இதயம்-20
'கேர் ஃபார் லைப்' மருத்துவமனையின் கார் பார்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, சுற்றிவந்து லட்சுமியை கை பிடித்து இறக்குவதற்காகக் குனிந்தான் ஆதி.
அவருக்கு மூட்டு வலி அதிகமாகி நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவரிடம் காண்பிப்பதற்காக அங்கே அழைத்துவந்திருந்தான் அவன்.
அந்த நேரம் அவனது காரின் மற்றொரு புறமாக வந்து நின்றனர், மல்லியும் பரிமளாவும்,
அந்தப் பகுதியே, ஆளரவமின்றி அமைதியாய் இருந்தது ஆதி குனிந்த நிலையில் இருந்ததால், அவர்கள் அங்கே இருந்ததையே கவனிக்கவில்லை மல்லி பரிமளா இருவரும்.
அங்கு வந்த நொடியே, “நாம இப்ப இருக்கற நிலைமையில் நீ செய்வது சரியா மல்லி? அவங்க பாவம்தான் இல்லன்னு சொல்லல. ஆனால் நம்ம கைல இருப்பதை கொடுத்துட்டு, அவசரம்னா நாம என்ன செய்வது?
நம்மளை உள்ளேயே நுழையக்கூட விடமாட்டேங்கறானுங்க பாரு. திருட்டுத்தனமா எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?” எனப் பொரிய ஆரம்பித்தார் பரிமளா!
என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனப் புரியாமல் சத்தம் செய்யாமல் நிமிர்ந்து நின்றான் ஆதி.
அவர்கள் எதிர் புறம் நோக்கி நின்றிருந்ததால் இருவரது முகமும் தெரியவில்லை அவனுக்கு. அவர்களும் அவனைப் பார்க்கவில்லை.
“அம்மா! நீங்க ஏன் மா கவலை படறீங்க எனக்குத்தான் ‘ஆதி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் டிசைனிங்' ல வேலை கிடைச்சிருக்கே. அதுவும் பெர்மெனென்ட் ஆகிவிட்டால் நல்ல சம்பளம் கிடைக்கும். இது போல நகைகளைக் கூடிய சீக்கிரமே வாங்கிடலாம்மா” என்றாள் மல்லி அன்னையைச் சமாதானப்படுத்தும் விதமாக.
அவர்களுடைய பேச்சில், தன்னுடைய நிறுவனத்தில்தான் அந்தப் பெண் வேலையில் நியமிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அவன் அறியவும், ஆராய்ச்சியுடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான் ஆதி. எதோ பேச வந்த லட்சுமியை கைகாட்டித் தடுத்தவன் அவர்களிடம் கவனத்தைச் செலுத்தினான்.
அதற்குள் மல்லி தன் கைப்பேசியில் யாரையோ அழைத்து, “அத்தை நானும் அம்மாவும் இந்த ஆஸ்பத்திரில காரெல்லாம் நிறுத்துவங்க இல்ல அங்க இருக்கோம். நீங்க உடனே இங்க வாங்க.” எனச்சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
நேரம் ஆகிறது என்பது போல் மகனிடம் கைகாட்டி லட்சுமி ஜாடை காண்பிக்கவும், மிகவும் மெல்லிய குரலில், “அம்மா! ஒரு அஞ்சு நிமிஷம்!” என்றவன் அங்கே யாரோ வரும் அரவம் கேட்கவும் தன்னை மறைத்துக் கொண்டான்.
நடுத்தர வயதில் ஒரு பெண்மணி அங்கே வந்து அந்த இருவரையும் பார்த்தவாறு நின்றார்.
அவரை மட்டுமே பார்க்க முடிந்தது ஆதியால்.
அவர் அங்கே வந்த நொடியே, “அத்தை! கிட்டு மாமாவுக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்து முடிச்சுட்டாங்களா?” என்று மல்லி கேட்க,
“இன்னும் இல்லைம்மா எதோ டெஸ்ட், இன்னும் பாக்கி இருக்காம்” என்று மல்லியால் 'அத்தை' என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் சொல்லவும்,
“அப்பா! நல்லவேளை!” என்ற ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படினா எந்தப் பேப்பரிலும் மாமா கையெழுத்து போடல இல்ல?” என்று கேட்டாள் மல்லி.
“இல்லை மல்லி!