Hi Friends, I've posted 24, 25 & 26 altogeather 3 episodes today. Kindly share your comments.
இதயம்-24
அவளது வியந்த முகத்தைப் பார்த்து ஆதியின் புன்னகை மேலும் விரிய, “என்ன எம்.டி மேடம்! நான் சொல்வது சரிதானே?” என்று அவன் கேட்க,
“ஐயோ! எம்...டி...யா… நானா! சான்ஸே இல்ல! என்ன விளையாடறீங்களா?” என மல்லி கொளுத்திப் போட்ட சரவெடி போல் படபடக்கவும்,
“நிஜமாகத்தான் சொன்னேன் மல்லி; விளையாடணும்னா இப்படியா விளையாடுவேன்?” என கிறக்கமாக அவன் சொன்ன விதத்தில் எகிறிய இதயத்துடிப்பை மறைத்து.
“மாம்ஸ்!” என்று அவனை முறைத்தவள், “சீரியஸா பேசும்போது கிண்டல் பண்ணாதீங்க!” என்று கூற,
கொஞ்சம் கடுமை ஏறிய குரலில், “நானும் சீரியஸாதான் சொன்னேன், அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுகட்டி விடுவேன் அதுவரை தான் உனக்கு டைம்.
அதன் பிறகு நீ ஆபீஸ் வந்துதான் ஆகணும் அதுவும் எம்...டி... யாக.
அதற்கான எல்லா பேப்பர்சையும் தயார் பண்ணிட்டேன்” என்றவன்,
“அத்துடன் இனிமேல் நம்ம கம்பெனில டிசைன் செய்யற எல்லாப் பட்டுப்புடவைகளின் காப்புரிமை உன் பெயரில்தான் இருக்கும்.
புடவைகளை டிசைன் செய்யறதோட, நம்ம பட்டு கைத்தறி, மெஷின் தறி எல்லாமே உன் பொறுப்பில்தான் வரும்.
முதலில் கொஞ்சம் நானும் சசியும் உனக்கு ஹெல்ப் பண்ணுவோம். போகப்போக நீ தனியாகத்தான் மேனேஜ் பண்ணனும்” எனச் சொல்லி முடித்தான் ஆதி.
அவன் அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், என்னதான் அவன் சொன்ன விஷயங்கள் சரியாக இருந்த பொழுதும், அனைத்துமே அவளது அறிவிற்கு எட்டியிருந்தாலும், மனம் அதை ஏற்க முரண்டு பிடித்தது.
அதற்குமேல் எதுவும் பேசாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று பால்கனி கூடை ஊஞ்சலில் கண்களை மூடி, இரண்டு கால்களையும் குறுக்காகக் கட்டியபடி சாய்ந்து கொண்டு உட்கார்ந்தாள் மல்லி.
திருமணம் முடிந்து வெறும் எட்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அவளுக்கு என்னவோ எட்டு யுகங்களைக் கடந்த பிரமிப்பு தோன்றியது.
‘எப்பொழுது இவையெல்லாம் சரியாகி ஒரு நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமோ?!’ என்றிருந்தது மல்லிக்கு.
இரவு நேரக் கடல் காற்று சிலுசிலுவென்று முகத்தில் மோத சற்று நேரத்திலேயே அது தந்த புத்துணர்வில், ‘எது நடந்தாலும் கட்டாயம் ஆதி பார்த்துக் கொள்வான்!’ என்ற எண்ணம் தோன்றவே, மனம் கொஞ்சம் தெளிவடையவும், அவள் கண்களைத் திறக்க,
அருகே போடப்பட்டிருந்த சோபாவில் கால்களை மடக்கி படுத்தவாறு கைப்பேசியைக் குடைந்து கொண்டிருந்த ஆதி அவளது பார்வையில் படவும், மனம் கரைந்து போனது மல்லிக்கு.
“மாம்ஸ்! ஏன் இங்கே வந்து படுத்திருக்கீங்க! கொசு வேறு பிடுங்கி எடுக்கிறது!” என அவள் சொல்ல,
“இந்த கொசுவெல்லாம் என்னை அவ்வளவாகக் கடிக்காது?” என்றான் ஆதி.
“ஆமாம்! இந்த கொசுவிற்கெல்லாம் நீங்கதான் 'தி கிரேட் தேவாதிராஜன்னு' தெரிஞ்சு பயந்து உங்களைக் கடிக்காமல் பறந்திடும்!” என அவள் கேலி போலச் சொல்லவும்,