இதயம்-12
ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்ததை விட, தேவா கொஞ்சம் மெலிந்திருந்ததுபோல் தோன்றியது மல்லிக்கு. அவன் அருகில் வரவும்தான் புரிந்தது அவளுக்கு, அதிக நேரம் ஜிம்மிலேயே செலவு செய்திருப்பான் போலும். அவ்வளவு பிட் டாக இருந்தான் முன்பைவிட.
மல்லியின் அருகில் வந்தவன், அவள் பேசத் தொடங்கும் முன்பே கிசுகிசுப்பாக, “எதுவாக இருந்தாலும், உள்ளே போய் பேசிக்கலாம்” என்றவாறு அவளது கையைப் பற்றிவாறு அவனது அலுவலக அறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
உள்ளே நுழையும்வரை அமைதியாக வந்த மல்லி, அங்கே வந்தவுடன் தனது கையை அவனிடமிருந்து விடிவித்துக்கொண்டு, கோவம் கலந்த குரலில், “நான் உங்களை எப்படி சார் கூப்பிடுறது தேவா! ஆதி! இல்ல, இது இல்லாமல் வேறு எதாவது பெயர் பாக்கி இருக்கா?” எனக் கேட்க,
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் ஆதி, “உன்னோட அம்மா உங்க அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க?”
“நான் என்ன கேட்டேன்; நீங்க சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் என்ன இப்படியெல்லாம் பேசறீங்க தேவா..ஆதி..ராஜன்?” என பல்கலைக் கடித்துக் கொண்டே, மல்லி சொல்ல,
“நான் கேட்டதற்கு முதலில் நீ பதில் சொல்லு” என அவன் அதிலேயே நிற்க,
அதற்கும் பல்கலைக் கடித்துக்கொண்டே மல்லி, “ம் என்னங்க ஏங்க இப்படித்தான் கூப்பிடுவாங்க” என்று கூற,
“என்னோட அம்மா என் அப்பாவை 'மாமா' ன்னு தான் கூப்பிடுவாங்க” என்ற ஆதி தொடர்ந்து.
“இதோ பாரு மல்லி! தொழிலில் வளர்ந்து, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், பேசிக்கலி நான் ஒரு கிராமத்தான் தான்.
வீட்டுல அம்மா, அப்பா முன்னாலலாம் இந்தப் பேர் சொல்லி கூப்பிடுவதெல்லாம் சரியா வராது.
நானும் உன்னைவிட வயதில் கொஞ்சம் பெரியவன்தான். அதனால நீயும் உங்கம்மா, இல்லன்னா எங்கம்மா கூப்பிடுவதுபோல அழைத்துப் பழகு” என அவன் முடிக்க,
அப்பொழுதுதான், அவன் என்ன சொல்ல வருகிறான், என்று பல்பு எரிந்தது மல்லிக்கு.
“என்ன ஆனாலும் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க தேவா. நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்; நீங்க கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” என அவள் எகிற.
“யாருக்கு? எனக்கா புரியல? இன்னும் உனக்குத்தான் என்னைப் பற்றி சரியா புரியல.
இன்னும் இரண்டே நாட்களில் கல்யாணத்தை வெச்சுட்டு பேசற பேச்சையா நீ பேசற.
ஒழுங்கா கல்யாணத்துக்கு தயாராகற வழியைப் பாரு. அதோட; முக்கியமா சந்தோஷமா எல்லா சடங்குகளிலும் கலந்துக்கணும்; வந்திருக்கும் சொந்தக்காரங்க முன்னாடி இப்படி அழுதுவடியக் கூடாது” என மிரட்டலாகவே சொன்னான் ஆதி.
அதற்கு மல்லி, “நீங்கதான் ஆதியாச்சே! என்ன வேணாலும் செய்வீங்க எப்படி வேணாலும் மிரட்டுவீங்க” என்றவள், “நீங்கத்தானே அந்த வீராவின் கையை உடைத்தது?” எனக் கேட்க,
'ஆமாம்! நான்தான்! பிறகு வேறு என்ன செஞ்சிருக்கணும்னு சொல்ற அடிக்காம திட்டாம குணமா சொல்லியிருக்கணுமா?” என்றான் ஆதி திமிராக.
சிரிப்பு வந்துவிட்டது மல்லிக்கு, “ப்சு.. தே.. வா.. ஆஆஆ..” என்றவள், “அதுக்காக கையை உடைத்ததெல்லாம் கொஞ்சம் அதிகம்” என்று கூற,
“நல்ல வேளை அவன் விறல் நுனி கூட உன் மேல படாம அவனைத் தடுத்து நீதான் காப்பாத்திட்ட. இல்லன்னா அவன் கையை வெட்டியிருப்பேன். பெண்களிடம் வீரத்தைக் காண்பித்தவனுக்கு அது தேவைதான்” என்ற ஆதியின் கோவமான வார்த்தைகளில் கொஞ்சம் அடங்கித்தான் போனாள் மல்லி.
“எல்லாம் சரிதான். ஆனால் இந்தக் கல்யாணம் மட்டும் இப்ப வேண்டாமே. ப்ளீஸ்!” என மல்லி கெஞ்சலுடன் திரும்ப அங்கேயே வரவும்,
“இப்ப வேண்டாம் அப்படினா? வேற எப்ப?” என அவன் கேட்கவும் அதில் உறுத்து விழித்தவள், “அம்முவை கண்டு பிடித்த பிறகு” என்று கூற,
“ஒரு வேளை, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறத அவ விரும்பலன்னா, அப்படியே விட்டுடலாமா?” என்று கேட்டு விட்டு,
“அதனால இப்படி லூசு மாதிரி உளறுவதை விட்டுட்டு ஒழுங்கா தயாராகற வழியைப் பார் மல்லி” என அவன் சொல்லிக் கொண்டிரும்போதே கதவைத் தட்டி, “மே ஐ கம் இன்?” என்ற சுமாவின் குரல் கேட்கவும்,
அவளை உள்ளே வரும்படி பணித்தவாறு அவனுடைய இருக்கையில் போய் அமர்ந்தான் ஆதி.
அங்கே வந்த சுமா, “மேம் கு ஸ்பால எல்லாம் தயாராக இருக்கு சார்; அதை சொல்லத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
அதைப் புரியாமல் பார்த்திருந்த மல்லி, “என்ன சுமா என்னை மேம்னு சொல்லறாங்க?” எனக் கேட்க,
“அவங்க என் பர்சனல் செக்ரேட்டரி; அதனால அப்படிதான் கூப்பிடுவாங்க; நீ இதற்கெல்லாம் கொஞ்சம் பழகிக்கணும் மல்லி” என்று அவன் சொல்ல,
“அப்படினா விஜித் அண்ணா இவங்களோட கணவர் இல்லையா? பிறகு எப்படி ஒரே வீட்டில் இருக்காங்க? நீங்க செய்வதெல்லாம் கொஞ்சம் கூட நன்றாக இல்லை” என அவள் பொரியவும்,
“ஸ்டாப் இட் மல்லி! உனக்கு எக்ஸ்ப்ளயின் பண்ணியே நான் ஒருவழி ஆகிடுவேன் போல இருக்கு. இதற்கு மட்டும் இப்பொழுது பதில் சொல்றேன். இனிமேல் என்னை எந்தக் கேள்வியும் இப்பொழுது கேட்காதே, கல்யாணம்” என அவன் தொடங்கவும் அவனை மல்லி முறைக்க,
எப்படியும் அவளால் இந்தத் திருமணத்தை நிறுத்த முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அதனால், “கல்யாணம் கட்டாயம் நடக்கும். வேண்டாம்னு நீ நினைத்தால் நீயே எதாவது சொல்லி நிறுத்திக்கொள். நான் நிறுத்த மாட்டேன்” என்ற ஆதி, தொடர்ந்து.
“விஜித், என்னோட பர்சனல் பாடிகார்ட். இவங்க இரண்டுபேருக்கும் எப்படியோ காதல் பத்திக்கிச்சு. உன்னை மாதிரி லூசு இல்லையே அவங்க. டைம் வேஸ்ட் பண்ணாமல் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. அப்படினா ஒரே வீட்டுலதானே இருப்பாங்க?” என முடித்தவன்.
“நோ மோர் க்வஸ்டியன்ஸ்; நீ இப்ப பேசியல் செய்துக்க கிளம்பு” என்று கூற,
மல்லி எதோ சொல்ல வரவும் விட்டால் அவள் பேசிக் கொண்டே இருப்பாள் என்பதை உணர்ந்தவன்.
“நீ முதலில் இங்கிருந்து கிளம்பு; இல்லை உனக்குத்தான் பிரச்சினை” என்றவனின் பார்வை மாறிப்போய் அவளை முழுவதுமாகத் துளைக்க, அதில் முகம் சிவந்துபோய் அவசரமாக அங்கிருந்து ஓடினாள் மல்லி.
ஃபேசியல், ஹேர் ஸ்பா, பெடிக்யூர் மேனிக்யூர், கைகள், கால்களுக்கெல்லாம் மெஹந்தி எனப் பல மணிநேரங்கள் எடுத்துக் கொண்டது.
அங்கிருந்த பெண்கள் மிகவும் மரியாதையுடன், அதிக அக்கறை எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் மல்லியின் விருப்பத்தைக் கேட்டு, அதன்படியே செய்து கொண்டிருந்தனர் ஆதியினுடைய வருங்கால மனைவி என்பதற்காக.
மல்லிக்குத்தான் எதிலும் மனம் ஒட்டவே இல்லை. அன்றைய நாள் முழுவதும், அங்கேயே இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.
அனைத்தும் முடிந்து நேராக வீட்டிற்குத்தான் வந்தாள் மல்லி. அதற்குப் பின் ஆதியைச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை.
அங்கே இருக்கும்பொழுது வாட்ஸாப்பில் அவள் அனுப்பிய குறுந்தகவல்கள் எதுவுமே ஆதியால் படிக்கப்படவேயில்லை.
கைப்பேசியில் அவளது அழைப்பையும் அவன் ஏற்கவில்லை.
திருமணம் முடியும் வரை அவனை எந்த விதத்திலும் தன்னால் அணுக முடியாது என்பது நன்றாகவே புரிந்துபோனது மல்லிக்கு.
‘சாரிடி அம்மு! என்னால ஒண்ணுமே செய்ய முடியலடி!’ என மனதிற்குள் அம்முவிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டே இருந்தாள் மல்லி.
கைகளில் மருதாணி போட்டிருந்ததால், அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார் பரிமளா. மகள் தங்களைப் பிரிந்து போவதை நினைத்து அந்தத் தாயின் கண்கள் கலங்கியது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த தீபன், “மல்லி சீக்கிரம் தப்பிச்சு ஓடிடு; டாம் உடையப் போகுது” என்று கூறவும் அவனைப் புரியாத பார்வைப் பார்த்தனர் இருவரும்.
அதற்கு அவன், “அம்மா டாமை திறக்கப் போறாங்க” என்று கூறவும்,
அருகில் இருந்த தலையணையை தூக்கி அவன் மேல் எறிந்த பரிமளா உனக்கு என்னைப் பார்த்தால் கிண்டலா இருக்கா? நானே என் மகளைப் பிரிந்து எப்படி இருக்கப் போறேனோ?” என வருந்த,
“ப்சு அக்கா எங்கே மா போகப்போறா. இதே ஊருலதானே கட்டிக் கொடுக்கப் போறோம். எங்கே இருந்தாலும் போன் பண்ணியே நம்ம எல்லாரையும் ஒரு வழிப் பண்ணத்தான் போறா. நீங்க ரொம்பலாம் பீல் பண்ணதிங்க” என்று சொன்னவன், “மல்லியின் தோள்களில் சாய்ந்து கொண்டு அப்படித்தானே..கா” என்று கூற,
அவள் தலையில் மூட்டிவிட்டு, “போனில் எல்லாம் இல்ல தினமும் நேரிலேயே வந்து, உன் தலையில் இரண்டு கொட்டு வெச்சுட்டுத்தான் போவேன். இல்லைனா எனக்குத் தூக்கமே வராது” என மல்லி சொல்லவும் சிரித்துவிட்டார் பரிமளா.
விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தாலும் தீபனும் மனம் வருந்திக் கொண்டுதான் இருந்தான் மல்லியின் பிரிவை நினைத்து.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுடைய கண்களும் கலங்கியிருந்தது.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மல்லியின் நகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் பரிமளா. மருதாணியைச் சுத்தம் செய்துவிட்டு அங்கே வந்து உட்கார்ந்தாள் மல்லி.
“நேரத்தோட போய் தூங்கு மல்லி. அதிகாலையிலேயே நாம ஊருக்கு கிளம்பனும். நாளைக்குச் சாயங்காலம் நலங்கு வைக்க எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டியிருக்கும்” என்றார் பரிமளா.
“என்னை பேக் செய்யறதுல உனக்கு எவ்ளோ சந்தோஷம்மா” என மல்லி சொல்ல,
“ப்சு இன்னும் இப்படி பேசறத நீ விடலையா மல்லி?” என அவர் கடுமையான குரலில் கேட்கவும்,
“சாரி மா சும்மாதான் சொன்னேன்” என மல்லி வருந்த,
“உண்மையில் ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்கறதால சந்தோஷமாகத்தான் இருக்கோம் மல்லி. எதையும் குழப்பிக்காம நீயும் சந்தோஷமாக இருக்கணும் என்ன” என்றுநெகிழ்ச்சியாகச் சொல்லி முடித்தார் பரிமளா.
பிறகு எதோ நினைவு வந்தவராக, “மல்லி இந்த மோதிரத்தைப் பாரேன்; உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப அந்த ஹாஸ்பிடலில், உன்னுடைய மற்ற நகைகளுடன் இதையும் கொடுத்தாங்க; அப்பொழுது இதை நான் கவனிக்கவல; இன்னைக்குதான் பார்த்தேன்; வெள்ளை கல் வைத்திருக்கு; யாருடையதையோ மாற்றி கொடுத்துட்டாங்க” என்று கூற,
அதைப் பார்த்த மல்லிக்கு அப்பொழுதுதான் அந்த மோதிரத்தைத் தேவா அவளுக்கு அணிவித்தது ஞாபகம் வந்தது.
அதை எப்படி அன்னையிடம் சொல்வது என யோசித்தவள், “அது சுமாவின் மோதிரம். என்னிடம் கொடுங்க நானே அவங்ககிட்ட கொடுத்துடறேன்” என்ற மல்லி அதை வாங்கித் தன் விரலில் போட்டுக் கொண்டாள்.
***
அடுத்து வந்த இரண்டு நாட்களும் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது.
பூவரசந்தாங்கலில் குலதெய்வ வழிபாடு, பிறகு முத்துராமன் பெரியப்பா வீட்டில் மணப்பெண்ணுக்கு நலங்கு வைத்தல் என அனைத்தும் முடிந்து, ஐயங்கார்குளம் வந்திருந்தனர்.
மணப்பெண் அழைப்பு மற்றும் அடுத்த நாள் திருமணம் என எல்லாவற்றையும் அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார் வரதராஜன்.
அய்யங்கார்குளத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த சஞ்சீவிராயர் கோவிலில் இருந்து மணப்பெண் அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்பு அங்கே இருந்த அவர்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ஆரத்தி சுற்றி மல்லியை அங்கே அழைத்து வந்தனர்.
அப்பொழுதுதான் அங்கே, ஆதிக்கு நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர். பட்டுவேட்டி சட்டையில், கன்னங்கள் மற்றும் கைகளில் சந்தனம் பூசப்பட்டு, கல்யாணப் பொலிவுடன், முகம் நிறைந்தப் புன்னகையுடன் அட்டகாசமாக இருந்தான் ஆதி.
என்னதான் அரைகுறை மனதுடன் அந்தத் திருமண சடங்குகளில் அவள் ஈடுபட்டிருந்தாலும், அவனை அப்படிக் கண்டவுடன் தனது சொந்தம், ஆதியின் சொந்தம் என அங்கே கூடியிருந்த அத்தனை மக்களுக்கு நடுவில், அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் தவித்துத்தான் போனாள் மல்லி.
அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
மாம்பழ நிறத்தில் பச்சை சரிகையிட்ட, அவளுக்காகவே பிரத்யேகமாக நெசவு செய்யப்பட்டிருந்த காஞ்சிப் பட்டில், தாய்வீட்டுச் சீரான அளவான நகைகளுடனும், ஒப்பனையுடனும், மூக்கில் வைர மூக்குத்தி மின்ன தலைநிறைய மல்லிகையைச் சூடி, எழிலோவியமாக இருந்தவளை, கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் ஆதி.
அதற்குள், அவன் அருகில் இருந்த சசி அவனைக் குறுகுறு வெனக் கிண்டலுடன் பார்க்கவே, வேறு எங்கோ பார்ப்பது போல் பார்வையை மாற்றிக்கொண்டான் அவன்.
பிறகு, மறுபடியும் மல்லிக்கு அங்கே நலங்கு வைத்து முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தச் சென்றனர்.
***
அடுத்த நாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பான பிரும்ம முஹுர்த்தத்தில் திருமண சடங்குகள், அரசாணிக்கால் நடுவதிலிருந்து தொடங்கின.
அதைத் தொடர்ந்து தீபன் குடை பிடிக்க, அமர்தலாக வேட்டி, சட்டையில் தேவா நடுநாயகமாக வர, காசியாத்திரை தொடங்கியது.
சசிகுமார் மற்றும், திருமணத்திற்கு அழைக்கப் பட்டிருந்த ஒரு சில நண்பர்களும் ஆதியுடைய தாய்மாமாவின் மகன்கள், மகள்கள் மாப்பிள்ளைகள், மல்லியின் உறவில் இளசுகள் என அங்கே கிண்டல்களுக்கும், சிரிப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
அரக்கு நிறத்தில் கட்டமிட்ட பருத்தியினால் ஆன அவர்கள் சம்பிரதாயக் கூரைப் புடவையில், பின்னல் ஜடையுடன் ஒற்றை நெற்றிச்சுட்டி அணிந்து, காதுகளில் ஜிமிக்கி நடனமிட, நெற்றியில் அரக்கு நிறத்தில் பொட்டிட்டு, மேலும் புகுந்த வீட்டுப் பரிசான வைர நகைகள் மின்ன, குழப்ப முகத்தை மறைக்க தலை குனிந்தவாறு, மணமேடைக்கு அழைத்துவரப்பட்டாள் மல்லி.
அதன் பிறகு பெற்றோருக்கு பாதபூஜை, தொடர்ந்து காப்புக் கட்டுதல் என சடங்குகள் தொடர, பின்பு ஹோமம் வளர்த்து தாலி முடிவதற்காக மணமகனின் சகோதரியை ஐயர் அழைக்க,
நாத்தனார் முடிச்சு போடுவதற்காக தயாராக இருந்த அவனது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகள், சரியாக மேடை ஏறும் பொழுது மயங்கிச் சரியவும் அருகில் இருந்தவர்கள் அவளை அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அந்த சலசலப்பு அடங்கியதும்,
பரிமளா மகிழ்ச்சியும், அதனால் உண்டான கண்ணீருமாக, அருகில் நின்றுகொண்டிருக்க குதூகலத்துடன் மருமகளின் ஜடையை லட்சுமி தூக்கிப் பிடிக்க, ஆதியே மொத்தமாக மூன்று முடிச்சுகளையும் போட்டு, மல்லியை முழுவதுமாக தன்னவள் ஆக்கிக் கொண்டான்.
அவளது தோள்களில் உரசிய தன்னவனுடைய கரங்களின் ஸ்பரிசத்தை உணரும் அதே தருணம், சில்லிட்ட இரு கரங்கள் அவளது தோள்களை தழுவுவது போலவும், அடுத்த நொடியே அவளது கன்னங்களும் சில்லிடுவது போலவும் ஒருசேர உணர்ந்தாள் மல்லி. என்னவென்று புரியாத நிலையில் அவள் ஆதியைப் பார்க்க அவனும் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த நொடி அவனது கண்களில் கலந்தவளின் மனதில் இருந்த சஞ்சலங்கள்அனைத்தும் கரைந்துகாணாமலே போனது.
என்னவோ அம்முவே அவள் அருகினில் இருப்பதுபோல் முழுவதுமாக உணர்ந்தாள், திருமதி. மரகதவல்லி தேவாதிராஜன்.
Marriage over..I think the real story is going to start only after this..is that so sis?
Finally Ammu back sis.. Interesting to know her.. I just think its just bcoz of Ammu Athi came to know about our Malli.. Waiting sis..
finally they got married