இதயம்-6
காஞ்சிபுரம் மாவட்டத்துள் அடங்கிய சிறுவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள் அம்மு. அங்கே அம்முவின் அப்பா, தாத்தா, சித்தப்பா எனக் கூட்டுக் குடும்பம், அவர்களுடையது.
அவளுடைய அத்தையை அதே ஊரில் திருமணம் செய்து கொடுத்திருக்க, அருகிலேயே வசித்து வந்தார்.
அம்முவின் சகோதரன் ஒருவன், அவளது சிற்றப்பாவின் மகன்கள் இருவர் என மூன்று ஆண் பிள்ளைகளுக்குப்பின் அந்தக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு அம்மு.
இருவரின் எளிமையான குணமும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்திருந்த காரணமும் சேர்ந்துகொள்ள மல்லியும், அம்முவும் சில நாட்களுக்குள்ளாகவே நன்கு நெருக்கமாகிவிட்டனர்.
மல்லியும் ஓரளவிற்கு இயல்பாக அங்கே இருக்கத் தொடங்கினாள். அவள் அம்முவை சார்ந்தே இருக்கப் பழகியிருந்தாள். அம்மு எதாவது காரணமாக விடுப்பில் சென்றால் கூட மல்லி தவித்துப்போய் விடுவாள்.
அம்முவின் குடும்பத்திற்குள் ஏதோ பிரச்சினை என்பதனால் மட்டுமே அவளை அந்த விடுதியில் சேர்த்திருந்தனர் என்பதை மட்டும் அவள் மல்லியிடம் ஒருமுறைச் சொல்லியிருந்தாள்.
அவளது ராஜா அண்ணாவிற்கு மட்டும் அதில் விருப்பமில்லை என்றும் அவள் அடிக்கடி சொல்லுவாள். தினமும் அவளுடைய அண்ணன் புராணம் பாடிக்கொண்டிருப்பாள் அம்மு.
ஒவ்வொரு விடுமுறைக்கு அவள் ஊருக்குச் சென்று திரும்பும் பொழுதும் அவளுடைய அண்ணனின் பரிசு ஒன்று அம்முவிற்குக் கட்டாயம் இருக்கும். ஓரிரு முறை அண்ணனிடம் சொல்லி மல்லிக்கும் அதுபோல் பரிசை வாங்கி வருவாள் அம்மு.
அவர்கள் எட்டாம் வகுப்பில் நுழையும் வரை எல்லாம் சுமுகமாகவேச் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகுதான் அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாக ஆகிப் போனது.
அவர்களது உணவே அவர்களின் முதல் பிரச்சினையாகிப் போனது. அவர்கள் அங்கே சேர்ந்த பொழுது இருந்ததுபோல் இல்லாமல், விடுதியில் அவர்களுக்கு அளிக்கும் உணவின் தரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது.
சிறுமியர் சாப்பிட ஏற்றதாக இல்லாமல் சுவையின்றி உணவில் காரம் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஆனாலும் அதைச் சொல்ல பயந்துகொண்டு, எல்லோருமே ஏதோ சாப்பிட்டு வைப்பார்கள்.
அந்த உணவு ஒவ்வாமையால், ஒருநாள் மல்லி வயிற்றுவலியில் துடித்துக் கொண்டிருந்தாள். பிறகு அம்மு, அவர்களது வார்டனிடம் சென்று அவளது நிலைமையைச் சொல்ல, அவர்கள் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
நேரம் ஆக ஆக அவள் வலி அதிகரிக்க, அம்முதான் பிடிவாதம் பிடித்து, அவளுக்கு மருத்துவம் செய்ய வைத்தாள்.
மேலும் அவர்களது விடுதி உணவகத்திலும், சாப்பிடாமல் உணவு நன்றாக இல்லை என அவள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டி போராடவே, அன்றிலிருந்து அந்த விடுதியின் வார்டன் அவளுக்கு எதிரியாகிப் போனார்.
அடுத்த பிரச்சினையாக வந்தாள் செல்வி. அங்கே அந்த வருடம் புதிதாகச் சேர்ந்திருந்தாள் அவள். நல்ல நிறமாக, அவர்களுடைய வகுப்பில் படிக்கும் மற்ற பெண்களை விடக் கொஞ்சம் அதிக வளர்ச்சியுடன் இருப்பாள் அவள்.
ஏனோ அவளும் அம்முவும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்.