இதயம்-19
வளர்பிறை நிலவு, ஒரு துண்டமாக வானில் ஒளிர்ந்துகொண்டிருக்க, கடற்காற்று இதமாகத் தழுவிச்செல்ல, பால்கனியில் போடப்பட்டிருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மல்லி.
மனம் முழுதும் கேள்விகளே!
‘முந்தைய நாள் தொலைக்காட்சிச் செய்தியில், குறிப்பிட்டிருந்த எலும்புக் கூடு யாருடையதாக இருக்கும்?
அந்தக் கொலைகள் எப்பொழுது நடந்ததாக இருக்கும்?
அங்கே, அப்படிப் பட்ட கொலைகளைச் செய்து, புதைக்கும் அளவிற்குச் சென்றது யாராக இருக்கும்?’
அது பெண்களுக்கான தனிப்பட்டப் பள்ளிக்கூடம் அதுவும் அங்கே வேலை செய்யும் அனைவருமே, உடற் கல்வி ஆசிரியை உட்படப் பெண்கள்தான்.
அலுவலக பணியாளர்கள், காவலாளிகள் என, ஆண்கள் சிலர் மட்டுமே உண்டு அனைவருமே ஐம்பது வயதைக் கடந்தவர்கள் என்பதுதான் ஞாபகம்.
அந்தப் பள்ளியின் தாளாளரின் மகன்கள் மட்டும் எப்போதாவது அங்கே வருவார்கள். அதுவும் விடுதியின் பக்கமெல்லாம் அவர்கள் வந்ததில்லை. அவர்களை ஒரே ஒரு முறை மட்டும் அதுவும் எதோ ஒரு கலைநிகழ்ச்சி சமயத்தில் பார்த்திருக்கிறாள். அவர்களுடைய முகம் கூட, சரியாக ஞாபகத்தில் இல்லை.
‘காவல் துறையினர், ஆய்வு செய்கிறார்கள்!’ என்று திரும்பத் திரும்ப செய்திகளில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களேத் தவிர அதுபற்றி புதிதாக எந்தத் தகவலும் இல்லை.
யோசிக்க யோசிக்க தலையே வெடித்துவிடும்போலிருந்தது மல்லிக்கு.
அப்பொழுது பொறி போன்று ஆதி! தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வர,
“இந்த சம்பவத்தைப் பற்றித்தானா பேசிக்கொண்டிருந்தான்?”
கண்களை மூடி! அவன் பேசிய, ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்க்க முயன்றுகொண்டிருந்தாள் மல்லி!.
‘டீ என் ஏ.. சோதனை!’
‘எவிடென்ஸ்!’
‘லவர் கூட ஓடி போய்ட்டாங்க!’
‘கேசை கிளோஸ் பண்ணிட்டாங்க!’
‘செல்வியுடையதுதானா?’
தூக்கிவாரி போட்டது மல்லிக்கு.
அவள், அங்கே, எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சமயம் விடுமுறை முடிந்து திரும்பியிருந்த பொழுது அம்மு, செல்வி இரண்டு பெண்களுமே அங்கே இல்லை!
‘அப்படியென்றால் செய்திகளில் குறிப்பிட்ட சிறுமியின் எலும்புக்கூடு செல்வியுடையதுதானா?’
‘அது தேவாவிற்கும், தெரியும் போலவே!’
அம்முவின் இறப்பும் நினைவிற்கு வந்துசேர, செல்வியின் மரணம் பற்றிய உண்மை ஏதோ அம்முவிற்குத் தெரிந்திருக்க வேண்டும்.