இதயம்-38
அனாதை பிணமாக ஜி.ஹெச்சின் பிணவறையில் கேட்பாரின்றி கிடந்தான் கோபால். அவனது உடலைக்கூடப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை திலகா.
உயிருள்ள சடலமாக 'குவாட்ரிப்லேஜிக்' நிலையில் கேர் ஃபார் லைஃபில் அனுமதிக்கப்பட்டிருந்தான் வினோத். அவனது இந்த நிலைமைக்குப் பின்னால் ஆதிதான் இருந்தான் என்று சொல்லத் தேவையில்லை.
அரசு மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த சரவணன் அவன் தோழியின் மரணத்திற்கு நீதி செய்துவிட்டான். ஆதியின் வேலையும் சுலபமாக முடிந்திருந்தது.
விபத்தில் இறந்துபோன! ரத்தினத்தின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்திருந்தது.
தாமரைக்குத் துணையாக ரத்தினத்தின் இறுதிச் சடங்கில் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான் ஆதி.
அன்று வினோத் தனக்கு செய்த அதே துரோகச் செயலை தானும் தாமரைக்கு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் அவளது கண்களை சந்திக்கமுடியாமல் தவிர்த்து வந்த ஆதி ஒரு கட்டத்தில் அவளிடம் சிக்கிக்கொள்ள,
“அண்ணா! நீங்க ஏன் அண்ணா எனக்கு முன்னாடி இப்படி தயக்கத்தோட இருக்கீங்க. நீங்க எந்த தப்புமே செய்யலியே!” என்ற தாமரையை ஆதி அதிர்வுடன் பார்க்க,
“அப்பா! உயிர் போற நேரத்துல எல்லாத்தையுமே என்னிடம் சொல்லிட்டாங்க.
‘வினோத்தை உனக்குக் கல்யாணம் செய்து வச்சு பெரிய பாவத்தை பண்ணிட்டேன்னு’ என்னிடம் மன்னிப்பு கேட்டாங்கண்ணா!
அவரை டிவோர்ஸ் பண்ணிட்டு வேறே நல்ல வாழ்க்கையை எனக்கு ஏற்படுத்திக்க சொன்னாங்க!
ப்சு.. நினைத்து நினைத்து சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி மனசை மாத்திக்க நான் ஒண்ணும் எங்க அப்பாவோ வினோத்தோ இல்ல அண்ணா.
அவரை சட்டத்துக்கு முன்னால நிறுத்த என்ன செய்யணும்னு பார்த்தேன். அதுக்கு வழியில்லன்னு ஆன பிறகு, என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனால் நீங்க என் வேலையை சுலபமாக்கிட்டீங்க அண்ணா அவ்வளவுதான்.
இப்ப அவர் செஞ்ச பாவங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்யறதுன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். ஏன்னா தெரிஞ்சோ தெரியாமலோ நடந்த எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் ஆயிட்டேனோ என்று என் மனசே என்னை கொன்னுட்டு இருக்கு” என்று முடித்தாள் தாமரை.
“என் ஒரு தங்கைக்கு நடந்த அநியாயத்திற்கு, இன்னொரு தங்கையை பழிவாங்கிட்டேனோன்னு மனசு வலிக்குது தாமரை என்னை மன்னிச்சிடும்மா” என்று அவன் மனதிலிருந்து சொல்லவும்,
“பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்கண்ணா. ஒரு விதத்தில் இது எனக்கு விடுதலை அண்ணா. இல்லனா அந்த பாவி என்னையே கூறு போட்டுக் கொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் தாமரை.
மனதிலிருந்த பாரம் நீங்கப்பெற்றவனாய் அங்கிருந்து சென்றான் ஆதி.
***
மல்லிக்கான நிர்வாகப் பயிற்சி, அவளது கனவான பட்டு தறிகள் என ஒரு பக்கம் வேலைகள் நடந்துகொண்டிருக்க, இடையிடையே அவர்களது தேன்நிலவா இல்லை தொழிற்முறைப் பயணங்களா என்று பிரித்தறிய முடியாத வண்ணம் உலகம் முழுதும் சுற்றிவந்தனர் ஆதியும் மல்லியும்.
காலம் தெளிவான நீரோடை போன்று அழகாகச் சென்றுகொண்டிருந்தது.
***
இங்கிலாந்து ரோஸ் பவ்ல் மைதானத்தில் இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி, அருகினில் மல்லி.
ஒருசமயம் விளையாட்டாக அவளை அங்கே அழைத்து வருவதாக அவன் சொல்லிவிட, சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் வந்திருந்தான். காரணம் அப்பொழுதுதான் மல்லியின் வளைகாப்பு முடிந்திருந்தது.
வீட்டில் லட்சுமி, பரிமளா என இருவரின் தடைகளையும் மீறி அவளை அங்கே அழைத்துவந்திருந்தான் அவளது ஆசைக்காக,
இந்திய அணி ஆட்டத்தில் பின்னி எடுத்துக்கொண்டிருக்க, விளையாட்டில் லயித்திருந்தவள் தன்னை மீறி அப்படியே அவன்மீது சாய்ந்து உறங்கியிருந்தாள் மல்லி. அவனது கரங்கள் அரணாக அவளை வளைத்திருந்தன.
அழகிய இளஞ்சிவப்பு சல்வாரில் மேடிட்ட வயிற்றுடனும், கைகள் முழுவதும் கண்ணாடி வளையல்களுடனும், உச்சியில் குங்குமம் மின்ன தாய்மையின் பூரிப்புடன் திகழ்ந்த மல்லியை காணக் காண திகட்டவில்லை ஆதிக்கு. சந்தோஷத்தின் உச்சியிலிருந்தான் அவன்.
அம்முவின் கண்கள் மல்லியையே வருடிக்கொண்டிருக்க, அவளது முகம் கைகள் என்று பார்த்துக்கொண்டே இறுதியாக அவளது பார்வை மல்லியின் வயிற்றில் வந்து உறையவும் உடல் அதிர்ந்து எழுந்து உட்கார்ந்தாள் மல்லி.
“மாம்ஸ்! அம்மு அம்மு என்னையே பார்த்துட்டு இருக்குற மாதிரி இருக்கு” என மல்லி சொல்லவும் அதிர்ந்தான் ஆதி. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கனவு மறுபடியும் வரவும் குழம்பித்தான் போனான்.
அங்கே ஒரு பெண்மணி மல்லியையே பார்த்துக்கொண்டிருப்பதை அப்பொழுதுதான் கவனித்தான் ஆதி.
புன்னகையுடன் அவர்களை நெருங்கி வந்த அந்த நடுத்தற வயதில் இருந்த ஆங்கிலேயப் பெண்மணி, ஆதியிடம் எதோ சொல்லவும் அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான் ஆதி.
அவர் பேசிய ஆங்கிலம் சரியாகப் புரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.
அவர் மல்லியைப் பார்த்து புன்னகைத்து அவளிடம் கை குலுக்கிவிட்டுச் சிரிக்க, அவரது கண்களைப் பார்த்த மல்லியின் உடல் சிலிர்த்தது. அவளது கனவில் அவள் கண்ட அம்முவின் கண்கள்.
அவர் விடை பெற்று அங்கிருந்து சென்றுவிட, ஆதியிடம் அவள் அதைச் சொல்லவும் வியந்தவன், “அவங்க ஒரு கேன்சர் சர்வைவர். அவங்க ஒரு முறை இந்தியா வந்திருந்ததா சொன்னாங்க. இந்தியா ஒரு புண்ணிய பூமி என்பது உண்மைன்னு சொன்னாங்க.
உன்னை இதுக்கு முன்னால எங்கயோ பார்த்த மாதிரி இருந்துதாம் அவங்களுக்கு.
நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொன்னாங்க!
உனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க அவங்க கடவுளை பிரார்த்திக்கிறதாக சொன்னாங்க” என்ற ஆதி, எதோ யோசனைத் தோன்ற,
“மல்லி! ஒரு வேளை அம்முவின் கண்களை இவங்களுக்குத்தான் பொருத்தினாங்களோ!” என்று நெகிழ்ந்தான் ஆதி.
மறுபடியும் அந்தப் பெண்மணியை அவன் தேடிப்பார்க்க அதற்குள் இந்தியா வெற்றிபெற்று போட்டி முடிந்திருக்கவும் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவரை மறுபடி பார்க்காமல் அங்கிருந்து கிளம்ப மனமின்றி ஆதி நின்றுவிட, அடுத்தநாள் அவனது பிறந்தநாள் என்பதினால் அவனுக்குப் பரிசுகள் வாங்கவேண்டுமென அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் மல்லி.
(பி.கு.உண்மையில் இந்த போட்டி நடந்தது 2019 ஜூன் ஐந்தாம் தேதி. கதை படி ஆதியின் பிறந்தநாள் ஜூன் ஆறு. நான் இந்த கதையை எழுதி முடித்தது நவம்பர் 2018)
***
கடைக்காப்பு -Epilogue
ஐந்து வருடங்களுக்குப் பிறகு.
“எங்க ஆ காமி ஒரே ஒரு வாய் ப்ளீஸ்! வாயை திற விஜய்!” என மல்லி கெஞ்சிக் கொண்டிருக்க,
உணவருந்தும் மேசை மேல் உட்கார்ந்துகொண்டு கண்களில் குறும்பு மின்ன வாயை இறுக மூடியவாறு, ஒரு வாய் உணவு உண்ண அவளைப் படுத்திக்கொண்டிருந்தான் விஜய். ஆதி மல்லி இருவரின் ஐந்து வயது செல்வப் புதல்வன்.
ஆறடி உயற்றதில் மிடுக்குடன் உள்ளே நுழைந்த தாய்மாமன் தீபனை கண்ட அடுத்த நொடி, கையை மேலே தூக்கிக் காண்பித்து, “ம்மா நான் பெரியவனா வளந்துட்டேன் இல்ல. நானே சாப்பிடறேன் பாருங்க!” என்றவாறு உணவுக் கிண்ணத்தை மல்லியிடமிருந்து பறித்துக்கொண்டு சமர்த்தாக அதை உண்ணத்தொடங்கினான் விஜய்.
அவனது செய்கையிலேயே வந்திருப்பது யார் என புரியவும் திரும்பிப் பார்க்காமலேயே, “வா தீபா! பிரேக் பாஸ்ட் சாப்பிடுறியா?” என மல்லி கேட்க, வேண்டாம் என்பதுபோல் கையை காண்பித்துவிட்டு அங்கே இருந்த இருக்கையை விஜயின் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்த தீபன்,
“அவ்ளோ நல்லவனாடா நீ? சாப்பிட நீ படுத்திட்டு இருந்ததை நான் பார்த்துட்டேதான் வந்தேன்? என்னோட அக்காவை தொல்லை பண்ணனு வச்சிக்கோ உனக்கு பெரிய்ய ஊசிதான் பாத்துக்க!” என மருமகனை மிரட்ட முதலில் விழித்தவன்.
“நான் குட் பாய் மாமா. பாருங்க எல்லா இட்லியும் காலி!” என்றவனை வினோதமாக பார்த்தவள், தம்பியிடம், “உலக நடிப்புடா சாமி!” என்று சிரிக்க, அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டான் விஜய். தாய்மாமன் ஊசி என்ற ஆயுதத்தை எடுத்தால் என்ன செய்வது.
எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு அப்பொழுதுதான் மேற்படிப்பில் சேர்ந்திருந்தான் தீபன்.
எம்.டி... நியோநேட்டலஜி முடித்து சரவணன் அய்யங்கார்குளத்திலேயே குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி, சுற்றி இருக்கும் கிராமங்களிலெல்லாம் சேவை செய்யத் தொடங்கியிருந்தான்.
அவர்கள் வீட்டைப் பொறுத்த மட்டும் குழந்தைகளின் உணவு மற்றும் ஆரோக்கியம் என்ற விஷயத்தில் தீபன் மற்றும் சரவணன் சொல்லுவதுதான் அங்கே நடக்கும்.
மற்ற விஷயத்திலெல்லாம் செல்லம் கொடுக்கும் பாட்டி தாத்தா உட்பட இந்த விஷயத்தில் மட்டும் அவர்கள் கட்சி.
மற்ற நேரங்களில் குழந்தைகளுடன் சேர்ந்துகொண்டு தீபன் செய்யும் கலாட்டாவைச் சமாளிக்க முடியாமல் மல்லியே சோர்ந்து போய்விடுவாள்.
சரவணன் வேறு சேர்த்துக்கொண்டால் நிலைமை கவலைக்கிடம்தான்.
ஆதியைப் பார்த்தால்தான் அடங்குவார்கள் இருவரும்.
***
சாப்பிட்டு முடித்து விஜய் ஓடி வர அவனை பிடித்து மடியில் இருத்திக்கொண்ட வரதன் அவனுடன் கதைபேச, பட்டுப் பாவாடை சட்டை அணிந்து, மலர்ச்செண்டென இருக்கும் தனது மூன்று வயது மகளை தோளில் சுமந்தவாறு அங்கே வந்தான் ஆதி.
பேத்தியைக் கண்டதும் மகளையே மறுபடியும் கண்டதுபோல் லட்சுமியின் கண்கள் பனித்தன.
மல்லியுடன் சேரத்து அங்கே கூடியிருந்த அனைவரையும் கண்டு முறுவலித்த ஆதி, "குட்டிம்மா! எல்லாருக்கும் பை சொல்லுங்க" என்று சொல்ல, அவள் கை அசைக்கவும், அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான் மகளுடன்.
***
அன்று தாமரையின் பிறந்த நாள் என்பதினால் அவளை நேரில் சந்தித்து வாழ்த்தவென கேர் ஃபார் லைஃப் வந்திருந்தான் ஆதி, மகளையும் உடன் அழைத்துக்கொண்டு.
ஆதி மகளைத் தூக்கிக்கொண்டு தாமரையின் அறைக்குள் நுழையவும் அவனது கைகளிலிருந்து நழுவி கீழே இறங்கியவள், ஓடிவந்து தாமரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “ஹாப்பி பர்த்டே லோத்தஸ் அத்தை” என்றவாறு அவளது கன்னத்தில் முத்தம் கொடுக்க மகிழ்ச்சியில் அழுகையே வந்துவிட்டது தாமரைக்கு.
“தாங்க்யூ பேபி!” என்றவாறு அவளை அணைத்துக்கெண்ட தாமரை,
“நான் பிரசவம் பார்த்து பிறந்த எல்லா குழந்தைகளுமே என் குழந்தைகள்தான் அண்ணா.
ஆனால் இந்தக் குட்டி ஏஞ்சல் ஏனோ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இன்னைக்கு இவளை இங்கே அழைச்சிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!” எனக்கூற,
“ஏன்மா ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற” என்றான் ஆதி.
அதற்குள் அங்கேயே செவிலியராக வேலை செய்துகொண்டிருந்த திலகா கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைத்து தாமரையிடம் ஒரு மருத்துவ அறிக்கையைக் கொடுக்க,
“திலகா பாப்பாவைக் கொஞ்ச நேரம் கவனிச்சுக்கோம்மா. ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு” என்று குழந்தையை அவளிடம் விட்டுவிட்டு மொத்தமும் தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டிருந்த அவர்களது மருத்துவனைக் குறித்து ஆதியுடன் விவாதிக்கத்தொடங்கினாள் தாமரை.
அதற்குள் ஜல் ஜல் என்று கால்களில் போட்டிருந்த கொலுசின் சத்தம் எதிரொலிக்க, அந்தப் பகுதி முழுவதும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தவள், அங்கே இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைத்தாள் அந்தக் குட்டி தேவதை.
அதிர்ந்த திலகா அவளைத் தடுப்பதற்குள் அங்கே கண்களில் வெறுமையுடன் சுவரை வெறித்தவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்த வினோத்தின் அருகில் சென்றிருந்தாள் அவள்.
உள்ளே நுழையத் தயங்கியவாறு திலகா அங்கிருந்து சென்றுவிட, ராணி கிண்ணத்தில் கஞ்சியை வைத்துக்கொண்டு அவனை சாப்பிடச் சொல்லி போராடிக்கொண்டிருப்பதை வியத்து பார்த்தாள் குழந்தை.
“இப்படி சாப்பிட்டு உயிர் வாழ்ந்து நான் என்ன செய்யப்போறேன் நீங்க போங்க” என்று வினோத் சொல்லிக்கொண்டிருக்க,
“டாக்டர் அம்மா திட்டுவாங்க சார்!” என்று தயங்கினார் ராணி.
அன்பு கருணை ஏதும் இன்றி முதலாளி என்ற மரியாதையில், வெறும் கடமையாக அவர் கொடுக்கும் உணவு விஷம் போலவே தோன்றியது அவனுக்கு.
அந்த நேரம், “ஐ! ராணி பாத்திம்மா. இங்கேதான் இக்கீங்களா! இவ்ளோ பெய்யவங்களுக்கு நீங்க இப்பதி மம்மம் ஊத்தறீங்க” என்று மழலை மொழியில் மல்லியின் மகள் கேட்க,
அங்கே அவளைக் கண்டு அதிசயித்த ராணி, “இல்ல பாப்பா, இவங்களுக்கு உடம்பு சரியில்ல. அதனால இவங்களால சாப்பிடமுடியாது” என சொல்லவும் அவனது செயல் பட முடியாத நிலையைப் பார்த்தவள்,
“பாவம் ஜெகன் தாத்தா மாதியா. அவங்களுக்கு இந்த கையால சாப்பித முதியாது இல்ல” என்று தனது வலது கையை காண்பித்தவள்,
“அதே மாதி இந்த” என்று யோசித்தவள் ராணி சார் என்று அழைத்தது நினைவில் வரவும், “சாதுக்கு ரெந்து கையும் வலிக்குமா?” என்று கேட்டுவிட்டு அவரது கைகளில் இருந்த கிண்ணத்தை தனது கைகளில் வாங்கிக்கொண்டாள்.
“நான் ஜெகன் தாத்தாக்கு மம்மம் ஊத்தி விடுவேன் இல்ல, அதே மாதி இவங்களுக்கும் ஊத்தறேன்” என்று சொல்லி ராணியிடம் தன்னை தூக்கிக்கொள்ளச் சொல்லவும், அவளை தூக்கிக்கொண்ட ராணி, “அப்பா கூட வந்தியா பாப்பா. நீ இங்க இருப்பதைப் பார்த்தால் அப்பா திட்டப்போறாங்க” என ராணி பயத்துடன் சொல்லவும்,
“அப்பா என்னை தித்தவே மாத்தாங்க பாத்தீம்மா. அவங்க ரொம்ப நல்லவங்க” என்று கூறி விட்டு கஞ்சியை ஸ்பூனில் எடுத்து அதுவரை எதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வினோத்தின் வாயின் அருகில் கொண்டுசெல்லவும் தன்னையும் மறந்து அதைச் சாப்பிட்டான் அவன்.
தாத்தா அதை சொல்லுவாங்க, பாட்டி இதை சொல்லுவாங்க எனச் சொல்லி சொல்லி ஒவ்வொரு வாய் கஞ்சியையும் அவள் கொடுக்க, அவளது கண்கள் காட்டிய அன்பினாலும் கருணையிலும் உப்பு கூட போடாத அந்தக் கஞ்சி அவனுக்கு அமிர்தமாய் இனித்தது. அனைத்தும் சாப்பிட்டு முடித்திருந்தான்.
அதற்கு அவனை பாராட்டுவது போல், “குத் சார்!” என அந்த சுட்டி சொல்லவும் நெடுநாளைக்குப் பிறகு புன்னகை எட்டிப்பார்த்தது அவனது முகத்தில்.
“சார் சொல்லாதே குட்டிம்மா அங்கிள்னு சொல்லு!” என்று அவன் சொல்லவும் அவனது பேச்சு ராணிக்கே அதிசயமாய் இருந்தது.
“அங்கிள்னா... மாமா சித்தப்பா பெய்யப்பா..னு மல்லிம்மா சொல்லிக்காங்க!
எனக்கு தீபன் மாமா, சசி சித்தப்பா, சரோ சித்தப்பா, கமல் சித்தப்பா, விமல் சித்தப்பா எல்லாதும் இதுக்காங்க. நான் பெய்யப்பான்னு கூப்பிதேன்!” என்றாள் அவள்.
வினோத்திற்கு எதோ புரிவதுபோல் இருக்கவும், “உன் பேர் என்னடா?” என்று அவன் கேட்க,
“அமித்தவல்லி! அம்மு! அதுதான் என் பேத்!” என்று அழகிய மழலையில் ஆதிமல்லியின் இளவரசி சொல்லவும், மின்சாரம் தாக்கியதுபோல் துடிதுடித்துப் போனான் வினோத்.
அவன் செயலிழந்த நிலையில் இங்கே அனுமதிக்கப்பட்ட பிறகு அந்த அறையைத் தாண்டி வெளியுலகத்தைப் பார்க்கவேயில்லை வினோத்.
அதன் பிறகு மறந்தும் அவன் முகத்தில் விழிக்கவில்லை தாமரை.
மற்ற வேலைகளுக்கு ஆண் செவிலியர் அவனுக்கு உதவி செய்ய, ஆதி சொன்னதின் பேரில் உணவளித்து அவனைப் பக்கத்திலிருந்து கவனித்துக்கொள்ள அவன் வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த ராணியை அமர்த்தினாள் தாமரை. காரணம் எதுவும் அவள் கேட்கவில்லை.
ராணிக்கு எதாவது சொந்த வேலை இருப்பின் திலகா அவரது பணியை செய்வாள்.
வனிதா பிசியோதெரபி முடித்த பின் அவள்தான் அவனுக்கு உடற்பயிற்சிகள் கொடுப்பது.
ஆக அவனால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில்தான் அவன் தினமும் விழிப்பதே.
திலகாவிற்கு எதோ புரிந்திருந்தாலும், முழுமையாக வினோத்தை பற்றி ஏதும் அவளுக்குத் தெரியாது. அதுபோல்தான் ராணி மற்றும் வனிதாவுமே அவனது நிஜமான முகத்தை அறிந்திருக்கவில்லை.
அவனுக்கு மட்டுமே அவர்களைப்பற்றித் தெரியும். குற்ற உணர்வில் உள்ளுக்குள்ளேயே மரித்துப்போயிருந்தான் வினோத்.
அம்முவின் பெயரைக் கேட்டதும் உயிர்வரை அடிவாங்கினான் அவன்.
அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழியவும் அதைப் பார்த்து வருந்திய குட்டி அம்மு,
“ஐயோ உங்களுக்கு ரொம்ப வலிக்குதா? அதாதீங்க வலி போய்தும்!” என்றவாறு அவனது கண்ணீரை துடைக்கவென, ராணியின் கைகளிலிருந்து எழும்பி தனது சட்டையால் அவனது கண்ணீரை துடைக்க, அவளது இதயத்தின் ஓசை இடி ஓசை போல் அவனது காதுகளில் ஒலித்தது.
அப்பொழுதுதான் கவனித்தான் அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த செயினை. ஆதிக்காக தன் உயிரையும் கொடுத்த அவன் தங்கை அம்முவினுடையது.
அந்த நொடி, எப்பொழுதும் ஒரு கையில் அந்த செயினையே பிடித்துக்கொண்டு ஆதியின் தோளில் சாய்ந்துகொண்டு புன்னகை முகமாய் பேசும் அம்முவின் முகம் ஞாபகத்தில் வந்து அவன் செய்த பாவத்தின் அளவைச் சொல்லாமல் சொல்லியது.
அதற்குள் மகளைத் தேடி அங்கேயே வந்துவிட்டான் ஆதி.
வினோத்தின் முகத்தில் விழிக்கவே கூடாது என்று எண்ணியிருந்தவன் மகளுக்காக அங்கே வந்தான்.
வினோத் என்ற ஒருவன் அங்கே இருப்பதையே உணராதவன் போல குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆதி அங்கிருந்து செல்லவும்,
அவன் அங்கிருந்து போய் விடுவதற்கு முன்பாக சொல்லிவிடும் அவசரத்துடன்,
“ஆதி ப்ளீஸ் ஒரு நிமிஷம்; உன்னிடம் இதைக் கேட்க, எனக்கு எந்த அருகதையும் இல்ல ஆதி. ஆனாலும் கேக்கறேன்.
என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்!” என வினோத் மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு வேண்டவும், அப்படியே நின்ற ஆதி அவனைத் திரும்பியும் பார்க்காமல்,
“என்னைக்காவது ஒரு நாள், என் தங்கையின் சாவுக்கு நானும் ஒரு விதத்தில் கரணம் என்ற குற்ற உணர்வு என் மனசில் வராமல் இருந்தால் அன்னைக்குத்தான் என்னால் உன்னை மன்னிக்க முடியும்!” என அவன் பெயரைக்கூட சொல்லாமல், உணர்ச்சியற்ற குரலில் கூறிவிட்டு ஆதி கதவை நோக்கிச் செல்லவும்,
“ப்ளீஸ்! இத்தனை நாள் என்னைப் பழி வாங்க நீ செய்த செயலால்தான் எனக்கு இந்த நிலைமைன்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆதி!
இன்றைக்குத்தான் எனக்குப் புரிந்தது இது நான் செஞ்ச பாவங்களுக்கெல்லாம் காலம் எனக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய தண்டனைனு. இல்லன்னா ரத்தினம் கோபால் மாதிரி நானும் அன்னைக்கே செத்திருப்பேனே!
உன் மகளைப் பார்த்த பின் தான் நான் வாழ்க்கையில் எவ்வளவு இழந்திருக்கேன்னு எனக்கு புரியுது ஆதி!
உடம்பு மொத்தம் மரத்து போயிருக்கு ஆனால் என்னோட நாக்கு மட்டும் இன்னும் மரத்துப்போகல.
சீக்கிரமா அதுவும் மரத்துப் போகும். ஏன்னா சுகர் பிரஷர்னு சொல்லி உப்பு கூட இல்லாம சாப்பிடறேன் ஆதி!
ஆனாலும் எல்லாமே நன்றாக இருந்த சமயம் மரத்துப் போயிருந்த என்னோட மனசாட்சி இப்ப ரொம்ப நல்லாவே உணர்வுடன் இருக்கு!
அது கொடுக்கற வலி என்னால தாங்க முடியல ஆதி!
ப்ளீஸ்! எனக்காக ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்!
உன் மகளை நேரம் கிடைக்கும்போது, இங்கே அழைச்சிட்டு வா ஆதி! ப்ளீஸ்!” வினோத் சொல்லிக்கொண்டே இருக்க ஒரு நொடி தயங்கி நின்ற ஆதி மகளுடன் அங்கிருந்து சென்றான்.
அவன் பதில் சொல்லாமல் சென்றாலும், எதிர் வரும் காலத்தில் ஆதி அவனை மன்னிக்காமல் போனாலும்கூட, வினோத் கேட்டுக்கொண்டதை கண்டிப்பாக நிறைவேற்றுவான்.
ஏனென்றால் ஆதி எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது மனசாட்சியை மறித்துப்போகவிட்டதில்லை.
தேவாதிராஜனின் தோள் வழியாக வினோத்தைப் பார்த்து உதடுகளுடன் சேர்த்து கண்களும் சிரிக்க பை… என்று கை காண்பித்தாள் அந்தக் குட்டி தேவதை அமிர்தவல்லி.
அவளது கண்களில் பொங்கிய கருணையில் அவனது பாவமெல்லாம் கரைவதுபோல் தோன்றியது வினோத்திற்கு.
இந்தக் கலியுகத்தில்.
அரசனும் அன்றே கொல்வதில்லை.
நின்று தெய்வமும் கொல்வதில்லை.
அவரவர் செய்யும் பாவங்களே ஒருவரைக் கரையான் போல் சிறுகச் சிறுக கொன்று தின்னும்.
அதை அவர்கள் உணரும் நாளில் காலம் கடந்துபோய் மொத்தமாகச் செல்லரித்துப் போயிருக்கும்.
எல்லா யுகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல்லே நிலையாக நிலைத்திருக்கும்.
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
அன்பாலான உலகம் செய்வோம்.
But you dont give any justifications for the Ammu's spirit. This is my opinion. You may tell something about her soul's peace.
Story super
Nice story 👌 I loved 😍
Awesome writing.. Kept me on edge throughout. Love, suspense,sentiment, scenes sequencing...you are really amazing. பரபரப்பான அதே சமயம் நவரசமும் கலந்த மிகவும் அழகான படைப்பு. Going to dive into your other novels right away. Keep rocking!
Very interesting, and thrilling story. Very well written. Each and every line was able to feel and visualize even though some are beyond the imagination🥰🥰🥰🥰🥰.
Thanks 🙏🙏🙏🙏 for the information that nilamangai will be continued. Expecting 🤏.
Nice story sis..again a social issue organ stealing.. really all ur stories are in different platforms.. especially this TIK I liked very much.. good judgement for ppl like Vinoth.. atleast he realised his mistake now in this stage.. expecting more good stories from u soon..
Final touch🔥🔥🔥 Vinoth deserved... Kutty Ammu's attitude made me to feel such a extent.. Semma climax sis... Lovely story.. N the coincidence of ur story n cricket match👏👌