இதயம்-27
கமலக்கண்ணன் வேல்விழி திருமணம் முடிந்த பிறகு வேறு எந்த சலசலப்பும் இல்லாமல் குடும்பம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது.
வேல்விழி அருகிலேயே இருக்கும் கல்லூரியில் சேர்ந்துவிட, வழக்கம் போல கமலக்கண்ணன் கல்லூரிக்கு சென்றுவந்தான்.
முன்புவரை அடிக்கடி பிறந்தவீடு வந்து போய்க்கொண்டிருந்த கயல் நிரந்தரமாக அங்கேயே தங்க ஆரம்பித்தார்.
அப்பொழுதுதான் கயலையும் வேல்விழியையும் பார்க்கவென அவர்கள் வீட்டிற்கு வந்துபோகத் தொடங்கினாள், மத்திய அரசில் உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ராமலிங்கத்தின் அண்ணன் கணேசனின் மகள் அனுபமா.
அதுவரை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாறுதல் காரணமாக வேறு வேறு மாநிலங்களில் இருந்தவர்கள், அவர் ஓய்வு பெற்றுவிட அங்கேயே குடி வந்துவிட்டனர்.
அனைவருடனும் கலகலப்பாகப் பழகும் அனுவை அங்கே எல்லோருக்கும் பிடித்துப் போனது.
அம்முவும்கூட அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாள்.
இதற்கிடையில் மென்பொருள் துறையில் வேலை செய்துகொண்டிருந்த லட்சுமியின் தம்பி சந்திரனுக்கு நியூ ஜெர்சியிலேயே வேலை நிரந்தரமாகி அங்கேயே குடியுரிமையும் கிடைத்துவிட்டது.
மேலும் அவர்களது மூத்த சகோதரன் கணபதியும், அவர்களது அன்னையுடன் சென்னையிலேயே குடியேறிவிட, ஐயங்கார்குளத்திலிருந்த அவர்களது வீட்டை முழுமனதுடன் லட்சுமிக்கே கொடுத்துவிட்டனர் சகோதரர்கள் இருவரும்.
விளைநிலங்களை விற்கலாம் என அவர்கள் முடிவுசெய்தபொழுது, பூர்விக நிலங்கள் வேறு கைக்குப் போவதை விரும்பாமல் ஆதியே அதற்கான தொகையை கொடுத்து அதை வாங்கிக்கொண்டான்.
இவை அனைத்துமே பிரச்சனைகள் ஏதும் இன்றி அவர்களுடைய வசதிக்காகவும் அன்பின் அடிப்படையிலும் நடந்தவையே. லட்சுமியின் அண்ணி நந்தினி மற்றும் தம்பி மனைவி அருணா இருவருமே புரிதலுடன் நடந்துகொண்டனர்.
ஆனால் அதை ஒப்பிட்டு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக சொத்துக்களைப் பிரிப்பது சம்பந்தமாக கயல் மற்றும் சுலோச்சனாவால் அவர்கள் குடும்பத்திலும் சலசலப்பு எழத் தொடங்கியது.
அதனால் ஒரு முடிவிற்கு வந்தவராக அருளாளன்... வரதன், செல்வம் மற்றும் மூன்று பேரன்கள் என அனைவரையும் தனியாக அழைத்து,
“சொத்துக்காக பிரச்சினை மனஸ்தாபம் ஆகவேண்டாம் என நினைக்கிறேன். அதனால் மூன்று வீடுகள், விளை நிலங்கள் என மூன்று பேருக்குமே சமமாகப் பிரித்துவிடலாம்.
பரமேஸ்வரியின் நகைகளை கயல் மற்றும் அம்முவிற்குக் கொடுக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்” என்று நிறுத்தியவர் தொடர்ந்து,
“கடையைப் பிரிப்பதை மட்டும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதனால் அதை ராஜாவிற்கே கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். லாபத்தை மட்டும் வழக்கம்போல் மூன்று பேரும் பிரித்துக் கொள்ளுங்கள்” என அவர் சொல்லவும்,
செல்வம், “உங்கள் இஷ்டம் பா. கயலும் சுலோவும்தான் எதாவது பிரச்சினை செய்வார்கள். ஆனால் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்!” என முடித்துக்கொள்ள,