I’ve posted 14th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
அத்தியாயம் -14
தனியாக ஒரு ஆடவனுடன் வருகின்றோம்… என்ற வித்தியாசம் எல்லாம் பெரிதாகக் கண்மணிக்குத் தோன்றவில்லை…. அதிலும் தனியாக வருகின்றோம் என்ற பயமும் அவனுக்கு இல்லை… சொல்லப் போனால் அர்ஜூன் என்பதாலேயே அவள் கொஞ்சம் கவனம் எடுத்து வந்தாள்… முடிந்த வரை அவன் பார்வையைச் சந்திப்பதைத் தவிர்க்கவே முயற்சித்தாள் என்றே சொல்லலாம்… யாரையும் நேர்கொண்டு பார்க்கும் கண்மணிக்கு இந்த அனுபவம் புதிது என்றே சொல்ல வேண்டும்… அமைதியாக வெளியே சாலையை வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்… அவள் இயல்பும் அதுவே… அநாவசியமாகப் பேசமாட்டாள்… பேசமாட்டாள் என்பதை விட என்ன பேசுவது என்று தெரியாது அதுவே உண்மை…
ஆனால் ஏனோ அர்ஜூன் கூட பேச வேண்டும் போலத்தான் இருந்தது… அதே நேரம் ஒரு புறம் ஏதோ ஒன்றும் தடுக்க… மும்முரமாக வெளியே பார்த்தபடி வந்து கொண்டிருந்தவளின் கவனம்… அங்கிருந்த கடையின் அருகில் நின்று புகைத்துக் கொண்டிருந்த ரிஷியின் மேல் பட… அவள் பார்வை கூர்மை ஆகியது…
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரிஷி… கையில் வைத்திருந்த சிகரெட்டின் கடைசி நுனியைக் கீழே போட்டு விட்டு… அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க ஆரம்பித்திருக்க… கண்மணி இப்போது அவன் அருகில் வந்து… அடுத்த சில நொடிகளில் அவனை விட்டும் கடந்திருக்க…
மொபைலில் மணியை பார்த்தபடியே…. ரிஷியை மீண்டும் திரும்பிப் பார்த்தவள்… பின் அமைதியாக கண் மூடி இருக்கையின் மேல் சாய்ந்தாள்
அவளின் செய்கைகளைப் பார்த்த அர்ஜூன்…
“என்ன பிரின்சஸ்… யாராவது தெரிஞ்சவங்களா…. பார்த்துட்டே வந்த” என்று அர்ஜூன் பேச ஆரம்பிக்க…
“அப்டிலாம் இல்லை’ என்று மட்டும் சொன்னவள்… ஞாபகம் வந்தவளாக
“என்னோட பேர் கண்மணி… தெரியுமா… தெரியாதா…” என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்க…
அர்ஜூனின் முகம் சற்று மாறி பின் மீண்டது…
பின் அவனாகவே சமாளித்தபடி…
“ஹ்ம்ம்.. தெரியும்… அதுமட்டுமல்ல எல்லாமே தெரியும்” என்றவன் கண்மணியின் ஆராயும் பார்வையைத் தவிர்த்தபடி
“பவி அத்தைனா எனக்கு ரொம்ப பிடிக்கும்… எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கு… அத்தை வீட்டை விட்டுட்டு போன தினம்… ஒரு சாதாரண பட்டறை வச்சுருந்த ஒருத்தன… அவங்களுக்கு ஏன் பிடிச்சதுன்னு இன்னைக்கு வரைக்கும் எங்க யாருக்கும் தெரியலை… தேவதை மாதிரி வாழ வேண்டியவங்க… ” என்று எங்கோ பார்த்தபடி சொன்னவன்…
“அடுத்த இரண்டு வருசத்துல இறந்துட்டாங்கன்னு சொன்னப்போ… நம்ம மொத்த குடும்பமும்… துடிச்சுதான் போச்சு… விசாரிச்சப்போ ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசினாங்க… ” என்ற போதே…
“ஏற்கனவே அம்மா இறந்த சோகத்தில இருந்த… எங்க அப்பா மேல கேஸ் போட்டு… அவரை அலைகழிச்சு… பாடா படுத்துனீங்க” என்று இவளும் சுள்ளென்று விழ ஆரம்பித்தாள்…
“அர்ஜூன்… நீங்க பேசிட்டு இருக்கிறது பவித்ராவோட பொண்ணு மட்டும் இல்லை… நடராஜோட பொண்ணுகிட்டயும் தான்… என்னோட அப்பாவை மரியாதைக் குறைவா நீங்க பேசுறது… எனக்குப் பிடிக்கலை” முதல் கோணல் அங்கு ஆரம்பித்தது கண்மணிக்கும் அர்ஜூனுக்கும் இடையில்…
ஆனால் அவள் கோபம் கூட கொஞ்சம் கூட அவனைப் பாதிக்கவில்லை…. மாறாக
”ம்ஹூம்ம்… அந்த நட்ராஜ் மேல அவ்ளோ மரியாதையா இல்ல பாசமா” நக்கலாக கண்மணியைப் பார்த்தான் அர்ஜூன்
”நட்ராஜ்… நட்ராஜ்னுதான் சொல்வேன்… என்னைப் பொறுத்தவரை… அவனுக்கு… அந்த இடம் தான்… யார் வந்து சொன்னாலும்… நீயே சொன்னாலும்…” என்று சொன்னபோதே ஸ்டியரிங்க் பிடித்திருந்த அர்ஜூனின் கரங்கள் இறுக…
”மனைவிய வச்சு வாழத் தெரியாத… பெத்த பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காத அந்தாளை மரியாதைக் குறைவா பேசுறது எனக்குத் தப்பா தெரியலை” என்ற போதே கண்மணி அதிர்ந்து அவனைப் பார்க்க…
“எனக்கு எல்லாமே தெரியும்…”
’எல்லாமே’ என்ற போது அழுத்தமாக ஆரம்பித்த அவன் குரல்… முடித்த போது உடைந்திருக்க…. கண்மணி சிலையென அமர்ந்திருந்தாள் இப்போது…
அர்ஜூன் தன் தவறை உணர்ந்தவனாக…
”ப்ச்ச்… சாரி… இப்போதைக்கு நீ படி… படிக்கிறதை மட்டும் கவனி…. ஆனால் உனக்காக நான்… ஐ மீன் நாங்க இருக்கோம்ன்றதை ஞாபகம் வச்சுக்கோ…” என்ற போதே…
”இங்க இங்க … ஸ்டாப் பண்ணிருங்க” என்று கண்மணி வேகமாக தன் பொருட்களை சேகரிக்கத் தொடங்க…
“ஒகே ஒகே ஸ்டாப் பண்றேன்… எதுக்கு இவ்ளோ அவசரம்” என்று அர்ஜூன் காரை நிறுத்தி… அவள் புறம் வந்து கார்க்கதவைத் திறந்து விட…
அப்போதுதான் பார்த்தான் அந்த குறுகலான தெருவை… அதிலும் கும்மிருட்டாக இருக்க…
காரை லாக் செய்து விட்டு…
“வீடு எங்க இருக்கு”
“தோ பக்கம்தான்…ஸ்டீர்ட் வழியா போய் திரும்புனா பக்கம்… “ என்று பொருட்களை எடுத்தபடியே சொன்னவளிடம்…
“சரி வா… போகலாம்” என்று முன்னால் போக…
“ஹலோ… இது எங்க ஏரியா… நாங்க போய்க்கிருவோம்… நீங்க நடையைக் கட்டுங்க” கண்மணியின் குரல் கொஞ்சம் உயர்ந்திருக்க… அதில் உரிமையும் சிறிதும் இருக்கத்தான் செய்தது…
“ஏரியா வந்தவுடனே… மேடம் மிரட்டலாம் செய்றீங்க” என்று சிரித்தபடியே…
“உங்க ஏரியாவா இருக்கட்டும்… நான் விட்டுட்டு வருகிறேன்” என்று முன்னே நடக்க…
ஏனோ கண்மணியினால் அவனை மறுத்துப் பேசமுடியவில்லை… மாறாக பிடிவாதமான அவன் செய்கைகள் அவளுக்கு பிடிக்கவே செய்ய… சற்று முன் இருவருக்கும் நடந்த வாக்குவாதம் அப்படியே நின்று போயிருக்க…
”ப்ச்ச்..” என்று சலித்தவளாக…
“அப்போ இதைப் பிடிங்க” கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்தாள்…
அர்ஜூனும்… அவள் சொன்னவுடன் அதை வாங்கியும் கொண்டு… இரண்டு அடிகள் கூட இருவருமாக சேர்ந்து எடுத்து வைத்திருக்க மாட்டார்கள்…
“கண்மணி” கர்ஜனையுடன்… அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது நடராஜின் குரல்…
“யார் இது” என்று அவள் முன் போய் நிற்க…
அர்ஜூன் முகத்தில் சிறு அதிர்வு கூட இல்லை… கண்மணியை மிரட்டிய குரலிலேயே அது நடராஜ் என்று தெரிய… ஏளனமாக உதட்டைச் சுழித்தவனாக நட்ராஜைப் பார்க்க…
கண்மணியும் அவள் தந்தை குரலில் பயந்ததாகத் தெரியவில்லை…
”அர்ஜூன் பா… அம்மாவோட ரிலேட்டிவ்” என்று சொன்னவளிடம்
“சரி வா போகலாம்” என்று கண்மணியை இழுத்துக் கொண்டு போக முயல…
ஒரு நிமிசம்… நட்ராஜை நிறுத்தியவன்… தன் கையில் இருந்த கண்மணியின் பொருட்களை அவளிடம் கொடுத்தவன்…
“நீ போ…ப்ரின்சஸ்” என்று மட்டும் சொல்லி விட்டு
”உங்க கிட்ட நான் பேசனும்” என்று நட்ராஜிடம் சொல்லி அவரைப் பார்க்க…
இப்போது கண்மணி தயங்கினாள்… அந்த இடத்தை விட்டுச் செல்ல… அர்ஜூனுக்கு தந்தை மேல் இருக்கும் மரியாதை தெரிந்து கொண்டதால் அவள் அப்படி இருக்க…
கண்மணி இன்னும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து… அர்ஜூன் கோப முகத்துடன்
“உன்னை… போன்னு சொல்றேன்ல” என்று கண்டிப்பு கலந்த கறார் குரலில் அர்ஜூன் கண்மணியிடம் சொல்ல…
நடராஜ்தான் விக்கித்துப் போனார்… தன் மகளை இது வரை யாருமே.. யாரும் என்ன தானே இந்த அளவுக்கு உரிமையுடன் கண்டித்தது இல்லை… கண்மணியும் வேறு யாரையும் அவள் உரிமை வட்டத்தில் விட்டத்தில்லை…
தன் மகள் முன் குரல் உயர்த்தி யாராவது பேசினாலே… வெட்டு ஒன்று துண்டு ஒன்றாகப் பேசி எதிராளியை வாயடைக்கச் செய்யும் தன் மகளா இது… ஆடித்தான் போனார் நட்ராஜ்…
“என் மகள் என்னை விட்டு போய் விடுவாளா… அந்த நாரயணன் என் மகளை பிரித்து விடுவாரா” அவரையுமறியாமல் கண்கள் கலங்க… இருந்தும் சமாளித்தவராக…
“என் பொண்ணு நீ சொன்னா கேட்கனுமா… கேட்க மாட்டா… இங்கதான் இருப்பா” என்று வீம்பாகச் சொல்லி… கண்மணியை தன் கைப்பிடிக்குள் நிறுத்த…
“ஹா.. ஹா.. அவ்ளோ அக்கறை பொண்ணு மேல.. உன் அக்கறைதான் என்னன்னு தெரியுமே நட்ராஜ்… ” நடராஜின் பலவீனமான பக்கத்தை எடுத்து அர்ஜூன் அவரை வார்த்தைகளால் தாக்க…
“இங்க பாரு… நான் சொல்றதை இப்போ அவ கேட்க வேண்டாம்னு நினைத்தேன் பரவாயில்லை… எனக்கும் வேலை மிச்சம்… இவ என்னொட பிரின்ஸஸ்… மிஸஸ் அர்ஜூன்”
”என்னைக்குமே உன் பொண்ணா இருப்பான்னு கனவுல கூட நினைக்காத… இவ மொத்தமா எனக்கானவள்… இவளுக்கான சிறு உரிமை கூட வேற யாருக்கும் இல்லை… முக்கியமா உனக்கு” என்று அவன் நடராஜிடம் பேசப் பேச…
கண்மணி அவனைப் பார்த்து முறைக்க ஆரம்பிக்க… அவளிடம் திரும்பியவன்
“முறைக்காத… உனக்குமே… உனக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்… இப்போதைக்கு நானும் உன்கிட்ட வேற ஏதும் பேச விரும்பலை… “ என்றவன்… வேகமாக காரை நோக்கி திரும்பியவன்… மீண்டும் கண்மணியிடம் வந்து நின்றான்…
இப்போது அவன் முகத்தில் இளகுத்தன்மை வந்திருக்க…
“சாரி ப்ரின்சஸ்.. நான் இதுதான்… எனக்கு உன்கிட்ட மறைக்கப் பிடிக்கலை… எனக்கு உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும்ன்றது உண்மையோ அந்த அளவுக்கு இந்த நட்ராஜைப் பிடிக்காதுன்றதும் உண்மை… ” நட்ராஜின் முன்னாலேயே அர்ஜூன் இதைச் சொல்ல…
“சொல்லப்போனால் இப்போதே உன்னை நான் கூட்டிட்டுப் போகத் துடிக்கிறேன்… இந்தாளுகிட்ட நீ இருக்கிறதே பிடிக்கலை… ஒவ்வொரு வினாடியும் உன் பாதுகாப்பை நினைத்து எனக்கு பயமா இருக்கு “ அவன் குரல் சுரத்தில்லாமல் ஒலிக்க…
நட்ராஜ் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை… இப்போது அர்ஜூனை அடிக்க கையை உயர்த்தப் போக…
சட்டென்று அவர் கையைப் பிடித்தவன்…
”நீ என் அத்தையை ஒழுங்கா வச்சுக்கலை… அதைக்கூட மன்னிச்சுருவேன்… ஆனால் இவளை கதற வச்சதை நான் என்னைக்குமே மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்” என்று சொல்ல…
கண்மணி கூர்மையாக அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்… அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் மட்டும் இல்லை… வலியும் இருக்க… அமைதியாக நின்றிருந்தாள்… அந்த அமைதி கூட சில நொடிகள் மட்டுமே…
அடுத்த நிமிடம் இருவரிடமும் போராடாமல்… அங்கிருந்து வீட்டை நோக்கிப் போக…
நட்ராஜும் இப்போது ஓங்கிய கையை இறக்கியபடி… அர்ஜூனை முறைத்துவிட்டு… வேகமாக மகளின் பின் செல்ல
அர்ஜூன் மனம் கனத்தது… நட்ராஜிடம் அவன் இப்படித்தான் பேச முடியும்… அவனால் மாற முடியாது… ஆனால் அது தன்னவள் மறக்க நினைக்கின்ற நினைவுகளை எழுப்பி விடுகிறதோ…
தன் மேலேயே கோபம் வர…
“இனி தன்னிடம் பேசுவாளா” அவள் போவதையே வெறித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான்…
அதே நேரம் அவள் தன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டாளா என ஏக்கமாகமும் மாறி இருக்க..
சற்று தூரமாக சென்று கொண்டிருந்த கண்மணி… தன் தெருவுக்கு செல்லும் வளைவு வர… சற்று நின்றவள்… அர்ஜூனைத் திரும்பிப் பார்க்க… அர்ஜூனின் முகம் மலர… கண்மணியும் முடிவெடுத்தாற் போல அர்த்தத்தோடு புன்னகைத்தவள்…அவன் கண்பார்வையில் இருந்து சில அடி தூரம் சென்றபின்… அர்ஜூன் கொடுத்த சாக்லேட் பாரை மறக்காமல் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு போனாள்…
அவளுக்குப் பிடித்த அர்ஜூன்… அவளைப் பிடித்து கொடுத்ததுதான் என்றாலும்… சில பொருட்கள், சில ஞாபகங்கள்… தேவையில்லாத குப்பைகளை அவளுக்குள் கிளறிவிடுகின்றன என்பதில் இந்த சாக்லேட்டும் ஒன்றாகி இருக்க…. அர்ஜூன் அவளுக்கு கொடுத்த முதல் பரிசுப் பொருள் குப்பைத் தொட்டிக்கு இடம்பெயர்ந்திருந்தது
---
அர்ஜூன் மனமெங்கும் உற்சாகமே… எப்படியோ தன் மனதில் இருந்த காதலை அவளிடம் நேரடியாகச் சொல்லாவிட்டாலும்… அவள் தந்தை முன்னிலையில் சொல்லி விட்டோம்… அதிலும் என் மனைவி என்ற வகையில் தன் மனதில் அவளை வைத்திருக்கும் உரிமையின் அளவு வரை சொல்லி விட்டோம்… இனி பொறுத்திருப்போம்… இன்னும் காலம் இருக்கின்றது… என்றெல்லாம் நினைத்தபடி வந்தவனின் கையும் காலும் இறக்கை கட்டி பறக்க… அது சாதாரண கார்தான்… ஆனால் அவன் உற்சாகத்துக்கு ஏற்ப அதுவும் வேகமெடுக்க…
சரியாக ஒரு சாலையின் வழியே ஒரு திருப்பம் வர… எதிர்புறம் வந்த வாகனத்தின் ஹாரன் ஒலியில் சுதாரித்து வேகமாக வேகத்தைக் குறைத்து ஒடித்து திருப்ப… இருந்தும் சடார் என்று முன்னே வந்த காரின் மீது மோதி நின்றிருந்தது…
எதிரே வந்த அந்தக் காரும் இப்போதும் நின்றிருக்க… அர்ஜூன் தன் காரில் இருந்து இறங்க…
எதிர்புறம் வந்த காரில் இருந்து கோப முகத்துடன் இறங்கியவனோ ரிஷியாக இருந்தான் … வேகமாக இறங்கி தன் காரின் முகப்பை வந்து பார்க்க…
இடது புற ஹெட் லைட் இருந்த பகுதி சிறிதாக அடி வாங்கி இருக்க… அதே நேரம் அர்ஜூன் தான் வந்த காரைப் பார்க்க… வலதுபக்கம் மொத்தமும் நசுங்கிப் போயிருக்க… சொல்லப் போனால் அர்ஜூன் வந்த காருக்குத்தான் அதிக சேதாரம்… ஆனால் அவன் அமைதியாக நின்றிருக்க…
ரிஷியோ… வேகமாக வந்து அர்ஜூனின் சட்டையைக் கொத்தாகப் பற்றினான்….
“வண்டியைப் பார்த்து ஓட்டிட்டு வர மாட்டியா… ஹார்ன் கொடுக்கனும்னு கூட தெரியாதா..” என்ற போதே
“உங்க மேலையும் தப்புதான் பாஸ்… ஹெட்லைட் கூட போடாமா வண்டியை ஓட்டிட்டு வந்துருக்கீங்க… சொல்லப் போனால்… என் காருக்குத்தான் சேதாரம் அதிகம்” என அர்ஜூன் நிதானமாக சொல்லும் போதே
கேவலமாக அந்தக் காரை ரிஷி பார்த்தான்
“உன் காரும் என் காரும் ஒண்ணா” என்ற ரீதியில்
அர்ஜூனும் அவன் பார்வை புரிந்தவனாக… மனதுக்குள் கண்மணியை நினைத்துக் கொண்டான்…
’நல்ல வேளை… அவள் வசிக்கும் ஏரியாவுக்கு இந்த கார் செட்டாகாது… அங்கிருக்கும் தெருக்களில் போக முடியாது என்று காரை மாற்றி அவள் எடுத்து வரச்சொன்னதை ’ நினைவு கூர்ந்தபடியே
தன் சட்டையை கொத்தாகப் பிடித்திருந்த ரிஷியின் கைகளை விலக்கியபடியே
“ப்ரோ… சண்டை போட்ற மூட்லலாம் இல்லை… வேற மூட்ல இருக்கேன்.. இப்போதான் ஒரு வாக்குவாதம் முடிச்சு… அதுல பாதிப்பு இல்லைனு ஹேப்பி மூட்ல வந்துட்டு இருக்கேன்… இப்போ என்ன… உங்க காருக்கு ஆன சேதாரத்துக்கு பணம் தருகிறேன்… போதுமா ” என்ற போதே
அர்ஜூன் பணம் என்று சொன்னதும் ரிஷிக்கு இன்னும் கோபம் அதிகரிக்க… வேகமாக அவன் கைகள் அர்ஜூனின் கழுத்தைப் பிடிக்க ஆரம்பிக்கப் போக…
இப்போது அர்ஜூனுக்கும் கோபம் வந்திருக்க… அவனும் ரிஷியோடு சரிக்கு சமமாக மல்லுக்கு நிற்க நினைக்கும் போதே… ரிஷியின் போன் ஒளிர…
“இதோ வந்துட்டேன்மா…” என்றவன்… அர்ஜூனைப் பிடித்திருந்த கைகளை விலக்கியவனாக…
“உனக்கு நல்ல நேரம்னு நெனச்சுக்க…” என்று சொல்லியபடி வேகமாக தன் காரினுள் ஏறி அமர்ந்தவனாக…. காரை எடுத்து அதே வேகத்தில் அந்த இடத்தை விட்டும் போயிருக்க…
அர்ஜூன்… ரிஷி பிடித்திருந்ததால் கசங்கிய சட்டையை சரி செய்தவனாக… ரிஷியினால் தடங்கல் ஏற்பட்ட தன்னவளின் நினைவுகளையும் மீண்டும் மீட்டெடுத்துக் கொண்டவனாக
“ஹ்ம்ம்.. என்னை விட ஒரு 3 இன்ச் ஹைட் அதிகமா இருப்பான்… ஆனால் நான் அடிச்சா ஒரு அடி கூட தாங்க மாட்டான்… இவ்ளோ துள்ளிட்டு போகிறான்… புள்ள பூச்சிலாம் நம்மளை மிரட்டிட்டு போகுது… எனக்காடா நேரம் நல்லா இருக்கு… உனக்கு ஏதோ சரியா இருக்கம் போய்… நான் என் பிரின்சஸ்கிட ப்ரபோஸ் பண்ணின சந்தோஷத்தில் இருக்கப் போய்… என் ஆளால… நீ தப்பிச்ச” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனாக காரை எடுத்தான் அர்ஜூன்
---
அர்ஜூன் விட்டுபோன பின்… தன் வீட்டிற்கு வந்த கண்மணி வீட்டிற்குள் நுழையவே இல்லை… சில விசயங்களுக்கு அவளுக்கு தெளிவு தேவைப்பட தனிமை தேவைப்பட… நேராக மாமரத்தின் அடியில் போய் உட்கார்ந்து கொண்டாள்…
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை… அந்த அளவுக்கு அவள் யோசித்துக் கொண்டே இருக்க… மாலையில் இருந்து அர்ஜூன் என்ற ஒருவனால் ஏற்பட்ட மாயவலைக்குள் இருந்து கொஞ்சமாக கொஞ்சமாக வெளியேறி வந்து கொண்டிருக்க… மனம் அவளுக்கும்… அர்ஜூனுக்கும்… நட்ராஜுக்குமான பிணைப்புகளையும் பிணக்குகளையும் எல்லா விதமான கோணத்திலும் நிறுத்தி சரி பார்க்க ஆரம்பித்திருக்க… இப்போது தெளிவாக முடிவெடுத்திருக்க… அந்த தெளிவும் கொடுத்த நிம்மதியோடு அமைதியோடு உள்ளே போனவள்… நட்ராஜ் அவளிடம் பேச வந்த போதும் பேசாமல் உறங்கச் சென்று விட்டாள்…
---
அதே நேரம் ரிஷிக்கு… அவனை இத்தனை மணி நேரமாக ஆட்டிவைத்திருந்த தலைவலியும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருக்க… வலி நீங்கியவனாக வீடு வந்து சேர்ந்தவன் தன் குடும்பத்தைக் கிளப்பியபடி… அவனது ஊரை நோக்கி நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பிக்க… ரிஷி இப்போது சாதாரணமாகி இருக்க… இறுக்கம் போய் அவன் முகத்தில் மலர்ச்சியாகவே இருக்க… பயணம் குதுகலமாகவே இருந்தது….
எல்லாம் அங்கிருந்த ஒரு மோட்டலில் காஃபி குடிப்பதற்காக நிறுத்தும் வரையில் தான்…
அதிகாலை 4 மணி அளவில்… காஃபி குடித்தால் புத்துணர்வாக இருக்கும் என்று வழியில் இருந்த மோட்டலில் நிறுத்தி… அனைவருமாக சிரித்தபடியே… ஒருவரை ஒருவர் வாரியபடியும் காஃபி குடித்தனர்…
அடுத்து அங்கிருந்த ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்றார்கள் மகிளா.. ரிதன்யா.. ரித்விகா… மூவருமாக
மூவரின் மேலும் பார்வையை வைத்தபடியே தாயிடம் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி…
ஒரு நொடிதான் எங்கோ பார்த்து விட்டு மீண்டும், தங்கைகள்… மகிளா இருந்த புறம் பார்த்து திரும்ப… ரித்விகா மட்டும் அவன் கண்ணில் படாமல் போக… அந்த ஒரு நொடியைக் கூட ரிஷி அலட்சியமாக விட வில்லை…
சட்டென்று எழுந்தவன் வேகமாக ரிஷி ரித்விகாவைத் தேடி வர…
”அண்ணா…” என்று சற்று மறைந்தாற்ப் போல இருந்த ஒரு கடையில் இருந்து ரித்விகா அவனைக் கூப்பிட
அப்போதுதான் அவன் மனம் மீண்டும் நிம்மதி அடைந்திருக்க… பெருமூச்சு விட்டவனாக… ரித்விகாவின் அருகே வர
”இந்த சாக்லேட்” என்று ஆசையுடன் கைகாட்ட… ரிஷியின் முகம் அவனையுமறியாமல் வியர்த்திருக்க ஆரம்பித்து இருந்தது…
”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வா… ஃபர்ஸ்ட் இந்த சாக்லேட் சாப்பிடறதெல்லாம் விடு” என்று அதட்டல் போட்டபடியே தன் தங்கையை இழுத்துக் கொண்டு நடக்க…
ரித்விகா வராமல் பிடிவாதம் பிடிக்க… இவனோ மசியாமல் நிற்க… கடைக்காரர்… ரித்விகாவைப் பாவம் போல் பார்த்தவராக…
“இந்தா பாப்பா” என்று சாக்லேட்டை நீட்ட
அவ்வளவுதான் ரிஷி முகம் அப்படி ஒரு பயங்கரமாக மாறி இருந்தது…
“யோவ்… என்னைய்யா…. பாப்பா…. வார்த்தையை பார்த்துப் பேசு….” என்ற போதே
“சாக்லேட் நாங்க கேட்டோமா… எடுத்து நீட்ற” என்று தன்னை மீறி கத்த ஆரம்பிக்க… இவன் ஆவேசக் குரலில் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்து இருந்ததது …
ரிஷி கோபத்துடன் கத்திக் கொண்டிருக்கின்றான் என்று மகிளாவும் ரிதன்யாவும் சொல்ல…. லட்சுமி பதறி அங்கு வந்தவராக நடந்தது என்னவென்று ரித்விகாவிடம் கேட்க…
ரித்விகா லட்சுமியிடம் நடந்ததைச் சொல்ல… லட்சுமி ரிஷியின் சார்பாக மன்னிப்பு கேட்டு எப்படியோ அங்கிருந்த ரிஷியுடன் நகர…
ரிஷி… ஆவேசத்துடன் கையைத் தட்டி விட்டு விட்டு முன்னால் நடந்து போனான்…
ரிஷி இப்படியெல்லாம் கோபப்பட மாட்டானே… எதையும் சிரித்துப் பேசியே தன் வழிக்கு கொண்டு வந்து விடுவானே…
“என்ன ஆயிற்று இவனுக்கு” லட்சுமி யோசனையுடன் காரை நோக்கிப் போக…
யாருடனும் ஒட்டாமல் ரிஷி மட்டும் தனியே நடந்தான்… ஆனால் அவன் காதுகளில் அபஸ்வரமாக ஒலித்துக் கொண்டிருந்ந்தன அந்த வார்த்தைகள்…
“என்னைய போலிஸ்ல மாட்டி விட்டுட்டேல்ல… இந்த மருது யாருன்னு தெரியாம என் மேல கையை வச்சுட்ட… நான் யாருன்னு கூடிய சீக்கிரம் காட்டுகிறேன்… நீ எங்க இருந்தாலும் உன்னை வந்து தேடி அடிப்பேன்டா”
“எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது… நான் செய்த காரியத்தால் என் தங்கைகளுக்கு ஏதாவது ஆபத்து நடந்து விடுமோ என்று பயப்படுகின்றேனா… ஆனால் நான் நல்லது தானே செய்தேன்….” மனம் பதற ஆரம்பித்து இருந்தது ரிஷிக்குள்…
---
அதே நேரம் நல்ல உறக்கத்தில் கண்மணிக்குள்… முன் தினம் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் அவளை அவளின் இளம் வயது பிராந்தியத்துக்குள் இழுத்துப் போக…
“நான் உன் மருது மாமா தானே மணி…. நான் கொடுத்த சாக்லேட் தானே இது” என்றபடி அவள் கன்னத்தில் இருந்த சாக்லேட்டை அவன் தன் நாவால் துடைக்கப் போக…
“அப்பா… எழுந்திருங்கப்பா… இந்த மருதுகிட்ட இருந்து காப்பாத்துங்க” என்று அலறியபடி படுக்கையில் இருந்து கண்மணி எழ முயற்சிக்க…. அவளால் எழவே முடியவில்லை
அன்று கடைசி வரை தன் மகள் எழுப்பியும் அவள் குரலில் எழாமல் குடி போதையில் உறங்கி மகளைக் காப்பாற்றத் தவறிய நட்ராஜ்….. இன்று மகளின் ஒரே அலறலில் வேகமாக எழுந்து அவள் அருகே போக… தன் அருகே வந்த தந்தையை ஒரே தாவலில் கட்டிப் பிடித்துக் கொள்ள
தன்னை அணைத்துக் கொண்ட தன் மகளை மார்போடு அணைத்த நட்ராஜ்... அவளைத் தேற்றி ஆறுதல் படுத்த முயற்சி செய்த போதிலும்... அவர் ஒரு புறம்… வேதனையிலும் குற்ற உணர்ச்சியிலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்க… அவர் மகளோ இன்னும் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தாள்…
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
கண்மணிக்கு அர்ஜுன் வேண்டாம், ரிஷி தான் சரியான ஜோடி. கண்மணிக்கு சின்ன வயசுல என்னவோ ஆகியுள்ளது அதான் இப்ப மன உறுதியுடன் இருக்கிறாள்.