இதயம்-28
பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாள் அம்மு. சரவணனும் அவளுக்கு இணையான மதிப்பெண்கள் பெற்றிருக்கவும், “சத்தியமா இது உன் மார்க்தானா சரவணா?” என அவனை ஓட்டி எடுத்தாள் அம்மு மகிழ்ச்சியுடன்.
“எனக்கும் டாக்டர் ஆகணும்னு ஆசைதான் அண்ணா! இருந்தாலும் அம்மு கொடுத்த டார்ச்சரால தான் அவளை மாதிரியே விழுந்து விழுந்து படிச்சேன். பாருங்க இன்னுமே எனக்கு அடிபட்ட காயம் ஆறல” என அம்முவை சரவணன் கிண்டல் செய்ய,
“இதோ பாரு நீ இப்படியெல்லாம் பேசின நான் எமரால்டை உன் மேல ஏவி விட்டுடுவேன். அது ஏற்கனவே குட்டி போட்டுட்டு எல்லாரையும் கடிச்சு குதறும் அளவிற்கு வெறியில் இருக்கு ஜாக்கிரதை!” என்று அவனை எச்சரித்தவள்,
“அண்ணா! பாருங்கண்ணா இந்த மங்கிய!” என ஆதியைத் துணைக்கு அழைத்தாள் அம்மு.
சிரித்துக்கொண்டே'யார்ரா இங்க! என் தங்கையையே ஓட்றது பிச்சுடுவேன் பிச்சு!” என ஆதி அவளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வர,
“பாருங்க சசி அண்ணா! நீங்க ரெண்டு பேருமே அம்முவுக்கு சப்போர்ட் பண்ணா மீ பாவம் இல்ல?” என அவன் சொல்லவும்,
“அவங்க கிடக்கறாங்க நீ வாடா செல்லம் நான் ஸ்வீட் செஞ்சு வச்சிருக்கேன். உனக்கு மட்டும் கொடுக்கறேன்!” என லட்சுமி சரவணனுக்கு பரிந்துகொண்டு வர,
“இப்ப நீங்க எப்படி இதை அவனுக்கு கொடுக்கறீங்கன்னு பாக்கறேன்!” என்றவாறு அங்கே இனிப்புகளால் நிரம்பியிருந்த பாத்திரத்தை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனாள் அம்மு.
“ஐயோ! ராஜா அவளைப் பிடி சுவீட்டை எல்லாருக்கும் கொடுக்கணும்” என லட்சுமி பதற.
சிறிது நேரம் அனைவரையும் ஆட்டம் காட்டிவிட்டு பிறகு தானே அந்த இனிப்பைக் கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்தாள் அம்மு.
அவளது மதிப்பெண்களால் ஏற்கனவே மகிழ்ச்சியில் இருந்த அருள், வரதன் இருவருமே, மேலும் அவள் போடும் ஆட்டத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக்கொண்டிருந்தனர்.
ஆதியின் திருமணம், அம்முவின் மருத்துவ படிப்பு என அவர்களது இல்லமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
***
இன்னும் பதினைந்து தினங்களில் நிச்சயதார்த்தம் என்று இருந்த நிலையில், போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க தனது இரு சக்கர வாகனத்தில் ஆதி டெக்ஸ்டைல்ஸின் தாம்பரம் கிளை நோக்கி போய்க்கொண்டிருந்தான் ஆதி.
ஒரு கிளையில் இருந்து ஆதி டெக்ஸ்டைல்ஸின் மற்றொரு கிளைக்கு செல்ல வேண்டுமானால் இப்படி இரு சக்கர வாகனத்தை உபயோகிப்பது அவனது வழக்கம்தான்.
அன்றைக்கென்று பார்த்து பெயருக்கு நச நசவென்று மழை பெய்து ஜி.எஸ்.டி சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருக்க, சரியாக அவனது கைப்பேசி ஒலித்தது.
அங்கே போக்குவரத்து நெரிசல் வேறு அதிகமாக இருக்கவும், அந்த அழைப்பு அவனுக்கு எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு அழைப்பை ஏற்கவும் அவனால் இயலவில்லை. இதில் ஹெல்மெட் வேறு.