இதயம்-9
மல்லி கண் விழித்துப் பார்ப்பதற்குள் மூன்று நாட்கள் கடந்திருந்தன.
இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவளது தலை தரையில் மோதியிருக்க, வெளிப்படையாகப் பெரிய காயம் இல்லையென்றாலும் உள்ளே ஏற்பட்ட அதிர்வினால் பாதிப்பு இருந்தது. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே கண்விழித்தாள் மல்லி.
அவளுக்கு விபத்து நடந்த, அந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைத்த மருத்துவ மனை ஒன்றில் அவளை முதல் கட்ட மருத்துவ உதவிக்காகச் சேர்த்திருந்தான் தேவா. உடன் சுமாயாவும் இருந்தாள்.
அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பரிமளாவிற்கு தகவல் கொடுக்கப்பட, ஜெகனுடன் அவர் அங்கு வந்து சேர்த்திருந்தார்.
சுமா நடந்த சம்பவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்க, கோபம் கொண்ட பரிமளா, அந்த நேரத்தில் அவளை அலுவலகத்திலிருந்து அங்கே அழைத்து வந்திருக்கத் தேவையில்லையே என வெகுவாக அவளைக் கடிந்து கொண்டார்.
அவரைச் சமாதானப்படுத்திய சுமா மல்லி இருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு அவர்களை அழைத்துச் சென்றாள்.
மகளின் நிலையைக் கண்டு கதறிய அந்தப் பெற்றோரைக் காண மிகவும் வேதனையாய் இருந்தது தேவாவிற்கு. இப்படி ஆகும் என அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மல்லியின் அவசர செயலால் வந்ததுதான் என்றாலும், அவன் அவளிடம் பேசிக்கொண்டிருந்த விஷயம் அவ்வளவு நுட்பமானதாக இருந்ததால், ‘அதை இன்னும் கொஞ்சம் கவனமாகக் கையாண்டிருக்கலாமோ’ என்ற எண்ணம் அவனை வெகுவாக கொன்று கொண்டிருந்தது.
தனது குற்ற உணர்ச்சியால் அவர்களை நெருங்கவே அவனுக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது. அதனால் அவர்கள் அங்கே வந்த பிறகு அவன் மல்லியின் அருகே செல்லவே இல்லை. எல்லாவற்றையும் சுமாயா மூலமாகவே செய்துகொண்டிருந்தான்.
அவளை, ‘கேர் ஃபார் லைஃப்’ மருத்துவமனைக்கு மாற்ற தேவா சுமாயா மூலமாகக் கேட்ட பொழுது, அந்த மருத்துவமனையே அவர்களுக்கு ராசியாக இருப்பதாக நினைக்கவே, பரிமளா அதற்குக் கொஞ்சமும் சம்மதிக்கவில்லை.
வசதி குறைவான மக்களுக்காக குறைந்த செலவில் மருத்துவ உதவிகள் செய்து வருவதால், இதே மருத்துவன்மனையில்தான், ஜெகன் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமயம் அவரைச் சேர்த்திருந்தார் பரிமளா.
தொடர்ந்து அவரது மருத்துவ பரிசோதனைகளையும் அங்கேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர் உடல் நலம் தேறி நடமாடிக் கொண்டிருப்பதே அங்கே இருந்த மருத்துவர்களின் திறமையால்தான் என்று அவர் முழு மனதாக நம்பினார்.
அவர்களுக்கு நன்கு பழக்கமான மருத்துவர்களும் அங்கே இருந்ததால், அவருக்கு அங்கேயே திருப்தியாக இருக்கவும் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர விரும்பினார் பரிமளா.
அதற்கு மேல் சுமாவால் அவரை வற்புறுத்த முடியவில்லை.
தன்னாலான உதவிகளை அருகில் இருந்து செய்யத் தொடங்கினாள் அவ்வளவே.
அவளது பெற்றோரையும், தீபனையும் தாண்டி மல்லியை நெருங்க முடியாமல் தவித்துத்தான் போனான் தேவா.