண்ணுங்க…” மிரட்டியபடியே… நடுங்கிய பாவனையில் நின்ற கண்மணியைப் பார்த்தான் மருது
“மணி… பயப்படாத… உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டேன்… நான் இருக்கிறேன் மணி… நான் உன் பக்கத்துல இருந்தா எப்போதுமே பயப்பட மாட்டேன்னு சொல்வியே மணி… அந்த மருது கண்மணி…” கண்மணியின் அருகில் செல்ல… கண்மணி இப்போது சட்டென்று விலகி நின்றிருந்தாள்….. ஆதவனிடம் கூட அவள் விலகி நிற்கவில்லை… ஆனால் மருதுவை விட்டு தள்ளிச் சென்றிருக்க…
“எ… என்… என்னைப் பார்த்து பயப்பட்றியா மணி… நான் உன்னோட மருது கண்மணி… இந்த உலகத்துலேயே நீ மட்டும் தான் எனக்கு முக்கியம்னு சொல்வியே... நான் உன் பக்கத்துல நிற்கிறேன்… என்னை விட்டு விலகி நிற்கிறியா கண்மணி…” மருதுவின் குரல் தடுமாறி இருக்க…
கண்மணி பதிலேதும் சொல்லவில்லை…. அப்படியே இரும்பென இப்போதும் மாறி நின்றிருக்க… அடுத்த நொடியே… அவள் காதுகளில் துப்பாக்கியின் சத்தம் மட்டுமே கேட்க… அதன் பின் அவள் மருதுவின் குரலைக் கேட்கவில்லை… அதே நேரம் ஆதவனிடம் அவள் மீண்டும் சிறைபட்டிருந்தாள்…
இப்போது ஆதவனின் குரல் சிம்ம கர்ஜனையாக ஒலிக்க ஆரம்பித்திருக்க… மருதுவுக்கு என்ன ஆகியிருக்கும்… பார்க்காமலேயே கண்மணியால் உணர முடிந்தது…
“அந்த ரிஷிகிட்ட சொல்லுங்க… அவன் அப்பா சொத்தை மீட்டெடுத்துட்டான்னா அவன் ஜெயிச்சுட்டான்னு நினைப்பா… இப்போ என்ன பண்ண போகிறான்… இதுநாள் வரை அவனோட உரிமை இந்தக் கண்மணி... இனி அவள் என்னோட உரிமை… அதை யாரும் தடுக்க முடியாதுன்னு அவன்கிட்ட சொல்லுங்க… இனி இந்தக் கண்மணியே நெனச்சாலும் என்கிட்ட இருந்து தப்பிப் போக முடியாது… இனி இவளைத் தேட நினைக்காதீங்க… இதுக்காகத்தான் உங்களை இங்க வரவச்சேன்… “
ராமன்களுக்குத்தான் இங்கு பஞ்சம்… ராவணன்கள் அவதாரம் தொடர்ந்து கொண்டேதான் இருக்குமோ…
கண்மணியை இழுத்துக் கொண்டு போனவன்….
“டேய் அந்த ரிஷிக்கு… இந்த மருதுவோட டெட் பாடியை அனுப்புங்க… நம்மகிட்ட காசை வாங்கிட்டு அந்த ரிஷிக்கு வேலை செஞ்ச துரோகி… ” காலால் மருதுவை எட்டித் தள்ளி விட..
நட்ராஜ் மருதுவை வெறித்தார்… அதே நேரம், ரிஷிக்கும் மருதுவுக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா?… அஹு மட்டுமல்லாமல் ரிஷிக்கு மருது உதவினானா… குழப்பமாகத்தான் இருந்தது… ஆனால் அதை எல்லாம் விட இப்போது மகளைக் காப்பாற்ற வேண்டுமே… பரிதவித்தார் நட்ராஜ்…
ஆதவன் இப்போது அர்ஜூன்… நாராயணன்… நட்ராஜின் முன் வந்தவன்
“நீங்க எல்லாரும் சேஃபா இங்கயிருந்து போகலாம்… யாரும் ஒண்ணும் பண்ண மாட்டாங்க… அதே போல இனி நீங்க யாரும் இவளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்… ஆனால் சீக்கிரமா… என்னை ஏத்துக்குவீங்க… ‘கண்மணி ஆதவன்’ சீக்கிரம் அதைப் பண்ணுவா…” என்று எக்காளமிட்ட போதே… அர்ஜூன் இப்போது அவன் மேல் பாய்ந்திருக்க…
எஞ்சியிருந்த ஒரு குண்டும் இப்போது அர்ஜூனை நோக்கிப் பாய்ந்திருக்க
“அர்ஜூன்…” கண்மணி குரல் உயர்த்தி அழைத்தபடி பதட்டத்துடன் ஆதவனிடமிருந்து திமிற ஆரம்பித்திருக்க… அவளால் ஆதவனின் இரும்புப்பிடியில் இருந்து விலக முடியவில்லை…
----
”அர்ஜூன்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா என்ன… இவ்ளோ துடிக்கிற“ ஆதவன் கண்மணியோடு காரை விட்டு இறங்கியபடியே கேட்க… இப்போது அவள் ஆதவனை வெறித்தாள்… அவள் கைக்கட்டும்… கண்கட்டும் பிரிக்கப்பட்டிருக்க…
“வா வா முறைக்காத… நம்ம வீடுதான்… வலது காலை எடுத்து வச்சு வா… கொஞ்சம் கன்ஃபியூசன்ல இருந்தேன்… ரிஷியை விட்டு விலகி இருக்கேன்னு தெரிஞ்சதும்… ரிஷியை உனக்குப் பிடிக்காதோன்னு… எப்படி உன்னை என்கிட்ட வரவைக்கிறதுன்னு சந்தேகமாத்தான் எல்லா ப்ளானும் பண்ணேன்…. ஆனால் ரிஷியை விட அர்ஜூனைத்தான் உனக்கு பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா… அந்த அமெரிக்க பையனைக் கடத்தியிருக்கலாம்… எது எப்படியோ… அர்ஜூனை மனசுல வச்சுட்டு இவ்ளோ நாள் பிடிக்காத ரிஷி கூடத்தானே வாழ்ந்த… இனி என்கூட வாழ பழகிக்கோ….” சிரித்தபடியே சொல்ல
கண்மணி அப்படியே நின்றிருக்க…
“டேய் எல்லோரும் வீட்டுக்கு வெளில போய் நில்லுங்க… எவன் வந்தாலும்… அவன் கேட்லயே திரும்பிப் போகனும்… உள்ள வர நினைத்தால்… பொணமா அனுப்புங்க…” அனைத்து அடி ஆட்களையும் வெளியே அனுப்பியவன்
“என்ன கண்மணி… எப்படியும் நீயும் நானும் ஓடி ஆடி விளையாடப் போறோம் இந்த வீட்ல… வழக்கமா எல்லா பொண்ணுங்களும் என்கிட்ட பண்றது தான்… ஆனால் விளையாடி முடித்த பின்னால எல்லாரும் என்னை விட்டு போகவே மாட்டாங்க… ஆனால் நான் விட்ருவேன்… உன்னை மட்டும் தான் கூடவே வச்சுருக்கனும்னு நினைக்கிறேன்…”
கண்மணி எரிச்சலுடன் பார்க்க…
“ஏய் கூல் கூல்… என் கூடவே என் பொண்டாட்டியா… அவங்ககிட்ட சொன்னதெல்லாம் பொய்டா…. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்… நீ வேறெதுவும் நினைக்காத…. ’கண்மணி ஆதவன்’ இது மட்டும் உன் நினைவுல இருந்தால் போதும்… சரியா ” என்றவனின் பார்வை கண்மணியின் கழுத்தில் பதிய……. கண்மணியே எதிர்பார்க்காத நொடியில் அவள் கழுத்தில் கை வைத்து… அவள் தாலியை கழட்டி வீசி எறிந்திருக்க..
கண்மணி அப்போதும் பதட்டமடையவில்லை… அமைதியாக தரையில் கிடந்த மாங்கல்யத்தை வெறித்திருக்க
“டேய் ஆதவா…” மாடியில் இருந்து ஆதவனின் அன்னை குரல் அந்த அறை எங்கும் வியாபித்திருக்க
“வாங்க வாங்க… அம்மா… நீ ஆசைப்பட்ட அதே பொண்ணு… இனி உன் மருமகள்.. கண்மணி… இப்போ எங்க அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கலாம் வா… நாம எல்லாமே ரிவர்ஸ் பிராஸஸ்ல பண்ணுவோம்” என்றபடி கண்மணியின் கைப்பற்றி அவளை அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏற… கண்மணி பிடிவாதம் எல்லாம் பிடிக்கவில்லை… ஆதவன் கண்மணியைக் கைப்பிடித்து இழுத்தபடி செல்ல… கண்மணியும் அவனைத் தொடர்ந்தாள்…
சகுந்தலா ...ஆதவனின் தாய்… அவர் மகனை எரிக்கும் பார்வை பார்த்தார்
“ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா… கண்மணி வா” என அவளையும் தன்னோடு இழுத்தபடி ஆதவன் குனிய… கண்மணி மட்டுமே மீண்டும் நிமிர்ந்து சகுந்தலாவைப் பார்த்திருந்தாள்…
எழாமல் காலடியிலேயே கிடந்த மகனை பதட்டத்தோடு பார்த்தவன்… கண்மணியைப் பார்க்க… அவள் முகமெங்கும் ரத்தது துளிகள்…
ஆதவனின் கழுத்தில் முக்கியமாக தொண்டையில் கீறல் விழுந்திருக்க… கண்மணியின் புடவைத் தலைப்பில் பிளேடு ரத்தக் கீறலோடு மின்ன… சகுந்தலா அதிர்ச்சியோடு கண்மணியைப் பார்க்க
“இந்தக் கண்மணிக்குப் பின்னால எப்போதுமே என் ரிஷிக்கண்ணா பேர்தான் வரணும்… இந்த ஆதவன் அதுக்கு மாறா பேசிட்டான்… அதுனாலதான் சின்ன சேம்பிள் காண்பிச்சேன்… இனி இவன், அவன் பேர் சொல்லக் கூட வாய் திறக்க முடியாது… ஒருவேளை இப்படிப்பட்ட பையன் வேணும்னு இன்னும் நீங்க நினைச்சா… இவனைக் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க…” என்றவள் அங்கிருந்து நகரப் போக… அடுத்த நிமிடம்…
சத்தம் கூட போட முடியாமல் துடிக்க ஆரம்பித்திருந்தான் ஆதவன் என்னும் அரக்கன்….
கண்மணி அதிர்ச்சியோடு சகுந்தலாவைப் பார்க்க… சகுந்தலாவின் கையிலும் கத்தி….
“இவன் என் மகன் இல்லம்மா… ஒரு அரக்கன்… இவனால எத்தனையோ பேர் வாழ்க்கை திசை மாறியிருக்கு… அசிங்கப்பட்டு அவமானப்பட்டு உயிரை மாய்ச்சுட்டவங்க.. வேதனையில செத்தவங்க பல பேர்… என் புருசனும் அதுக்கு உடந்தை… ஒருத்தவங்களை எப்படி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி நடைபிணமா மாத்துறது இவனுக்கு கை வந்த கலை… அவனோட பல வெற்றிகளுக்குப் பின்னால இப்படிப்பட்ட பல கதைகள் இருக்கும்மா… எத்தனையோ பேர்… சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாமல் மனம் புழுங்கி செத்துருக்காங்க… “
கண்மணிக்கு அவளின் மாமனார் தனசேகர் நினைவு வந்து போக… கண்களில் கண்ணீர் கரை கடந்திருக்க…
”எனக்குத் தைரியம் வரலைமா… இவனைக் கொல்ல இது நாள் வரை தைரியம் வரலை… என் கண்ணு முன்னாடியே… எத்தனையோ பொண்ணுங்க வாழ்க்கையை இவன் கெடுத்துருக்கான்… அது எல்லாம் தெரிந்தும் ஒண்ணும் பண்ண முடியாத கோழையா இருந்தேன்… கோழையா இருந்தேன்றதை விட… இவனை எப்படியும் திருத்திறலாம்னு இருந்தேன்… நம்பினேன்… போன வாரம் வரை… “ சகுந்தலாவின் கண்களில் வேதனை மட்டுமே
”ஒரு சின்னப் பொண்ணு… அதுவும் ஸ்கூல் படிக்கிற பொண்ணு… என் கண்ணு முன்னாடி நடந்த அநியாத்தைத் தடுக்க முடியாத பாவியா இருந்தேன்… அப்போ கூட எனக்குத் தைரியம் வரலை…” என்றவர்… இப்போது அழ ஆரம்பித்தவர்…
“இவனோட இருபது வயசுல… என்னை மாதிரி பெருமைப்பட்ட அம்மா யாருமே இருக்க முடியாது… இவ்ளோ புத்திசாலியான… திறமையான… சாதுரியமான ஒரு பையன் என் வயித்துல பிறந்திருக்கான்னு… ஆனால் அதெல்லாம் பல பேரோட அழிவுக்கு மட்டுமே காரணமாயிருக்கு… நான் கொடுத்த பிறப்பு பல பேரோட வாழ்க்கையை அழிச்சிருக்குனு குற்ற உணர்ச்சில செத்துட்டு இருந்தேன்… எனக்கும் தண்டனை வேணும் தானே…”
“ரிஷியோட அப்பா என் வீட்டுக்காரர்கிட்ட புலம்பிட்டே இருப்பாரு… உன் மகன் மாதிரி என் மகன் இல்லையேன்னு… நீ ரொம்பக் கொடுத்து வச்சவன் கேசவன்னு… என்னதான் என் மகன் மேல பாசம் இருந்தாலும்… திறமையில்லையேன்னு… “
கண்மணி விரக்தியாகச் சிரித்தாள்…
“வாழ்க்கைப் பாதை யாருமே அறியாதது… அது என் மாமாக்குத் தெரியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்…” அவள் வாய் சகுந்தலாவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க…
“தனசேகரின் மறு ரூபமாகத்தான் தானும் இருக்கின்றோம்… எல்லாம் தெரிந்தும் ரிஷியை விட்டு விலகி நிற்கிறேனே…” தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்…
இப்போது சகுந்தலாவின் வார்த்தைகள் நின்றிருக்க…. கண்மணி அவரைப் பார்க்க… அவரின் கண்களிலோ தாயாகத் தவிப்பு… துடித்துக் கொண்டிருந்த ஆதவனின் உடலைப் பார்த்து… ஒரே அடியாக அவன் துடிப்பை அடக்க முயற்சித்திருக்க
கண்மணி அவருக்கு ஆறுதல் எல்லாம் கூற நினைக்கவில்லை…. மாறாக வேகமாக ஆதவன் தாயின் கையைப் பிடித்தவள்…
“நீங்க இவனுக்கு தண்டனை கொடுக்க நினைக்கிறீங்களா… அப்போ இவன் இப்படி உடனே சாகக் கூடாது…. பத்து நிமிசம்னாலும்… இவன் அவன் பண்ணின ஒவ்வொரு தப்புக்காகவும் அவனோட இறுதி நொடி ஒவ்வொண்ணும் இருக்கனும்… “
அமைதியாக அங்கிருந்த சோஃபாவை நோக்கிப் போக… சகுந்தலா அப்படியே அடங்கி அமர….
கொஞ்சம் கொஞ்சமாக ஆதவனின் உயிர் மெல்ல மெல்ல நரக வேதனையுடன் பிரிய ஆரம்பித்து… கடைசியாக ஒரே அடியாக அவனை விட்டும் பிரிந்திருந்தது… கண்மணி நிதானமாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்…
அவளுக்குத் தெரிந்து… ரிஷி… தனசேகர் என இவர்கள் அனுபவித்த வேதனைகள்… கண்கூடாகப் பார்த்தது ரிஷி என்பவனின் வாழ்க்கைப் போராட்டங்களை… இவள் பார்க்காதது எத்தனை ரிஷியோ… தனசேகரோ… ஹர்ஷித்தோ… அதே போல் எத்தனை பெண்களின் வாழ்க்கையோ… அறிவும் சாதூரியமும் மட்டும் ஒருவனுக்குப் போதுமா… ஒழுக்கம்… பிறர் வாழ்வைக் கெடுக்காத நல்ல குணம் இவை எல்லாம் இல்லையென்றால் முடிவு இப்படித்தான்…
யோசித்த போதே அர்ஜூனின் ஞாபகம் வந்திருக்க…
“இவன் கஷ்டப்பட்டு வேதனை அனுபவித்து உயிர் நீங்கட்டும்… ஆனால் அர்ஜூனுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்… அவர் யார் வாழ்க்கையைக் கெடுக்க நினைத்தார்…. எனக்காக மட்டுமே வாழ்ந்த அவருக்கு இப்போது உயிரும் ஊசலாடுகிறதே…” கண்களில் நீர் வடிய ஆரம்பித்திருக்க… வேகமாக அதைத் துடைத்தவள்…
“அர்ஜூனுக்கு ஒன்றும் ஆகாது… ஆகவும் கூடாது… கண்டிப்பா நல்லா இருப்பார் அவரோட மனசுக்கு கண்டிப்பா நல்லதே நடக்கும்” இந்த எண்ணம் வந்த போதே இன்னும் அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்திருக்க.. சில நிமிடங்களில் ரிஷியும் விக்கியும் வந்து சேர்ந்தனர்… சில நிமிட இடைவேளையில் காவல் துறையும் வந்து சேர்ந்திருக்க… ஆதவனின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்க… ஆதவனின் தாயும்… கண்மணியும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர்…
கண்மணிக்கும் ரிஷிக்குமான பேச்சுவார்த்தைக்கான நிமிடங்களும் மிகக் குறைவாகவே இருக்க… ரிஷியால் கண்மணியின் கைதைத் தடுக்க முடியவில்லை… தன் மனைவி சென்ற திசையையே வெறித்தபடி... வெற்றுப் பார்வையை மட்டுமே கொடுத்தபடி நின்றிருந்தான் ரிஷிகேஷ்…
---
கண்மணி என் கண்ணின் மணி 101-2 - சில துணுக்குகள்
“நீ முடிந்தவரை பாரு… ஆனால் என் பேத்தி ஜெயிலுக்கு மட்டும் போகக் கூடாது… எப்படியாவது அவ இன்னைக்கே வீட்டுக்கு வரனும்…” நாராயணன் ரிஷியிடம் உறுதியாகவும் கூறி இருக்க
---
கண்மணி அங்கிருந்து சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்… கழுத்தைச் சுற்றி புடவைத் தலைப்பால் போர்த்தியபடியே….
“ஏய் கண்மணி…” வக்கீலோடு பேசிக் கொண்டிருந்தவன்… அரக்கப் பரக்க வேகமாக அவளை நோக்கி ஓடிவர…
---
“மருது போஸ்ட்மார்ட்டம்லாம் முடிந்ததா…” சத்யாவிடம் கேட்க…
“நட்ராஜ் சார் தான் அங்க போனாரு… நான் அர்ஜூன் கூட போய்ட்டேன்… “
”ஹ்ம்ம்… எல்லாம் முடிஞ்சது ரிஷி… அனாதைப் பொணம்னு அங்கேயே எரிச்சுறச் சொல்லிட்டேன்…” நட்ராஜ் சொன்னபோதே கண்மணியின் கண்களில் சட்டென்று நீர்த்துளி விழுந்தது… அழ வேண்டுமென்று நினைக்கவில்லை… ஆனாலும் ஏன் வந்தது என்று தெரியவில்லை…
---
நட்ராஜ் மகளைப் பார்த்து தயங்கியபடி மருமகனைப் பார்க்க…
“அவளைப் பார்க்காதீங்க… அதுல நம்ம ரத்தம் இல்லை… அத்தனையும் அவ தாத்தா ரத்தம் தான்… அதுதான் நம்மையெல்லாம் மதிக்க வைக்கல…”
---
“எனக்குப் பசிக்கலை…” கண்மணி வேகமாகச் சொல்ல
“எனக்கு யார் பசி பற்றியும் கவலை இல்லை… என் குழந்தைக்கு சாப்பாடு போகனும்… அவ்ளோதான்….”
--
“சாரி மேடம்… உங்களுக்குத் தெரிஞ்சவங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்..” என்றபடி… விக்கியிடம் திரும்பியவன்
“சார்… இந்த லிஃப்ட் காமன் பெர்சன்ஸ் போற லிஃப்ட் கிடையாது… ஒன்லி ஆத்தண்டிகேட் பெர்சன்ஸ் மட்டும் போறது… அந்த லெஃப்ட்ல இருக்கிற லிஃப்ட்ஸ் தான் நீங்கள்ளாம் போகனும்…” அந்த ஊழியர் சொல்ல… கண்மணி அமைதியாக வேறு புறம் பார்த்து நிற்க… விக்கி ஒன்றும் சொல்லவில்லை… மௌனமாக வெளியேறப் போக…. ரிஷி இப்போது அவனைத் தடுத்தான்…
--
“உன் ஃப்ரெண்ட்தான் வாழ்க்கைப்பாடத்துல கால்குலேட்டிவ் பெர்சன்… என்னை அவர் வாழ்க்கைல இழுத்து… செண்ட்டம் வாங்கிட்டேன்னு பெருமையா சொன்னார்ல… அண்ட் நீங்க என்ன சொன்னீங்க… ரைட் சூனியக்காரினு… அப்புறம் என் பின்னாடி அலையுறதுக்கு அடிமைக் கூட்டம் வேணும்னு… ஹ்ம்ம்… அப்படித்தான் நான்… ஆனால் அந்த அடிமை எல்லாம் என் பேச்சை மட்டும் தான் கேட்கனும்… கண்டவன் பேச்சை எல்லாம் கேட்கக் கூடாது… எப்போ இந்த அடிமை என்னைப் பற்றி நீங்க தப்பா பேசும் போது வாயை மூடி… கையக் கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்துச்சோ… அப்போ என் அடிமை இல்லைதானே… எனக்கு அப்படிப்பட்ட ரிஷி அடிமை தேவை இல்லைனு அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்… ” என்றவள்…
---
”ரிஷிக்கண்ணா… கைல அடிப்பட்ருக்கு… அதுக்கு ஃபர்ஸ்ட் எயிட் பண்ணாமல் என்ன சிரிப்பு… என்ன ட்ரீம்…” ரிஷி சட்டென்று நினைவுகளில் இருந்து மீண்டு வேகமாக நிமிர்ந்து பார்க்க அவள் குரல் மட்டுமே… மனம் கனக்க எழுந்தவன்… தன் அறைக்குச் சென்று சட்டையைக் கழட்டிவிட்டு முதலுதவிப் பெட்டியை எடுத்தபடி மீண்டும் படியில் அமர்ந்தபடி… அவனுக்கு அவனாகவே அவன் காயத்திற்கு மருந்து போட ஆரம்பித்திருந்தான்…
---
”நலங்கு வைக்கிற நேரம் வந்துருச்சு… இலட்சுமி புள்ளையக் கூட்டிட்டு வா… ” வளைகாப்பு மேடையில் இருந்து இலட்சுமியிடம் யாரோ சொல்ல… கண்மணியை அழைக்க இலட்சுமி உள்ளே வந்திருக்க…
Very nice