இதயம்-36
விபத்திற்குப் பிறகு ஆதி மல்லியை கேர் ஃபார் லைஃப் பிற்குத்தான் கொண்டு வருவான் என்று வினோத் நினைத்திருக்க, தற்செயலாக அவள் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அது அவளது நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆதியின் பாதுகாப்பு வட்டத்துக்குள் அவள் இருக்கவே அங்கே மல்லியைக் கொலை செய்யும் நோக்கத்தில் அடியெடுத்து வைக்கும் துணிவு வினோத்திற்கு கொஞ்சமும் இல்லை.
அவள் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகு மருத்துவ பரிசோதனைக்குத் தவிர வேறெதற்கும் வீட்டை விட்டு வெளியில் வரவேயில்லை.
அவளே அறியாமல் அவளைச் சுற்றி ஆதியின் ஆட்கள் எல்லா நேரமும் காவலுக்கு இருக்கவே அவளை நெருங்குவதே நடக்காதக் காரியம் ஆகிப்போனது வினோத்திற்கு.
குணாவின் மரணம் விபத்து என்றே கோபால் நினைத்துக்கொண்டிருக்க, அது கொலை என்பதே மல்லியின் மீது நடந்த கொலை முயற்சிக்குப் பிறகுதான் அவனுக்குத் தெரியவந்தது.
சில நாட்களாகவே குணா பணத்திற்காக வினோத்தை அதிகம் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான்.
இதற்கிடையில் அவன் மல்லியை அவனது மகள் படிக்கும் பள்ளியில் சந்திக்கவும், குறிப்பாக அன்று அவள் அம்முவின் செயினைப் பற்றி விசாரிக்கவும், அதில் பதறி அன்று மல்லியை அவன் மிரட்டிவிட்டு வந்ததையும் அதைத் தொடர்ந்து மணியின் ஆட்கள் மூலம் அம்முவின் நகைகளை ஆதி அவனிடமிருந்து பறித்துச் சென்றதையும் வினோத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான் குணா.
அதுவே அவனது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது.
தனக்கும் இதே நிலை வரலாம் என உண்மையிலேயே பயந்துதான் போனான் கோபால்.
தங்கவேலுவின் அடியாட்களின் படையையே இறக்கியும் மல்லியை நெருங்ககூட முடியல்லை வினோத்தால்.
அமைச்சர் தங்கவேலு முன்னாள் அமைச்சராக மாறிப்போயிருக்க, பதவி அதிகாரம் ஏதும் இன்றி பல் பிடுங்கிய பாம்பாய் இருந்தார் அவர்.
தனது காரியத்தை சாதிக்க எந்த எல்லை வரையிலும் சென்றவர் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் தயக்கம் காண்பிக்கத் தொடங்கியிருந்தார்.
அது வேறு வினோத்தை எரிச்சல் படுத்திக்கொண்டு இருந்தது.
இதற்கிடையில் அம்முவின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் என்ற செய்தி வினோத்திற்கு வரவும், முதலில் அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அடுத்தடுத்து அவளது உறுப்புகளின் மூலம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்ற மூவருக்கும் இதே போல் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட, நொந்தே போனான் வினோத்.
முழு ஆரோக்கியத்துடன் இருந்த அம்முவின் உடல் உறுப்புகள் எப்படி புற்றுநோயை தோற்றுவித்திருக்கும் என்று அவனுக்குக் கொஞ்சமும் புரியவில்லை.
பணம் கொடுத்து உடலின் உதிரிப் பாகங்களை வாங்கியவர்களுக்கு அம்மு தண்டனைக் கொடுத்து தனது பழியை தீர்த்துக்கொண்டாள் போலும்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மருத்துவ செலவுகள் மிகவும் குறைவு.