இதயம்-26
“கங்கம்மா கொடுத்த அந்த நோட் புக் அதை அன்னைக்கு நான் கவனிக்கல மல்லி! ஆனால் அது உன் தாத்தாவுடையதாகத்தான் இருந்திருக்கணும்”
“அம்மு அதை உனக்காகத்தான் விட்டுட்டு வந்திருக்கா. அது தெரியாமல் அந்த அம்மா அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க” என்ற ஆதி,
“கங்கம்மா இப்ப நம்ம ஹோட்டலில்தான் தங்கி இருகாங்க!” எனச் சொல்லவும் திடுக்கிட்டாள் மல்லி.
“என்ன! சொல்றீங்க! அவங்க எப்படி இங்கே வந்தாங்க?” என அவள் குழப்பத்துடன் கேட்கவும்,
“அவங்க இங்க வரல! நான்தான் அவங்களை இங்கே வரவழைத்தேன்!” என்றவன்,
“நான் கங்கம்மாவை இங்கே வரவழைத்தது சில விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளத்தான்!
செல்வி தவிர மற்ற இரண்டு பெண்களின் எலும்புக்கூடு கிடைத்ததே, அதில் ஒருத்தங்க பெயர் தனலக்ஷ்மி. மற்றும் ஒரு பெண்ணின் பெயர் மணிமேகலை.
இந்தப் பெயரெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா?” என ஆதி மல்லியிடம் கேட்கவும்,
நெற்றியைச் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஐயோ! அவங்க எங்க மிஸ் ஆச்சே! தனம் மிஸ்! மேகலா மிஸ்! அவங்க தானா?” என அவள் அதிர்ச்சி அடைய,
“கூல் மல்லி! நான் அம்முவை அங்கிருந்து அழைத்துவந்த பிறகுதான் அதுவும் உடனுக்குடன் இல்லாமல் அதிக நாட்கள் இடைவெளியில் அந்த இரண்டு கொலைகளும் நடந்திருக்கு!
போஸ்ட் மார்டெம் செய்த பிறகு, மரபணு டெஸ்டில் அந்தப் பெண்கள்தான் என்பதை உறுதிப் படித்தியிருக்காங்க!
அந்த இரண்டு பெண்களுமே அங்கேயே அருகில் இருந்த கிராமங்களிலிருந்து அந்தப் பள்ளிக்கு வேலைக்கு வந்தவர்கள். மேலும் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள்.
அதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள் என்று அங்கே அனைவரும் நம்பும் படி கதைகட்டி விட்டிருக்காங்க.
என்ன கொடுமைனா, அதை அவர்களுடைய பெற்றோர்களும் கொஞ்சம் கூட சந்தேகப் படாமல் நம்பியிருக்கைங்க” என்றவனின் முகம் வேதனையை தத்தெடுத்து தானும் அதே தவற்றை செய்ததை நினைத்து.
தொடர்ந்து, “அதில் மணிமேகலையின் பெற்றோர் மட்டுமே போலீசில் புகார் செய்திருந்தனர்.
இன்னும் கூட பெண் கையில் கிடைத்தால் கொன்றுவிடும் மனநிலையில்தான் இருந்திருக்கிறார் தனலக்ஷ்மியின் அப்பா” என்ற ஆதி,
“இதையெல்லாம் கங்கம்மாவின் மூலமாகத்தான் நான் தெரிந்து கொண்டேன்” என்று கூறிவிட்டு,
“விடுமுறை முடிந்து அம்மு அங்கே போன அடுத்த நாள்தான் அவள் அங்கே அந்தப் பயங்கர சம்பவத்தை பார்த்திருக்கிறாள்” என கங்கம்மா மூலமாக தான் அறிந்துகொண்டதையும் அதன் பிறகு அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றையும் விவரிக்கத் தொடங்கினான் ஆதி.
விடுதியில் எல்லா மாணவியரும் இரவு உணவு உண்ட பிறகு எட்டு மணிக்கு அவரவர் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்பது அங்கே இருக்கும் நடைமுறை. அதன்படி எல்லோரும் சென்