அத்தியாயம் 35-1:
ரிஷி ஊருக்குக் கிளம்பிச் சென்று மூன்று நாட்களாகி இருக்க… வழக்கமான ஒரு மாலைப் பொழுதுதான் தான் அன்றும் கண்மணிக்கு… ஆனாலும் இத்தனை நாள் பள்ளி.. வீடு… என மாறி மாறி ஓய்வில்லாமல் இருந்ததில் இருந்து இன்று சற்று ஓய்வு கிடைத்திருந்தது…காரணம் இன்று விடுமுறை என்பதால் ரிதன்யா வீட்டிலிருக்க… கண்மணி… தன் தாத்தா பாட்டியைப் பார்க்கப் போக முடிவு செய்தவளாக… கோவிலுக்குச் சென்று விட்டு… ’பவித்ரா’ இல்லத்திற்கும் சென்றாள்…
’பவித்ரா’ இல்லத்தின் வெளி வாயிலுக்கும்… வீட்டின் நுழைவாசலுக்கும் செல்லவே சில பல நிமிடங்கள் ஆகும்... இங்கு வரும் போதெல்லாம் அங்கிருக்கும் பிரமாண்ட தோட்டத்தை பார்த்தபடியே நடந்து போவது கண்மணிக்கு பிடிக்கும் என்பதால் பெரும்பாலும் ஸ்கூட்டியில் வருவதை தவிர்ப்பாள் கண்மணி… அதே போல் இன்றும் இதோ இப்போதும் வேடிக்கைப் பார்த்தபடியே நுழைவாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் திடீர் பிரகாசம்…
இந்தியா வந்தால் அர்ஜூன் உபயோகப்படுத்தும் வாகனம் வெளியே நின்று கொண்டிருக்க… அதைப் பார்த்ததில் வந்த பிரகாசம் தான் அது…
”அர்ஜூன் வந்திருக்கிறாரா” … கண்மணியின் கண்கள் சுற்றி முற்றி அங்கும் இங்கும் என தேட ஆரம்பித்து இருந்தது…
எப்போது கண்மணி வந்தாலும்… திடீரென்று முன்னால் வந்து நிற்பவன் ஆயிற்றே… ஆனால் அப்போதெல்லாம் அவன் இங்கு வந்திருப்பது அவளுக்கும் தெரியும்… இவள் வரப் போவதையும் சொல்லி விட்டுத்தான் வருவாள்…
ஆனால் இன்றோ அர்ஜூனும் இந்தியா வந்ததை சொல்லவில்லை… ஏன் அவள் தாத்தா பாட்டி கூட சொல்ல வில்லை…
அதேபோல் கண்மணியாலும் முன் போல தன் தாத்தா பாட்டியை அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை… அபூர்வமாக நேரம் கிடைத்தால் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஆஜராகி விட்டு… வீட்டில் யார் இருக்கிறார்களோ அவர்களோடு பேசி விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்க… இன்றும் அப்படித்தான்… தான் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் ஆஜாராகி இருக்க… இதோ அர்ஜூனும் வந்திருப்பான் போலவே… அவள் மனம் உறுதியாகச் சொன்னது
அர்ஜூன் வந்திருக்கின்றான் என்பதை மட்டுமல்ல… அவன் இதோ இந்த நிமிடம் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் கண்மணியின் உள்ளுணர்வு நூறு சதவிகிதம் உறுதி செய்ய… கண்மணி தன் தேடலை விடாமல் தொடர்ந்தபடியே.. நடந்து காரின் அருகே செல்ல… சட்டென்று அவள் புறம் இருந்த காரின் முன்புறக் கதவைத் திறந்து நீண்ட கை அவளை காரினுள்ளே இழுக்க…
கண்மணி முதலில் அதிர்ந்தாலும்… அது யாரென தெரியாமல் இல்லை…
தன் கரத்தை இழுத்த அர்ஜூனின் கரத்தை இன்னோரு கையால் விலக்கியபடியே…
“என்ன விளையாட்டு இது… எப்போ வந்தீங்க…” என்றபடியே…
“இறங்குங்க… அர்ஜூன்” என்று அவன் இழுத்த இழுப்புக்கு காருக்குள் நுழையாமல் கண்மணியும் நின்ற இடத்தில் இருந்தே கேட்க…
“ஏன் உள்ள வர மாட்டியா… என் பக்கத்துல உட்கார அவ்ளோ பயமா இல்ல மனசாட்சி குத்துதா ” கைகளை விட்டபடி… காரில் அமர்ந்தபடி கேட்ட அர்ஜூனின் கண்கள் கண்மணியின் கண்களிடம் மட்டுமே அலைபாய்ந்து கொண்டிருந்தன…
கொஞ்சம் கூட அவன் குரல் மாறவில்லை… ’நீ என் சொந்தம் நீ என் உரிமை’ … என்பது இப்போதும் அவன் கண்களிலும்… குரலிலும்… அப்படியே இருக்க…
“பாட்டிய பார்க்க போறேன்… இதுக்கு எதுக்கு கார்ல உட்காரனும்… வாங்க வீட்டுக்கு போகலாம்… பேசலாம்… எனக்கென்ன பயம்… எனக்கெதுக்கு மனசாட்சி குத்தனும்” என்று கண்மணியும் பேச…
“ஓக்கே… ஃபர்ஸ்ட் பாட்டியும் தாத்தாவும் வீட்ல இல்லை… செகண்ட் பாயிண்ட் அவங்க ஒரு ரிஷப்ஷனுக்கு போயிருக்காங்க… லேட் நைட் தான் வருவாங்க… தேர்ட்… நான் உன் கூட தனியா பேசனும்… அதுக்கு என்கூட நான் கூப்பிடற இடத்துக்கு நீ வரணும்…” என்றவன்… அமைதியாக நின்று கொண்டிருந்த கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தான்… என்ன சொல்லப் போகின்றாள்… என்ன செய்யப் போகின்றாள் என்ற ஆராய்ச்சிப் பார்வையுடன்…
அவளோ அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நேரம் கொடுக்காமல்… கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் அருகே உட்கார்ந்தவள்… அவன் புறம் திரும்பியவளாக
“7’0 க்ளாக் வரை தான் டைம்…. என்னை வீட்ல கொண்டு போய் விட்ரணும்…” என்று அவனிடம் சொல்ல… அந்த நொடி அர்ஜூன் கண்கள்… அவளிடம் மட்டுமே…
“கண்மணி… “
அர்ஜுனிடமிருந்து ’கண்மணி’ என்ற பெயர் இயல்பாக வரவில்லை… உணர்ந்தாள் தான் கண்மணி… ஆனால் பெரிதாக அவளிடம் எந்த மாற்றமும் இல்லை… தன் பெயரைச் சொல்லி அழைத்தவனை வினவும் பார்வையில் பார்க்க…
”நீ இப்போ உள்ள நுழையும் போது… இந்தக் காரைப் பார்த்த உடனே நான் வந்துருக்கேன்னு… உன் முகம் சந்தோசமா மாறுச்சா இல்லையா… என்னைத் தேடுனியா இல்லையா” அர்ஜூனின் குரல் மென்மையைப் பூசியிருக்க…
கண்மணியும் மறைக்கவில்லை….
“கண்டிப்பா… சந்தோசமாத்தான் இருந்தது… தேடினேன் தான்… நான் இல்லைனு சொல்லலையே… எப்போதுமே நீங்க எனக்கு ஸ்பெஷல் தான் அர்ஜூன்…” என்றபடியே
அவனின் நெற்றியில் கொண்டு வந்திருந்த பிரசாதத்தை நீட்ட… அவனோ கைகளில் வாங்காமல்… தன் நெற்றியைக் காட்ட… அதைக் கண்டுகொள்ளாமல்
”சரி… அப்புறமா வச்சுக்கங்க… இங்க வைக்கிறேன்…” என்று காரின் டேஷ் போர்டின் முன் வைத்தபடியே…
“இந்த உலகத்திலே என் மேல என்னை விட அக்கறையா பாசமா இருக்கிறவங்க ரெண்டு பேர் … ஒண்ணு எங்கப்பா… ரெண்டாவது அர்ஜூன்… அதுக்கப்புறம் தான்… மத்தவங்க எல்லாம்… “ அவள் குரல் உண்மையை மட்டுமே தாங்கி இருந்தது…
“சரி போகலாமா… தனியா பேசனும்னு சொன்னீங்களே… ” என்று தன் இருக்கையில் சரியாக அமர்ந்து சீட் பெல்ட்டைப் போட்டவள்
“நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் அர்ஜூன்… இந்த உலகத்தில என்னைப் பற்றி மற்ற எல்லாரையும் விட அதிகமா நினைக்கிறது நீங்கதான்… எவ்ளோ தூரம் என்னை விட்டு தள்ளி இருந்தாலும்… உங்க கண்காணிப்பு அது என்னைச் சுத்திதான் இருக்கும்… இது எல்லாத்தையும் விட… என் பாதுகாப்பு… என் சந்தோஷம்… இது எல்லாமே பார்க்கிறவங்கதான் இந்த அர்ஜூன்… “ என்று கண்மணி சொல்லச் சொல்ல…
சோகமான புன்னகை மட்டுமே அர்ஜூனிடம் …
“இவ்ளோ தெரிஞ்சும்…” கோபமாக ஆரம்பித்தவன்...
”நான் உன்னை கை தவற விட்டுட்டேனா கண்மணி… “ அவன் குரல் மொத்தமாக கமற ஆரம்பித்திருக்க…
இருந்தும் தன்னைத் தேற்றிக் கொண்டவனாக…
“நீ என்னோட கண்மணி… நான் உனக்காக இருக்கேன்னு ஏன் உனக்குப் புரியாமல் போச்சு… அந்த…” ரிஷியைப் பற்றி என்ன சொல்ல வந்தானோ….
அதற்குள் கண்மணி அர்ஜூனிடம்…
“அடடா... ‘கண்மணி’… எத்தனை முறை… என்னோட பேர் உங்ககிட்ட இருந்து… இது எப்போதிருந்து அர்ஜூன்… கண்மணி ‘திருமதி ரிஷிகேஷா’ ஆனதுலருந்தா… ஆனாலும் உங்க வாய்லருந்து கேட்கிறதுக்கு … நல்லாத்தான் இருக்கு… ” இப்போது கண்மணி நக்கலாகக் கேட்க…
முறைத்தவன்… அவளின் அருகே வந்தவனாக
“ப்ரின்சஸ்… எக்சட்ரா… எக்சட்ரா… எல்லாம் கூப்பிட ஆசைதான்… இப்போதைக்கு முடியாது…. அதுனால வேற வழியே இல்லை… உன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுத்தான் ஆகனும்… ஆனால் கூடிய சீக்கிரம்… உன்னை என்னோட கண்மணி ஆக்குவேன்… அந்த ரிஷிலாம் உன் வாழ்க்கைல ஒண்ணுமே இல்லைனு உனக்கு கூடிய சீக்கிரம் காட்டுவேன்… அதுக்கப்புறம் இந்த அர்ஜூன் யார்னு உனக்குப் புரியும்” அர்ஜூனின் வார்த்தைகளில் அழுத்தம் இருக்க…
கண்மணியும் சிரித்தாள்… அதே அழுத்தத்தோடு….
“இப்போ பேர் சொல்ல வேண்டிய அவசியம் ஏன்னு புரியுதா… இந்த அளவு தெளிவா இருக்கிறது எனக்கு சந்தோசம்…” என்றாள்...
என்னதான் நீ என் கண்மணி... உன்னை என்னிடம் வரவைப்பேன் என்றெல்லாம் அவன் சொன்னாலும்... தான் ரிஷியின் மனைவி என்பது அர்ஜூனின் அவளுக்கான உரிமைகளை எல்லையோடு வைக்கத்தான் செய்தது... என்பதை உணர்தவளாக அர்ஜூனிடமும் அதை எடுத்துக் காடியவள்... கண்களில் யோசனையோடு
“ஹ்ம்ம்… சோ… மிஸ்டர் அர்ஜூன் அவர்கள்… சும்மா இந்தியா வரலை… அண்ட் இந்த இரண்டு மாதமும்… ரிஷியப் பற்றின சிபிஐ… எஃப்பிஐ.. விசாரணை லாம் முடிச்சுட்டு வந்துருக்கீங்க… ரிஷியும் வசமா மாட்டிருக்காரு போல… இவ்ளோ கான்ஃபிடண்டா பேசுறீங்கன்னா… எனக்கும் என் புருசனப் “ என்ற போதே….
அர்ஜூன் தீப்பார்வை பார்க்க…
“அவரப் பற்றிதானே பேசப் போறிங்க… இன்னும் சரியா சொல்லனும்னா… அவரப் பற்றி தப்பா பேசப் போறிங்க… உங்களுக்கு சாதகமா… ரிஷிக்கு பாதகமா விசயங்கள் கெடச்சிருக்கு… சரிதானே அர்ஜூன் உங்க முகம் இவ்ளோ ப்ரைட்டா இருக்கும் போதே… எனக்கு தெரியுது… சொல்லுங்க பார்ப்போம்… என்னவெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துருக்கீங்கன்னு… ஆர்வமா காத்துட்டு இருக்கேன்“…அவளிடம் எந்த ஒரு பதட்டமோ… என்ன சொல்லப் போகிறானோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பெல்லாம் இல்லை… மிக மிக இயல்பாக இருந்தாள்…
அர்ஜூனுக்கும் அது நன்றாகப் புரிந்தது…
“ஹப்பா…. எப்டிடா உன்கிட்ட ஆரம்பிக்கிறதுன்னு எனக்கும் கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்துச்சு… நீயே லீட் எடுத்துக் கொடுத்துட்ட” என்ற அர்ஜூனை
“வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க… அப்புறம் சீட் பெல்ட் போடுங்க… மறந்துட்டீங்க... ரொம்ப சந்தோஷத்துல இருக்கீங்க போல”
“கண்டிப்பா…” என்று அர்ஜூன் கண்சிமிட்ட… வேறு புறம் திரும்பிய… கண்மணியின் மனதுக்குள்… ரிஷி மட்டுமே…
இந்த அளவு உறுதியாக தன்னிடம் அர்ஜூன் பேசுகிறான் என்றால் ரிஷியைப் பற்றிய ஏதோ ஒன்று அர்ஜூனிடம் மாட்டியிருக்கின்றது…
மனம் வேக வேகமாக கணக்கிட ஆரம்பிக்க… ரிஷியின் கடந்த கால பழக்க வழக்கங்கள்… அவனது காதல்… என அவளது மனமும் கணக்கிட்ட அதே வேகத்தில் எடுத்து வைக்க… அர்ஜூன் இந்த விசயங்கள் பற்றி எல்லாம் கேட்டால் … சுலபமாக அர்ஜூனை தோற்கடித்து விடுவாள்…
ஆனால் இதையும் மீறி… வேறு ஏதாவது இருக்குமோ… அர்ஜூனின் துள்ளலும்… நீ எனக்குத்தான் என்று இப்போதும் அவன் பார்வை சொல்வதும்… கண்மணிக்குள் கொஞ்சம் இலேசான அதிர்வை ஏற்படுத்தத்தான் செய்தன இருந்தாலும்… அவள் காட்டிக் கொள்ளவில்லை என்பதே உண்மை
கண்மணிக்கும் தெரியும்… அர்ஜூன் அவ்வளவு சீக்கிரம் கண்மணி என்பவளை மறந்து விட்டு… அவள் வழியைப் விட்டு போக மாட்டான் என்று தெரியும்… அதே நேரம்… அர்ஜூனை அறிந்தவள் அவள்… அவன் ரிஷியையோ தன்னையோ எப்போதுமே தவறான அணுகுமுறையில் தோற்கடிக்க முயலமாட்டான் என்பதும் தெரியும்…
அவளறிந்த அர்ஜூன்… அவளுடைய நலனை மட்டுமே பார்ப்பான்… அந்த நம்பிக்கை அவளுக்குமே என்றுமே மாறாது…. மாற்றவும் மாட்டான்… நம்பினாள் கண்மணி… அவனோடும் கிளம்பியும் சென்றாள்…
----
அத்தியாயம் 35-1 தொடர்ச்சி அத்தியாயம் 35-2 இன்று இரவு
/*
ரிஷி... ரிஷியின் புகைப்படங்கள் மட்டுமே…
ரிஷி என்பவன் சிறகடித்து பறந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனச் சொல்லாமல் சொல்லிக் காட்டின அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும்… அவன் முகத்தில் இப்போது இல்லாத.. கண்மணி ரசித்த அந்த சிரிப்பு… அதை ரசித்தபடியே ஒவ்வொரு புகைப்படமாக பார்க்க ஆரம்பித்தவள்… அதிலிருந்து சிலவற்றை மட்டும் எடுத்து… தன் கைப்பையில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டவள்… சில புகைப்படங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள்…
மீண்டும் அர்ஜூனிடம்… அந்தப் ஃபைலைக் கொடுத்தவள்… அவர்களுக்கு சற்று அருகில் இருந்த கடையின் அருகில் சென்றவள்….
”அண்ணா… தீப்பெட்டி கிடைக்குமா” என்று கேட்க… அவரும் கொடுக்க… வாங்கி வந்தவள்…*/
Lovely update