அத்தியாயம் 1:
“அம்மா டிபன் ரெடியா எனக்கு…. லேட் ஆகிவிட்டது” என்ற பார்வதியின் குரலில் அந்த இல்லம் அதிர்ந்தது.
தங்கையின் குரலில் மொபைலில் பேசிக் கொண்டிருந்த சாரகேஷ் அவசர அவசரமாக கட் செய்தவன்
டைனிங் டேபிளின் அருகில் நின்றிருந்த அவனது அம்மா தேவகியின் அருகில் சென்றான்.
“எதுக்குமா இந்த ஆர்ப்பாட்டம் பண்றா இவள்….. இன்னும் டைம் இருக்குமா … என்னோட தானே வருகிறாள்…. பின்ன என்ன இவளுக்கு? என்றவனிடத்தில் அவனது அம்மா பதில் சொல்லும் முன் ’பார்வதி’ பதில் சொல்ல ஆரம்பித்தாள்
“எனதருமை சகோதரனே…. இன்றுதான் முதல் நாள் என் புதிய அலுவலகத்திற்கு , அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம் அதுமட்டுமில்லமால் நான் தனியாக போனால் கூட எனக்கு இந்த பதட்டம் இல்லை. நீ அட்வைஸ் பண்ணியே கொல்லுவ. அது வேற டென்ஷன் எனக்கு.” என்று சாப்பிட அமர்ந்தவளை கவலையோடு பார்த்தாள்…… தேவகி
” ‘பாரு’ இந்த ஆஃப்ஸிலாவது கொஞ்சம் பார்த்து நடந்துக்கமா ஏற்கனவே பார்த்த அலுவலகம் மாதிரி பிரச்சனையோடு வராதம்மா என்றவளின் குரலில் கவலை தெரிந்தது.
அவளின் கவலையை நோக்கியவன்
“இதுக்குதான் ’பாரு’ வுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்றால்
அவ பேச்சைக் கேட்டுகிட்டு இன்னும் ஒருவருடம் போகட்டும் என்கிறீரிகள்” என்றவனிடதில்
“அண்ணா உனக்கு அவசரம்னா நீ பண்ணிக் கொள். என்னை எதுக்கு இழுத்து விடுகிறாய் ?”
என்றவுடன்
”கிளம்பு ட்ராஃபிக் ஆகிவிடும் , அதன் பிறகு என்னதான் சொல்லுவ என்ற படி வேக வேகமாய் கை கழுவ எழுந்தான். அவன் நழுவுவதை உணர்ந்தவள்
சாரகேஷை பார்த்த படியே எழுந்து, கை கழுவும் இடத்தில் அவன் அருகே சென்று
“என்னண்ணா இன்னும் ரெட்டை சடை, லவ் லெட்டர் ஞாபகமா?” என்று கண்ணடித்தவளிடம்
கொஞ்சம் முறைத்தவன் “அப்டிலாம் இல்லை , அதெல்லாம் முடிந்து போன கதை….. இல்லைனா அம்மாவின் பெண் பார்க்கும் படலத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பேனா” என்றபடி நகர்ந்தவனை யோசனையோடு பார்த்தாள். மீண்டும் யோசித்தவள்…….
”அப்போ பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டரம்மா கூட இல்லையா” என்று போலியான கவலை படிந்த முகத்தோடு ஓட்ட
பார்வையால் அவளை அடக்கியவன்
”ப்ச்ச் என்ன விடு ’பாரு’ , இந்த ஆஃபிசிலாவது கொஞ்சம் அடக்கி வாசி, ஏற்கனேவே பார்த்த இரண்டு இடங்களுமே உனக்கு நல்ல அனுபவம் கொடுக்க வில்லை என்றவனிடம் ,பதில் சொல்ல வாய் திறந்தவளிடம் ,
“இரு நான் பேசி முடித்து விடுகிறேன் . அதன் பின் பேசு” என்றவன் தொடர்ந்தான்
”முதல் அலுவலத்தில் உன் மேலதிகாரியால் பிரச்சனை…… அவன் பண்ணிய தவறுகளை எல்லாம் நிர்வாகத்தில் முறையிட்டு அவனை வேலையில் இருந்து தூக்க வைத்தாய்…. ஆனால் அதன் பிறகு செல்ல மறுத்து விட்டாய்.. அடுத்த போன அலுவலகத்தில் ஒரு படி மேலே போய் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் என்று அங்கும் பிரச்சனை…. அது கோர்ட் வரை கொண்டு போய் விட்டது. கடைசியில் அந்த அலுவலகமே மூடக் காரணமாகி விட்டாய்….. உனது தைரியம் எனக்கு பிடித்து இருக்கிறது….. ஆனால் அண்ணன் என்ற முறையில் கொஞ்சம் கவலை, பயம்.. மற்றபடி எனக்கு பெருமைதாண்டா உன் மேல” என்றவனிடம்
”ம்ம்ம் புரியுது புரியுது என்றவள், இந்த தடவை உனக்கு அந்த கஷ்டம் வராதுண்ணா” என்றவளை நோக்கியவனிடம் ,
”வா வா போய்க் கொண்டே பேசலாம்” என்று மேஜையில் இருந்த தனது சான்றிதழ்களை சரிபார்த்தவள்………
”வீட்ல ஒரு பேரு சர்டிஃபிகேட்ல ஒரு பேரு……”.. என்று அலுத்தபடி கிளம்பினாள்.
பூசை அறையில் சாரகேஷிடம்
“சாரகேஷ் அந்த இடம் பொருத்தமா இருந்தா பார்க்கச் சொல்லவா……… புரோக்கர் கிட்ட சொல்லிடவா…….” என்றபோது….
”ஏம்மா நான் தான்….. உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் சர்னு சொல்லிட்டேனே” என்று சொல்ல
பாரு என்கிற பார்வதியோ
”அடேங்கப்பா என்ன ஒரு அடக்கம் என் அண்ணனுக்கு…. என்றவள் ’தீ’ என்று ஆரம்பிக்க….
தாயும்…தமையனும் முறைக்க…..
”இல்லம்மா ’தீ’ பிடிக்க ’தீ’ பிடிக்கனு சாங்க் பாட வந்தேன் என்று அவர்களின் முறைப்பில் சொல்ல இல்லை இல்லை உளற…