Thank you very much Friends,! for all your support & encouragements.
மித்ர-விகா 20
அவள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான் அக்னிமித்ரன். மாளவிகாவை கண்களால் காண்பதற்காகவே நீண்ட நேரமாக தவித்துக்கொண்டிருத்த நிலை மாறி அவள் அங்கே வந்த பிறகும் அவளை பார்க்க எத்தனிக்கவில்லை அவன்.
மனம் முழுதும் வெம்மையில் புழுங்க சில நிமிடங்கள் அந்த மொட்டை மாடியிலேயே நின்றிருந்தவனின் உடலையும் சுரீர் என்ற வெயில் தாக்க நேராக கீழே வந்தவன் தன் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
பொதுவாக அலுவலகத்திற்கு தினமுமெல்லாம் வருபவன் இல்லை அக்னிமித்ரன். 'வீனஸ் டெலிவிஷன் நெட்வொர்க்' தவிர அந்த 'தீபலக்ஷ்மி டவர்'சில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற நிறுவனங்கள் எல்லாம் அவனுடைய தாய் வழி தாத்தாவினுடையது. மொத்தமும் அவருடைய சொந்த சம்பாத்தியம். தீபலக்ஷ்மி மட்டுமே அவருக்கு ஒற்றை பெண்பிள்ளையாய் போய்விட சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அக்னிமித்ரன் அவரது ஏகபோக வாரிசாக ஆகிப்போனான் விக்ரம் மூத்த பேரனாக இருந்தபோதும்.
மாதத்தின் முதல் வாரம் முழுவதும் அவர்களது குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுடைய முக்கிய மேலாளர்களுடனான சந்திப்புகள் இருக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள் அனைத்தையும் முடித்துக்கொள்பவன், மற்ற நாட்களை 'வீனஸ்’ தொலைக்காட்சியின் ஸ்டுடியோக்களில் செலவிடுவான்.
மற்றபடி வார இறுதி நாட்கள் என்பது அவனுக்குக் கேளிக்கைகளுக்கான நாட்கள் மட்டுமே. எனவே மறந்தும் அலுவலகத்தின் பக்கம் அவன் தலைவைத்து கூட படுப்பதில்லை.
இடையிடையே மனநிலைக்குத் தகுந்த மாதிரி உலகத்தின், உல்லாச கேளிக்கைகளுக்கென பெயர்போன எதாவது ஒரு நகரத்தில் தன் விடுமுறையை அனுபவிப்பான் அவனது தற்காலிக இணைவிகளுடன். ஆனால் அவன் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் அவனது அனைத்து தொழில்களையும் தன் சுட்டுவிரலின் நுனியால் தங்குதடையின்றி நிர்வகித்திருப்பான்.
சிலநாட்களாகத்தான் அதுவும் மாளவிகாவால் மட்டுமே அவன் தினமும் அலுவலகம் வருவது. பெரும்பாலும் அவள் அலுவலகம் வரும் நேரம் அவனும் வந்துவிடுவான்.
ஓரிருமுறை விக்ரமுடைய நிறுவனத்திற்குச் செல்ல நேர்ந்ததால் தாமதமாக வந்திருக்கிறான். ஆனாலும் வராமல் இருந்ததில்லை. உள்ளே நுழைந்ததுதுமே மாளவிகாவின் கண்கள் மித்ரனைத்தான் தேடியது. அவன் அங்கே இல்லாமல் போகவும் தாமதமாக வருவான் என்றே எண்ணிக்கொண்டாள்.
தினசரி நடைமுறைப்படி செய்யவேண்டிய வேலைகள் வரிசைகட்டி நிற்க, அவளது கவனம் மொத்தமும் அவற்றை நோக்கித் திரும்பியது. என்னதான் கவனம் வேலையிலிருந்தாலும் அங்கே சூழ்ந்திருந்த தனிமை ஒருவித அலுப்பைக் கொடுத்தது அவளுக்கு.
அந்த கேபினுக்கு வெளியில் பலர் வேலை செய்துகொண்டிருந்தாலும் உள்ளே அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் கிடையாது. அவளது பார்வை வட்டத்திற்குள் அவளும் அவளது பார்வை வட்டத்திற்குள் அவனும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.
மற்ற பணியாளர்களுடன் இவளுக்கு நேரடி தொடர்பு கிடையாது. அனைத்து வேலைகளும் மித்ரனை சார்ந்ததாகவே இருக்கும். பெரும்பாலும் அவர்கள் இருவருக்குள்ளான பேச்சுக்கள் அவர்கள் அலுவலக வேலை தொடர்பானதாகவே இருக்கும்.
எதாவது ஒன்றிற்காக அவளை அழைத்துக்கொண்டேதான் இருப்பான். இல்லாமல் போனாலும் கூட அவன் அங்கே இருந்தால் மாற்றி மாற்றி அவனுக்குக் கைப்பேசியில் எதாவது அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். பேசிக்கொண்டே இருப்பான். அவன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.
மதிய உணவு இடைவேளை கடந்தும் அவன் வராமல் போக உண்மையிலேயே அவன் இல்லாமல் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. அவளையும் அறியாமல் அவளது பார்வை அடிக்கடி காலியாக இருக்கும் அவனது இருக்கையைத் தொட்டு மீண்டுகொண்டிருந்தது.
அதுவரை திரையில் கூட அவளைப் பார்க்கப் பிடிக்காமல் இருந்தவனின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் அவளது முகம் காண ஏங்கி, தன் கைப்பேசியில் அவளது இருக்கையை 'ஃபோக்கஸ்' செய்யும் ‘கேமரா’ மூலமாக அவளை தன்னருகில் அவன் கொண்டுவர, அவளது அந்த பார்வையின் தேடலை உணர்ந்து கொஞ்சம் உருகிதான் போனான் மித்ரன்.
அதற்குப்பின் இருக்கும் அவளது மனநிலையை பற்றியெல்லாம் கொஞ்சமும் ஆழ்ந்து யோசிக்க முற்படவில்லை அவன். சில நிமிடங்களில் அவனுடைய கேபினில் இருந்தான். அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் விரித்த அவளுடைய கண்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஐயோ. நல்லவேளை வந்துட்டீங்க. செம்மையா போரடிச்சு போயிட்டேன். நீங்க இப்ப வரலன்னா பர்மிஷன் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பியிருப்பேன்" என்ற அவளது வார்த்தைகளில் குளிர்ந்திருந்தான்.
ஆனால் சரவணனிடமிருந்து மாளவிகாவுக்கு அழைப்பு வரும் வரைக்குமே அந்த இதம் நீடித்தது. சரியாக வேலை முடிந்து அவள் அங்கிருந்து கிளம்பும் சமயம் அந்த அழைப்பு வந்தது.
அவனுடைய எண்ணை ஏற்கனவே அவளது பேசியில் பதிந்து வைத்திருந்தாள் மாளவிகா. அவனுடைய பெயரைப் பார்த்ததும் அவளது நெற்றி சுருங்க, "சொல்லுங்க சரவணன்" என அவள் அழைப்பை ஏற்க, சரவணன் என்ற பெயரைக் கேட்டதுமே மித்ரனின் முகம் கருத்து இறுகிப் போனது.
"அண்ணிகிட்ட என் கூட ஏதோ பேசணும்னு சொன்னியாமே?" என அவன் நேரடியாகக் கேட்க, "ம்ம்" என்றாள் அவள் கொஞ்சம் தயக்கத்துடன்.
"எனக்கும் உன் கூட கொஞ்சம் பர்சனலா பேசணும் மாலு. உங்க ஆபிஸ் பக்கத்துல இருக்கற காஃபீ ஷாப்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஒரு ஹாஃப் அன் ஹவர் ஸ்பேர் பண்ண முடியுமா?" என அவன் கேட்க, அவனுடன் பேசவேண்டும் என்றுதான் மதுவிடம் சொன்னாள் அவள். ஆனால் அன்றே அதுவும் இப்படி அவன் அழைக்கவும் அதை எதிர்பார்க்காதவள், "என்ன" என அதிர்ந்தாள் மாளவிகா.
“சில்... நான் அண்ணா அண்ணி கிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன். நீயும் உங்க வீட்டுல கேட்டுட்டு வா" என அவன் தெளிவாகப் பேசவும் அவள் முகம் கொஞ்சம் கலவரமானது.
அவளுக்கும் கூட அவனிடம் பேசுவது முக்கியமாகப் படவும், "சரி சரவணன், நான் அப்பா கிட்ட பேசிட்டு அவர் பர்மிஷன் கொடுத்தால் வரேன். இல்லன்னா நிச்சயமா வர மாட்டேன்" என்று அவள் பதில் சொல்ல, "அதெல்லாம் பர்மிஷன் கிடைக்கும்" என்றான் அதை முன்கூட்டியே தெரிந்துவைத்திருப்பவன் போல. ஒரு பெருமூச்சுடன் அழைப்பை துண்டித்தவள், தன் கைப்பையை எடுத்துக்கொண்டு, "பை அக்னி" என மித்ரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மாளவிகா.
எதிர் முனையிலிருந்தவன் என்ன பேசினான் என்பது தெரியாமல் போனாலும் அவள் பேசுவதிலிருந்தே விஷயம் புரிந்திருக்க, மித்ரனின் மனதிற்குள்ளே ஒரு எரிமலையே கனன்றுகொண்டிருந்தது.
அவள் சொன்னதற்கு பதில் கூறாமல் அவன் அமைதியாக இருப்பதைக் கூட கவனிக்காமல் கைப்பேசியில் தந்தைக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே மின்தூக்கியை நோக்கி போனாள் அவள்.
மூர்த்தி அழைப்பை ஏற்கவும், "அப்பா என்னப்பா இது. சரவணன் என்னை இன்னைக்கே நேர்ல மீட் பண்ணனும்னு கூப்பிடறாரு" என அதை அவள் ஒரு புகாராகவே சொல்ல, "மது போன் பண்ணியிருதாம்மா. நான் வேண்டாம்னாலும் கேக்க மாட்டேங்கறா கண்ணு. பெரிய மாப்பிளை வேற அதுக்கு சப்போர்ட். நான் என்ன சொல்ல முடியும்னு சொல்லு" என அவர் எதிர்க்கேள்வி கேட்க, அவர் மதுவின் கணவரை 'பெரிய மாப்பிளை' என்று வேறு சொல்லவும் சரவணனை சின்ன மாப்பிள்ளையாகவே முடிவு செய்து விட்டார் என்பது அவளுக்குப் புரிய வாயடைத்துப்போனாள் மாளவிகா.
"ம்ம் இன்னைக்கு காலம் அப்படி இருக்கு.; என்னன்னு சொல்றது" என அலுத்துக்கொண்டவர், "நேரத்தோட வீட்டுக்கு வந்துடு பாப்பா" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் மூர்த்தி.
அதற்குள் மின்தூக்கி மேலே வரவும் அவள் உள்ளே நுழைய, வேகமாக அவளை உரசுவதுபோல கூடவே உள்ளே வந்த மித்ரனை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டு விலகி நின்றாள் அவள். கீழே வந்துசேரும் வரையிலும் அப்படி ஒரு இறுக்கமான மௌனம் குடிகொண்டிருந்தது அங்கே.
'கேப்'பில் வரவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டு அவள் அந்த வளாகத்திலிருந்து வெளியில் வர அவளைக் கடந்து சென்றது மித்ரனின் வாகனம். அவள் அந்த சாலையைக் கடந்து வந்து எதிர்புறம் சற்று தள்ளி இருந்த 'காஃபீ ஷாப்'பை நோக்கிப் போக, அதன் வெளியிலே தன் இரு சக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த சரவணன் அவளைப் பார்த்துவிட்டு அவளை நோக்கி வந்து, "ஹை...” என்றவன், அவளது 'ஹலோ'வை பெற்றுக்கொண்டு, "என்ன உங்க அப்பா பர்மிஷன் கொடுத்தட்டரா?" என முகம் மலர்ந்த சிரிப்புடன் இலகுவாகக் கேட்க, மெல்லியதாகப் புன்னகைத்தவள், அதே இலகுத்தன்மையுடன், "அதான் உங்க ஃபேமலில எல்லாருமா சேர்ந்து பர்மிஷன் கொடுக்க வெச்சுடீங்களே" என்றாள் மாளவிகா.
"ஹேய்... என்ன உங்க அக்காவையா இப்படி சொல்ற" என அவன் கேட்க, "பின்ன, அவதான் முழு சந்திரமுகியா மாறிட்டாளே" என்றவள், அவன் புரியாத பார்வை பார்க்கவும், "அவ என்னோட அக்காங்கறதைவிட உங்க அண்ணின்னு சொன்னாதான் சரியா இருக்கும். அதான் அவ முழுசா உங்க அண்ணியா மாறிட்டாளே" என்று முடித்தாள். சிறு ஆதங்கம் தொனித்தது அவளுடைய குரலில்.
அவனுக்கு அது புரியவும், "சரி உள்ள போய் பேசலாம் வா" என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல, அவனைப் பின்தொடர்ந்து மாளவிகா செல்ல, போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்த அவனது காருக்குள்ளிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டே அவர்களைக் கடந்துசென்றான் அக்னிமித்ரன்.
உள்ளுக்குள்ளே மெல்லிய இசை கசிந்துகொண்டிருக்க அதிகம் கூட்டமில்லாமல் இருந்தது அந்த 'காஃபி ஷாப்'. அங்கே ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருந்த சில இளசுகள் சுற்றுப்புறம் மறந்து அவரவர் தாங்களே சிருஷ்டித்த ஏதோ ஒரு மாய உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்க, அங்கே ஓரமாக இருந்த இருக்கையாகப் பார்த்து இருவருமாகப் போய் உட்கார்ந்தனர்.
பின் அவர்களின் தேவைக்கேற்ப 'ஆர்டர்' செய்ய, அவை வந்துசேர அவர்களது பேச்சும் அதை குறித்ததாகவே இருக்கவென சில நிமிடங்கள் அதிலே சென்றன.
அவளுடைய நண்பர்கள் கூட்டத்துடன் அடிக்கடி இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பழக்கப்பட்டதால் மாளவிகாவை பொறுத்தவரை இந்த சூழ்நிலையெல்லாம் அவளுக்குப் புதிதொன்றும் இல்லைதான்.
ஆனால் தனியாக ஒரு ஆடவனுடன் அதுவும் திருமண பேச்சு என்கிற அடிப்படையில் வந்து அங்கே உட்கார்ந்திருப்பது அவளுக்குச் சற்று சங்கடமாக இருந்தது.
சரவணன் அவளுக்கு முன்பே அறிமுகமானவனாக இருந்தாலும் அவனுடன் அதிகம் பேசியதுகூட இல்லை அவள்.
மனதில் சிறு தயக்கம் இருந்தாலும் தான் அவனுடன் பேச நினைத்ததைக் கட்டாயம் பேசியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துடன் அதை எப்படிச் சொல்வது என யோசித்துக்கொண்டு அவள் உட்கார்ந்திருக்க, வரவழைத்திருந்த காஃபியை எடுத்து ஒரு மிடறு சுவைத்தவன், "அஃப்கோர்ஸ் மது அண்ணி... அவங்க முதல்ல உன்னோட அக்கா, அப்பறம்தான் என்னோட அண்ணி ஓகேவா? ஆனா அவங்க நம்ம ரெண்டுபேருக்குமே வெல் விஷர்தான? அதுல சந்தேகம் இல்லையே? அவங்க விஷயத்துல நீ இவ்வளவு பொஸஸிவ்வா ரியாக்ட் பண்ண வேண்டாமே" என அவள் வெளியில் சொன்னதற்கு புன்னகையுடன் பதில் சொன்னவன், "உனக்கு இந்த ப்ரபோசல் ஓகேதான?" எனக் கேட்டான் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்புடன்.
சிறு யோசனைக்குப் பின், "ஓகே... ஓகே இல்ல அப்படின்னெல்லாம் எதுவும் இல்ல. உண்மையை சொல்லனும்னா எனக்கு இப்போதைக்குக் கல்யாணத்தை பத்தின எந்த ஒரு எண்ணமும் இல்ல" என்றவள் அவனை ஆழமாகப் பார்த்துக்கொண்டே, "அதை பத்தி டிசைட் பண்றதுக்கு முன்னால சில விஷயங்களை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு" என்றாள் அவள்.
அவள் சொன்னதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், "அப்படி என்ன அவ்வளவு பெரி...ய்ய விஷயயம்" என அவன் சற்று கிண்டலாகக் கேட்கவும், மூண்ட எரிச்சலை அடக்கிக்கொண்டு, "என்னைப் பத்தி அக்கா எதுவும் உங்க கிட்ட சொல்லலியா?" எனக் கேட்டாள் அவள்.
"எதை பத்தி" அவன் இலகுவாகவே கேட்கவும், "நான் ரெண்டு வருஷம் லேட்டா படிப்பை முடிச்சிருக்கேனே அதை பத்தி" என அவள் தீவிரமாகச் சொல்ல, சட்டென அவன் முகம் இருண்டு போனது.
உடனே தன்னை சமாளித்துக்கொண்டு, "அண்ணா கல்யாணத்தப்பவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு மாலு. உன் படிப்பு முடியணும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு வழியா மூணு நாலு மாசத்துக்கு முன்னாலதான் அண்ணா அண்ணி ரெண்டுபேர் கிட்டயும் இதை பத்தி சொன்னேன். அப்பவே, நீ எதோ ட்ரீட்மெண்ட் எடுத்துட்டதா அண்ணி சொன்னாங்க. அது எப்பவோ சின்ன வயசுல நடந்ததுதான!? இப்ப நல்லாத்தானே இருக்க. எனக்கு அது போதும்" என்றான் தெளிவாக.
"என்ன ஏதோ ஒரு ட்ரீட்மெண்டா? அது சைக்யாட்ரிக் ட்ரீட்மெண்ட் சரவணன்" என படபடத்தவள், "ரெண்டு வருஷம் என் வாழ்க்கைல இருந்தே காணாம போயிடுச்சு" என்றாளவள் சற்று வருத்தத்துடன்.
அவன் அவளைப் பரிதாபமாகப் பார்க்க, "ஒரு சாதாரண விஷயமா இதை உங்க கிட்ட சொல்ற அளவுக்கு அக்காவுக்கு வேணா அது மறந்து போயிருக்கலாம். ஆனா இன்னும் கூட அதோட வலி என் கிட்ட மிச்சம் இருக்கு சரவணன். மொத்தத்தையும் தெரிஞ்சிக்கிட்டு... அதை ஈஸியா உங்களால கடக்க முடியும்னா நாம இந்த கல்யாண பேச்சை கண்டின்யு பண்ணலாம். இல்லனா யாருக்கும் எந்த காயமும் இல்லாம அவங்க அவங்க வாழ்க்கையை பார்த்துட்டு போயிடலாம்" என அவள் சொல்ல, கோபம்தான் வந்தது அவனுக்கு.
"ப்ச்... ஏன் மாளவிகா இவ்வளவு ஸ்ட்ரெஸ் பண்ணிக்கற. நீ என்ன சொன்னாலும் நான் உன்னை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கத்தான் போறேன். பிகாஸ் ஐ..” என்றவன் கோபத்துடன் ‘லவ் யூ’ எனச் சொல்லவந்ததை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு, தலையை கோதிகொண்டு, "அப்படி என்ன பெரிய தங்கமலை ரகசியம் இருக்கு உன்கிட்ட... என்ன சொல்லணும்... சொல்லு" என ஆற்றாமையுடன் முடிக்க, "ரகசியமெல்லாம் எதுவும் இல்ல. அப்ப நடந்தது ஊருக்கே தெரியும். இன்னும் சொல்லப்போனா ந்யூஸ் பேப்பர்... டீவி எல்லாத்துலயும் வந்துது" என அவள் உணர்வற்ற குரலில் சொல்ல 'லேர்னிங் டெஃபிசிட்டி' போல ஏதோ படிப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் என எண்ணியவன் அவள் இப்படிச் சொல்லவும் அவளை அதிர்ந்த பார்வை பார்த்தான் சரவணன்.
ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தவள், "எனக்கு அன்புன்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தா. அன்புக்கரசி... இதுதான் அவளோட ஃபுல் நேம். எங்க குடும்பத்துல எங்க மூணுபேரோட கூட நாலாவதா இருந்தா அவ. அன்பு இருக்கான் தெரியும் இல்ல... அதான் அன்புத்தமிழன்" என அவள் கேட்க, தலை ஆசைதான் அவன்.
"அவங்க வீட்டுலதான் முன்னால அவங்க பேமிலி குடி இருந்தாங்க. அவ மூணு மாச குழந்தையா இருக்கும்போது அவங்க அங்க குடிவந்தாங்களாம். நாங்க எப்ப இருந்து ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்னு எனக்கே ஞாபகம் இல்ல. ஆனா ரெண்டுபேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்க ரெண்டு பேரையும் ஒரே ஸ்கூல்ல ஒண்ணாதான் சேர்த்தாங்க. நாங்க ஒண்ணாத்தான் ஸ்கூல் போவோம். பக்கத்துல பக்கத்துலதான் உட்காருவோம்.
ஒண்ணாத்தான் ஹோம்வர்க் பண்ணுவோம். எங்க தெரு பசங்களோட ஒண்ணாத்தான் விளையாடுவோம். ஒண்ணா சாப்பிடுவோம். சில சமயம் ஒண்ணாவே தூங்கியும் இருக்கோம். நாங்க ஃபோர்த் க்ளாஸ் படிக்கறவரைக்கும் எல்லாமே ரொம்ப நல்லா போச்சு. அந்த வருஷ ஆனுவல் லீவ்லதான் எல்லாமே மாறிப்போச்சு” என அவள் சொல்லிக்கொண்டே போக அவள் முகத்தில் துயரம் மட்டுமே குடியிருந்தது.
அதே நேரம் உச்சபட்ச கோபத்துடன் கதவைத் திறந்துகொண்டு தன் பிளாட்டுக்குள் நுழைத்தான் அக்னிமித்ரன். மாளவிகாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது என்பது அவனுக்குச் சந்தேகத்துக்கு இடமின்றி தெரிந்துபோனது.
அவளும் மறுப்புத் தெரிவிக்காமல் அதற்கு உடன்படுகிறாள் என்பதும் தெளிவாகப் புரிய அவள் மனதை ஒரு துளி அளவுகூட தன்னால் கவர முடியவில்லை என்பதே பெருத்த ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஒருசேரக் கொடுத்தது அவனுக்கு.
காலில் அணிந்திருந்த 'ஷூ'க்கள் ஒரு பக்கம்... 'சாக்ஸ்' ஒருபக்கம் எனப் பறந்துபோய் விழ, அவனது படுக்கை அறைக்குள் நுழைத்தவன் அணிதிருத்த சட்டையைக் கழற்றி விசிறி அடிக்க அதன் பையிலிருந்த அவனது கைப்பேசி தாறுமாறாக விழுந்து சிதறியது.
வெறிபிடித்தவன் போல அங்கே இருந்த அலமாரியைத் திறந்தவன், வெளிநாட்டிலிருந்து நண்பன் ஒருவன் வாங்கிவந்து அவனுக்கு பரிசளித்திருந்த திறக்கப்படாத மது பாட்டிலை அதிலிருந்து எடுத்து அதை திறந்து அப்படியே தொண்டைக்குள் சரித்துக்கொண்டான்.
கண்மண் தெரியாத கோபத்தில் கிட்டத்தட்ட அதில் பாதியை ஒரே மூச்சில் அவன் காலி செய்திருக்க, அமிலத்தை அருந்தியதுபோல் தொண்டையில் தொடங்கி வயிறுவரைக்கும் எரியத்தொடங்கியிருக்க, நாவறண்டுபோய் அப்படியே கட்டிலில் சரிந்தான் அக்னிமித்ரன்.
சில நிமிடங்களில் மது துளித்துளியாக அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. அந்த நிலையிலும் அவன் சிந்தை முழுதும் மாளவிகா மட்டுமே நிறைந்திருந்தாள்.
Interesting to read sis.. Can Understood AGM's mode now..Didn't xpect Anbukarasi there.. Can guess she might die..?may be bcoz of MV..Answer is in KPN sis' hand..Waiting Sis..
Nice to read this epi which has increased the expectations of viewers. hope you won’t disappoint us. 👏
Superb epi eagerly waiting for today ud. Try to post earlier mam. Okay what about Nila Mangai ?
அருமையான பதிவு😊😊
OMG. Every episode is creating curiosity. So sad agni. Now agni is like volcano. Waiting to know the mystery of mals child hood life.
Very interesting epi.. waiting for the suspense to be revealed
Tdy ud sis...?waiting...😐😐
Anbukarasi ku enna nadanthirukkum
Lovely update